2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மக்கள் விடுதலை முன்னணியும் இந்திய விஸ்தரிப்பு வாதமும்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின், குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்னமும் அரசாங்கத்தை வற்புறுத்தி வருகின்றன.

இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பலர் வியப்புடனேயே பார்க்கின்றனர். ஏனெனில், ஆளும் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு கிளர்ச்சிகளின் போதும் அக்கட்சி கடுமையான இந்திய எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.

இந்தியாவுடனான உறவு விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணியை விமர்சிக்கும் பலர் இந்திய விஸ்தரிப்பு வாதம் ஒன்று இருப்பதாகவும் அது இலங்கையின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்றும் 1960களில் இருந்தே கூறி வந்த மக்கள் விடுதலை முன்னணி தற்போது இந்தியப் பிரதமரை கட்டித் தழுவி இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றையும் கைச்சாத்திட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

பல விடயங்களில் கொள்கை ரீதியாக மக்கள் விடுதலை முன்னணி குத்துக் கரணம் அடித்துள்ளமை உண்மை தான். அவர்களது சில கொள்கை மாற்றங்கள் நியாயமானதாகவும் தெரிகிறது. மேலும், சில மாற்றங்கள் எந்தவித அடிப்படையும் இல்லாத சந்தர்ப்பவாதமாகவும் தெரிகிறது. ஆனால், இந்தியா தொடர்பான அவர்களது நிலைப்பாட்டு மாற்றத்தைப் பற்றிய விமர்சனம் சரியானது அல்ல என்றே தெரிகிறது.

மக்கள் விடுதலை முன்னணி ஒரு காலத்தில், அதாவது 1971இல் இடம்பெற்ற அவர்களது முதலாவது கிளர்ச்சிக்கு முன்னர் இந்திய விஸ்தரிப்பு வாதத்தைப் பற்றிக் கருத்து வெளியிட்டு வந்தமை உண்மை தான். எனினும், அக்கிளர்ச்சி தோல்வியடைந்த ஒரு வருடத்தில் அவர்கள் அவ்வெண்ணைக்கருவைக் கைவிட்டனர். ஆனால், அது இடம்பெற்று 53 ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், அரசியல் விமர்சகர்கள் என்று கூறிக்கொள்வோருக்கு இன்னமும் அது தெரியாமல் இருக்கிறது.

முறையான கல்வித் திட்டமொன்றின் ஊடாக தமது கட்சியில் புதிதாக சேருவோரை அறிவூட்ட நடவடிக்கை எடுத்த இலங்கையின் முதலாவது அரசியல் கட்சி மக்கள் விடுதலை முன்னணியாகத் தான் இருக்க வேண்டும். 1967ஆம் ஆண்டு முதல் அக்கட்சி தமது புதிய உறுப்பினர்களுக்கான கல்வி திட்டத்தை வகுத்தது.

அக்கட்சி மாக்ஸியக் கட்சியாக இருந்த போதிலும், மாக்ஸியத் தத்துவம், மாக்ஸிய பொருளாதாரம் போன்ற சிக்கலான விடயங்களை ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொடுக்காமல் நாட்டின் நடைமுறை அரசியல், பொருளாதாரம் மற்றும் அரசியல் வரலாறு போன்றவற்றையே அதன் தலைவர்கள் தமது புதிய உறுப்பினர்களுக்குப் போதித்தனர். அவை ஐந்து கலந்துரையாடல்கள் மூலமாகப் போதிக்கப்பட்டன. அக்கலந்துரையாடல்கள் வகுப்புக்கள் என்றே அழைக்கப்பட்டன.

1.முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி, 2.சுதந்திரமானது நவ காலனித்துவ தந்திரமாகும், 3.இந்திய விஸ்தரிப்பு வாதம், 4.இலங்கையின் இடதுசாரி இயக்கம் மற்றும் 5.இலங்கை புரட்சி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதை ஆகியன 1967இல் தயாரிக்கப்பட்ட அவ்வைந்து வகுப்புக்களின் பெயர்களாகும்.

