2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

மலேசியத் தமிழரும் அதிவலதில் அள்ளுண்ணலும்

Johnsan Bastiampillai   / 2023 மார்ச் 14 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

வலது தீவிரவாதத்தின் நிழலில் - 18:

 

சதிக் கோட்பாடுகளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அக்கோட்பாடுகள் பெரும்பாலும் தேச, பிரதேச, இனத்துவ, அடையாள எல்லைகளுக்கு உட்பட்டவை. சதிக் கோட்பாடுகள் அரசியல் அரங்கில் முக்கியமான கருவியாக உள்ளன. அரசியலை அறிவுபூர்வத் தளத்தில் இருந்து அகற்றி, உணர்வுபூர்வத் தளத்திற்குத் தள்ளுகின்ற போது அரசியல் அரங்காடிகளுக்கு சதிக்கோட்பாடுகள் பயன்படுகின்றன. 

உலகெங்கும் சதிக்கோட்பாடுகளும் அதிவலது தீவிரவாதமும் இடைவெட்டும் நிகழ்வுகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன; இப்போதும் நிகழ்கின்றன. சதிக் கோட்பாடுகள் வலதுசாரி தீவிரவாதத்திற்கு உந்து சக்தியாக இருக்கின்றன. சமகால சதிக் கோட்பாடுகள் பொதுவாக அதிகாரம் குறித்தோ அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அதிகார நலன்கள் குறித்தோ சுழல்கின்றன. 

இந்தச் சித்தாந்தத்துக்கு ஆட்படுபவர்கள் உண்மைகளை சிதைத்து, வழக்கமான உண்மையை அவர்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மீதான உடனடி தாக்குதலாக சித்திரிக்கின்றனர். சதிக் கோட்பாடுகளை கதைகளை இயக்கவும், மேலாதிக்க குழுக்களின் நிலையை சட்டப்பூர்வமாக்கவும், துருவமுனைப்பை அதிகரிக்கவும் பயன்படுத்துவது புதிதல்ல. 

மலேசியா ஒரு பல்லின, பல் மதங்களைக் கொண்ட நாடாகும். இது கூட்டாட்சி அரசியலமைப்பைக் கொண்ட முடியாட்சியால் ஆளப்படுகிறது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் மலேசியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாகக் கருதினாலும், இஸ்லாம் உத்தியோகபூர்வ மதமாகும்.  மலாய் மக்களுக்கான சிறப்புச் சலுகைகளைக் கொண்டுள்ளார்கள். நாட்டின் பெரும்பான்மையான மலாய் வாக்காளர்கள் மலேசியாவை ஒரு இஸ்லாமிய இறையாட்சி கொண்ட நாடாகக் கருதுகின்றனர்.

மலேசியாவில், மலாய்-முஸ்லிம்கள் ‘ஒரு பாதிக்கப்பட்ட சமூகம்’ என்ற கதையாடலை நம்புகிறார்கள். அதற்கு அவர்களது சில சிந்தனைகள் காரணமாகின்றன. அவர்களது உலகக் கண்ணோட்டமானது,  யூத-எதிர்ப்புக் கருத்தியலாலும் சீன சிறுபான்மையினருக்கு எதிரான தப்பெண்ணங்களாலும்; வடிவமைக்கப்பட்டது. அவர்களிடம், சீனர்கள் மலாய் அரசியல் மேலாதிக்கத்தை அங்கிகரிக்கும் ‘சமூக ஒப்பந்தத்தை’ ஏற்றுக்கொள்ளவோ அல்லது கடைப்பிடிக்கவோ மறுக்கிறார்கள் என்ற நிலையான நம்பிக்கை உள்ளது. மேலும் சீனர்கள் ‘வரவேற்கப்படாத விருந்தினர்கள்’ என்று இழிவான முறையில் முத்திரை குத்தப்படுகிறார்கள். 

இந்தத் தப்பெண்ணங்கள் மதச்சார்பின்மை, உலகமயமாக்கல் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியம் மற்றும் மலாய்-முஸ்லிம் விழுமியங்களைத் தகர்க்க முயலும் யூத-கிறிஸ்தவ மேலாதிக்கத்தை உள்ளடக்கிய புதிய உலக ஒழுங்கு என்று அழைக்கப்படும் ‘ஒரு கற்பனை எதிரி’ தொடர்பான கூக்குரல்களை உருவாக்குகின்றன. 

இந்துப் பெரும்பான்மைவாதத்தை வலியுறுத்தி நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட உதவும் இந்துத்துவா சித்தாந்தத்தை இந்தியா முன்னெடுப்பதானது, மலேசியாவில் உள்ளூர்மயமாக்கப்பட்ட ‘பெரிய மாற்றீடு’ (Great Replacement) என்ற சதிக்கோட்பாட்டுக் கதையாடலைத் தூண்டியது. அண்மையில், இந்தியாவின் கொந்தளிப்பான அரசியலானது, மலாய் தீவிர வலதுசாரி பழைமைவாதிகள் மத்தியில் ஏற்கெனவே இருக்கும் சந்தேகங்களைப் புதுப்பித்தது. 

அவர்கள் பெரும்பாலும் தமிழ் இனத்தவர்களான உள்ளூர் இந்திய சமூகங்களை ‘நன்றியற்ற தாழ்ந்தவர்கள்’ என்று நம்புகிறார்கள். இத்தமிழர்கள் ஒருநாள் மலாய் முஸ்லிம்களை நாட்டைவிட்டு வெளியேற்ற விரும்புகிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். 

இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான மலேசியத் தமிழர்களின் ஆதரவு, மிகுந்த சந்தேகக் கண்ணோடும் அச்சத்தோடும் பார்க்கப்பட்டது. அதேவேளை மலேசியாவில் சிறுபான்மைச் சமூகமாக உள்ள இந்தியத் தமிழர்கள், தங்கள் நியாயமான குறைகளை வெளிப்படுத்தத் தொடங்கியபோது, இந்த விரோதம் இன்னும் அதிகரித்தது.

2005இல் மலேசியாவில் உள்ள 29 இந்திய அமைப்புகள் சேர்ந்து, இந்து உரிமைகள் நடவடிக்கைப் படை (Hindu Rights Action ForceHINDRAF) என்றதோர் அமைப்பை உருவாக்கி அவர்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிராகவும் அரசின் கோவில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராகவும் போராடினார்கள். விடுதலைப் புலிகளின் மலேசிய அனுதாபிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நோக்கப்பட்டனர். 

இத்தனைக்கும் மலேசியர்களையோ மலாயர்களையோ குறிவைக்கும் நோக்கம் விடுதலைப் புலிகளுக்கு இல்லை என்பது வெளிப்படையானது.  2009இல் விடுதலைப் புலிகள்  ஒழிக்கப்பட்டபோதிலும், மலேசியாவின் தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு இது உதவவில்லை. மாறாக, மலேசியாவில் புலிகளை மீண்டும் உயிர்த்தெழுப்ப முயல்வதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன.

பல தசாப்தங்களாக, மலாய் அரசியல் அரங்காடிகள் இந்த முற்றுகை மனநிலையைப் பயன்படுத்தி, தங்கள் வாக்குகளை நிறைக்கிறார்கள். சிறுபான்மையினத்தவர் பற்றிய பொய்ப்பிரசாரங்களும் சதிக்கோட்பாடுகளும் இதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.  இது 2018 ஆம் ஆண்டில் அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் நீக்குவதற்கான ஐ.நா.வின் சர்வதேச பட்டயத்தை (International Convention on the Elimination of All Forms of Racial Discrimination) மலேசியா அங்கிகரிப்பதற்கு எதிரான எதிர்ப்பையும் தூண்டியது. அதிவலது சக்திகள் தேர்தலில் கணிசமான வாக்கைப் பெறுவதற்கு, இந்தப் பட்டயத்திற்கு எதிரான பிரசாரம் முக்கிய பங்காற்றியது.  

சமீபத்தில், மலாய் இனவாதிகள் ஒன்லைனில் மலேசியாவின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ளார்கள். ஆரம்பகால மலாய் இராச்சியத்தில் பண்டைய இந்தியச் செல்வாக்கு இருக்கவில்லை என்றும் மலேசியாவுக்கு இந்து-பௌத்த கடந்த காலம் இல்லை என்றும் மலேசியா எப்போதுமே இஸ்லாமியர்களுடையதாகவே இருந்தது என்றும் கூறி வருகின்றனர்.

கடந்தாண்டு இறுதியில் இடம்பெற்ற பொதுத்தேர்தலும் அக்காலத்து அரசியல் கதையாடல்களும் எவ்வாறு அதிவலது செல்வாக்கு இன்று மலேசியாவின் மையநீரோட்டத்தை ஆட்சிசெய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். பொதுத் தேர்தலின் போது, சமூக ஊடகங்களின் வழி, தவறான தகவல்களைப் பயன்படுத்தி, முரண்பாட்டைத் தூண்டி, தவறான தகவல்களைப் பரப்பி, கடுமையான துருவமுனைப்புக்கான நிலைமைகளை மேம்படுத்துவதற்காக சதி கோட்பாடுகளை உருவாக்கினர்; இது வன்முறையில் முடிந்தது. 

தேர்தல் பிரசாரத்தின் போது எழுப்பப்பட்ட பிரச்சினைகளும் கவனம் பெற்ற குறைபாடுகளும் புதுமையானவை அல்ல. எவ்வாறாயினும், இம்முறை, உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற நெருக்கடிகள் காரணமாக அதிவலது சக்திகள் மிகவும் தைரியமடைந்துள்ளனர்.

இப்போதே பலர், மலேசியா ‘வலதுசாரி தீவிரவாதத்தின் திடீர் எழுச்சியுடன்’ போராடிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தாலும், இந்த நிகழ்வு புதிதல்ல. இதை விளங்க நீண்டகாலம் எடுத்துள்ளது என்பதே உண்மை. மலேசியாவில் அதிவலதுக் கோட்பாடுகள் மற்றும் சதி கோட்பாடுகளின் முக்கிய நீரோட்டமானது, சமூக ஊடகங்கள் மற்றும் வழிமுறைகளின் பெருக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 
அதே சமயம், சமூகக் கலவரங்களைத் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் ஸ்தாபனங்களுக்கும் தலைவர்களுக்கும் அதிவலது சித்தாந்தம் பயன்விளைவிக்கிறது.

வீரியம் மிக்க அரசியல் அரங்காடிகள தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களைத் தங்களின் பிரசாரங்கள், செய்தி பரப்புதல், கதையாடல்களை உருவாக்கல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்துவதில் அதிக நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். மேலும், தற்போதுள்ள இன மோதல்களையும் கடுமையான உள்நாட்டு அரசியலை ஸ்திரமின்மையையும்  பயன்படுத்திக் கொண்டு - ஒரு சட்டபூர்வமான அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் நோக்கத்துடன் - தவறான தகவல் மற்றும் சதி கோட்பாடுகளுக்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். 

அண்மைய மலேசியத் தேர்தல்களின் போது, தவறான தகவல் தந்திரோபாயங்கள் பெரும்பாலும் மூன்று இலக்குகளை அடையப் பயன்படுத்தப்பட்டுள்ளன:

1) அவநம்பிக்கையின் சூழலை உருவாக்குவதன் மூலம் தேர்தல் முடிவுகளைத் திசைதிருப்பல்.

2) துருவமுனைக்கும் சித்தாந்தங்களை ஊக்குவித்தல்.

3) வாக்காளர் எண்ணிக்கையைக் குறைத்தல்.

இவை மூன்றையும் சதிக்கோட்பாடுகளும் அதை மக்களிடம் எடுத்துச் செல்லும் சமூகவலைத்தளப் பயனர்களும் (சைபர்ட் ரூப்பர்கள்) திறம்படச் செய்கின்றனர். தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், போட்டியாளர்களை இழிவுபடுத்துவதற்கும், அரசியல் கதையாடல்கள் தடம் புரளுவதற்கும், ஒன்லைனில் பொதுக் கருத்தைக் கையாளுவதற்கும், அரசியல் கட்சிகள் அல்லது பிற அமைப்புகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நபர்கள் ‘சைபர்ட் ரூப்பர்கள்’ எனப்படுகிறார்கள். 

வாக்குகள் மற்றும் தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதில் தவறான தகவல் பெருகிய முறையில் பரப்புவதானது, சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், கட்சிகள் பொதுக் கருத்தை பாதிக்கவும், அவநம்பிக்கையின் சூழலை உருவாக்கவும் முடியும். இது மிகப்பாரியளவிலான துருவப்படுத்தப்பட்ட அரசியல் பார்வைகளுக்கு வழிவகுப்பதோடு சமூகங்களை பிளவுபடுத்தும். இன்னொரு வகையில் இது ‘சிவப்பு-குறியிடல்’ எனப்படும் கம்யூனிச அபாயம் என்று ஓரங்கட்டவும் பயன்படுகிறது.

இது நபர்களையும் அமைப்புகளையும் கம்யூனிஸ்டுகள் அல்லது பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது, அவர்களுக்கு எதிரான கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்வது, அதை நியாயப்படுத்துவது அவர்களை இழிவுபடுத்துவது என்பன எல்லாம் அதிவலதினதும் சதிக்கோட்பாட்டினதும் இணைவால் தென்கிழக்காசியாவில் சாத்தியமாகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .