Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருஜோத்தன் தங்கமயில்
நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை, எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், ராஜபக்ஷர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததைக் காட்டிலும், படுமோசமான குழிக்குள் இப்போது விழுந்துவிட்டார்கள்.
ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, சீனாவின் கடன்களைப் பெரிதும் நம்பியிருந்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான தாராள கடன்களை வழங்கும் கட்டத்தில் இருந்து சீனா விலகிவிட்டது. மாறாக, கடந்த காலத்தில் வழங்கிய கடன்களை, மீள வசூலிப்பது அல்லது அதற்குச் சமமான சொத்துகளை இலங்கையில் கையகப்படுத்துவது என்கிற கட்டத்துக்கு சீனா வந்துவிட்டது. இந்த நிலைதான், ராஜபக்ஷர்களை திக்குத் திசை தெரியாமல் மாட்டிக் கொள்ள வைத்திருக்கின்றது.
நாடு திவாலாகும் நிலையை எட்டிவிட்டது. ஆகவே, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியைக் கோருமாறு எதிர்க்கட்சிகள் தொடக்கம் பல தரப்புகளும் அரசாங்கத்தைக் கோரத் தொடங்கிவிட்டன. ஆனால், ராஜபக்ஷர்களோ, சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால், நிதிக் கையாள்கை தொடர்பில் வெளிப்படையாக இயங்க வேண்டும் என்கிற கடப்பாடு, அவர்களைத் தயங்கச் செய்கின்றது.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்தின் வழக்கமான அடைவு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தொடர்பில், ராஜபக்ஷர்களுக்கு தொடர்ச்சியாக பிரச்சினை இருந்து வருகின்றது. அதனால்தான், சீனாவில் ஆரம்பித்து, பங்களாதேஷ் வரையில் கடன்களைக் கோரிக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை படுமோசமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த தருணங்களில் எல்லாமும், சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கின்றது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை, 29 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளைப் பெற்றிருக்கின்றது. அதிலும், ராஜபக்ஷர்களின் முதல் ஆட்சிக் காலத்தில் அதிகமான தடவைகள் உதவிகள் பெறப்பட்டிருக்கின்றன. ஆயுத மோதல்களுக்குப் பின்னரான மீள்கட்டமைப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளைக் காட்டி, அப்போது ராஜபக்ஷர்கள் அதிகமான கடன்களை சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால், அப்போது நாணய நிதியம் விதித்த கடப்பாடுகளை முறையாக நிறைவேற்றாமல், குழறுபடிகளை ராஜபக்ஷர்கள் ஆற்றியமை தொடர்பிலான அதிருப்தி, சர்வதேச நாணய நிதியத்துக்கு இருக்கின்றது. அப்படியான நிலையில், நாணய நிதியத்தைப் புதிதாக அணுகும் போது, கடந்த காலத்தைக் காட்டிலும் இன்னும் அதிகப்படியான கடப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற சிக்கலும் சேர்ந்தே, ராஜபக்ஷர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவிடாமல் தடுகின்றது.
அத்தோடு, கடந்த நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச உதவிகளைப் பெற்ற தருணங்களில், அந்தத் தரப்புகள் விதித்த கடப்பாடுகளை நிறைவேற்ற முனைந்தபோது, அவற்றையெல்லாம் நாட்டை காட்டிக் கொடுப்பதாக ராஜபக்ஷர்கள் பிரசாரம் செய்திருகின்றார்கள். அப்படியான நிலையில், அவ்வாறான நிலையொன்று தங்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் என்றும் அவர்கள் பயப்படுகிறார்கள்.
மத்திய வங்கியிடம் டொலர் கையிருப்பு இல்லை. தங்கத்தின் இருப்பு குறித்து பாரிய கேள்வி ஏற்கெனவே எழுப்பப்படுகின்றது. இவ்வாறான நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால், கொழும்புத் துறைமுகத்திலும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திலும், பொருட்களை இறக்குவதற்காக கப்பல்கள் மாதக்கணக்கில் காத்து நிற்கின்றன.
சமையல் எரிவாயு, எரிபொருட்கள் தொடக்கம் அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. சமையல் எரிவாயு விலை ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டுவிட்டது. எரிபொருட்களின் விலை ராஜபக்ஷர்களின் இந்த ஆட்சிக்காலத்தில் நான்கு தடவைகளுக்கும் மேல் அதிகாரிக்கப்பட்டுவிட்டது. இந்த வார இறுதிக்குள், எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியமுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்திருக்கின்றார்.