1971 கிளர்ச்சி தோல்வியடைந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது சிறைக்கூடங்களை அவர்கள் கல்வி நிறுவனங்களாக மாற்றிக்கொண்டனர். சிலர் அரசாங்கத்தின் கல்வி திட்டத்தின் படி கற்க ஆரம்பித்தனர். அதேவேளை, கட்சியின் தலைவர்கள் அரசியல் ஆய்வுகளை நடத்தி தமது வகுப்புக்களை மீளாய்வு செய்தனர்.

இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பின் மூலம் இனவாதத்துக்குத் தீனிபோடப்படுகிறது என்ற விமர்சனம் அப்போது எழுந்தது. குறிப்பாக, இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

உண்மையிலேயே இந்திய விஸ்தரிப்பு வாதம் எனும் எண்ணக்கருவானது மக்கள் விடுதலை முன்னணி உருவாக்கியதொன்றல்ல. அது சீனத் தலைவர்கள் உருவாக்கிய எண்ணக்கருவாகும். அக்காலத்தில் சீனாவுக்கும் சோவியத் ஒன்றித்துக்கும் இடையே சித்தாந்தப் போர் நடைபெற்று வந்தது. அதேபோல, இந்தியா சோவியத் ஒன்றித்தின் நட்பு நாடாகவும் சீனாவின் எதிரியாகவும் இருந்தது. இந்நிலையில், இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சீன சார்பு அமைப்புக்களும் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற எண்ணக்கருவை ஏற்றுக்கொண்டன.

கிளர்ச்சியின் பின்னர் சிறைக்கூடங்களில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல்களின் பயனாக மக்கள் விடுதலை முன்னணி சீன சார்பு கொள்கையை கைவிட்டது. அத்துடன், அக்கட்சி 53 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1972இல் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற எண்ணக்கருவைக் கைவிட்டது. ஆனால், மக்கள் விடுதலை முன்னணியை விமர்சிப்போர் இன்னமும் அதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

சிறைகூட கலந்துரையாடல்களின் விளைவாக மக்கள் விடுதலை முன்னணி தமது ஏனைய வகுப்புக்களையும் மாற்றிக்கொண்டது. அதன் படி 1972இற்கு பின்னர் கீழ் காணப்படும் தலைப்புகளிலேயே வகுப்புக்கள் நடத்தப்பட்டன. 

1.பொருளாதார நெருக்கடி, 2.மென்செவிக் இயக்கம் (இடதுசாரிகளைப் பற்றிய வகுப்பு), 3. இலங்கை புரட்சியின் வகிபாகம், 4.சோஷலிஸத்துக்கான வழி (இலங்கைப் புரட்சி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதை என்ற வகுப்பின் புதிய தோற்றம்) மற்றும் 5.பொல்செவிக் கட்சியைக் கட்டியெழுப்புதல் (அரசியல் ஒழுக்கம் உள்ள கட்சியொன்றை எவ்வாறு கட்டியெழுப்புவது) என்பனவே அக்கட்சியின் ஐந்து வகுப்புக்களாக நடத்தப்பட்டன.

அதன் பின்னர், ஒருபோதும் மக்கள் விடுதலை முன்னணி இந்திய விஸ்தரிபபுவாதம் என்ற கருத்தை முன்வைக்கவே இல்லை. தொடர்ச்சியாக இந்தியாவை எதிர்க்கவும் இல்லை. சில காலங்களில் இலங்கையில் ஏனைய கட்சிகள் இந்தியாவை எதிர்த்து செயற்படும் போது, அக்கட்சி இந்தியாவுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டும் வந்துள்ளது.

1977இல் ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி பதவிக்கு வந்தது. வெளிநாட்டு செலாவணி மோசடியில் ஈடுபட்ட ஜயவர்தனவின் நண்பர்கள் சிலர், குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். எனவே, ஜயவர்தன அச்சட்டத்தை இரத்து செய்து தமது நண்பர்களை விடுவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களும் இதே சட்டத்தின் கீழேயே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சட்டம் இரத்து செய்யப்பட்ட உடன் அவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

தமக்கு முன்னர் பதவியில் இருந்த சிறிமா பண்டாரநாயக்கவைப் போலன்றி, ஜயவர்தன அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் நண்பரானார். இந்தியா சோவியத் ஒன்றியத்தின் நண்பராக இருந்தது. இந்தியாவுக்கு இரு புறத்திலும் இருக்கும் பாகிஸ்தானும் வங்காளதேசமும் அமெரிக்க சார்பு நாடுகளாக இருந்தன. இலங்கையும் அமெரிக்க சார்பு நாடாக மாறியதன் விளைவாக இந்தியா சீற்றம் கொண்டது.

இதனிடையே 1983இல் தமிழர்களுக்கு எதிராக பாரியளவில் வன்செயல்கள் வெடித்தன. அதற்கு ஐ.தே.கவே காரணமாக இருந்தது. அக்கட்சிக்காரர்களே வன்செயல்களில் முன்னணியில் இருந்தனர். எனினும், இக்கலவரத்துக்குக் காரணமானவர்கள் எனக் கூறி, ஜயவர்தனவின் அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் நவ சமசமாஜக் கட்சியையும் 1983இல் ஜூலை 31ஆம் திகதி தடை செய்தது.

எனினும், அக்கட்சிகள் கலவரத்துக்குக் காரணமாக இருக்கவில்லை என்று அவ்வரசாங்கத்தின் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க 1995ஆம் ஆண்டு பட்டலந்த ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் கூறினார்.

தமது கட்சி தடை செய்யப்பட்டதையடுத்து, ரோஹண விஜேவீர உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் தலைமறைவானார்கள். தலைமறைவாக இருக்கும் நிலையிலேயே ஜயவர்தனவின் வெளிநாட்டுக் கொள்கையை விமர்சித்து விஜேவீர அறிக்கையொன்றை வெளியிட்டார்.

ஜயவர்தனவும் அமெரிக்க சார்பு கொள்கையை பின்பற்ற ஆரம்பித்ததன் காரணமாக இந்தியா மூன்று பக்கங்களால் அமெரிக்க சார்பு நாடுகளால் முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் இது இலங்கைக்கு பாதகமாகவே அமையும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். விரைவிலேயே அவரது கூற்று உண்மையாகியது.

தமக்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியைத் தடை செய்வதற்கு ஜயவர்தன தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களைப் பாவித்ததைப்  போலவே தமக்குப் பாதகமான வெளிநாட்டுக் கொள்கையை கடைப்பிடித்த ஜயவர்தனவை மட்டுப்படுத்த இந்தியாவும் அதே கலவரத்தைப் பாவித்தது.

கலவரத்தின் காரணமாக இந்தியாவுக்குள் தமிழ் அகதிகள் வருவதை சுட்டிக்காட்டி இந்தியா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட்டு இறுதியில் பிராந்தியத்தில் தமது நலன்களைப் பாதுகாக்கும் வகையில் 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட ஜயவர்தனவை நிர்ப்பந்தித்தது.

அப்போது, மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் இந்தியாவுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தது. எனவே, பொதுவாக மக்கள் விடுதலை முன்னணி இந்திய எதிர்ப்பு அமைப்பொன்றல்ல. சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே அக்கட்சியின் இந்தியா தொடர்பான கொள்கை அமைந்திருக்கிறது.

இப்போது மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவுடன் பாதுகாப்பு உட்பட ஏழு விடயங்கள் தொடர்பாக ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. அவற்றின் விவரங்களை வெளியிட அது மறுத்து வருகிறது. தேவையானவர்கள் அந்த விவரங்களைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத் கூறியிருந்தார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அந்த விரங்களை வழங்க முடியுமாக இருந்தால் அதனை தமது அமைச்சின் இணையத்தளத்தின் மூலமாக ஏன் அவற்றை வெளியிட அவரால் முடியாது என்ற கேள்வி எழுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .