2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

பொறுப்பை உணர்வதும் முக்கியம்

Johnsan Bastiampillai   / 2022 ஏப்ரல் 10 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

மக்கள் கிளர்ச்சி அடிப்படைவாதத்தின் பாலான ஒன்றாக மாறிவிடும் ஆபத்து இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது.

மக்களை அடிப்படைவாதம், அதன் கட்டுக்குள் வைத்திருக்கின்ற நிலையானது மிகவும் பாரதூரமான அழிவையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்று அனைவரும் அச்சப்பட வேண்டியதே இதற்குண்டான பிரதிபலனாக இருக்கப்போகிறது.

கடந்த காலங்களின் பிழையான தீர்மானங்கள், விட்டுக் கொடுப்பின்மை, உரிமைகளை கௌரவிக்காமை, மதிப்பளிக்காமை காரணமாக, நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினையானது தீர்வுக்கு உட்படுத்தப்படாமலேயே காலங்கடத்துகின்ற ஒரு பாரதூரமான விடயமாக இருந்துவருகிறது.

உரிமைகள் மீறப்படுவதானது, தாம் செய்த பிழைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியாக இருக்கும் வரையில், காலங்கடத்துதல் என்பது  தொடர்ச்சியானதாகவே இருக்கும்.

கவலை நிறைந்த சிந்தனையுடனேயே மக்கள் அன்றாடம் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இந்தச் சூழலை மாற்றுவதற்கு, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்றத்தின் ஒவ்வோர் உறுப்பினர்களும் சிந்தித்துச் செயற்படவேண்டியது கட்டாயமாகும்.

நாட்டின் இன்றைய நிலை குறித்து அலசுகையில்,  பொருளாதாரப் நெருக்கடியின் தோற்றுவாய் எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை யாரும் கண்டுபிடிக்கத் தலைப்படவில்லை. ஒவ்வோர் அரசாங்கம் உருவாகும் போதும், தாம் நினைத்ததை  செய்துவிடுகின்ற சூழல், இயலுமை தமக்கிருப்பதாகத்தான் ஒவ்வொருவரும் இறுமாப்புக் கொள்கிறார்கள். அதனால், அடுத்துவரும் அரசாங்கம் அவற்றால் ஏற்படும் அபாயங்களைச் சீர்செய்பவர்களாகவே இருக்கவேண்டியநிலைதான் இலங்கையின் யதார்த்தம்.

ராஜபக்‌ஷ அரசாங்கம் உருவானது முதல், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை வேலைத்திட்டம், காபட் வீதி அமைப்புகள் போன்றவை, நாட்டின் அதிக நிதியை செலவுக்கு உட்படுத்திவிட்டன. அதேநேரத்தில், வெளிநாடுகளில் பெற்ற கடன்களுக்கான வட்டி, தவணைக் கொடுப்பனவுகள் மக்களை மேலும் சுமைகளைத் தூக்க வேண்டியவர்களாக மாற்றியது. கிருமிநாசினிகள், இரசாயனப் பசளைத்தடை போன்றவை மக்களை நெருக்கடிக்குள் தள்ளின. இப்போது எரிபொருளுக்கு நீண்ட வரிசைகள். 

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் துன்பங்களை அனுபவித்தபோது, நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பெரும்பான்மை மக்கள், அவர்களின் துன்பங்களை கணக்கில் எடுத்திருக்கவில்லை. அவ்வேளையில், வேற்று நாடு ஒன்றின் மீது யுத்தம் நடத்துவதாகவே அனைத்தையும் செலவு செய்துவிட்டு, நாட்டின் செல்வம் அனைத்தையும்  மேலைநாடுகளுக்கு தாரைவார்க்கும் நிலைப்பாட்டுக்கு வந்திருந்தனர். ஆனால், இன்றைய நிலைமைக்கு, அது ஒன்றே காரணமில்லையானாலும் முக்கிய காரணம் என்பதனை உணரவேண்டியது கட்டாயமே.

இன்னமும் பல வருடங்களுக்குத் தொடரவிருக்கின்ற இப்பொருளாதாரப் பிரச்சினைக்கு, நினைத்த மாத்திரத்தில் தீர்வு கிடைத்துவிடும் என்று நப்பாசை கொள்வது மிகப்பெரும் ஆபத்து. இப்போதும் எங்கு கடன்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சிந்திக்கின்ற நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கு ஒரே வழி, இலங்கை சுதந்திரமடைந்தது முதல் இருந்துவருகின்ற தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தி, புலம்பெயர் மக்களின், தவணைக் கொடுப்பனவு செலுத்தத் தேவையில்லாத, வட்டிகள் கொடுக்க வேண்டியிராத நிதிகளை பெற்றுக்கொள்வதாகும்.

ஆனால், புலம்பெயர் தமிழர்கள் முதலிட முயலும்போது கூட, ஆயுளுக்கும் அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை விடவும் அதிகமான பணத்தினை அனுமதி வழங்குவதற்கான தமக்கான பிரதியுபகாரமாக எதிர்பார்த்தால், யாரும் முதலிட விரும்பமாட்டார்கள். இப்போதுள்ள ஒரேயொரு வழியாக புலம்பெயர்ந்துள்ளவர்களின் நிதியை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியே பாதிப்பற்ற முறை என்பதை, அதிகாரத்திலுள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேவேளை, முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையானவர்கள் கடந்த 2005 முதலே இந்த அரசாங்கத்தை எதிர்த்து வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். தங்கள் சமூகத்தின் நலன் என்று கூறிக்கொண்டு, தங்களது சுயநலன்களையே கவனத்திலெடுத்திருந்தனர்.

ஆனால், இன்றைய பொருளாதாரப் பிரச்சினை விடயத்தில்,  நாட்டில் பெரும்பான்மை இன மக்கள் போராட்டம் நடத்தும் போது, அதில் பங்கெடுப்பதில் எமது சமூகத்திற்கு இருக்கும் ஆபத்தை விட, நாம் தனியாக போராட்டம் நடத்தும் போது இருக்கும் ஆபத்து அதிகம் என்பதை நாம் உணர வேண்டும் என்று, முஸ்லிம் தரப்புகள் அந்த மக்களை வழிப்படுத்தும் நிலையும் காணப்படுகிறது.

அதற்கு அவர்கள் சொல்கின்ற காரணங்களாக, எமது நாட்டில் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த கசப்பான சம்பவங்களின் உண்மையான காரணங்களில் முதன்மையானது ராஜபக்‌ஷ எதிர்ப்பு வாதம் ஆகும்.

இலங்கை தேசத்தின் வளர்ச்சியில் பாரிய பங்காற்றிய முஸ்லிம் சமூகம், நசுக்கப்படும் சமூகமாக கடந்த காலங்களில் இருந்து வந்தமைக்கான காரணம், முஸ்லிம்களின் தலைமைகளின் பிழையான தீர்மானங்களே என்பதை கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். முஸ்லிம் சமூகத்தின் குரல்வளைகள் நசுக்கப்பட்ட போது, முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது, புனித பள்ளிவாசல்களில் நாய்கள் மோப்பம் பிடிக்க அழைத்து வரப்பட்ட போது, அப்பாவி இளைஞர்கள் வீண்பழி சுமந்த போது, முஸ்லிங்களின் சட்டங்களில் அதிகாரம் பாய்ந்த போது, அமைதிகாத்த தலைமைகள், இப்போது நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு தனி அடையாளம் கொடுத்து, தனியே முஸ்லிங்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகள் போன்று விம்பத்தை உருவாக்கி, தனி முஸ்லிங்களின் போராட்டத்தை முன்னெடுப்பது, இலங்கையில் வாழும் எதிர்கால முஸ்லிம் சந்ததிகளுக்கு ஆபத்தாக அமையும் என்பதை கடந்த கால வரலாறுகள் தெளிவாக எமக்கு எடுத்து காட்டியுள்ளன.

நாட்டின் மேம்பாட்டுக்காக இலங்கையர்களாக ஒன்றிணைந்து பிராத்திக்க வேண்டிய நேரத்தில் நாம் பேரணிக்காக தயாராவது பிழையான தீர்மானமாக அமைந்துள்ளது என்றே அவர்கள் கொள்கிறார்கள்.

‘அரபு உலகம்’ உண்மையில் எண்ணெய் வளத்தில் பலமுடையது என்றவகையில், முஸ்லிம் நாடுகளின் நலன்புரிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் மற்றொரு வழிமுறையாம். அதற்கு முஸ்லிம்களுடைய உரிமைகளையும் நலன்களையும் அரசாங்கம் அனுசரிக்க வேண்டியது முக்கியமாகும்.

நாட்டுக்கு முன்பெல்லாம் கச்சா எண்ணையாக நாட்டுக்குள் கொண்டுவரப்படும் எரிபொருள் இப்போது எரிவாயு, டீசல், பெற்றோலாகக் கொண்டு வருவதற்கான தேவை என்ன இருக்கிறது. இவ்வாறு முடிவுப்பொருட்களாக கொள்வனவு செய்கின்றவேளை, நாட்டின் உழைப்பின் பிரதிபலலும் நாட்டுக்கு வெளியே டொலராகவே வெளியேறுகிறது. இதுகூட ஒருவகையில் ஆபத்தானதே.

எதிர்காலத்தை கவனத்தில் கொள்ளாது, கண்களை மூடிக்கொண்டு மனதில் பட்டதையெல்லாம் செயற்படுத்தும் வல்லரசுத் தனத்துடனோ, வளர்ச்சியடைந்த நிலையிலேயோ நமது நாடு இல்லை என்பதை, நாட்டின் தலைவர்கள் பொறுப்புடன் புரிந்து கொள்ளவேண்டும்.

உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் தமது பிழைகளை ஏற்றுக் கொண்டு, அடுத்த நிமிடத்திலேயே பதவிகளைத் தூக்கி எறிந்துவிடும் நிலைமையே காணப்படுகிறது. இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில், அதற்கு எதிர்மாறுகளே நடைபெறுகின்றன. தம்மைப் பாதுகாப்பதாகவும் தம்முடைய கௌரவத்திற்காகவும் பிடிவாதத்துக்காகவும் நாட்டு மக்களையே நாட்டின் தலைவர்கள் பலியாக்குகிறார்கள். இந்தப் பலியெடுத்தல், மக்களை மாத்திரமல்ல நாட்டின் முழு எதிர்காலத்தையுமே பலியெடுக்கிறது என்பது தெளிவாகவேண்டும்.

இந்த இடத்தில்தான், சரியான நேரத்தில் எடுக்கப்படும் பிழையான முடிவும் பிழையான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவும் ஆபத்தை தரவல்லதாக அமைந்துவிடும் என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

அந்தவகையில்தான், முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் சமூகத்தை சரியாக வழிநடத்த வேண்டியதும், தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களை வழிப்படுத்துவதும், சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்களை வழிநடத்திக் கொண்டு செல்லவேண்டிய தேவையும் முதன்மைப்படுகிறது.  

ஆட்சியைப் பிடிப்பதற்காக முண்டுக்கு நின்றவர்கள் இப்போது மண் கௌவி விட்டாதாகவே அரசியல் பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. இனவாதமும் அரசியல் குரோதமும் பாராட்டும் நமது நாட்டின் அரசியல் அரைவேக்காட்டுத்தனத்துக்கும் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

அந்த வகையில்தான், பொறுப்புணர்வும் நாட்டின் மேம்பாட்டை முன்கொண்டு செல்லக்கூடியதும், ஊழல்கள் அற்றவர்களும் அரசியலுக்குள் கொண்டுவரப்படுதல் உணரப்பட வேண்டும். நிதிபலம் இருந்தாலொழிய வேறு யாரும் அரசியலுக்குள் நுழையமுடியாது என்ற நிலைப்பாட்டில் மக்கள் மாற்றத்தினை கொண்டுவரும் பொழுதே நாட்டின் நலனும், பொறுப்பும் பாதுகாக்கப்படும்.

‘நான் பதவி துறந்தால் நாட்டை யார் காப்பாற்றுவார்கள்’ என்ற எண்ணம் பொறுப்பின்மையின் வௌிப்பாடாகும். அதற்காக மக்கள் சமூகம் நசுக்கப்படும் பொழுது, அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்க முடியாது. உண்மையாக இருந்தாலும் காலத்தின் தேவையும் உணரப்பட வேண்டும். ஆனாலும், அரசாங்கத்தின் தடுமாற்றம் நிதானமாவதற்குரிய காலம் கனியவேண்டுமென்று அனைவரும் எதிர்பார்ப்போம்; அதற்காகச் சாத்தியமான வழிகளில் முயற்சிப்போம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .