Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
நாட்டு மக்கள், பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் இப்போது முகம் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும், சுகாதார நெருக்கடியில் இருந்து படிப்படியாக மீண்டு, பொருளாதார நெருக்கடிக்குள் விழுந்திருக்கின்றது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை.
இதற்கிடையில், தேசிய அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களும் மக்களைப் பலிக்கடாவாக்கும் நகர்வுகளும் இன, மத பேதங்கள் கடந்து, எல்லா மக்கள் மத்தியிலும் ஒருவித எரிச்சலையும் விசனத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
பெரும்பான்மையின மக்களுக்கான அரசியலை, பெருந்தேசியக் கட்சிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றன. சிங்களவர்களின் இன, மத ரீதியான விடயங்கள், உரிமைகள் தொடர்பில் எந்தவோர் அமைப்பும் சிவில் சமூகமும் கவனம் செலுத்தாவிட்டால் கூட, அப்பணியை ஆட்சியாளர்கள் தமது நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி இருப்பார்கள் என்பதை, வரலாறு நெடுகிலும் கண்டுணர்ந்து வருகின்றோம்.
அதேபோல், தமிழ்த் தேசிய அரசியலும் எல்லாக் காலத்திலும் உயிரோட்டமாகவே இருந்து வருகின்றது. தமிழ் அரசியல்வாதிகளின் போக்குகள், தீர்மானங்கள் சிலபோதுகளில் விமர்சனத்துக்கு உரியவையாக இருந்திருக்கலாம். ஆனால், ஏதோ ஒருவகையில் அந்த மக்களின் உரிமைக்காக அவர்கள் குரல்கொடுத்து வருகின்றார்கள் என்பதை மறுக்க முடியாது.
ஆனால், இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் சமூகத்தின் செயற்பாடுகள் பூச்சியமாகவே இருக்கக் காண்கின்றோம். முஸ்லிம்களின் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் தொடர்பாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகள் குரல் கொடுப்பதும் இல்லை. ஜம்மியத்துல் உலமா சபை போன்ற மத அமைப்புகளோ, சிவில் அமைப்புகளோ அதற்கான அழுத்தத்தை வெளியில் இருந்து பிரயோகிப்பதும் இல்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது, தனியொரு கட்சியல்ல; வடக்கைத் தளமாகக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியைப் பிரதானமாக கொண்டுள்ள இக்கூட்டமைப்பின் தலைவராக, கிழக்கைச் சேர்ந்த இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டார். இதன்மூலம் மிகவும் நுட்பமான தீர்மானமொன்று எடுக்கப்பட்டது.
அத்துடன், இதில் இதர சிறு கட்சிகள், இயக்கங்களும் உள்ளடங்கியுள்ளன. ஒருகாலத்தில் ஆயுத இயக்கங்களாக அறியப்பட்டவைகளும் இதில் உள்ளடக்கம். இதன்மூலம், ஆயுதத்தில் நம்பிக்கை வைத்திருந்த பலரை தேசிய அரசியல் நீரோட்டத்துக்குள் கலக்கச் செய்துள்ளார்கள் என்றும் கூறலாம்.
வெவ்வேறு கொள்கைகளுடன் பயணித்துக் கொண்டிருந்த தமிழ் அணிகளே, இன்று ஒரே குடையின் கீழ் வந்திருக்கின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகள் மட்டுமன்றி, தேவையேற்படும் போது ஏனைய சிறு கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக ஒரே மேசையில் அமர்கின்றன.
இவ்வாறு வெவ்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றிய தமிழ் அரசியல் கட்சிகளும் ஆயுத இயக்கங்களாக ஒருகாலத்தில் அறியப்பட்ட அணிகளும் இன்று, தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ற ஒரு மையப் புள்ளியில் சந்தித்திருக்கின்றன என்றால், தனித்துவ அடையாள அரசியல் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் உதயமான முஸ்லிம் கட்சிகளாலும் பெரும்பான்மைக் கட்சிசார் முஸ்லிம் எம்.பிக்களாலும் ஏன் முஸ்லிம்களுக்காக ஒருமித்துக் குரல் எழுப்ப முடியாது?
இன்று, முஸ்லிம் அரசியலில் உள்ள பிரதான மூன்று கட்சிகளும், மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரபின் தனித்துவ அடையாள சிந்தனை என்ற வழித்தடத்தில் தோற்றம் பெற்றவை ஆகும். ஏனைய முஸ்லிம் அரசியல் அணிகளும் அதில் பயணிப்பதாகவே காட்டிக் கொள்கின்றன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தது மட்டுமன்றி, அதைப் பெருவளர்ச்சி அடையச் செய்தவரும் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆவார். இதை, ‘அஷ்ரபின் கட்சி’ என்றுதான் வரலாறு பதிவு செய்திருக்கின்றது. ரவூப் ஹக்கீம், இக்கட்சியின் தலைவரான போதும், மக்கள் மனங்களில் மறைந்த தலைவரின் இடத்தை பிடிக்கவில்லை என்பது தனிக்கதை.
அதேபோல், மறைந்த தலைவரின் சித்தாந்தங்களோடுதான் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், அஷ்ரப் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி, பின்னர் அதை தேசிய காங்கிரஸ் எனப் பெயர் மாற்றிக் கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், அஷ்ரபின் மரணத்துக்குப் பின்னரே முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். அவர், அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவரல்ல; எனினும், அவரது கொள்கை, கோட்பாடுகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டவர்.
அவ்வாறே, பிரதிநிதித்துவ அரசியலுக்கு வெளியில் இருக்கின்ற ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, ஐக்கிய சமாதான முன்னணி, புதிதாக உதயமாகின்ற அரசியல் அணி எல்லாம், இதே கொள்கையை அடிப்படையாகக் கொண்டவையே என்பதை யாரும் மறுக்கவியலாது.
இவ்வாறு பலவிதமான ஒற்றுமைகளைக் கொண்டுள்ள முஸ்லிம் அரசியல் அணிகள், ஒன்றுபட்டு இந்தச் சமூகத்துக்காக எவ்வளவோ காரியங்களைச் சாதித்திருக்க முடியும். எத்தனையோ விடயங்களில் அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் ஊடாக, முஸ்லிம்களின் அபிலாஷைகள் ஒன்று, இரண்டையாவது நிவர்த்தி செய்திருக்கலாம். அது, கடந்த கால்நூற்றாண்டாக நடக்கவேயில்லை.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, தலைமைத்துவப் போட்டி, ஈகோ, கட்சிசார் அரசியலை முன்கொண்டு செல்வதன் ஊடாகத் தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளல், பதவியும் பண ஆசையும், ‘டீல்’ மன்னர்களின் உள்வருகை எனப் பலவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
இதனால், சம்பந்தப்பட்ட முஸ்லிம் அணிகளின் தலைவர்கள், துருவப்பட்டுள்ளதான ஒரு பொய்த் தோற்றம் ஏற்பட்டுள்ளது. இதை நம்பி முஸ்லிம் சமூகமும் கட்சி வாரியாகப் பல துண்டங்களாகப் பிளவுபட்டுள்ளது. மாறாக, சமூகம் சார்ந்த அரசியலில், ஓர் அங்குல முன்னேற்றமும் ஏற்படவில்லை.
முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று கூறினால், உடனே முஸ்லிம் கூட்டமைப்பா என்றுதான் கேட்கின்றார்கள். அதற்கான பதில், “இல்லை” என்பதாகும்.
தமிழ்க் கட்சிகளே கூட்டமைப்பாகச் செயற்படுகின்ற போது, முஸ்லிம் கட்சிகள் அவ்விதம் ஒன்றுபடுவது முடியாத காரியமல்ல. ஆனாலும், இன்றிருக்கின்ற முஸ்லிம் அரசியலுக்குள் அது சாத்தியமில்லை என்பது, பல தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இங்கே நாம் வலியுறுத்துவது, முஸ்லிம் கட்சிகள் மற்றும் அனைத்து எம்.பிக்களும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைக்காக ஒருபுள்ளியில் சந்தித்துப் பேசி, அரசியல் நகர்வுகளைச் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே ஆகும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் பற்றி பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்றது. புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் பற்றிப் பேசப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, உலகின் கவனம் குவிந்திருக்கின்றது.
