Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மிகவும் பழைமை வாய்ந்ததும் மத வேறுபாடுகளின்றி எல்லோராலும் வழிபடும் முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள வர்த்தகர்கள், இன்றைய சூழலில் தொழிலிழந்து நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலதரப்பட்ட வர்த்தகம், வாழ்வாதாரத் தொழில்களை முன்னெடுத்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
யுத்தத்தினால் தொடர்சியாகப் பாதிக்கப்பட்டு, எதுமற்ற நிலையில் வங்கிக்கடன், நுண்நிதிக்கடன் எனப் பல்வேறு பட்ட கடன்களைப் பெற்று, தமது வாழ்வாதாரத் தொழில்களை ஆரம்பித்த போது, 2020ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடரும் கொவிட் -19 அச்சுறுத்தல், இவர்களது வாழ்வாதாரங்களைச் சிதைத்துள்ளது.
இலங்கையின் பிராதானமான போக்குவரத்து மார்க்கமாக அமைந்துள்ள யாழ்ப்பாணம் - கண்டி ஏ-09 நெடுஞ்சாலையில், வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் ஏறக்குறைய 150 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. வவுனியாவிலிருந்து திருமுறிகண்டி பிள்ளையார் கோவில் ஏறத்தாழ 80 கிலோமீற்றர் தூரத்திலுள்ளது. அதாவது, முறிகண்டிபிள்ளையா கோவிலானது, வவுனியாவுக்கும் யாழ்பாண நகருக்கும் இடையே ஏறைக்குறைய மத்தியில் அமைந்த பிரதேசமாக கானப்படுகின்றது.
இந்த வீதி வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகள், பொதுமக்கள் என அனைவரும் களைப்பு, சோர்வு, அசதி, மன உளைச்சல் இவைகளைக் களைந்து, முகம் கழுவி பிள்ளையாரை பிராத்தனை செய்து, உணவுண்டு செல்லும்போது, மீண்டும் புத்துணர்ச்சியுடன் களைப்பின்றி தமது பயணத்தை புதிய உத்வேகத்ததுடன் மேற்கொள்வதுடன் அந்தப் பயணத்தில் ஒருவித திருப்தியையும் உணருகின்றனர்.
இங்கே சுடச் சுட விற்பனை செய்யப்படும் கச்சானுக்கு தனியான ஒருசுவையுண்டு. வெளிநாடுகளிலிருந்து முறிகண்டியை கடந்து வரும் உறவினர்கள் யாராக இருந்தலும், இந்தக் கச்சாளை வாங்காமல் செல்ல மாட்டார்கள். முறுகண்டிக் கச்சான் என்பது, அவர்கள் பரிமாறும் அன்பின் ஓரங்கமாகும்; இந்த வழக்கம் இன்றுமுள்ளது.
மிகச் சிறிய கோவிலில் குடி கொண்டிருக்கும் விநாயகரின் மகிமையோ பெரிது. ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி மிக்கவர்’. பொங்கல், சோறூட்டல் போன்ற சடங்குகளும் இங்கு நடைபெறுவதுண்டு. வரலாற்றுக் காலம் முதல் இன்று வரை சிறியதொரு குடிலினுள்ளே, மிகவும் பழைமை வாய்ந்த பாலை மரத்தினடியில் விநாயகர் அமர்ந்துள்ளார். மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.
புராதன காலத்தில் கால்நடையாகச் செல்வோர் நலன்கருதி, சுமைதாங்கி, நன்னீர்க் கிணற்றுடன் கூடிய சிறிய மடங்கள் (வண்ணை - ஆறுகால்மடம், பருத்தித்துறை - தெருமூடிமடம் ஆகியன சிறந்த எடுத்துக்காட்டு; இன்றும் உள்ளன). அக்காலத் திண்ணை வீடுகள் முதலானவை குறிப்பிடத்தக்கவை. இவை, கால்நடையாகப் பயணிப்போரின் களைப்பினைப் போக்கி, ஓய்வெடுத்து செல்வதற்கு பெரிதும் உதவின.
இது போலவே, இன்றும் இந்த திருமுறிகண்டி பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளது என்பதற்கு அப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதரத்தை, தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற இடம் என்றே கூறமுடியும்
முழு உலகையும் ஆட்டிப்படைக்கும் கொவிட் -19, முறிகண்டியையும் முடக்கியுள்ளது. கோவிலில் மூன்று வேளை பூசைகளும் நடக்கின்றன. ஆனால், வழிபட யாருமில்லை; வழிப்போக்கர்கள் இல்லை; வர்த்தகர்கள் தமது கடைகளை மாதக்கணக்கில் மூடிவிட்டு, வாழ்வாதரமிழந்து நிற்கின்றனர்.
முறிகண்டிக் கோவிலைச் சூழவுள்ள பிரதேசத்தில் வாழ்வாதாரத் தொழிகளை மேற்கொள்பவர்கள், 1960ஆம் ஆண்டுக்கு முன்னதாக , 35 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேறி வசித்து வந்தன. 1969ஆம் ஆண்டு காலப்பகுதியில், இப் பிரதேசத்தில் வசித்து வந்தவர்களுக்கு ‘திருத்தப்பட்ட காணி அபிவிருத்தி திட்டம்' என்னும் திட்டத்தின் கீழ், அவர்கள் வசித்த காணிகளுக்கான ஆவணங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன.
