2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

முஸ்லிம் அரசியல்வாதிகள் ‘முட்டு’ அரசியலால் சாதித்தது என்ன?

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 22 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

பெருந்தேசியக் கட்சிகளுக்கு குறிப்பாக, ஆளும் கட்சிகளுக்கு காலம்காலமாக முட்டுக் கொடுத்து வருகின்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதன்மூலம் தமது சமூகத்துக்கு அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு, காத்திரமான முயற்சிகளை எடுத்ததாகத் தெரியவில்லை. முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை, முறையாக முன்வைத்ததாகவும் அறியக் கிடைக்கவும் இல்லை.

அரசியல் என்பது, தேர்தல் காலங்களில் மாத்திரம் உயிர்த்தெழும் ஒரு தொழிலல்ல. அது எல்லாக் காலங்களிலும் உயிரோட்டமாக இருக்க வேண்டும். வாக்குகளைச் சூறையாடுவதற்கான களமாகத் தேர்தலையும் ஆயுதமாக மக்களையும் பயன்படுத்தி விட்டு, அதிகாரம் கிடைத்த பின்னர் சமூகத்தை மறந்து, தமது கஜானாக்களை நிரப்புவதிலேயே குறியாக இருக்கும் போக்கு மக்கள் சார்பு அரசியலல்ல.

சமூகத்துக்காக மேடைகளில் மாத்திரம் வாய்கிழியக் கத்தினால் போதாது. செயற்பாட்டுக் களத்தில் சமூக சிந்தனையோடு இயங்கவும் வேண்டும். முஸ்லிம்களின் நீண்டகால பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, ஒரு வருடத்துக்கு ஒரு பிரச்சினையையாவது தீர்க்க முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் கூட, கடந்த 25 வருடங்களில்  ஆகக்குறைந்தது 25 பிரச்சினைகளாவது தீர்த்திருக்கலாம்.

ஒரு சமூகத்தின் பிரச்சினைகளை, அபிலாஷைகளை முன்வைக்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட தலைவர்கள், எம்.பிக்களுக்கு, சமூகம் பற்றிய உண்மையான அக்கறை இருக்க வேண்டும். பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதுடன் அதுபற்றிய ஆவணங்களையும் பேணி வரவேண்டும். பணத்துக்கும் பதவிக்கும் சோரம்போகாத தன்மை வேண்டும். சமூகத்தின் நலனுக்காக, ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பார்வம் இருக்க வேண்டும்.

‘ஆமாசாமி’களையும், ‘ஜால்ரா’ அடிக்கும் கூட்டத்தையும் தம்மோடு வைத்துக் கொண்டிருக்காமல், மேற்குறிப்பிட்டதைப் போன்ற சிறந்த பண்புள்ள சமூக சிந்தனையாளர்களையும் துறைசார்ந்த ஆளுமைகளையும் முஸ்லிம் தலைவர்கள் தம்மோடு வைத்திருக்க வேண்டும்.

‘நீங்கள் செய்வதெல்லாம் சரி’ என முகஸ்துதிக்காக சொல்கின்ற கூட்டம், நிச்சயமாகப் படுகுழியை நோக்கியே அழைத்துச் செல்கின்றது என்பதற்கு, நிகழ்காலத்தில் சிறந்த உதாரணம் ஆளும் கட்சியின் அரசாட்சியாகும்.

யுத்த காலத்தில், தமிழ்த் தேசிய அரசியல் வலுவிழந்திருந்தது. தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கூட, ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டத்திலேயே முழு கவனத்தையும் செலுத்தியிருந்தனர்.

இந்தப் பின்னணியில், யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை, தமிழ் சமூகத்தின் பார்வையில் அபிலாஷைகளை பின்னடைவு என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், பல் பிடுங்கப்பட்ட பாம்பு போலவே பெருந்தேசியம் கருதியது எனலாம். அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கே நீண்டகாலம் எடுத்தது.

இதனையெல்லாம் தாண்டி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தமது சமூகத்தின் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு இன்றுவரை முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இதுவரை  பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், குறிப்பிடத்தக்களவுக்கு முன்னேறி வந்திருக்கின்றார்கள் என்பது கூர்ந்து கவனிப்போருக்குப் புரியும். இந்த விடயத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெறுபேறு பூச்சியமாகும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில், தமிழரசுக் கட்சி மட்டுமன்றி ஒரு காலத்தில் ஆயுத இயக்கங்களாக அறியப்பட்ட அணிகளும் அங்கம் வகிக்கின்றன. இவர்கள் எல்லோரும் ஒரு கூட்டமைப்பாக இணைந்திருக்கின்றார்கள். தமிழர்களின் விவகாரம் என்று வரும்போது, இதற்கு வெளியிலுள்ள அநேக தமிழ் அரசியல் அணிகளும் ஒன்றுசேர்வதைக் காண்கின்றோம்.

ஆனால், முஸ்லிம் அரசியலின் நிலைமை தலைகீழானது. இன்றுள்ள முஸ்லிம் கட்சிகள் பெரும்பாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிளவுண்ட துண்டங்களாகும். அநேகமான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற ஓர் அரசியல் ஆசானின் பாசறையில் வளர்ந்தவர்கள். ஏனைய முஸ்லிம் எம்.பிக்களும் அவரது அரசியலை அண்ணாந்து பார்ப்பவர்கள்.

இவ்வாறு ஒரு கூட்டுக் கிளியாக இருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள், இன்று வெவ்வேறு வழித்தடங்களில் பயணிக்கின்றனர். அதற்காகவே மக்களைக் கூறுபோடுகின்றனர். பல தமிழ் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து கூட்டமைப்பாக மாறிய போதும், சமூக நோக்கில் ஒரே பாசறையில் வளர்ந்த இவர்களால் ஓர் அணியாக ஒன்றுசேர முடியவில்லை. அல்லது, அதனைவிட்டும் ஏதோவொன்று அவர்களைத் தடுக்கின்றது.

தமிழ்த் தரப்பு, இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டது என்பது வெளிப்படையானது. உலக அளவில், இலங்கை அரசாங்கங்கள் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை நிகழ்த்தினார்கள் என்ற தோற்றப்பாட்டை கட்டமைத்துள்ளது.
குறிப்பாக, தமிழர் விவகாரத்தை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை வரை கொண்டு சென்றுள்ளது. ஜெனீவாவில் அரசாங்கம் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகளும் பிரதான காரணம் என்பது இரகசியமல்ல.

ஆனால், இத்தனையையும் செய்து கொண்டு, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றது. தமிழர்களின் பிரச்சினைகளை, ஜனாதிபதியுடன் மட்டுமன்றி யாருடனும் பேசுவதற்கு சித்தமாக இருக்கின்றோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பகிரங்கமாகவே சொல்கின்றார்.

தமிழ்த் தரப்பின் நகர்வுகளால், அரசாங்கம் உள்ளுக்குள் விசனமடைந்து இருந்தாலும் கூட, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெறுமானத்தை, கனதியை அவர்கள் குறைத்து மதிப்பிடவும் இல்லை; கேலி செய்யவும் இல்லை என்பது கவனிப்பிற்குரியது. இந்த விடயத்தில், முஸ்லிம் அரசியல் கட்சிகளையோ அல்லது, எம்பி.க்களையோ ஒரு பொருட்டாக, பெறுமதிவாய்ந்த தரப்பாக அரசாங்கங்கள் கருதுவதில்லை. ஏனெனில், அவர்கள் தமது கனதி என்ன என்பதை செயற்பாட்டில் வெளிக்காட்டவில்லை.

தனித்தனியாகவோ கூட்டமாகவோ அவர்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள். அவர்களுக்கு ‘எதைக் கொடுத்தால்’ வாலை ஆட்டிக் கொண்டு, சத்தமின்றி இருப்பார்கள் என்பதை குறிப்பாக ராஜபக்‌ஷர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

இப்படியாக அரசாங்கத்துக்கு உள்நாட்டிலும் அழுத்தங்களைக் கொடுக்கும் தமிழ்த் தரப்பால், எந்தத் தயக்கமும் இன்றி ஆட்சியாளர்களை சந்திக்க முடியும் என்றால், தமது பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேச முடியுமென்றால், இவ்வளவு காலமும் அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுப்பதையே ஒரு வேலையாகச் செய்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஏன் அதனைச் செய்ய முடியாது?

90களில் இருந்தே முஸ்லிம் சமூகம் இணக்க அரசியலையே செய்து வருகின்றது. இதனை சமூகத்துக்காக வெற்றிகரமாக பயன்படுத்திய இரண்டு, மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளில் மர்ஹூம் அஷ்ரப் முதலிடத்தில் உள்ளார்.

அவரது மரணத்துக்குப் பிறகு இணக்க அரசியல் என்பது, சோரம்போகும் அரசியலாக மாறியிருக்கின்றது. வெளிப்படையாக ஆளும் தரப்புக்கு ஆதரவளிப்பதும் மறைமுகமாக ‘டீல்’ பேசுவதுமான ஒரு குள்ளத்தனமான போக்காக இதனைக் கருதலாம்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை பிரதான இரு முஸ்லிம் கட்சிகள் ஆதரித்தன. 2020 பொதுத் தேர்தலிலும் இதுவே நடந்தது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர், மொட்டு அணியே வெற்றிபெறும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அந்தச் சூழ்நிலையிலும் மறுதரப்பை முஸ்லிம் அணிகள் ஆதரித்தமை வேறு விடயம்.

ஆனால், இந்தத் தேர்தல்களில் மொட்டு அணி எந்தளவுக்கு முஸ்லிம் இனவெறுப்பு அரசியலை மூலதனமாக்கியதோ, அதற்கு சரிநிகராக பிரதான முஸ்லிம் கட்சிகள் ராஜபக்‌ஷர்களை விமர்சித்தனர். இனவாதத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரினார்கள். இதன்படி கணிசமான முஸ்லிம்கள், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றப்பாடு உருவானது. 

ஆனால், அதன்பிறகு என்ன நடந்தது? முஸ்லிம் எம்.பிக்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தனர். அரச ஆதரவு எம்.பிக்களாக மாறிப் போனார்கள். கட்சித் தலைவர்கள் பெரிதாக அறிக்கை விட்டார்களே தவிர, அந்த எம்.பிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தலுக்கு முன்பிருந்தே ஒரு பக்குவமான அரசியலை செய்திருக்க வேண்டும். தேர்தல் பிரசாரங்களை மிதமாக முன்னெடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, முஸ்லிம்களை உசுப்பேற்றி, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்களை நட்டாற்றில் விட்டதைப் போல கேவலம் வேறு எதுவும் இல்லை.

சரி அதையும் சகித்துக் கொள்வோம். இவ்வாறு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதன் மூலம், அதாவது முட்டுக் கொடுப்பதன் ஊடாக, முஸ்லிம் எம்.பிக்கள் எதைச் சாதித்துள்ளார்கள்? கடந்த 20 வருடங்களில் இவ்வாறு அரசாங்கத்துக்கு அல்லது எதிரணிக்கு ஆதரவளித்தன் ஊடாக, முஸ்லிம் சமூகத்தின் எத்தனை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்கள்?

எதிர்ப்பு அரசியலைச் செய்கின்ற தமிழர் தரப்பால் அரசாங்கத்துடன் பேச முடிகின்றது என்றால், இணக்க அரசியல் என்ற கோதாவில் முட்டுக்கொடுக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளால் மேல்மட்ட ஆட்சியாளர்களை முறையாக சந்திக்கவோ, சமூகப் பிரச்சினைகளை முன்வைக்கவோ ஏன் முடியவில்லை? 

இதற்கு முழுமுதற் காரணம் அரசியல்வாதிகள். இரண்டாவது காரணம், திரும்பத் திரும்ப வாக்களிக்கின்ற மக்கள். எனவே, முஸ்லிம் அரசியல் மேற்குறிப்பிட்டது போல, சமூகம் சார்ந்த அரசியலாக மாற வேண்டும் என்றால், மக்களும் அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .