Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 12 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
பொதுத் தளத்தில் பிரசாரம் செய்வது என்பது ஒரு கலையாகும் . இதன் தரத்தைப் பொறுத்தே அரசியல் பெருவெளியில் வெற்றியும் தோல்வியும் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகின்றன.
கருத்துக் கணிப்புக்கள், மிகைப்படுத்தப்பட்ட பிரசாரங்கள், அறிக்கைகள், பிரதி விளம்பரப்படுத்தல்களை விட, காத்திரமான பிரசார முன்னெடுப்பின் பங்கு அரசியல் வெற்றிக்கு அவசியமானது.
ஒருவேளை, இந்த ஜனாதிபதித் தேர்தல் 2022ஆம் ஆண்டு நடைபெற்றிருந்தால்
தற்போதைய கள நிலைமைகள் வேறு மாதிரியானவையாக அமைந்திருக்கும். ஏனென்றால், மக்கள் முற்றுமுழுதாகவே ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து இருந்த காலமாக அது இருந்தது. அப்போது இருந்தநிலைகள் இப்போது இல்லை.
ராஜபக்ஷக்கள், ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச பற்றி நாட்டு மக்களிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலிருந்த அபிப்பிராயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஆகவே, பிரசாரங்கள் ஊடாகவே மக்களைக் கவரவேண்டியிருக்கின்றது. இந்தத் தேவை எல்லோருக்கும் தற்போதுள்ளது.
இன்னும் 18 நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பல கருத்துக் கணிப்புக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
அநேக கருத்துக் கணிப்புக்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினரிடமிருந்து மாதிரிகளை எடுத்தே தயாரிக்கப்படுகின்றன. அத்துடன், தமக்கு விரும்பிய முடிவை எதிர்பார்த்து மறைமுக நிகழ்ச்சி நிரல்களுடன் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளும் உள்ளன.
இந்தப் பின்னணியில் கள நிலைமகள் நாளுக்குநாள் மாற்றமடைந்து வருகின்றன என்பதுதான் உண்மையாகும். எது எவ்வாறிருப்பினும், எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெறக்கூடிய அளவிலான நிலைமைகள் இன்னும் உருவாகவில்லை. இனியும் ஏற்படுமா என்பது சந்தேகமே.
எனவே, தேர்தல் விஞ்ஞாபனங்கள், பத்திரிகை விளம்பரங்கள், ஊடக அறிக்கைகள் மற்றும் மேடைப் பேச்சுக்கள் உள்ளிட்ட பிரசார முன்னெடுப்புக்களின் ஊடாகவே மக்களை, அதுவும் குறிப்பாக இதுவரை முடிவெடுக்காமல் இருக்கின்ற தளம்பல் நிலை வாக்காளர்களை தம் பக்கம் இழுக்க வேண்டிய நிலை இருக்கின்றது.
காத்திரமான உரைகள், பேச்சுக்கள், கருத்தியல் தாக்கங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் மனங்களில் குறிப்பாக இளையோர் மனங்களில் மாறுதல்களை உண்டுபண்ண முடியும் என்பதற்கு அனுரகுமார திசாநாயக்க ஒரு நல்ல உதாரணமாகக் கொள்ளப்படலாம்.
இந்தத் தேர்தலில் அனுரகுமராவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகப் பரவலான கூறப்படுகின்றது.
அவர் வெற்றி பெறுவார் என்பது அதன் அர்த்தமல்ல. எனினும், ஜே.வி.பி. பற்றிய பழைய சம்பவங்களை எல்லாம் ஒரு புறம் வைத்து விட்டு, மக்கள் இவ்வாறு கவரப்படுவதற்கு அவரது நேர்த்தியானதும் தொடர்ச்சியானது மன உரைகளே காரணம் எனலாம்.
அனுரகுமரா இதற்கு முன்னர் பெரிய பதவிகளில் இருந்து செய்து காட்டியவர். என்று கூற முடியாது. ஜே.வி.பி. இந்த நாட்டை ஆண்ட கட்சியுமல்ல. அப்படியிருந்தும் கணிசமான ஆதரவு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு முழுமையான காரணம் கட்டமைக்கப்பட்ட பிரசார முன்னெடுப்புக்கள் என்றே கூற வேண்டும்.
இதேவேளை, பாராளுமன்றத்திலும் தேர்தல் மேடைகளிலும் காத்திரமான முறையில் பேசத் தெரியாத காரணத்தால் மக்கள் மனங்களிலிருந்து மெல்லமெல்ல அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் பலரும் உள்ளனர் என்பதை, கூர்ந்து நோக்குவோரால், அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
எனவே, பிரசாரம் என்பது முக்கியமானது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது செயலாற்றுகையின் முன்னேற்றம் பற்றிக் கூறுவதற்கு அவசியமில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்குள் அவர் சில விடயங்களைச் செயலில் காண்பித்திருக்கின்றார்.
அவர் பற்றி முன்னர் இருந்த எதிர்மறையான பிம்பத்தை இந்த இரண்டு வருடங்களிலும் மாற்றியமைத்திருக்கின்றார். எவ்வாறிருப்பினும், அவரைச் சார்ந்திருப்பவர்கள் பிரசாரங்களைக் கனகச்சிதமாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் இப்போதும் உள்ளது.
இருப்பினும். கட்சி தாவி வந்த பலர் ரணில் பக்கம் உள்ளனர். குறிப்பாக மொட்டு அணியின் முட்டுக்கள் பலர் இந்தப் பக்கம் வந்துள்ளதால், அவர்களால் பகிரங்கமாகப் பிரசாரம் செய்யமுடியாத நிலையுள்ளதாகத் தெரிகின்றது.
இந்த நிலைமையில், ரணில் தலைமையிலான அரசாங்கம் சாதித்த விடயங்கள் சரிவர மக்களுக்கு பிரசாரப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை அவர்கள் மீள் வாசிப்புச் செய்யவேண்டும்.
இதேவேளை, சஜித் பிரேமதாச அணியின் பிரசாரங்கள் இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஆனாலும், அவர் பற்றி 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இருந்த மக்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே,வெற்றியை உறுதிப்படுத்த வேண்டுமாயின், கருத்துக் கணிப்புக்களை நம்பியிருக்காமல் காத்திரமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதே நல்லது.
இந்த வரிசையில், மேடைகளில் வாய்க்கும் மூளைக்கும் தொடர்பில்லாமல் பேசுகின்ற அரசியல்வாதிகள், யாருக்கும் புரியாத விதத்தில் சத்தமாகப் பேசுகின்ற அரசியல்வாதிகள், முன்னாயத்தம் எதுவும் இல்லாமல் வந்து உளறுகின்ற தலைமைகள் மற்றும் யாருக்கு ஆதரவாகப் பேசுகின்றோம் என்பதைக் கூட மறந்துவிடுகின்ற பேச்சாளர்கள் எனப் பலவகையான ஆட்களைத் தேர்தல் மேடைகளில் நாம் கண்டுகொண்டிருக்கின்றோம்.
கோட்டாபயவின் ஆட்சியில் பங்காளராக இருந்து விட்டு, இப்போது வந்து தேச நலன் பற்றிப் பேசமுடியாத பல எம்.பிக்கள் இருக்கின்றனர். இனவாதத்தை தவிரவேறு எதனையும் பேசத் தெரியாத எம்.பிக்கள் உள்ளனர். அதுமட்டுமன்றி, மேடைகளில் மக்களைக் கவரும் விதத்தில் கதைக்க முயன்று மூக்குடைபட்ட அரசியல்வாதிகளும் இல்லாமலில்லை.
மறுபுறத்தில், நேரடி விவாதம் என்ற பெயரில் நடக்கின்ற அபத்தமான செயல்களும், இலத்திரனியல் ஊடக நிகழ்ச்சிகள் அரசியல்வாதிகள் சண்டை பிடிக்கின்ற போக்கும் அதனை ஒளிபரப்புவதில் இன்பம் காணும் ஊடக அதர்மமும் இன்னுமொரு பக்கம் மக்களை முகம் சுழிக்கவைத்துக் கொண்டிருப்பதையும் காண்கிறோம்.
ஒவ்வொரு சிறிய பெரிய நடவடிக்கையும் குறித்த வேட்பாளரின் வெற்றிக்கு தடையாக அமைகின்றன. செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அவரது கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன, அல்லது செலவு வைக்கப்படுகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.
