Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஜனவரி 26 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹமட் பாதுஷா
கடந்த சில நாள்களாக, முஸ்லிம் எம்.பிக்களின் செயற்படாத்தன்மைப் பார்க்கும்போது, ஆறுமாதம் போர்க்களத்தில் தொடர்ச்சியாகப் போரிட்டு விட்டு, விடுமுறையில் வீடு திரும்பிய படை வீரர்கள், போர்க்களத்துடன் எந்தத் தொடர்புமின்றி ஓய்வெடுப்பது போல இருக்கின்றது.
ஜனாஸா நல்லடக்கம் விடயத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் அடங்கி விட்டார்களா, ‘அடக்கப்பட்டு’ விட்டார்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
ஏதோ இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விட்டதைப் போன்று அல்லது, மனம்வெறுத்து, முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகளும் ஒருவித தேக்க நிலைக்கு வந்திருப்பது போலவே தோன்றுகின்றது.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அரசாங்கத்தின் மீதான கிடுக்குப்பிடியை உலகின் பல நாடுகள் இறுக்கத் தொடங்கியுள்ளன. இம்முறை சற்று அதிகமான நெருக்கடியை அரசாங்கம் சந்திக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி இருக்கின்றன.
யுத்த காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்கான நகர்வுகளை வழக்கம்போல, இம்முறையும் தமிழர் தரப்பு மேற்கொண்டு வருகின்றது.
தமிழர்கள் உரிமைக்காக இத்தனை பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்க, முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், சிங்கள தேசியத்திடம் இருந்து கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு, தமக்கு எதிரான உரிமை மறுப்புகள் தொடர்பில் வாய்மூடி மௌனமாக இருப்பதற்கு விளைகின்றனரா என்ற கேள்விதான், வலுவாக எழுகின்றது.
இலங்கையில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் ஓய்ந்தபாடில்லை. முஸ்லிம்களும் கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்டு இறக்கின்றனர்; அல்லது, இறந்த பின்னர் கொவிட்-19 நோயாளர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு இறக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் சில வைத்தியசாலைகளில் காணப்படும் இனவெறுப்புச் சூழலின் காரணமாக எரிக்கப்படுகின்றன.
ஆயினும், ஐ.டி.எச், கல்முனை, காத்தான்குடி உள்ளடங்கலாக நாட்டின் பல பாகங்களில் உள்ள வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில், ‘தம்மை அடக்குவதற்கான அனுமதி கிடைக்குமென்ற நினைப்பில்’ பல ஜனாஸாக்கள் காத்துக் கிடக்கின்றன. இறந்தவர்களின் குடும்பத்தினரும் எப்போதாவது நல்லசெய்தி வந்திடாதா என்ற எதிர்பார்ப்பில் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அவ்வாறான ஓர் அனுமதி கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. ஏதோ ஜனாஸா விவகாரத்துக்குச் சாதகமான தீர்வொன்று தரப்பட்டு, இப்பிரச்சினை தீர்ந்து விட்டது போல, முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகள் இருக்கக் காண்கின்றோம்.
கொவிட்-19 நோய் உறுதி செய்யப்படும் ஜனாஸாக்களைப் புதைக்கலாமா என்பதை ஆராய்வதற்காக நிபுணர் குழுக்கள் இரண்டு நியமிக்கப்பட்டன. நிபுணர் குழுக்கள் இரண்டும், முரண்பாடான சிபாரிசுகளை வழங்கியுள்ளதாக முன்னர் அறிவித்திருந்த அரசாங்கம் பின்னர், நிபுணர் குழுவானது எரிப்பதற்கே பரிந்துரைத்து உள்ளதாகக் கூறி, அந்த நடைமுறை தொடரும் என்றும் சொன்னது. இவ்விடயத்தில் இனவாதத்தையும் விஞ்சிய ஓர் அரசியல் இருக்கின்றது என்பதை உணர்வதற்கு இது போதுமாக இருந்தது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஜனாஸா விவகாரம் அப்படியே ஓய்ந்து விட்டது. ஏதோ இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் சாதகமான பதிலை அறிவித்து விட்டது போல, முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
முன்னதா, எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் எம்.பிக்கள் அரச தரப்புடன் இரகசியமான சந்திப்புகளை நடத்தியதாகச் சொல்லப்பட்டது. நீதி அமைச்சர் மிக நுட்பமான முயற்சிகளைச் செய்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, உடல்கள் எரிப்பு பற்றி, ஒரு குறிப்பிட்ட வர்த்தமானி வெளியிட்ட விதமே தவறு என்று சபையில் உரையாற்றினார்.
பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட எம்.பிக்களும் நல்லநேரம் பார்த்து சபையில் கொதித்து எழுந்திருந்தனர். ஆனால், வீராப்புப் பேசிய முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள் எல்லோரும் இப்போது மௌனமாகி விட்டனர்.
முஸ்லிம் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏனென்றால், முஸ்லிம் சமூகத்தில் எந்தவொரு விடயமும் இரண்டு, மூன்று வாரங்களுக்கே பேசுபொருளாக இருக்கும். அதன்பிறகு இன்னுமொரு விடயதானத்துக்கு மாறிவிடுவார்கள்.
இந்தப் பொது இயல்புக்கு சற்று மாற்றமான ஒரு விவகாரமாக ஜனாஸா எரிப்புப் பிரச்சினையைப் பார்க்கலாம். 10 மாதங்களாக முஸ்லிம் சமூகம் இதுபற்றிப் பேசியும் குரல் கொடுத்தும் வந்தது.
ஆனால், அரசாங்கம் நடந்து கொண்ட விதத்தால், முஸ்லிம் சமூகம் இதில் வெறுப்புற்றதைத் தொடர்ந்து, ஜனாஸா அடக்கம் பற்றிய குரல்கள் பெருமளவுக்கு ஓய்ந்திருக்கின்றன. இப்போது, ஒரு யுவதி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றிபெற்றமை, முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் எனப் புதிய பேசுபொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதைக் காண முடிகின்றது.
புதிய விவகாரங்களில் கவனம் செலுத்துவது தவறில்லை. ஆனால், அதற்காக முன்னைய உரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு விடுவது, மிக மோசமான பின்னடைவுக்கு இட்டுச் செல்லும்.
தமிழர்கள் 50 வருடங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றார்கள். இலங்கையின் அரசியல் பின்புலத்தில் தனிநாடோ, முழுமையான திருப்தியை வழங்கும் தீர்வுப் பொதியோ கிடைப்பது சாத்திமற்றது என்பது, தமிழ்த் தேசியத்துக்குத் தெரியும். ஆயினும், தொடர்ச்சியாக அவர்கள் ஏதோ ஒரு வகையில் போராடி வருகின்றார்கள் என்பதை, முஸ்லிம்கள் கவனிக்க வேண்டியுள்ளது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்குப் பாதிப்பு வரலாம்; அதனூடாகத் தமிழர்களின் அபிலாஷைகள் பின்னடைவைச் சந்திக்கலாம் என்று தோன்றியவுடன், இந்தியா, தனது வெளிவிவகார அமைச்சரைக் கொழும்புக்கு அனுப்பி, கடுந்தொனியில் அழுத்தம் கொடுக்கின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் இரவோடு இரவாக நொருக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, இரு தினங்களுக்குள் மீண்டும் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இவைவெல்லாம் இயல்பாக நடந்தவை அல்ல.தமிழர்களின் தொடர் போராட்டமும் வெளிநாடுகள், தூதரகங்களுடன் தமிழ்த் தரப்புகள் கொண்டுள்ள உறவும் இதுபோன்ற வெற்றிகளுக்கு முக்கிய காரணமாகும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வாய்ச் சொல்லில் மட்டும் வீரராக இருக்கின்றனர். ஆனால், சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் விடத்தில், செயலில் வீரர்களாக இல்லை.
தமிழர்களுக்கு இந்தியாவைப் போல, முஸ்லிம்கள் விடயத்தில் உன்னிப்பாக அக்கறை செலுத்தும் முஸ்லிம் நாடுகளும் இல்லை. அதேபோன்று, மேற்குறிப்பிட்டவாறு முஸ்லிம் சமூகச் செயற்பாட்டாளர்களும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாக ஒரு விடயத்தை வலியுறுத்துவதைக் காண முடியவில்லை.
இந்நிலைமையை இன்றைய காலகட்டத்திலும் காணலாம். அதாவது, நாட்டில் பொருளாதார வீழ்ச்சி, அரசியல் நெருக்கடி, ஆளும் தரப்புக்குள் உள்ளக பனியுத்தம், வேலையின்மை எனப் பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் பரவலும் ஜனாஸா விவகாரமும் இவற்றையெல்லாம் மறைத்து மேலோங்கி நிற்கின்றன.
இந்தப் பின்னணியிலேயே, ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெறப் போகின்றது. மனித உரிமைகள் விடயத்தில் அரசாங்கம் எந்தவொரு முன்னேற்றத்தையும் சர்வதேசத்துக்குக் காண்பிக்கவில்லை. ‘நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்’ என்று சர்வதேசத்துக்குக் காட்டுவதற்கு, மூவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்ததை தவிர, பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை.
ஜெனீவா களம் சிக்கலானது என்பதுடன் இம்முறை முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பும் பேசப்படலாம். எனவே, ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கி இருக்கலாம். தமிழர்கள் விடயத்தில் சற்று மென்மையான அணுகுமுறையை கையாண்டிருக்கலாம்.
ஆனால், இரு சிறுபான்மைச் சமூகங்கள் விடயத்திலும் அரசாங்கம் அண்மைக் காலத்தில் மறுதலையாகவே செயற்பட்டு வருகின்றமை கண்கூடு. இதில் மறைமுகமாக தெளிவான அரசியல் நகர்வுகள் உள்ளன. ஜெனீவாவில் வெற்றி பெற்றாலும், தோல்வி கண்டாலும் அதனை சிங்கள மக்களிடையே பிரசாரப்படுத்தி, ஆட்சியை அதிர்வுகள் இன்றி வைத்திருப்பதற்கு அரசாங்கம் கணக்குப் போடலாம் என்பதே, அரசியல் நோக்குநர்களின் அவதானிப்பாகும்.
அரசாங்கம் இவ்விதம் செயற்படுகின்றது என்பதற்காகவோ, ஜனாஸா எரிப்பு தொடர்பில் இனி எதுவும் செய்ய முடியாது என்ற விரக்தியின் காரணமாகவோ, இந்த நேரத்தில் மேலும் நெருக்கடியைக் கொடுக்கக் கூடாது என்ற சிந்தனையிலோ, முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் வாழாவிருந்து வீணே காலத்தைக் கழிக்கக் கூடாது.
தமிழர்கள் ஒருபோதும் அவ்வாறு செயற்படவில்லை. தமது அபிலாஷைகள், உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ச்சியாகப் பாடுபடும் சமூகமே, கொஞ்சமேனும் உரிமையைப் பெற்றுக் கொள்ளும் என்பதே நமது பட்டறிவாகும். எனவே, ஜெனீவா அமர்வுக்கு முன்னர் கிடைத்துள்ள சாதகமான களத்தைப் பயன்படுத்தி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago