Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 31, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 18 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
இன்னுமொரு தேர்தல் காலம் ஆரம்பமாகியிருக்கின்றது. ஏற்கெனவே 2022இல் நடைபெறத் திட்டமிடப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்கு, வேட்புமனுக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
முன்னைய காலங்களை விட, இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் பல அடிப்படைகளில் முக்கியத்துவமானது. ஆனால், சிறுபான்மைக் கட்சிகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் எப்படியான வியூகங்களை வகுத்துள்ளன? எவ்வாறான ஆட்களை வேட்பாளர்களாக நிறுத்தப் போகின்றன? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
அத்துடன், முஸ்லிம் பிரதேசங்களில் தே.ம.ச., ஐ.ம.ச. உள்ளிட்ட பெரும்பான்மைக் கட்சிகளால் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்கள் உண்மையில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளுக்காக, நலன்களுக்காக அடிமட்டத்தில் இருந்து குரல் கொடுக்கக் கூடியவர்களாக இருப்பார்களா? என்பதையும் அலசிப் பார்ப்பது நல்லது.
பாராளுமன்றம், மாகாண சபைகக்கு செல்லும் மக்கள் பிரதிநிதிகள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்றால், அந்த மாற்றத்தை உள்ளூர் அதிகார சபைகளில் இருந்து கொண்டு வர வேண்டும். அதற்கான களமாக இத்தேர்தல் அமையும்.
கீழ்மட்ட அதிகாரக் கட்டமைப்புக்களில் மக்கள் பிரதிநிதியாக இருந்த அனுபவம் உள்ளவர்களுக்கு பாராளுமன்றம், மாகாண சபைத் ஆகிய தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பளிக்கும் ஒரு நடைமுறை கடந்த காலங்களில் இருந்தது.
அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வருகின்ற ஒருவருக்கு இருக்கின்ற விடய அறிவும், அடிமட்ட மக்கள் பற்றிய புரிதலும், திடுதிடுப்பென ஒரு மாத அரசியல் அனுபவத்தோடு பாராளுமன்றத்திற்கு அல்லது ஒரு அரசியல் அதிகார பதவிக்குத் தெரிவாகின்ற ரெடிமேட் மக்கள் பிரதிநிதிகளிடம் இருப்பதில்லை.
அந்த வகையில், முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் நல்ல தலைவர்கள் வேண்டுமென்றால், மாகாண சபைகளுக்கு உருப்படியான வேட்பாளர்களை நிறுத்த வேண்டுமென்றால், அதன் முன்னேற்பாடாக உள்ளூராட்சி சபைகளில் சிறந்த வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தேவையுள்ளது.அடுத்த விடயம், முஸ்லிம் அரசியல் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென்றால், அதற்குப் பொருத்தமான வேட்பாளர்கள் உள்ளூராட்சி அதிகார சபை மட்டத்தில் களமிறக்கப்பட வேண்டும். ‘படம்’ காட்டுபவர்களும், அல்லக்கைகளும், போலி சமூக செயற்பாட்டாளர்களும், கொந்தரத்து காரர்களுக்கும் இடமளிக்கப்படக் கூடாது.
மிக முக்கியமாக, ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தாமல், வேறு ஒரு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவரை இங்கு அழைத்து வந்து களமிறக்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கைச் சூழலில் மாகாண மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் இந்த பிற்போக்குத்தனத்தை கைவிட சட்ட ரீதியான ஏற்பாடு கொண்டுவரப்பட வேண்டும்.இதேவேளை, நாம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் வெளியான பத்தியில் குறிப்பிட்டிருந்ததைப் போல, முஸ்லிம்களுக்கான அரசியலை மீண்டும் அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்புவதற்கு இத்தேர்தல் மிக நல்லதொரு சந்தர்ப்பமாகும். இதனை மனதில் வைத்துக் கொண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது அவசியம்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருந்த வெறுப்பினாலும், மாற்றம் என்ற மாய அலையினாலும் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலை விட்டு விலகியதைக் கடந்த பொதுத் தேர்தலில் கண்டோம். இது முஸ்லிம்களுக்கான பிரத்தியேக அரசியலில் பாரியதொரு தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆயினும், பிரத்தியேகமான அரசியல் என்பது முஸ்லிம் சமூகத்திற்கு அவசியமானது. பெரும்பான்மைக் கட்சிகளோடு இணைந்து செயற்படுவது தவறில்லை.
ஆனால், ஒரு சமூகம் தனக்கான அரசியலைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இன்றியமையாதது. ‘அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாக’ முஸ்லிம் சமூகத்தின் நிலை மாறிவிடக் கூடாது.அந்த வரிசையில், கடந்த தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருந்த மனநிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. அத்துடன், முஸ்லிம் கட்சிகளின் இருப்பின் அவசியம் குறித்து ஏற்கனவே கணிசமான மக்கள் உணர்ந்திருந்த நிலையில், மேலும் சிலரும் இப்போது அது பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது.
ஆனால், முஸ்லிம் கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளில் இன்னும் பாரியதொரு முன்னேற்றம் ஏற்படவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளைச் சுற்றி இருக்கின்ற கூட்டம் இன்னும் 2000இல் அரசியலையே செய்து கொண்டிருக்கின்றது. மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஒத்திசைவாக தமது அரசியல் வியூகத்தை எந்த முஸ்லிம் கட்சியும் மாற்றியதாகத் தெரியவில்லை.இப்படியான சூழலிலேயே நாம் உள்ளூராட்சித் தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். ஆகவே, மேற்குறிப்பிட்ட தேவைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு முஸ்லிம்களுக்கான அரசியலை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சமூகத்திற்குள் இருந்து நல்ல அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளை வளர்த்தெடுப்பதற்கும் இத்தேர்தல் களம் நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஆனால், இந்த பாரதூரமான விடயங்களைக் கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,மக்கள்காங்கிரஸ்,தேசியகாங்கிரஸ்உள்ளிட்டகட்சிகள்வேட்பாளர்களைத் தெரிவுசெய்திருப்பதாகநூறுவீதம்திருப்திகொள்ளமுடியாமல்இருக்கின்றது.பெரும்பான்மைக்கட்சிகளின்சார்பாகமுஸ்லிம்பிரதேசங்களில்நிறுத்தப்பட்டிருப்பவர்களும் பெரிய சமூக செயற்பாட்டாளர்களோ, சிந்தனையாளர்களோ அல்ல.
முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கான அரசியலை மழுங்கடிப்பதற்காக வேறு கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் தாங்களும் ஒரு கருவியாக உபயோகிக்கப்படுவதற்கு இடமளிக்கின்ற போக்கு எவ்விதமான சமூக சிந்தனைக்குள் அடங்கும் என்பதும் தெரியவில்லை.
80-90களில் முஸ்லிம் கட்சிகளில் பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் போட்டியிட்ட பலர் சமூக சிந்தனை உடையவர்களாக இருந்தனர்.
இந்தப் போக்கு 2000இற்கு பிறகு வெகுவாக மாறியது. ஓப்பீட்டளவில் சமூக அரசியலுக்குப் பொருத்தமற்றவர்கள் உள்ளே வரத் தொடங்கினர்.
முஸ்லிம் கட்சிகள் மீது ஏற்பட்ட வெறுப்பினால் பலர் ஒதுங்கிக் கொண்ட பின்னணியில், கடந்த 10- 15 வருடங்களில் முஸ்லிம் கட்சிகள் சார்பாக உள்ளூராட்சி சபைகளில் களமிறக்குவதற்குப் பொருத்தமானவர்களைத் தேடுவது என்பது கல்லில் நார் உரிக்கின்ற வேலையாக மாறி விட்டது. இந்த நிலைமையை இந்த முறையும் அவதானிக்க முடிகின்றது.
முஸ்லிம் காங்கிரஸிற்கு அடிப்படையில் பலமான பிரதேச கட்டமைப்புக்கள் உள்ளன. ஆனால், தலைவர் ஹக்கீமும் முன்னாள் எம்.பிக்களும் ஒவ்வொரு ஊரிலும் பல குழுக்களை உருவாக்கி இருந்தனர். ஒவ்வொருஎம்.பியின் பின்னாலும் ஒவ்வொரு குழு செயற்பாட்டாளர்கள் நின்றனர். சிலர் குறுக்கு வழியில் உழைத்தனர்.
மக்கள் காங்கிரஸிற்குப் பிரதேசக் குழுக்கள் இருக்கின்ற போதும், கிழக்கில் அவ்வளவு பலமாக இல்லை. வடக்கில் மு.காவை போலவே, கிழக்கில் ம.காவின் இயங்கு நிலையும் மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் றிசாட் பதியுதீன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தை அவர் அரசியல் மூலதனமாக மாற்றிக்கொள்ளத் தவறி விட்டார்.
இதனால் களம் திவாலாகி உள்ளது.தேசிய காங்கிரஸ் கட்சி இதுவரை சில சபைகளை மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இம்முறை அதன் தலைவர் அதாவுல்லா ஒரு எம்.பியாக இல்லாத சூழலில் அக்கட்சி உள்ளூராட்சித்
தேர்தலில் களமிறங்குகின்றது.
அதாவுல்லா தனக்கிருந்த அதிகாரத்திற்கும், செல்வாக்கிற்கும் மு.கா. அளவுக்குத் தேசிய காங்கிரஸை வளர்த்திருக்க முடியும். தான் செய்த அபிவிருத்திகளையும் வழங்கிய தொழில்களையும் வாக்குகளாக மாற்றியிருக்க முடியும். ஆனால், அவரைச் சூழ இருப்பவர்களின் எகத்தான போக்கும் ஆலோசனைகளுக்குச் செவிமடுக்காத அதாவுல்லாவின் வியூகங்களும் இன்று பாரிய பின்னடைவைக் கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில், மேற்படி மூன்று கட்சிகள் மட்டுமன்றி ஏனைய முஸ்லிம் அணிகளுக்கும் இந்த முறைஉள்ளூராட்சிசபைத்தேர்தலில்பொருத்தமானவர்களைக் களமிறக்குகின்றதா? என்பதில் பலத்த சந்தேகமுள்ளது.பல வட்டாரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட முன்வந்துள்ளார்கள். இதனால் அவர்களிடையே போட்டி நிலை ஏற்பட்டுள்ளது. சில வட்டாரங்களில் ஒரு வேட்பாளரைத்தேடிப் பிடிப்பதே முஸ்லிம் கட்சிகளுக்கு பெரும் சிக்கலாகப் போயுள்ளது.
ஆகவே, கடைசியில், வேட்புமனுவில் உள்ளடக்கப்படும் வேட்பாளர்கள்
எல்லோரும் மேற்சொன்ன இலக்கை அடையப் பொருத்தமானவர்களா இருப்பார்களா என்பது கேள்விக்குறியே.கட்சித் தலைவரின், எம்.பியின் அல்லக்கைகள், கையில் பணமிருப்பவர்கள், ஊக்குள் படம் காட்டுபவர்கள், புகழ் விரும்பிகள், கொந்தராத்துக்காரர்கள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள், சொந்தக் காரர்கள், தலையாட்டி பொம்மைகளும் இந்த முறை களமிறக்கப்படுவதாகத் தெரிகின்றது.
அது போதாது என்று, ஒரு பிழையான முன்மாதிரியாக, சில வேட்பாளர்கள் வேறு வட்டாரங்களில் களமிறக்கப்படுகின்றார்கள். முஸ்லிம் கட்சிகளுக்கு சில வட்டாரங்களில் போடுவதற்கு ஒரு வேட்பாளரைக் கூட தேடிப்பிடிக்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில்தான், வேட்புமனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
எது எப்படியோ, முஸ்லிம் கட்சிகள் இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இன்னும் பல வருடங்களுக்கு இதனை எண்ணி கை சேதப்பட வேண்டியிருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago