2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

‘மாற்றம்’ என்ற மாயவலைக்குள் சிக்கியுள்ளனர்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சில மாத இடைவெளிக்குள் ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் என்ற இரு பெரும் தேர்தல் களங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது மூன்றாவது தேர்தலாக எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. 

இந்தத் தேர்தலில் இம்முறை தென்பகுதியை விடவும் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிலும் வழக்கத்திற்கு மாறாக  ஆட்சியிலுள்ள அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான  ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு வடக்கு, கிழக்கு  மாகாணங்களை முற்றாகவே கைப்பற்றிவிடும் நோக்கில் அடித்தாடத் தொடங்கியுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்

தமிழ் தேசியக் கட்சிகள் அதனைத் தடுத்தாடும் வியூகங்களை அமைத்து பிரசாரப் போரைத்  தீவிரப்படுத்தியுள்ளன.ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 48,498 வாக்குகள், கிழக்கு மாகாணத்தில் 197,689 வாக்குகள் என மொத்தம் 246,187 வாக்குகளைப்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்று ஜனாதிபதியானதுடன்  நடத்திய பாராளுமன்றத் தேர்தலில் அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு மாகாணத்தில் 5 பாராளுமன்ற ஆசனங்களையும் கிழக்கு மாகாணத்தில் 7 பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றிக்கொண்டது.

இந்நிலையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி வடக்கு,கிழக்கை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத்  தீவிரமான தேர்தல் பிரசாரங்களில் இறங்கியுள்ளது.

இதன் வெளிப்பாடாகவே தற்போது ஜனாதிபதி  அனுரகுமார திசாநாயக்க கிழக்கு மாகாணத்திற்கான  சூறாவளி பிரசாரப் பயணத்தை முடித்து 17ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கான பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வடக்கிற்கான பிரசாரப் பயணத்தை முடித்து கிழக்கு மாகாணத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.இவர்கள் மட்டுமன்றி, அமைச்சர்கள் பலரும் என்றுமில்லாத வகையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் மொழியிலும் திக்கித்திணறி உரையாற்றி தமிழ் மக்களையும் அவர்களின் வாக்குகளையும்  கவர முற்படுகின்றனர். 

இவ்வாறு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மையப்படுத்தி ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான  ஜே.வி.பி.-என்.பி.பி. புயல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மையம் கொண்டுள்ள நிலையில், இந்த அனுர அரசுப்  புயல் இனப் பிரச்சினை  என்ற இலங்கையின் நீண்டகால கருவைக் கலைத்து விடுவதுடன், தமிழ்த் தேசிய அரசியலையும் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்று விடும் என்ற அச்சம் தமிழ்த் தேசிய வாதிகளிடமும் தமிழின உணர்வாளர்களிடமும் தற்போது  ஏற்பட்டுள்ளது. அதற்கு நியாயமான காரணங்களும் உண்டு.

இவ்வாறாக வடக்கு, கிழக்கில் மையம்  கொண்டுள்ள  அனுர அரசு புயல், மிரட்டியும் அபிவிருத்தி ஆசைகாட்டியும் தமிழர்களின் உள்ளூராட்சி சபைகளைக் கபளீகரம் செய்து விடத் துடிக்கின்றமைதான் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் தமிழர் உரிமை சார் விடயங்களுக்கும். இனப் பிரச்சினை தொடர்பான சர்வதேசத்தின் நிலைப்பாட்டுக்கும் பேரச்சுறுத்தலாக மாறியுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு பாடம் புகட்டுகின்றோம் என்ற  ரீதியில் செய்த வரலாற்றுத் தவறான தேசிய மக்கள் சக்திக்கு 5 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்ததன்  விளைவுகளை தற்போது தமிழினம்தான் அனுபவிக்கின்ற நிலையில், உள்ளூராட்சி  சபைகளும் பறிபோய்விடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள்  சக்தியின்  ஜனாதிபதி வேட்பாளர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வாக்குகளையும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு   மாகாணங்களில் தேசிய மக்கள்  சக்தி பெற்றுக்கொண்ட  பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையையும் வைத்துக்கொண்டு, தமிழ் மக்கள் முதல் தடவையாக சிங்கள ஜனாதிபதியையும் சிங்கள கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வடக்கு, கிழக்கில் தெரிவு செய்துள்ளனர்.

