Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 04 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
மாற்றம்... மாற்றம்...’ என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றோம். நாட்டில் எந்தவொரு ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், ‘இந்த சிஸ்டம் சரியில்லை’, ஆளுகைக் கட்டமைப்பு உள்ளிட்ட முறைமைகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தையே மகக்ள் வெளியிடுகின்றனர்.
‘மாற்றம்’ என்பது மேல் மட்டத்தில் இருந்து, கீழ் நோக்கி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
என்ற மனப்பாங்கின் வெளிப்பாடாகவே இதனைக் கருத முடிகின்றது.
மாறாக, அரசியல் ஆளுகையில் ஏற்படுகின்ற கட்டமைப்பு மாற்றமே ‘சிஸ்டம் சேன்ஜ்’ இற்கு அடிப்படையானது என்றால், அதற்காக ஒவ்வொரு தனிமனிதனும், சமூகமும் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறி விடுகின்றோம்.
ஆகவே, நாம் விரும்புகின்ற மாற்றம் நிகழவேண்டுமென்றால், ஒவ்வொரு சமூகத்தின் அரசியல்வாதிகளையும் மாற்றியமைப்பதில் இருந்து அப்பணியை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
மக்களை முட்டாள்களாக்கி அரசியல் செய்கின்ற, சமூகத்தை விற்றுப் பிழைக்கின்ற நமது அரசியல்வாதிகளை மாற்றியமைப்பதன் மூலம், இந்த மாற்றத்தைத் தொடக்கி வைக்கலாம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முக்கியமாக நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியுள்ளது. அவர்கள் தமது நடத்தைகளில் மாற்றங்களைக் கொண்டு வரவில்லை என்றால், அவர்களையே மாற்றிவிடுவதுதான் சமூக தர்மம் என்பதையும் மறந்து விடக் கூடாது.
நாட்டு மக்கள் பொதுவாகவும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் குறிப்பாகவும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. மாற்றத்தை அடிமட்டத்தில் இருந்து கொண்டு வராததன் காரணமாகத் தமிழர்களின் அரசியலும் முஸ்லிம்களின் அரசியலும் கெட்டுக் குட்டிச் சுவராயிருப்பது மட்டுமன்றி, அந்த அரசியல்வாதிகள் மக்களைப் பிழையாக வழிநடத்தவும் செய்கின்றனர்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக உரிமை அரசியலின் பெயரால் ஏமாற்றப்பட்டு வருவதாகவே தெரிகின்றது. அந்த அரசியல் மூலம் சிலவற்றைச் சாதித்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது. ஆயுதப் போராட்டத்திற்கும் இத்தனை இழப்புக்களுக்கும் ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமானது.
ஆனால், இத்தனை காலமும் மக்கள் இழந்த இழப்புக்களுக்கு போதுமான உரிமைகளோ ஏனைய சமூகங்களைப் போன்ற அபிவிருத்திகளோ அம்மக்களைச் சென்று சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில், இப்போது தமிழர் அரசியல் பல துண்டங்களாகி அரசியல் செய்வதன் ஊடாக, மக்களைப் பிரித்தாளுகின்றது.
நாட்டின் ஜனாதிபதியை மாற்றுவது அல்லது நமக்கு விருப்பமான ஒருவரை ஆட்சியாளராகக் கொண்டு வருவது எல்லாம் ஒருபுறமிருக்க, சாதாரண தமிழ் மக்கள் ‘வாயால் வடை சுடுகின்ற’ இந்தப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளது என்றே தோன்றுகின்றது.
இலங்கையில் மிகவும் வஞ்சிக்கப்பட்ட மக்கள் பிரிவினர் என்றால், அது மலையக மக்கள்தான். அவர்கள்தான் அடிப்படை உரிமைகளுக்காகநூறு வருடங்களுக்கும் மேலாக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் சமஷ்டிக்காகவோ சுயநிர்ணயத்திற்காகவோ அல்லது இன, மத உரிமைகளுக்காகவோ போராடவில்லை. தாங்கள் இந்த நாட்டில் ஏனைய மக்களைப் போல, வாழ்வதற்கான உரிமைகளுக்காகவே தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், மலையக அரசியல்வாதிகள் எந்த நிலையில், இருக்கின்றார்கள் என்பதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.
இந்திய நடிகைகளைக் கொண்டு வந்து மக்களுக்கு ‘புதினம் காட்டுகின்ற’ அளவுக்குத் தரம் கெட்டுப் போயுள்ளது இவர்களின் அரசியல்... மலையகத்தில் ஏதோ ஒரு அடிப்படையில் அரசியல்வாதிகளிடையே இருந்துவந்த ஒற்றுமை தற்போது சீர் குலைக்கப்பட்டுள்ளதை அவர்களது வெட்கக் கேடான தெருச்சண்டைகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
மக்களை விற்றுப் பிழைக்கின்ற விடயத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள்தான். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், பிரச்சினைகள், அபிவிருத்தி சார் நலன்கள் என்று சொல்லிக் கொண்டு அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் எம்.பிக்களும் தமது சொந்த அரசியல் பிழைப்பையே செய்து கொண்டிருக்கின்றனர்.
எம்.எச்.எம்.அஷ்ரபின் காலத்தில் இருந்த அளவுக்குக் கூட சமூகநலன் சார்ந்த அரசியலை இப்போது மருந்துக்குக் கூட காணக் கிடைப்பதில்லை.
இதற்கு முதலாவது காரணம் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் பிரதான முஸ்லிம் கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவராகப் பதவியேற்ற றவூப் ஹக்கீமும் அவருடன் அன்றிருந்த ஏனைய அரசியல்வாதிகளும் ஆவர். ஏனென்றால், ஸ்தாபக தலைவரின் மறைவுக்குப் பின் தங்கள் மீது இருந்த பாரிய சமூகப் பொறுப்பை அவர்கள் உணர்ந்து செயற்பட்டதாகத் திருப்தி கொள்ளமுடியாது.
இரண்டாவது காரணம் முஸ்லிம் சமூகமாகும். அதாவது, தமது அரசியல்வாதிகள் தவறான வழியில் பயணிக்கின்றார்கள் என்பதை தெளிவாக அறிந்திருந்தும், அதனைத் தட்டிக்கேட்காத அல்லது மாற்றத்தைக் கொண்டுவராத மக்களுக்கும் இதில் பொறுப்புள்ளது.
இன்று இதே வழியில்தான் றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸும் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஏனைய சிறு அணிகள் இதைவிட மோசமாகும். ஒரே விதமான சரக்கு, ஒரே மாதிரியான வாடிக்கையாளர்கள் (மக்கள்) ஆனால், விளம்பரங்கள் மட்டும் வேறு வேறு என்றுதான் இதனைச் சொல்லமுடிகின்றது.
இதற்கிடையில், பெருந்தேசியக் கட்சிகளில் ஒட்டிக் கொண்டு அரசியல் செய்கின்ற முஸ்லிம் எம்.பிக்க்ளும் அண்மைக்காலமாகக் குறிப்பாக வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட முஸ்லிம் அரசியலுக்குள் மூக்கை நுழைக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்பது
வேறு கதை.
முஸ்லிம் அரசியல்வாதிகள் எத்தனையோ தடவை இந்த சமூகத்தின் உரிமைகளை, பிரச்சினைகளை, அடையாளத்தை, தனித்துவத்தை ஏன் கௌரவத்தையும் கூட விற்றுப் பிழைத்திருக்கின்றார்கள். இன்னும் இந்தப் போக்கு மாறவில்லை.
ஒரு பக்கம் இணைந்து தேர்தல் கேட்டுவிட்டு, மறுதரப்பை ‘இனவாதிகள்’ என முத்திரை குத்திவிட்டு, பிறகு மறு பக்கத்திற்குத் தாவி பதவிகள் மற்றும் வெகுமானங்களைப் பெற்றுக் கொண்டனர். ஒரு கட்சியில் தலைவரும் எம்.பிக்களுக்கும் ‘தண்ணீருக்கும் தவிட்டுக்குமாய்’ ஆளுக்கொரு பக்கம் இழுத்துக் கொண்டு ஓடுகின்றனர்.
அமைச்சுப் பதவிகளையும் வருவாயையும் இலக்கு வைத்து இன்று வரை முஸ்லிம் எம்.பிக்கள் குத்துக்கரணம் அடிப்பது தொடர்வதை காண்கின்றோம். தேசியப் பட்டியல் எம்.பிக்காகவே அரசியல் செய்தவர்களும் தேசியப் பட்டியல்
எம்.பியை எடுத்துக் கொண்டு மறுபக்கம் பாய்ந்த அமீர் அலி போன்றவர்களையும் நாம் கண்டிருக்கின்றோம்.
இவ்வாறான குரங்குத்தனமான அரசியலால் பல தடவை ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியலும் வெட்கித் தலைகுனிய நேரிட்டது. முஸ்லிம் சமூகத்தை நோக்கிப் பிற சமூகங்களிலிருந்து பல கேலிக் கதைகளும் கேள்விக் கணைகளும் வீசப்பட்டன. ஆனால், ‘ரோசம் இல்லாதவன் ராசாவிலும் பெரியவன்’ என்ற தோரணையிலேயே முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று வரை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
துரதிர்ஷ்டவசமாக, ஏனைய சமூகங்கள் கேள்வி எழுப்பிய அளவுக்குக் கூட
முஸ்லிம் சமூகம் இது பற்றி தம்முடைய அரசியல் தலைவர்களிடம், மக்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பவில்லை. புத்திஜீவிகளோ, சிவில் சமூகமோ, தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகமோ அல்லது பள்ளிவாசல்களோ முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தவறுகளுக்கு எதிராக எழுந்து நிற்கத் தவறிவிட்டன.
கடந்த 25 வருடங்களில் எத்தனையோ தேர்தல்கள் வந்தன. பல ஜனாதிபதிகள் ஆட்சி செய்தனர்.
ஏகப்பட்ட முஸ்லிம் அரசியல் அணிகள் மட்டுமன்றி பெரும்பான்மைக் கட்சிகளின் முஸ்லிம் எம்.பிக்களும் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டதை மறுக்க முடியாது.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இந்த கால் நூற்றாண்டில் எம்.பி. கதிரையைச் சூடாக்கியவர்களும் இந்த முஸ்லிம் சமூகத்தின் எந்த நீண்டகாலப்பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கின்றார்கள்? ஏதனை உருப்படியாகச் செய்துள்ளார்கள்?
தேர்தல்கள், சட்டமூலங்கள், பாராளுமன்ற வாக்கெடுப்புக்கள் வந்தபோது, சமூகத்தின் மானத்தை அடமானம் வைத்து அரசியல் செய்தவர்கள், ஏதோ பெரிய உடன்பாட்டின் அடிப்படையிலேயே ஆதரவளிப்பதாகக் கூறிய தலைவர்கள், அதன் பின்னர் எதனையும் சமூகத்திற்குப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பது கண்கூடு.
எனவே, இந்த கோணத்தில் பார்க்கின்ற போது, இந்த முறை தேர்தலில் நாங்கள் இந்த வேட்பாளரையே ஆதரிக்கின்றோம். அவரே முஸ்லிம்களுக்கு நல்லது செய்வார்.
அதற்கான உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளோம் என்று கூறுவதை நம்பினாலும், அதுவெல்லாம் நிறைவேற்றப்படும் என்பதை எந்த அடிப்படையில் நம்புவது என்றுதான் தெரியவில்லை!
ஆகவே, தமிழ் மக்களைப் போல, முஸ்லிம் மக்களும் ‘ஆட்சியாளர்கள் பிழை’ என்று கூறிக் கொண்டிருப்பதை விட, முதலில் தமது அரசியலுக்குள் இருக்கின்ற சமூகத்தை விற்றுப் பிழைக்கின்ற போக்கை மாற்றியமைப்பதுதான் பயனைத் தரும்.
27.08.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
4 hours ago