2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

மலையக மக்களின் பிரஜாவுரிமையும் பிரேமதாஸவும்

Johnsan Bastiampillai   / 2022 ஜனவரி 19 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம். ஐயூப்

 

 

 

வரலாற்றில் நடைபெறும் அனைத்தையும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை. பெரும்பாலான விடயங்களை, பெரும்பாலானவர்கள் மறந்துவிடுகிறார்கள். இதனால், அரசியல்வாதிகள் மக்கள் முன் வந்து, நடந்ததை நடக்கவில்லை என்றும் நடக்காததை நடந்தது என்றும் கூறி அரசியல் இலாபம் அடைய முடிகிறது.

சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக வேண்டும் என்ற சட்டம், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது. இதனை வைத்து, பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள், “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே இனப்பிரச்சினைக்கான அத்திவாரத்தை இட்டது” என்று குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால், ஐ.தே.கவுக்கு அவ்வாறு குற்றஞ்சாட்ட தார்மிக உரிமை இல்லை.

1954ஆம் ஆண்டு, வடபகுதி விஜயத்தின் போது, அப்போதைய ஐ.தே.கவின் தலைவர் சேர் ஜோன் கொத்தலாவல, கொக்குவிலில் நடைபெற்ற கூட்டமொன்றில்,  சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரசகரும மொழிகளாக்கப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், தெற்கில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதையும் ஸ்ரீ ல.சு.க சிங்கள மொழியை மட்டும் அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்துவோம் என்று கூறி வந்ததையும் அடுத்து, ஐ.தே.க தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

அதன்படி, 1956ஆம் ஆண்டு தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், களனியில் நடைபெற்ற ஐ.தே.க மாநாட்டின் போது, சிங்கள மொழி மட்டுமே அரச கரும மொழியாக வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதனை மக்கள் மறந்துவிட்டார்கள்.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு, தமது தந்தையான ரணசிங்க பிரேமதாஸவே பிரஜாவுரிமையை வழங்கியதாக, சஜித் பிரேமதாஸ, நுவரெலியாவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார். இதுவும் வரலாற்றைத் திரிபுபடுத்தும் கருத்தாகவே தெரிகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது, 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புதியதொரு கட்சியாகும். அதற்கு முன்னர் அக்கட்சியின் தலைவர்களும் ஆதரவாளர்களும் ஐ.தே.கவிலேயே இருந்தார்கள். எனவே, 2020ஆம் ஆண்டுக்கு முன்னர், ஐ.தே.க செய்த நன்மையான காரியங்களின் பெருமையிலும் செய்த கொடுமைகளின் அபகீர்த்தியிலும் ஒரு பங்கு ஐக்கிய மக்கள் சக்தியையும் சென்றடைகின்றது. 

இந்தவகையில், ஐ.தே.கவின் வரலாற்றில் நடைபெற்ற சில விடயங்களுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியும் வெட்கப்பட வேண்டும். அதில், 1948 ஆம் ஆண்டு மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையைப் பறித்தமை, மிகவும் முக்கியமான கொடுமையாகும்.

1947ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை - இந்திய காங்கிரஸின் ஏழு பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஆளும் கட்சியை அல்லாது, பிரதான எதிர்க்கட்சியான லங்கா சமசமாஜ கட்சியையே ஆதரித்தனர்.

இதைத் தமது அரசியல் எதிர்க்காலத்துக்கான ஓர் அச்சுறுத்தலாகவே, டி.எஸ் சேனாநாயக்கவின் தலைமையிலான ஐ.தே.க கருதியது. எனவேதான், 1948 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம், மலையக மக்களின் பிரஜாவுரிமையை ஐ.தே.க அரசாங்கம் இரத்துச் செய்தது. இதற்கு, ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் ஆதரவளித்தது. 

இது இன்று வரை, இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியை, வெகுவாகப் பாதித்து வந்துள்ளது. அக்காலத்தில் நாட்டின் வருமானத்தில் பெரும்பகுதியைச் சம்பாதித்துக் கொடுத்த அம்மக்களுக்கு, இந்தப் பிரஜாவுரிமைப் பிரச்சினையால், திறைசேரிப் பணத்தில் பாடசாலைகளையோ மருத்துவமனைகளையோ பெற்றுக் கொள்ள முடியாமல் போய் விட்டது.

இந்த விடயத்தில், அவர்களுக்கு சில சட்டச் சிக்கல்களும் இருந்தன. அதன் காரணமாக, சுதந்திரத்துக்குப் பின்னரும் அவர்கள் நாட்டில் மிகவும் ஒதுக்கப்பட்ட மக்களாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, வீடமைப்பு என்று எதை எடுத்தாலும் உரிமைகளற்ற, தோட்டக் கம்பனிகளால் ஒடுக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய மக்களாகவே அவர்கள் சுதந்திரத்துக்குப் பின்னரும் வாழ்ந்து வந்துள்ளனர். ஏனெனில், சுதந்திரத்துக்குப் பின்னரும் பல தசாப்தங்களாக அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக இருக்கவில்லை.

பின்னர், இடம்பெற்ற பல்வேறு அரசியல் நெருக்குதல்கள் காரணமாக, நான்கு கட்டங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டு, இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.

1964ஆம் ஆண்டு இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்திய பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரிக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி 1967ஆம் ஆண்டு இல. 14க் கொண்ட ‘இந்திய-இலங்கை ஒப்பந்தம் (நிறைவேற்றல்) சட்டம்’ நிறைவேற்றப்பட்டமை அதன் முதல் கட்டமாகும்.

1974ஆம் ஆண்டு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்வுக்கும் இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையில் ஏற்பட்ட மற்றுமோர் ஒப்பந்தத்தின் படி, மேலும் ஒருசாரார் இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொண்டனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களும் ஸ்ரீ ல.சு.க ஆட்சிக் காலத்திலேயே கைச்சாத்திடப்பட்டன.

பிரஜாவுரிமை விடயத்தில் இந்தியா மீதும் அதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் மீதும், மலையக அமைப்புகள் ஏற்படுத்திய நெருக்குவாரத்தைப் பார்க்கிலும், கடுமையான நெருக்குவாரத்தை வட பகுதியைச் சேர்ந்த தமிழ் ஆயுதக்குழுக்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தின.

1980களில் இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக, இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா நினைத்தது. அதற்கு, இந்திரா காந்தி இலங்கையின் இனப் பிரச்சினையை பாவித்தார். அதன் ஓர் அம்சமாகவே இந்தியா 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தது.

அதில் கலந்து கொண்ட தமிழ் கட்சிகளும் இயக்கங்களும், நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அவை இன்றும் திம்புக் கோட்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இலங்கையில் வாழும் சகல தமிழர்களினதும் பிரஜாவுரிமை மற்றும் மனித உரிமைகள் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பது அவற்றில் நான்காவது கோட்பாடாகும்.

அக்காலத்தில் ஈ.பி.ஆர்.எல்எப் போன்ற தமிழ் அமைப்புகள் மலையக தமிழர்களையும் தமது போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தன. அதன்படியே இந்தக் கோட்பாடு மற்றவையுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அதனை அடுத்து, இந்தியா இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் அக்காலத்தில் பிரஜாவுரிமை விடயத்தில் குரல் கொடுத்தது. இந்த நிலையிலேயே கடும்போக்குவாதியான ஜனாதிபதி ஜே ஆர். ஜயவர்தனவால் 1986ஆம் ஆண்டு இல. 5க் கொண்ட ‘நாடற்ற நபர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. இது இந்திய வம்சாவளி நபர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க நிறைவேற்றப்பட்ட இரண்டாவது சட்டமாகும்.

இதனை நிறைவேற்றும் போது எழுந்த சில பிரச்சினைகள் காரணமாக, 1988ஆம் ஆண்டு இல. 39க் கொண்ட ‘நாடற்ற நபர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான (விசேட பிரமாணங்கள்) சட்டம், நிறைவேற்றப்பட்டது. அது மூன்றாவது சட்டமாகும்.

இந்த இறுதி இரண்டு சட்டங்களும் ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐ.தே.க அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டங்களாகும். அப்போது ரணசிங்க பிரேமதாஸ பிரதமராக இருந்தமை உண்மையாயினும் அவரது முயற்சியால் அவை கொண்டுவரப்படவில்லை. ஆனால் அவை அக்காலத்திலேயே நிறைவேற்றப்பட இந்திய நெருக்குதலே காரணமாகியது. ரணசிங்க பிரேமதாஸ அதற்காக விசேடமாக எதனையும் செய்தாரா என்று வரலாற்றை புரட்டிப் பார்க்கும் போது தெரிவதில்லை.

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த 2003ஆம் ஆண்டு மீண்டும் இந்த விடயத்துக்காக மற்றொரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அது இல. 35க் கொண்ட ‘இந்திய வம்சாவளி நபர்களுக்கு பிரஜா உரிமை வழங்குவதற்கான சட்டம்’ ஆகும். இது இந்த விடயத்துக்காக நிறைவேற்றப்பட்ட நான்காவது சட்டமாகும்.

எனவே மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் விடயத்தில் சஜித் பிரேமதாஸவுக்கு உரிமை கோர ஏதாவது ஒரு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

இதனால், மலையக மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமாகாது. கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பாலான மலையக மக்கள், சஜித்தின் கட்சியை ஆதரித்தமை பிழையென்று கூற நாம் முற்படவுமில்லை.

கடுமையாக இனவாதத்தை தூண்டிக் கொண்டு, தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் புறக்கணித்து, சிறுபான்மை மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்தமை விளங்கிக் கொள்ளக்கூடியதே. ஆனால் வரலாறு திரிபுபடுத்துப்படக் கூடாது.

 
  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .