2025 ஜனவரி 30, வியாழக்கிழமை

மாகாண சபைத் தேர்தலையாவது நடத்துங்கள்

Mayu   / 2024 டிசெம்பர் 17 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துக்கு இப்போது அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதில் ஒன்று, மின்சார மற்றும் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என்பதாகும்.  இதனிடையே அரிசி, தேங்காய் போன்ற பொருட்களின் விலையும்  அதிகரித்துள்ளது. அதையும் எதிர்க்கட்சிகள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.

போதாக்குறைக்கு அண்மையில் கடும் மழை பெய்து நாடெங்கிலும் விவசாயம்  மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கமும் விரைவில் காணக்கூடியதாக இருக்கும்.

அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்றும் வாக்குறுதியளித்ததைப் போல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே தமிழ் மக்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். சிலர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நிர்வாக ரீதியாக மீண்டும் இணைக்க வேண்டும் என்கின்றனர். சிலர் சமஷ்டி முறையைக் கொண்டு வர வேண்டும் என்று கூறுகின்றர். அதேவேளை மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் சிலர் கோருகின்றனர்.

மாகாண சபை முறை பற்றிய புதிய சர்ச்சையொன்றும் இதனிடையே உருவாகியிருக்கிறது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறியதாகத் தமிழ் பத்திரிகையொன்றில் வெளியான செய்தியை அடுத்தே இந்த சர்ச்சை உருவாகியிருக்கிறது.

கடந்த வாரம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்த தமிழ் தலைவர்களும் டில்வின் சில்வா கூறியதாகக் கூறப்படும் அக்கருத்தைப் பற்றி வினவியுள்ளனர். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்யும் நிலைப்பாட்டில் தமது கட்சியோ அரசாங்கமோ இல்லை என்பதே ஜனாதிபதியின் பதிலாக இருந்தது.
அண்மையில் டில்வின் சில்வா, தமிழ் பத்திரிகைக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில்,  புதிய அரசியலமைப்பொன்றில் மூலம் இனப் பிரச்சினைக்கு புதிய தீர்வொன்றை முன்வைக்காது 13 ஆவது அரசியலமைப்போ மாகாண சபை முறையோ ஒழிக்கப்படாது என்று  நான்கு இடங்களில் கூறியிருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களில் எவராவது மாகாண சபைகளை இரத்துச் செய்வதென்று கூறியதாக ஏதாவது பத்திரிகையில் வெளிவந்தால் அல்லது எவராவது கூறினால் பெரும்பாலானவர்கள் அதனை நம்பவே செய்வார்கள். காரணம் 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது முதல் அவ்வொப்பந்தத்தையும் அதன் பிரகாரம் நிறைவேற்றப்பட்ட 13ஆவது அரசியலமைப்பத் திருத்தத்தையும் அத்திருத்தத்தின் கீழ், உருவாக்கப்பட்ட மாகாண சபைகளையும் அக்கட்சியினர் எதிர்த்து வந்தமையேயாகும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட 1987 ஜூலை 29ஆம் திகதி அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வந்த போது மக்கள் விடுதலை முன்னணியினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரும் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். 

இதன்போதும் வெளி மாவட்டங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போதும் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 147 பேர் கொல்லப்பட்டனர்.
பிற்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்படட போதிலும் மாகாண சபைகள் நாட்டுப் பிரிவினைக்குக் காரணமாகும் பொறிமுறை என்ற நிலைப்பாட்டை அவர்கள் கைவிடவில்லை.

2019 மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் மேலும் 20 அமைப்புக்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. இப்புதிய அமைப்பு கருத்தியல் ரீதியாக மிகவும் நெருங்கிய எனினும் சில வேறுபாடுகளைக் கொண்ட அமைப்புக்களின் ஒன்றியமாகும்.

அவ்வமைப்புக்களில் பல மாகாண சபைகளை ஏற்றுக்கொண்டவையாகும். அவர்களின் கருத்தியல் தாக்கத்தோடு தாம் நாட்டில் ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்யப்படலாம் என்று கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணியினர் உணரவே மாகாண சழபகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக தமது நிலைப்பாடுகளை அவர்கள் மாற்றிக்கொண்டனர்.
இந்த மாற்றத்தை மக்கள் விடுதலை முன்னணியினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவரான அனுரகுமார திசாநாயக்கவே முதன்முதலில் பகிரங்க மேடையில் தெரிவித்தார். கடந்த வருடம் ஜூன் மாதம் அவர் லண்டனில்  கூட்டமொன்றில் உரையாற்றும் போது, மாகாண சபைகளைப் பற்றி இலங்கையர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார். 

அதற்குப் பதிலளித்த அனுர, மாகாண சபைகளைப் பற்றிய தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை, ஆயினும், மாகாண சபைகள் தமது உரிமை என்று தமிழ் மக்கள் கருதுவதால்அம்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றுத் தீர்வொன்றை முன்வைக்காமல், அவற்றை ஒழிக்கப் போவதில்லை என்றார்.

இதனை அவர் அதன் பின்னரும் பல இடங்களில் கூறினார். ஆயினும், அவரது கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக சென்றடையவில்லை. அதனாலேயே டில்வின் சில்வாவின் கூற்று சர்ச்சையாகியிருக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணியானது சமூக மாற்றத்துக்காக நீண்ட காலமாக தமது வாழ்கையை அர்ப்பணித்த பெருந்திரளானோரை உள்ளடக்கிய அமைப்பாகும். இவர்களிடையே ஆங்காங்கே வேறு நோக்கங்களைக் கொண்டவர்கள் இருக்கலாம். ஆனால், பெரும்பாலானவர்கள் மாற்றத்தை நோக்கமாகக் கொண்டவர்களாவர் என்றே தெரிகிறது. எனவே, அக்கட்சியானது இனப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் ஊகிக்கலாம்.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதற்கான தடைகள் பெரும்பான்மை சமூகத்துக்குள் மட்டுமல்லாது தமிழ் மக்களுக்குள்ளும் இருக்கின்றன. குறிப்பாக இரு சமூகங்களிலும் உள்ள பல்வேறு அரசியல் குழுக்களிடையே இருக்கும் போட்டி மனப்பான்மை தீர்வுக்கான பிரதான எதிரியாகக் கருதலாம்.

நாம் இதற்கு முன்னர் பல கட்டுரைகளில் சுட்டிக் காட்டியது போல் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாயின் இரு சமூகங்களுக்கிடையில் தீர்வொன்று தொடர்பாக இணக்கம் ஏற்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட ஒரு சாராரோ அல்லது இரு சாராருமோ விட்டுக்கொடுத்து இறங்கி வந்தால் மட்டுமே இணக்கம் ஏற்படும். தாம் அல்ல, மற்றவரே விட்டுக்கொடுக்க வேண்டும் மற்றவரே இறங்கி வர வேண்டும் என்று கருதினால் பிரச்சினை ஒருபோதும் தீரப் போவதில்லை. இதுவரை காலமும் அதுவே நடந்தது.

புதிய அரசியலமைப்பொன்றின் மூலமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாகவும் மூன்றாண்டுகளுக்குப் பின்னரே புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் என்றும் அரசாங்கம் கூறுகிறது. அதாவது தீர்வொன்று வருவதாக இருந்தால், அதற்கு மூன்றாண்டுகள் செல்லும், அதேவேளை, தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் உள்ள போட்டியின் காரணமாக அந்தத் தீர்வும் கிடைக்குமா என்ற  சந்தேகமும் நிலவுகிறது.

இனப் பிரச்சினை தொடர்பாக 1950களுக்குப் பின்னர் 1980 களிலேயே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.  1984இல் வட்டமேசை மாநாட்டிலிருந்து இது வரை நூற்றுக்கணக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. 

ஆயினும், தீர்வு என்று ஏதாவது கிடைத்திருந்தால், அது 1987இல் இந்தியா, இலங்கை மீது இராஜதந்திர பலாத்காரத்தைப் பாவித்துத் திணித்த மாகாண சபை முறை மட்டுமேயாகும். அதற்காகவும் அது வரை தமிழ்ச் சமூகம் ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டால், நூற்றுக் கணக்கில் உயிர்களைத் தியாகம் செய்திருந்தது. எனவே, தமிழர்கள் அதனை இழக்க முடியாது.

கடந்த வாரம் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியதைப் போல், ஆகாயத்தில் பறக்கும் பறவைக்காகக் கையில் இருக்கும் பறவையை இழக்கக் கூடாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தில் என்ன செய்யப் போகிறதா தெரியாது.

ஆனால், இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் மாகாண சபைகளைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக தமது கட்சி உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு அரசியல் களத்தைப் பழக்குவதற்காகவே அச்சபைகளைப் பயன்படுத்தினர்.

மாகாண சபைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய ஐ.தே.க. இந்த விடயத்தில் மிக மோசமாக நடந்து கொண்டுள்ளது. அக்கட்சி தேர்தல்களுக்குப் பயந்து 2017இல் மாகாண சபைகளை முடக்க எடுத்த நடவடிக்கையால் அச்சபைகள் நிரந்தரமாகவே முடங்கிப் போயுள்ளன.

அக்கட்சி ஏனைய கட்சித் தலைவர்களோடு கலந்துரையாடாமல் மாகாண சபைத் தேர்தல்களுக்காகவும் கலப்புத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி அதன் கீழ் சர்ச்சைக்குரிய எல்லை நிர்ணய அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனைத் தாமே தோற்கடித்து அத் தேர்தல்களை நடத்த முடியாமற் செய்தது. அன்றிலிருந்து ஏழாண்டுகளுக்கு மேலாக மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்த திருத்தச் சட்ட மூலத்துக்கு உயர் நீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்ற ஐ.தே.க. தலைவரான ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே மூன்றாண்டுகளுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப் பிரச்சினையை தீர்க்கிறதோ இல்லையோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

12.11.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .