Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2023 ஏப்ரல் 25 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.கே அஷோக்பரன்
Twitter: @nkashokbharan
தனது தாயார் சிறிமாவோவின் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் நாடு வங்குரோத்து அடைந்திருக்காது என்று அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டிருந்தமை நகைப்பை வரவழைப்பதாக இருந்தது.
இந்த நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில், 26 ஆண்டுகள் இந்நாட்டின் ஆட்சித் தலைமை பண்டாரநாயக்க குடும்பத்திடம் இருந்திருக்கிறது. முதலில் எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க, அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க, அதன் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க என சுதந்திர இலங்கையின் வாழ்நாளில் மூன்றிலொன்றைவிட அதிககாலம் நாட்டை ஆண்டவர்கள் இவர்கள்.
பொருளாதாரக் கொள்கை என்பதை தனித்து எடுத்துப் பார்த்துவிட முடியாது. ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது சமூகக் காரணிகளில் பெரிதும் தங்கியதொன்று. இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்கி, இனப்பிரச்சினை வெடித்து, உள்நாட்டு யுத்தம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்று, இந்தத் தீவில் இரத்த ஆறு ஓடுவதற்கு அடிப்படைக் காரணகர்த்தாக்கள் பண்டாரநாயக்க குடும்பத்தினரே!
தனிச்சிங்களச் சட்டம் என்பது கடைந்தெடுத்த இனவாதச் சட்டம். தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க. சாதாரண சட்டமாக இருந்த தனிச்சிங்களச் சட்டத்தின் உள்ளடக்கத்திற்கு, அரசியலமைப்பு அந்தஸ்துக் கொடுத்து, சிங்கள மொழி மட்டுமே இலங்கையின் ஒரே உத்தியோகபூர்வ மொழி என்பதை அரசியலமைப்பு விதியாக மாற்றியவர் சிறிமாவோ பண்டாரநாயக்க.
இவர்கள் விதைத்த இனவாதத்தீ, பேரினவாதம் பேசாமல் இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் ஏற முடியாது என்ற நிலையைத் தோற்றுவித்தது. இலங்கையின் அரசியலை இந்தப் பாதையில் செல்ல வைத்தவர்கள் இவர்கள். இனவாதம் பேசிப்பேசியே வங்குரோத்தாகிப்போன நாடு இலங்கை. மொழியில் தொடங்கிய அடக்குமுறை, மற்ற எல்லா விடயங்களுக்கும் பரவியது. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும், இன்னமும் இனப்பிரச்சினையின் ஆணிவேரான மொழிப்பிரச்சினைக்குக் கூட தீர்வு காண முடியாத நிலையில்தான் நாடு இருக்கிறது.
இதற்கான தீர்வு ஒன்றும் சிக்கலான விஞ்ஞானமல்ல. அது பலமுறை பலராலும் பேசப்பட்டிருக்கிறது. இலங்கையில் பரவலாக அனைத்து இடங்களிலும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் பயன்படுத்த வழிசமைக்கும் மும்மொழிக்கொள்கையை முழுமையாகவும், வினைத்திறனாகவும் அமல்படுத்துதல் இலங்கையின் மொழிப்பிரச்சினையை இலகுவாகத் தீர்த்துவிடும். இது ஒன்றும் மாயமந்திரம் தேவைப்படும் காரியமல்ல.
தேசிய ஒருமைப்பாட்டையும், அனைவரையும் அரவணைக்கும் தன்மையையும் மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு மும்மொழிக் கொள்கை அவசியமாகும். இலங்கை ஒரு பன்மைத் தேசிய நாடு. இங்கு சிங்களம், தமிழ் ஆகிய சுதேச மொழிகளும், ஆங்கிலமும் இலங்கை மக்களால் பரவலாகப் பேசவும், பயன்படுத்தவும் படுகிறது.
ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த கலாசார முக்கியத்துவம் உள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம், நாடு மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் அதே வேளையில் நாட்டின் ஒற்றுமையையும் மேம்படுத்துகிறது. மேலும், மும்மொழி மொழிக் கொள்கையானது மொழி அடிப்படையிலான பாகுபாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கவும் சமூக நீதியை மேம்படுத்தவும் வழிசமைக்கும்.
இலங்கையில், மொழியானது பாரபட்சம் மற்றும் ஓரங்கட்டப்படுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது வௌ்ளிடைமலை. மும்மொழி மொழிக் கொள்கையானது இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சமத்துவம் மற்றும் நீதியான, நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் அவசியமானதாகும்.
இலங்கையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பயிற்சி பெற்ற மொழி ஆசிரியர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி கற்றல், மற்றும் மொழி பெயர்ப்பிற்கான போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறை மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். மொழிக் கல்வியில் முதலீடு செய்வதன் மூலமும், மொழி கற்றலுக்கான ஆதாரங்களை வழங்குவதன் மூலமும் இதைத் தீர்க்க முடியும். பாடசாலைகளில் மும்மொழிக் கல்வி கட்டாயமானதாக்கப்பட வேண்டும். அனைத்து இலங்கையர்களுக்கு மும்மொழிக்கல்வி சம அளவில் வழங்கப்பட வேண்டும்.
மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தலில் மற்றொரு முக்கிய சவாலானது மக்கள்தொகையின் சில பிரிவுகளின் எதிர்ப்பாகும், அவர்கள் மும்மொழி மொழிக் கொள்கையை தங்கள் கலாசார மற்றும் மொழி அடையாளத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதலாம்.
மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளையில், இந்த சமூகங்களுடன் உரையாடலில் ஈடுபடுவதன் மூலமும் அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும் இதைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
இதற்கு அர்த்தம் இனவாதிகளில் இனவாதக் கோரிக்கைகளைத் திருப்தி அடையச்செய்ய வேண்டும் என்பதல்ல; மாறாக அவர்களை சரியான வழியில் கையாளவேண்டும். அவர்களின் தவறான, ஆபத்தான கொள்கைகளைப் பற்றிய வௌிப்படையான கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும். மும்மொழிக்கொள்கையின் நன்மைகளைப் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு நாடும், அரச இயந்திரமும் பலமொழிகளைக் கொண்டு இயங்க முடியுமா என்று கேட்பவர்களுக்குச் சரியான பதிலை வழங்க வேண்டும். பல மொழிகளை தங்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக வெற்றிகரமாக செயல்படுத்திய பல நாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்தில் ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலியன் மற்றும் ரோமன்ஷ் ஆகிய நான்கு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. மேலும் மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை மேம்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் முடிந்தது. மொழிக் கல்வி முறை மற்றும் மொழி கற்றலுக்கான ஆதாரங்களை வழங்குவதன் மூலம் அந்த நாடு இதைச் சாதித்துள்ளது.
இதேபோல், கனடாவில் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு; இதன் மூலம் கனடாவால் தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் அதேவேளையில் மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை மேம்படுத்த முடிந்தது. இப்படி இன்னும் நிறைய உதாரணங்களுண்டு.
ஆகவே மும்மொழிக் கொள்கை அமலாக்கம் என்பது சாத்தியப்படாத ஒன்று அல்ல. அதனைச் செய்வதற்கான அரசியல் விருப்பம் இருந்தால், அதனைச் சாதிக்கலாம்.
இலங்கையில் மும்மொழி மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு, அரசாங்கம் மொழிக் கல்வியில் முதலீடு செய்வதுடன், மொழி கற்றலுக்கும், மொழி பெயர்ப்பிற்குமான உரிய வளங்களையும் வழங்க வேண்டும். இதில் மொழி ஆசிரியர்களுக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் பயிற்சி அளிப்பது, மொழி கற்றல் பொருட்களை வழங்குவது மற்றும் மொழி கற்றல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.
மிக முக்கியமாக அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக, உறுதியாக வகையில், மும்மொழிக் கொள்கை கட்டாயமானதாக்கப்பட வேண்டும். இலங்கையின் எந்தவொரு குடிமகனுக்கும், மும்மொழிகளில், தான் விரும்பும் மொழியொன்றில் அரசின் சகல சேவைகளையும் அணுகக் கூடிய உரிமை வழங்கப்பட வேண்டும்.
அரச ஊழியர்களுக்கு மும்மொழி அறிவு கட்டாயமானதாக்கப்பட வேண்டும். குறிப்பாக ஆட்சேர்ப்பின் போது, மும்மொழி ஆற்றல் அடிப்படைத் தகுதியாக மாற்றப்பட வேண்டும். மேலும், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கக்கூடிய சமூகங்களுடனும் அரசாங்கம் உரையாடலில் ஈடுபட வேண்டும்.
மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம் அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும்.
‘தனிச்சிங்களம்’ என்பது ஒரு வரலாற்றுத் தவறு. அதனால் இனரீதியாக தமிழர்கள் பாதிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. ஆனால், இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சேவை மைய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கைக்கு ஆங்கில அறிவின் பற்றாக்குறை என்பது பெரும் பின்னடைவாகவே இருக்கிறது. உல்லாசப் பிரயாணத்துறையாக இருக்கட்டும், அல்லது தொழில்நுட்ப சேவைத்துறையாக இருக்கட்டும், உலகத்திற்கு எமது சேவைகளை விற்பதற்கு ஆங்கில அறிவு இன்றியமையாத தேவை.
தனிச்சிங்களச் சட்டம் இல்லாதொழித்த முக்கியமான விடயங்களில் ஒன்று இலங்கையர்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருந்த தரமான ஆங்கிலக் கல்வி. அந்தத் தரமான ஆங்கிலக் கல்வியுடன், சிங்களம், தமிழ் என்பவை புகட்டப்பட்டிருந்தால், இலங்கையின் நிலை மேம்பட்டதா இருந்திருக்கும். ஆனால் அதனைச் செய்யாது தனிச்சிங்களம் என்ற இனவாத வெறிக்குள் ஊறியதன் பிரதிபலனைத்தான் இலங்கை இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்ற கருத்தில் உண்மையில்லாமல் இல்லை. இன்று இதனை மாற்ற, மும்மொழிக் கொள்கையின் முழுமையான அமலாக்கம்தான் சாலச்சிறந்த வழி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
24 Nov 2024