முறிகண்டிக்கு தெற்காக இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் கொக்காவில் என்ற இடத்தில், தொலைக்காட்சி பரிவர்த்தனை கோபுரம் ஒன்றை இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் 1970களில் அமைத்து, தொலைக்காட்சி அலைவரிசைகளை வடக்கு பகுதிகள் அனைத்துக்கும் ஒளிபரப்பியது.
1977ஆம் ஆண்டு ஆவணி மாதமளவில் தென்பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது, தமிழ் மக்கள் கிளிநொச்சியை அண்டிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, அங்கு தற்காலிகமாக குடியமர்ந்தனர். அக்காலப்பகுதியில், சௌமியமூர்த்தி தொண்டமான், வீ.ஆனந்த சங்கரி ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெயர்ந்து, சொந்தக் காணி இல்லாமல் இருந்த 40இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இப்பகுதியில் காணி வழங்கி குடியேற்றப்பட்டன.
அதன் பின்ளர், 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில், காணியின்றித் தங்கியிருந்த 150 குடும்பத்துக்கும் தலா இரண்டு ஏக்கர் வீதம் அரசாங்கத்தால் காணிகள் வழங்கப்பட்டன. 2003ஆம் ஆண்டில் காணியின்றி இருந்த 32 குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் அரசாங்க அதிபரால் நிலம் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏ9 வீதியின் கிழக்கேயுள்ள இக்கிராமத்தின் ஒரு பகுதியில், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு முக்கால் ஏக்கர் காணி வீதமும், 140 குடும்பங்களுக்கு அரை ஏக்கர் காணி வீதமும் காணிகள் வழங்கப்பட்டன.
இவை தவிர, 2010ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர், திருமுருகண்டி ஆகிய பகுதிகளிலும் பல்வேறு குடியிருப்புகள் நிறுவப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குடியமர்த்தப்பட்ட குடும்பங்களில் அதாவது, 1969ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் குடியேறி வாழும் குடும்பங்களில் சுமார் 70 சதவீதமான குடும்பங்கள், இந்த முருகண்டி பிள்ளையார் கோவில் சூழலை நம்பிய தொழில் வாய்ப்புகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, கோவிலைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் அதாவது, சிறிய கச்சான் கடைகள், பெட்டிக் கடைகள், தேநீர் கடைகள், கைவினைப் பொருட்கள், பிரதேச கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் என்று பல்வேறுபட்ட தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையாளர்களாகவும் அவற்றில் தொழில் புரிபவர்களாகவும்உள்ளனர்.
கடந்தபோன காலங்களில், நெருக்கடிகள் மிகுந்த ஒவ்வொரு காலகட்டத்திலும், இங்கே வசிக்கும் மக்கள் எல்லா வழிகளிலும் வீழ்ச்சி கண்டு வருகின்ற பிரதேசமாகவே இது காணப்படுகின்றது என உணருகின்றார்கள். அதாவது, 1989களின் பிற்பகுதியில் இருந்து இன்றுவரை, குறிப்பிட்ட காலம் வரை எழுச்சி பெற்ற பிரதேசமாகவும் அடிக்கடி வீழ்ச்சி கானும் பிரதேசமாகவும் காணப்படுகின்றது.
1989ஆம் காலப்பகுதியில் முறிகண்டி பாதிக்கப்பட்டிருந்தது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்காவில் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாகவும் கிளிநொச்சி வரை மீண்டும் போர் காரணமாகவும் முருகண்டி முழுமையாகச் செயலிழந்தது. 1998ஆம் ஆண்டு காலப்பகுதி வரைக்கும் ஒரு பாதிக்கப்பட்ட பிரதேசமாகக் காணப்பட்டது. 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரைக்குமான புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் மிகவும் களைகட்டிய ஒரு பிரதேசமாகக் காணப்பட்டது.
அதற்குப் பின்னர் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், இப்பிரதேசம் மக்கள் நடமாட்டம் அற்ற பிரதேசமாகக் காணப்பட்டது. மீள்குடியமர்வுக்கு பின்னரான காலப்பகுதியில், வடக்கில் இருந்து தெற்குக்கும் தெற்கில் இருந்து வடக்குக்கும் மக்கள் படை எடுக்கும் போது, களைகட்டிய நகரமாக திருமுறிகண்டி காணப்பட்டது.
இன்று, கொவிட் -19 காரணமாக முடங்கிய பிரதேசமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்ட நிலையில் கானப்படுகின்றது. இந்த நிலையிலும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் தெடர்ந்தும் வரி அறவிடப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. 175இற்கும் மேற்பட்ட பலதரப்பட்ட கடைகளில், “ஒரு கச்சான் கடையில கூட, ஒரு கச்சான்கூட வியாபாரமில்லை” என்று வியாபாரிகள் ஏங்கும் நிலைகாணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago