2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

‘மாற்றம் வேண்டும்’

அதிரதன்   / 2020 ஜூலை 29 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘எங்களுடைய மக்களுக்காக, மக்களுடைய அபிவிருத்திக்காக, அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுதல் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். நீண்ட காலத்துக்கு, இக்கட்சி ஆட்சி பீடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி, மக்களுக்கு நல்லதொரு சேவை செய்யமுடியும்’ என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.   
அவருடனான நேர்காணல் வருமாறு:

கே: உங்களுடைய அரசியல் பிரவேசம் எவ்வாறு அமைந்தது? 

ஆரம்பத்தில் ஆங்கில ஆசிரியராக, ஊடகவியலாளராக இருந்து, பல்வேறு சமூக வேலைத்திட்டங்ககளில் ஈடுபட்டு வந்திருந்தேன். இதன் காரணமாக, அரசியலில் ஈடுபட வேண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று, பலரும் என்னிடம் கேட்டிருந்தார்கள்; சமூக சேவைகள் செய்து வருகின்ற போது, நாடாளுமன்றத்துக்குச் சென்று பல சேவைகளைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக, 2004ஆம் ஆண்டு நேரடியாகவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்றதில் இருந்து, என்னுடைய அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. 

கே: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தீர்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிந்த வேளை, வன்னிப் புலிகளுக்கு ஆதரவாக இருந்து, பின்னர் கருணாவுடன் இணைந்து செயற்பட்டமை உள்ளிட்ட மாற்றங்களுக்குக் காரணம் என்ன?

2001ஆம் ஆண்டில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆரம்பித்த போது, அந்தத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆரம்பிப்பதில் பக்கபலமாகவும் அர்ப்பணிப்புடனும்  செயற்பட்டிருந்தேன். குறிப்பாக, மாமனிதர் சிவாரமுடன் வெளியிடங்களில் கூட, பலரையும் சந்தித்திருந்தோம். அதன் உருவாக்கத்துக்காகப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருக்கிறோம். அதேவேளை, மட்டக்களப்பில் செய்தியாளர் சங்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் எல்லாம், கல்வியாளர்கள், புத்திஜீவிகள், ஆர்வமுள்ளவர்கள் எல்லோரும் இணைந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது என்பது உண்மை. 

2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், முக்கியமானதொரு சந்திப்புக்காக ஜெனீவாவுக்குச் சென்றிருந்த வேளை, அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து,  இறுதிக்கட்டப் போரை நிறுத்த வேண்டும் என்று, பல்வேறு  வேலைத்திட்டங்களைச் செய்திருந்தேன். சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தேன். அதனால் நாட்டுக்குத் திரும்புவதில் சிக்கல், சட்டப்பிரச்சினைகள் இருந்தன. பிற்பாடு, 2016ஆம் ஆண்டு, எனது பெயர் தடைப்பட்டியலிலிருந்து அரசாங்கத்தால் நீக்கப்பட்ட பின்பு, மீண்டும் நாட்டுக்குத் திருப்பியிருந்தேன். 

அதாவது, ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராக இருந்த பொழுதுதான், குறிப்பிட்டவர்களது பெயரை, அப்பட்டியலில் இருந்து நீக்கும்போது, என்னையும் நீக்கினார்கள்.  அதுதான் உண்மை.
அடுத்ததாக, தமிழர் விடுதலைக் கூட்டணில் ஏன் இணைந்தேன் என்றால், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கும் சிலர் விடவில்லை. முக்கியமாக சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் ரணிலிடம் “என்னைச் சேர்க்க வேண்டாம்” என்று அழுத்தம் கொடுத்ததாகவும் கதை இருக்கிறது. அவ்வேளையில், தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தங்களுடன் இணைந்து செயற்படுமாறு கேட்டார்கள். ஒரு தமிழ் கட்சிதானே என்று பார்த்தால், அதிலும் , ஏற்கெனவே ஆனந்தசங்கரி அவர்களுடைய கருத்துகள், எனக்குப் பிடிக்காமல் தான் இருந்தது. ஆனால், அந்த வேளையில் பார்த்தால் தொடர்ந்தும், எங்களது கடந்த காலப் போராட்டங்களையும் தலைவரையும் விமர்சிக்கும் விடயங்கள் இருந்தன. அதனால் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன். 

பிற்பாடு கருணாவுடன் இணைந்தேன். அந்தக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்குப் பல தடவைகள் அவர் கேட்டிருந்தார். அதன் பின்பு முடிவைத் தெரிவித்து, நாங்கள் இணைந்து செயற்படலாம் என்ற கோதாவில், செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தேன். அவரும் அவருடைய கட்சியும் எடுத்த முடிவு என்னவென்றால், அம்பாறையில் தானும், மட்டக்களப்பில் நானும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவது என்பதாகும். கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பாக, கட்சிகளுக்கு இடஒதுக்கீடு என்ற பிரச்சினை வந்தது. அதற்கு முன்பாக, கருணா அம்மானின் மனைவி ஒற்றைக்காலில் நின்றார். அதனால், அவருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது.  இருந்தாலும், அவர் அதைத் தீர்க்கமாகத் தீர்த்திருக்கலாம். ஆனால், பொதுஜன பெரமுன கட்சி ஓர் ஆசனத்தைத் தருவதாகத்தான் கருணா அம்மானுக்குக் கூறியது. ஆனால், அவர் இரண்டு ஆசனங்கள் தரவேண்டும் என்று அடம்பிடித்திருந்தார். அவர்கள் ஓர் ஆசனம் தருவோம்; அதுவும் ஜெயானந்தமூர்த்தி மாத்திரம் தான் போட்டியிடலாம் என்று சொல்லியிருந்தார்கள். 

கருணா அம்மானின் மனைவியும் போட்டியிட வேண்டும் என்பதற்காக, “அது சரிவராது, நாங்கள் சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவோம்” என்று சொன்னார். சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்று நான் கூறியிருந்தேன். அதற்கிடையில், சில வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றன. ஆனால், என்னைப் பொதுஜன பெரமுன நேரடியாக அழைத்தது. அதன்படி இணைந்து, இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். இதுதான் உண்மை.

கே: விடுதலைப் புலிகள் பிரிந்த நேரமும் அதற்கு முன்னரும் வன்னிப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தீர்கள், திடீரென்று அதிலிருந்து வெளியில் வந்ததற்குக் காரணம் என்ன?

என்னுடைய தமிழ்த் தேசியமோ சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரங்களோ தமிழ் மக்களுக்குக் கட்டாயம் தேவை என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அப்பொழுது மிகத் தீவிரமாக இருந்த ஒருவன், எங்களுடைய அரசியல் பாதையில், இவ்வாறு தொடர்ந்து நடந்தவற்றையே கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. 

ஆகவே, நாங்கள் எங்களுடைய மக்களுக்காக, மக்களுடைய அபிவிருத்திக்காக அரசியலில் சில மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுதல் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். நீண்ட காலத்துக்கு இக்கட்சி அரசியல் பீடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி, மக்களுக்கு நல்லதொரு சேவை செய்யமுடியும் என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறேன். 

கே: நீங்கள் வெளிநாடு சென்றதற்கும் நாட்டுக்கு வந்ததற்கும் இடையிலான மாற்றம் என்ன?

மாற்றம் ஒன்றுமில்லை. அப்படிச் சொல்லும் பொழுது,  சகோதர இனமான முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொண்டால், இன்று அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறார்கள். காரணம், அவர்களுடைய அரசியல் தலைவர்கள் எடுத்த முடிவுகள் தான். அவர்கள் தங்களது சொந்தக்கட்சியில் போட்டியிடுவார்கள்; வெற்றிபெற்ற பின்னர், எந்த அரசாங்கம் வந்தாலும் அமைச்சுப் பதவிகளைப்பெற்று, மக்களுக்குச் சேவை செய்வார்கள். தங்களது சமூகத்துக்காக, அவ்வாறு செய்கின்றார்கள். ஆகவே, அதில் தவறில்லை. ஆகவே, நாங்களும் எங்களுடைய சமூகத்துக்காக அரசியலில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலைமை  ஏற்பட்டுள்ளது. அதுதான்! வேறு காரணம் ஒன்றில்லை. 

கே: உங்களைப் போன்றவர்களால் தான் தமிழர்களது உரிமைப் போராட்டம் சிதைக்கப்படுவதான குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்னவாக இருக்கும்?

தமிழர்களது உரிமைப்போராட்டத்தைச் சிதைப்பதற்கு, ஒருபோதும்  நான் முயலவில்லை. தலைமைத்துவம் வரைக்கும் இது தெரியும். ஏனென்றால், 2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பிரிந்த பொழுது கூட, எனக்கு எவ்வளவோ அழுத்தங்கள் இருந்தும் தங்களுடன் இணைப்பதற்கு கருணா குழு, பிள்ளையான் குழுவெல்லாம் முயற்சி செய்தன. ஆனால், கடைசி வரையில் அந்தவிதமான நிலைப்பாட்டில் நிற்கவில்லை. நான் சரியானதொரு நிலைப்பாட்டில் முடிவெடுத்து நின்றதன் காரணத்தால்தான், எனக்குப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. 

நான் போராட்டத்துக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்தவன். என்னுடைய சகோதரர் கூட சுட்டுக் கொல்லப்பட்டவர். அது பிள்ளையான் குழுவால் தான் சுட்டுக்கொல்லப்பட்டதாகத்தான் அறிந்தேன். இன்று எம்முடைய மக்கள் ஓர் இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுதுதான், என்னுடைய அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றேன். ஆகவே, அது காட்டிக் கொடுத்தவர்களுக்கும் கட்சி மாறியவர்களுக்கும் பொருத்தமாக இருக்கலாமே தவிர, என்னைப்பொறுத்தவரையில் பொருத்தமான விடயமாகத் தெரியவில்லை. 

கே: நீண்டகாலமாகத் தமிழ் மக்களுக்காகச் செயற்படுபவர் என்ற வகையில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் உங்களது கருத்து என்ன?

இனப்பிரச்சினை  நிச்சயமாகத் தீர்க்கப்பட வேண்டிய விடயம். தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாசைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட வேண்டும். அதற்காக, நாங்கள் ஆளும் கட்சியில் இருந்தாலும்  எமது சமூகத்துக்காக அரசுடனும் அரசாங்கத் தலைவர்களுடனும் விட்டுக் கொடுக்காமல் அதற்கான பேச்சு வார்த்தைகளையும் நடத்தி, தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் முழுமையாக முயற்சி செய்வேன். அதுவே என்னுடைய கடமைகளிலும் ஒன்று.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X