இன்னொரு பக்கம் நாட்டில் நான்கு தொடக்கம் ஐந்து மணி நேர மின்வெட்டு நடைமுறைக்கு வந்துவிட்டது. வரும் ஏப்ரல் மாதம் வரையில், மின்வெட்டு அமல்படுத்தப்படாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஆனால், மின்வெட்டு என்பது இயல்பாக இடம்பெற ஆரம்பித்துவிட்டது. மின்சாரத்துறை அமைச்சர், “இன்று முதல் மின்வெட்டு அமல்படுத்தப்படாது” என்று அறிவித்த பல நாள்களில் மின்வெட்டு நிகழ்ந்திருக்கின்றது.
நாட்டின் நிர்வாகத்தில் எந்த ஒழுங்கு முறையும் இல்லை. அதற்கான கடப்பாடுகளும் இல்லை. மாறாக, போலி வாக்குறுதிகள் வழியாக, மக்களின் எதிர்பார்ப்புகளைக் கடந்துவிட முடியும் என்று நினைத்து, ராஜபக்ஷர்கள் செயற்பட்டார்கள்.
அத்தோடு, இராணுவத்தை முன்னிறுத்தி நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியும் என்று இன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, ஆட்சிக் கட்டமைப்புக்குள்ளேயே மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தார். ஆனால், சிவில் நிர்வாகக் கட்டமைப்பை, இராணுவக் கட்டமைப்பைக் கொண்டு முன்னெடுத்துவிட முடியாது என்கிற உண்மை, ஏனைய ராஜபக்ஷர்களுக்கு உறைக்க ஆரம்பித்திருக்கின்றது.
இதனால், ராஜபக்ஷர்களுக்கு இடையிலேயே முரண்பாடுகளும் நிர்வாக மட்டக் குளறுபடிகளும் ஏற்பட்டுவிட்டன. இவையெல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு, தங்களுக்கு இன்னமும் மக்கள் ஆதரவு இருப்பதாகக் காட்டுவதற்கான பொதுக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
ராஜபக்ஷர்களை, நாட்டின் மீட்பர்களாக முன்னிறுத்திய தரப்புகள் எல்லாமும், இன்றைக்கு அவர்களை விட்டு ஒதுங்க ஆரம்பித்துவிட்டன. ஆட்சியின் பங்காளிகளாக இருக்கும் பலரும், ராஜபக்ஷர்களை விட்டு வெளியேறுவதற்கான சரியான தருணத்துக்காக காத்திருக்கிறார்கள். ராஜபக்ஷர்களை 2015இல் தோற்கடித்தது போன்ற நிலையொன்று, மீண்டும் ஏற்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அப்படியான சந்தர்ப்பத்தில், ராஜபக்ஷர்களை விட்டு வெளியேறியமைக்கான காரணத்தைப் பட்டியலிட வேண்டும் என்பதற்காக விடயங்களை சேர்க்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
இதனை ராஜபக்ஷர்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அதனால்தான், அவர்கள் தங்களை முன்னிறுத்திய கூட்டங்களை கூட்டும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான பஸ்களில் ஆட்களை அழைத்து வந்து, அண்மையில் அநுராதபுரத்தில் நடத்திய பொதுக் கூட்டம், அதன் போக்கிலானதே ஆகும்.
எந்தவித திட்டங்களும் பொருளாதார நோக்கும் இல்லாமல், கடன்களின் வழியாக நாட்டை ஆட்சி செலுத்திவிட முடியும் என்று நம்பும் எந்தவோர் ஆட்சித் தரப்பும், நாட்டையும் மக்களையும் மீட்கமுடியாத படுகுழிக்குள்ளேயே தள்ளும். அவ்வாறான நிலையொன்றை, ராஜபக்ஷர்கள் தற்போது ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, தெளிவானதும் வெளிப்படையானதுமான பொருளாதார நோக்கு அவசியம். அப்படியான கட்டமொன்றை ஆளும் ராஜபக்ஷ அரசாங்கமோ, எதிர்க்கட்சிகளோகூட கொண்டிருக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
24 Nov 2024
24 Nov 2024