இவை ஒவ்வொரு விடயமும், முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபட்டவையாகும். இவை உட்பட நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவாக்க, கட்டமைப்பு மாற்ற முன்னெடுப்புகளிலும் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கின்றது. இந்தப் பொறுப்பை முஸ்லிம் அரசியல்வாதிகள் சுமந்துள்ளனர்.
இந்த நாட்டில் இனவாதமும் அரச ஆதரவுடனான நெருக்குவாரமும் மட்டுமே முஸ்லிம்களின் பிரச்சினை என்ற ஒரு மாயத் தோற்றத்தை, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏற்படுத்தி இருக்கின்றனர்; இது தவறானதாகும்.
உண்மையில், முஸ்லிம்களுக்குப் பல சமூகப் பிரச்சினைகள் உள்ளன. உதாரணமாக, காணிப் பிரச்சினைகளை குறிப்பிடலாம். குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சனத்தொகையின் அளவுக்கு காணிகள் இல்லை என்பதுடன், இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகளையும் உரிமை கொண்டாட முடியாத நிலைமை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, யுத்தத்தில் ஈடுபட்ட தரப்புகளால் அதுவும் குறிப்பாக தமிழ் ஆயுதக் குழுக்களால், முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட அநியாயங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. மனித உரிமைகள் மீறல்கள், காணாமல் போன முஸ்லிம்கள் பற்றிய விவரங்களை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட முறையாக ஆவணப்படுத்தவும் இல்லை; பேசவும் இல்லை.
இந்தியா, மியான்மார், இலங்கை என வியாபித்திருக்கின்ற இனவாதம், மதவாதம் மட்டுமன்றி, நிம்மதியாக வாழ்ந்துவந்த முஸ்லிம்களிடையே காளான் போல முளைத்துள்ள புதுப்புது மதக் கொள்கைகளும் பல்லின நாடுகளில் ஆபத்தானவையாகும். இதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசியல், சமய தலைமைகள் காத்திரமாக செயற்பட்டதாக நிம்மதி கொள்ள முடியாதுள்ளது.
யார் தலைவராக இருக்க வேண்டும்? யார் யார் எம்.பிக்களாக வர வேண்டும்? யாருக்கு அமைச்சுப் பதவியும் யாருக்கு பிரதி அமைச்சும் கிடைக்க வேண்டும் என்பது, அரசியல்வாதிகளுக்கு வேண்டுமென்றால் ஒரு பெரிய விவகாரமாக தோன்றலாம். ஆனால், இவையெல்லாம் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறே, சமூகத்துக்கான பேரம் பேசல் என்ற கோதாவில், எந்தப் பெரும்பான்மைக் கட்சியுடன் ‘டீல்’ பேசலாம்; அதைவைத்து எவ்வாறு உழைத்து, அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம் போன்ற விடயங்கள் சமூகம் சார்பானவையல்ல.
எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சொந்த விருப்புகள், நிலைப்பாடுகளை சமூகத்தின் விருப்பமாகக் காட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும். தமது தேவைகளுக்காக சமூகத்தை அடமானம் வைத்து, விலைபேசுகின்ற பாணியிலான கேடுகெட்ட அரசியலையும் கைவிட வேண்டும்.
முஸ்லிம் அணிகள் ஒரு கூட்டமைப்பாக வருவது சாத்தியமில்லை. ஆனால், ஒரு சமூகமாக முஸ்லிம்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்வதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்காக அனைத்து முஸ்லிம் தரப்புகளும் ஒருபுள்ளியில் சந்திக்கவும் உரையாடல்களை மேற்கொள்வதும் அவசியமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
24 Nov 2024
24 Nov 2024