முன்னொரு காலத்தில் வரையறுக்கப்பட்ட ஊடகங்களே இருந்தன. செய்திகள் தணிக்கை செய்யப்பட்டு, சரி பிழை பார்க்கப்பட்டு, ஊடக தர்மத்தோடு வெளியாகின. இப்போது இந்த நிலை மாறி விட்டது. ஜனாதிபதி வேட்பாளரோ, அமைச்சரோ, எம்.பியோ கோபப்பட்டாலும், கொமடித்தனமாக பேசினாலும், தரக் குறைவாக நடந்து கொண்டாலும், உடனேயே அதன்போது வெளியில் பேசுபொருளாகிவிடும்.
குறிப்பாக, சில முஸ்லிம் அரசியல் தலைவர்களின் அண்மைக்கால உரைகள் கேலிக்கூத்தாக மாறியிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு முக்கியத்துவ மிகக் காலப் பகுதியில் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் ‘பஸ்ஸை ‘ உவமானமாக எடுத்து பேசும் பாணியில், காத்திரமான தன்மையில் இருந்து விடுபட்டுப் போனார். இது ஒரு விதகேலியான விடயமாக மாறிப் போனது.
அதேபோல், இன்னுமொரு முஸ்லிம் கட்சியின் தலைவர் நல்ல விடயங்களைச் சொன்னாலும், கிராமத்து வழக்கில் பேசும் தோரணையில், ஒரு கோர்வையாக இல்லாமல் விடயங்களை முன்வைப்பதால் இவரது உரையும் அநேக சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தள ஒருவித புதினமாக மாறிவிடுகின்றது.
இதேவேளை, மற்றுமொரு முஸ்லிம் கட்சியின் தலைவர் உணர்ச்சிவசப்பட்டு, ஆத்திரப்பட்டு சத்தமாகப் பேசி விட்டு மேடையிலிருந்து இறங்குவதைக் காண்கின்றோம். இந்த உரையில் பெறுமதியான சாரம்சங்கள் இருப்பதில்லை.
இன்னும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மேடையில் அர்த்தமற்ற விதத்தில் மேடையில் சத்தமிடுகின்றனர். வேறு சிலர் மேடையில் பேசுவதால், குறிப்பிட்ட வேட்பாளருக்கு இருக்கின்ற வாக்குகளில் ஒன்று இரண்டு குறைந்து விடுமோ என்று எண்ணும் நிலை ஏற்படுகின்றது.
ஒரு நாட்டின் அல்லது முஸ்லிம், தமிழ் சமூகத்தின் தலைவர்கள் இதில் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாவர். எனவே, அவர்கள் நடன பாணியில், கிண்டல் தனமாக அல்லது உப்புச்சப்பற்ற விதத்தில் பேசுவதை, அல்லது வெறுமனே உரக்கப் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
நமது எதிரி அல்லது நமக்குப் போட்டியாகவுள்ள வேட்பாளர் எப்படிப்பட்டவராகக் கூட இருக்கலாம். அதற்காக நாம் நமது கௌரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. இது பெரும்பான்மை தலைவர்கள், சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கு பொதுவான அறிவுரையாகும்.
நமது உரைகளில் கேலியான விடயங்களை, நக்கலாகக் கூறுவதால் அங்கு வந்திருக்கின்ற மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்வார்களே ஒழிய அது நம் மீதான மதிப்பை அதிகப்படுத்தாது. கேலிக் கூத்தான பிரசாரங்களுக்குச் சமூகவலைத்தளங்களில் அதிக ‘லைக்குகள்’ கிடைக்கலாம். ஆனால், அது வாக்களிப்பதற்கு அவர்களைத் தூண்டாது என்பதையும் கவனிக்க வேண்டும்.
அந்த வகையில், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை அரசியல்வாதிகள் எல்லோரும் பொதுத் தளத்தில் அர்த்தபுஷ்டியாகவும் மக்களைக் கவரும் விதத்திலும் பிரசாரம் செய்வது எப்படி என்பதை இன்னும் கற்றுக் கொள்ளவேண்டியுள்ளது.
03.09.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
21 Dec 2024