எனவே, தற்போது நாட்டில் இனப் பிரச்சினை என எதுவும் கிடையாது என அனுரகுமார அரசு சர்வதேச மட்டத்தில் தீவிர பிரசாரங்களில் இறங்கியுள்ளது.
அதனை மேலும் உறுதிப்படுத்தவே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மக்கள் தமிழ் மக்கள்   தேசிய மக்கள் சக்திக்கு 5 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்ததனால் வடக்கு, மாகாணத்திற்கு  ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் அடிக்கடி விஜயம் செய்து தமிழ்மக்கள் தொடர்பில் அக்கறையுள்ளவர்கள்

போல் காட்டிக்கொள்வதுடன்,  கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களினால் புறக்கணிக்கப்பட்டதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்  பகுதிகளில் தேசிய மக்கள்  சக்தி வெற்றிபெறும்

உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே அரசு நிதி ஒதுக்குமென மிரட்டுவதுடன் தமது வாக்கு வங்கிக்கு சவாலாக.இடையூறாக இருப்போரை கைது செய்வது, கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டுவதுமென இரு வியூகங்களில் களம்  இறங்கியுள்ளது. 
தேசிய மக்கள் சக்தியின் இந்த இரு வியூகங்களில் முதலாவது  வியூகம் தற்போது வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. 

பலவருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி திறக்கப்படுகின்றது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணம் சென்று, தான்  தமிழ் மொழியில் பேச விரும்புவதாகக்கூறித் திக்கித்திணறி ஓரிரு வார்த்தைகள் தமிழில் பேசுகின்றார்.

தையிட்டி சட்டவிரோத  விகாரை நிலைமைகளை ஆராயவென அமைச்சர்கள் விஜயம் செய்கின்றனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனைக்கு சொந்தமான  2 ஏக்கர் காணி 30 வருடங்களின் பின்னர்  இராணுவத்தினரால் மீளக்கையளிக்கப்படுகின்றது.  தற்போது ஜனாதிபதி அனுரகுமார  திசாநாயக்கவும் வடக்கிற்குச் சென்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் இந்த இரு இரு வியூகங்களில் இரண்டாவது வியூகம் தற்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில்தான் மட்டக்களப்பு மாநகர சபை தேசிய மக்கள் கட்சியின் கையில் இருந்தால்தான்  நிதி வழங்கப்படும் என்று மட்டக்களப்பில் வைத்தே   ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பகிரங்கமாகக் கூறி தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளார்.

இது அப்பட்டமான தேர்தல் சட்ட விதிமுறை மீறல். அடுத்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் கட்சிகளின் தலைவர்களுமான  தமிழ் வாக்குகளை ஓரளவுக்கு கவரக்கூடிய வியாழேந்திரன், பிள்ளையான் ஆகியோரின் கைது. இதில் வியாழேந்திரன் பிணையில் வெளிவந்துள்ள நிலையில், பிள்ளையான் தொடர்ந்தும் சிறையில் உள்ளார்.

அதேவேளை, தேசிய மக்கள்  சக்தி அரசையும் ஜனாதிபதியையும் அதிகம் விமர்சிக்கும் தமிழரசுக்கட்சியின் சாணக்கியன் எம்.பியும் எவ்வேளையிலும்  ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள்  சுமத்தப்பட்டு கைதாகலாம் என தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன. 

இவ்வாறாக அபிவிருத்தியைக் காட்டியோ, அச்சுறுத்தியோ வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றிவிட அனுரகுமார அரசு தீயாய் வேலை செய்து வரும் நிலையில்,  தமிழர் தாயகம் முற்று முழுதாக பேரினவாதிகளின் கைகளுக்குச் சென்று விடும் நிலைமையும் இல்லாமல் இல்லை. ஏனெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையில் ஏற்பட்ட பிணக்குகள், பிளவுகள் சீர்செய்யப்படாது பிரிவினைகள்  தொடர்வதனால் தமிழர்களும் கடந்த தவறை மீண்டும் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மையம் கொண்டுள்ள ‘அனுர புயல்’   தமிழர் பிரதேச உள்ளூராட்சி சபைகளை அள்ளிச் செல்லுமா? தமிழ்த் தேசிய அரசியலையும், தமிழர் உரிமைக் கோஷங்களையும் தூக்கிச் சுழற்றி அடிக்குமா? இனப் பிரச்சினை என்ற  விடயத்தைக் காணாமல் போகச் செய்யுமா?  என்ற கேள்விகளுக்கு  வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொருவரும்  தமிழனாகவும், தன்மானத் தமிழனாகவும் தடம்மாறாத் தமிழனாகவும் தமிழ்த் தேசிய இனமாகவும் பதிலளிக்க, வாக்களிக்க வேண்டிய தீர்க்கமான தேர்தலாக எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

அதனால்தான் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் பிளவுண்டு கிடந்தாலும்,  இந்த 
ஜே .வி.பி.-என்.பி.பி. அரசை  எதிர்ப்பதிலும் வடக்கு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகள் அரசின் கைகளுக்குச் சென்று விடாது தடுப்பதிலும் ஓரணியாகத் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. அவ்வாறு சென்று விட்டால் தமிழர் தற்போது கட்டியிருக்கும் கோவணமும் உருவப்பட்டு விடும் என்பதை ‘மாற்றம்’ என்ற  மாயவலைக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ் இளையோருக்குப் புரிய வைக்க படாதபாடுபடுகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .