ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள சூழ்நிலையில், பேரவையின் கூட்டத்தொடர் கடந்த 24ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி ஏப்ரல் 07ஆம் திகதிவரை நடைபெறுகிறது. அமர்வில் பங்குபற்ற 23ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்ட இராஜதந்திரக்குழுவின் தலைவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் 25ஆம் திகதி உரையாற்றினார். இலங்கை தொடர்பான அறிக்கை மார்ச் 03ஆம் திகதியாகிய இன்றைய தினம் வெளிவரவிருக்கிறது.
ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஏற்கெனவே நிறுவப்பட்ட உள்நாட்டுச் செயல்முறைகள் சுயாதீனமான மற்றும் நம்பகமான முறையில் தங்கள் பணிகள் தொடரும், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதன் அர்த்தம் அரசாங்கம் மேற்கொண்டு வந்த
உள்நாட்டு (உள்ளக) பொறிமுறைச்
செயற்பாடு தொடரும் என்பதாகும்.
காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற நாட்டிற்குள் நடைபெறுகின்ற எந்தவொரு விடயத்திலும் நம்பிக்கையற்று சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றே தேவை என்றவகையில், நடைபெற்றுவருகின்ற போராட்டங்கள், முயற்சிகளை மேலும் வலுவிழக்கச்
செய்வதாக விஜித ஹேரத்தின் இந்தக் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையைப் பெறும் ஒரு செயல்முறையை உறுதி செய்வதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க கட்டமைப்பின் வரையறைகள் தொடர்பில் உரிய பிரிவினருடன் விவாதிக்கப்படும் என்ற அமைச்சர் விஜித ஹேரத்தின் இந்த அறிவிப்பானது, இலங்கையின் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் உள்நாட்டு பொறிமுறைகளை நம்பகமானதாகவும், உறுதியானதாகவும் மாற்றுவதற்கானதாக இருக்கிறது. அதே நேரத்தில், கடந்த கால ஆட்சியாளர்கள் போலவே நாட்டிற்குள் நடைபெற்று வருவது இனப் பிரச்சினை சார்ந்ததல்ல என்பதான கோதாவும் வெளிப்பட்டிருக்கிறது. அமைச்சர் விஜித ஹேரத்தின் இலங்கையில் உள்ள சமூகங்களுக்குள் பதற்றங்களை ஏற்படுத்தும் வன்முறைச் செயல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்ற கருத்து நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை வெறுமனே ஒரு வன்முறை என்றவகையில் அர்த்தப்படுத்தியிருப்பதாகவும் பார்க்கலாம்.
அந்தவகையில், மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கை அரசாங்கம் எதிர்க்கும் என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
இது கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட
51/ 1 தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரித்தல் என்பதன் முடிவாக இருக்கிறது.
இந்த இடத்தில்தான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிரந்தர உறுப்புரிமைகளை கொண்ட சர்வதேச அமைப்புகளின் கருத்துப்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளமையானது இலங்கை தொடர்பான செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதில் பின்னடைவுகள் ஏற்படுத்தக்கூடும் என்ற வகையிலான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றன. பிரித்தானியாவை வைத்துக் கொண்டு நம்பிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தாலும் இது தமிழர்களுக்குச் சாத்தியமற்றதாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா பேரவையிலிருந்து விலகியுள்ளதனால், நிறைவேற்றப்பட்ட 15/1 நகல் வடிவையும், இலங்கைக்கு எதிராக 2014இல் அந்நாட்டின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யவும் இலங்கை
அரசாங்கம் கோரிக்கையை ஜெனிவாவில் முன்வைக்கலாம். இது தொடர்பில் தனது நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா, பாக்கிஸ்தான் மற்றும் கியூபா போன்ற நாடுகளின் ஆதரவையும் இலங்கை கோரும்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித
உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் 2015இல் நிறைவேற்றப்பட்ட
30/1 தீர்மானத்தின் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்தல் ஆகியவற்றில் இதுவரை முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. உண்மையைக் கண்டறிந்தபின் நீதிப்பொறிமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும், காணாமல் போனோருக்கான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்ற போதும், ஒரு உண்மையேனும் கண்டறியப்படவில்லை என்று தொடர்ந்தும் போராட்டத்தை நடத்திவரும் தாய்மாரின் கேள்வியாக இருக்கிறது.
நாட்டில் போர் ஓய்வுக்கு வந்து 16 ஆண்டுகளாகியும், காணாமல் போனோருக்கான நீதியைக் கோரும் போராட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உயிரிழந்த பிறகும், நீதி நிலைநாட்டப்படவில்லை. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இலங்கை அரசாங்கம் உள்ளகப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளிப்படுத்துவதும், அதனை ஐ.நா.வும், சர்வதேச நாடுகளும் நம்பிச் செயற்படுவதுமே நடைபெற்று வருகிறது.
இளைக்கப்பட்ட அநீதிக்கான நீதி கிடைக்கும், தங்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், சந்திப்புகளையும், அறிக்கை சமர்ப்பிப்புகளையும் முன்னெடுத்துவரும் தமிழ் மக்கள் தமக்கான நீதி ஒவ்வொரு வருடத்தினது மார்ச் மாதத்திலும், செப்டெம்பர் மாதத்திலும் கிடைத்து விடும் என்றே நம்புகின்றனர்.
இருந்தாலும், இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த
உள்நாட்டு யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 வருடங்களாகிய பின்னும் ஏன் இனப் பிரச்சினை ஒன்று ஆரம்பமானது என்பது தொடர்பிலான கேள்விக்கே பேரினவாதத் தரப்பினரிடம் சரியான பதில் இல்லை
என்ற நிலை காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக 2015ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் தொடர்பில் எந்தவிதமான தீர்மானகரமான விடயத்தையும் நிகழ்த்தவில்லை.
போர்க் குற்றவாளிகளை எமது அரசாங்கம் தண்டிக்காது என்று ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே வெளிப்படையாக அறிவித்தவர் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. அத்துடன், விஜித ஹேரத் எமது அரசாங்கம் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பகிராது என்றுரைத்திருந்தார். ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமும் அதிகாரப் பகிர்வும் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. தங்களுடைய அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ் அரசியல்வாதிகள் இதனைப் பயன்படுத்தி வருகின்றார்கள்
என்று தெரிவித்திருந்தார்.
இக்கருத்துக்கள் ஒரு இடது சாரித்துவத்துக்குள் இருக்கின்றவர்களின் கருத்துக்கள்தானா என்ற கேள்வி அப்போது ஏற்பட்டிருந்தது. ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா? ஜே.வி.பியின் கருத்தா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா? என்ற சந்தேகங்களும் வெளியிடப்பட்டிருந்தன.
தமிழர்கள் விடயத்தில் இலங்கையில் ஒற்றையாட்சியே தொடரவேண்டும் - பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பகிரக் கூடாது, தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிக்க மறுத்தல், அரசியல் விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத்தில் வெளிநாட்டுத் தலையீடு வர அனுமதிக்க விடாது தடுத்தல், தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படு கொலைகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கான எந்தவொரு சர்வதேச நடவடிக்கையையும் எதிர்க்க வேண்டும் போன்ற முடிவுகளான தீர்மானங்களைக் கொண்டதே ஜே.வி.பி.
அந்த ஜே.வி.பி. ஜெனிவாவில்
நடைபெற்று வருகின்ற மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில்,
அமைச்சர் விஜித ஹேரத்தைக் கொண்டு விடுத்திருக்கின்ற அறிவிப்பு ஆச்சரியப்படுவதற்குத் தேவையற்றதே.
ஆயுதப் புரட்சி இயக்கமான
ஜே.வி.பியினர் ஆயுத வழியினைத் துறந்த பின்னர் இலங்கையில் மிக மோசமான சிங்கள இனவாத கட்சியாகவே படிநிலையாக வளர்ச்சியடைந்திருக்கிறார்கள். காலா காலமாகத் தமிழர் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வந்த, அரசாங்கங்கள் செய்கின்ற போது, மிகத் தீவிரமாக அந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயற்பட்ட கட்சியாகவே ஜே.வி.பி. இருக்கிறது. இவ்வாறான நிலையில், தற்போதைய ஜெனிவாவானது தமிழர்களுக்கான நீதி வழங்குவதற்கான இடமாகப் பார்க்கப்படுகின்ற நிலையில், சிங்களவர்கள் மாத்திரமல்ல, ஜே.வி.பியும் கூட தன்னுடைய கொள்கைகளை மாற்றப் போவதில்லை என்பது மாத்திரமே உறுதியானது.
யுத்த மௌனிப்பின் பின்னர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த எந்தவொரு இராஜதந்திர முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கவேயில்லை. நாட்டில் புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி பொறுப்புக் கூறலை உறுதி செய்து நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வோகர் டர்க் கடந்த
2024 செப்டெம்பர் அமர்வுக்கான முன் அறிக்கையில் தெரிவித்திருந்தபோதிலும் உள்நாட்டு பொறிமுறை என்ற வரையறைக்குள்ளேயே அரசாங்கம் சுற்றிக் கொண்டிருக்கிறது.
இன்றைய தினத்திலும் (மார்ச் 03) இதே விதமான நிலைமையே தமிழர்களுக்கு ஏற்படும். தமிழர்கள் நீதியைத் தொடர்ந்தும் தேடுபவர்களாகவே இருக்க முடியுமே தவிர, வேறொன்றுமில்லை. காணாமல்போனோருக்கான நீதி, போர்க்குற்ற விசாரணை போன்றவைகள் மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைக் கூட சர்வதேசம் பெற்றுத்தந்தாலேயொழிய தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்கப்
போவதில்லை என்பது மாத்திரமே நிச்சயம்.
லக்ஸ்மன்