2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

பொருளாதாரத்தைப் புறந்தள்ளிய நலன்கள்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ

சுதந்திர இலங்கையின் பொருளாதார நலிவானது, 1950களின் தொடக்கத்திலேயே மெது மெதுவாக வெளித் தெரியத் தொடங்கியது. ஆனால், அதை அரசாங்கங்கள் சீராகக் கவனிக்கவில்லை. குறிப்பாக மக்கள் தொகையின் விரைவான அதிகரிப்பு ஒவ்வொரு ஆண்டும் மொத்த நுகர்வு செலவினங்களைத் தொடர்ந்து அதிகரித்தது.

உணவு மானியங்கள் மற்றும் அரசாங்கத்தின் பிற நலக் கொள்கைகள் மக்கள் நல நோக்கில் இன்றி, அரசியல் நோக்கங்களால் உந்தப்பட்டது. தசாப்தத்தின் இறுதியில், இறக்குமதி கட்டுப்பாட்டை நெருங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதைக் கண்ணுற்ற வர்த்தகர்கள், அக்கட்டுப்பாடுகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த நடவடிக்கைகளை எடுத்தனர். 

இக்காலப்பகுதியில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை முறியடிக்க முயன்றவர்களால் இறக்குமதி பொருட்களை ஊக முறையில் வாங்கப்பட்டன. 1958 முதல் நாணய மாற்றுக் கட்டுப்பாடு படிப்படியாக இறுக்கப்பட்டதன் மூலம் வெளிநாடுகளுக்குப் பணப் பரிமாற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டன.

ஆனாலும் பணம் பதுக்கப்படுவதைத் தடுக்க இயலவில்லை. இன்னொருபுறம், இந்தக் கட்டுப்பாடுகளால் நுகர்வு அதிகரித்தது. இதனால் வெளிநாடுகளுக்குப் புழக்கத்தில் இருந்து தடுக்கப்பட்ட பணம் சேமிப்பதற்குப் பதிலாகக் கிட்டத்தட்ட முழுவதுமாக நுகர்விற்குச் சென்றது.

இறுதியில், 1960ஆம் ஆண்டில் வீட்டு சேமிப்பு 1950 இல் இருந்ததை விட சற்று அதிகமாக இருந்தது, மேலும் அதன் விகிதம் 4.9 சதவீதமாக மிகவும் குறைவாக இருந்தது. பத்தாண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த குடும்பங்களும் ரூ.2,324,000,000 மட்டுமே சேமித்தன. தனியார் நிறுவனங்களின் சேமிப்பு கணிசமாக அதிகரித்திருந்தது. பத்தாண்டுகளில் இலாபம் கணிசமாக வளர்ந்தது. அரசாங்கத்தின் வரிச்சலுகைகள் அவற்றுக்கு வாய்ப்பாக அமைந்தன. இக்காலப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் பெருநிறுவனங்களாக வளர்ச்சியடைந்தன.

இக்காலப்பகுதியில் தேவையான அளவு சேமிப்பு மற்றும் முதலீட்டை உருவாக்க  அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி இரண்டு முக்கிய காரணங்களுக்காகத் தோல்வியடைந்தது. முதலாவது, போதுமான அளவு வருவாயைத் திரட்டுவதில் எதிர்கொண்ட சிரமம். இரண்டாவது, புதிய கொள்கை இலக்குகளுக்கு மரபு வழியாக வந்த கொலனித்துவ வருவாய் முறையின் பொருத்தமின்மை. இவ்விரண்டையும் அரசாங்கத்தால் எதிர்கொண்டு சீர்செய்ய முடியவில்லை.

அதேவேளை, திரட்டப்பட்ட வருவாய் முதலீட்டிற்குக் கிடைப்பதற்கு முன்பு, அதைச் செலுத்தக்கூடிய மாற்றுப் பயன்பாடுகளான பரிமாற்றக் கொடுப்பனவுகள் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தற்போதைய செலவுகள் ஆகியவற்றிற்குச் செலவழிக்க வேண்டியிருந்தது. அரசியல் நோக்கங்கள் அரசின் சேமிப்பை அதிகரிப்பதை விட சமகாலப் பயன்பாடுகளுக்கான குறுகிய கால அழுத்தங்களை அதிகரித்தன. இதனால்  நீண்டகால நோக்கிலான முதலீட்டு முயற்சிகளுக்கான விருப்பம் ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை. இது நாட்டின் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவித்தது.

இலங்கையின் அரசாங்க வருவாய் முறை கொலனித்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருந்தது. அதன் முக்கிய சிறப்பியல்பு வெளிநாட்டு வர்த்தகப் பரிமாற்றங்களில் விதிக்கப்படும் மறைமுக வரிகளை வலுவாக நம்பியிருப்பதாகும். சுதந்திர இலங்கையின் முதல் நிதியாண்டான 1947/48 இல், இது 500,000,000 ரூபாய்க்கும் சற்று அதிகமாக வருமானத்தை ஈட்டியது. இந்த மொத்தத்தில், சுமார் 60 சதவீதம் சுங்க வரிகளால் வழங்கப்பட்டது, இது வெளிநாட்டு வர்த்தகத்தின் மாறுபாடுகளைப் பொறுத்து நீண்ட காலமாக அரசாங்க வருவாயில் 50 முதல் 75 சதவீதம் வரை பங்களித்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து மிகப்பெரிய ஒற்றை வருவாய் ஆதாரமாக இருந்த இறக்குமதி வரிகள், 1947/48 இல் 177,000,000 ரூபாய் வருவாயைக் கொண்டிருந்தன. இது மொத்த இறக்குமதியில் 18%மாக இருந்தது. ஏற்றுமதி வரிகள் கூடுதலாக 137,000,000 ரூபாய்கள், இது மொத்த ஏற்றுமதியில் 14%மாக இருந்தன. இந்த முக்கிய வருவாய் ஆதாரங்கள் வெளிநாட்டு வர்த்தகத்தைச் சார்ந்திருந்தன. இதற்கு மேலாக விரிவான ஒழுங்குமுறையான வரிமுறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை.

அரசாங்கத்தின் மீதமுள்ள வரி வருவாயானது, முத்திரை வரி மற்றும் பல்வேறு கலால் வரிகள் மூலம் பெறப்பட்டது. முந்தையது, பல்வேறு வகையான சட்ட பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது. பிந்தையது, பெட்ரோல், புகையிலை மற்றும் மதுபானங்களை மையமாகக் கொண்டது. இந்த வருவாய் அமைப்பு பாரம்பரிய பொருளாதார கட்டமைப்பின் பிரதிபலிப்பாகும்.

வெளிநாட்டு வர்த்தகத்தில் தேசிய வருமானம் அதிகமாகச் சார்ந்திருப்பது வர்த்தகத் துறையில் வரிச் சுமை இணையாகக் குவிவதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும், இலகுவான நிர்வாகம் மற்றும் கொலனித்துவ ஆளும் வர்க்கத்தின் நேரடி வரிவிதிப்பைத் தவிர்க்கும் விருப்பம் ஆகியன இலங்கையின் வரிக்கட்டமைப்பைச் சீரமைக்க இடமளிக்கவில்லை.

இதனால் அரசாங்கம் தொடர்ச்சியான வருமான இழப்பைச் சந்தித்தது. ஆனால், தனக்குப் போதுமான வருமானத்தை ஈட்டுவதற்கான வழிவகைகளைச் செய்யத் தவறியது.1948-1960 காலப்பகுதியில் இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகள் பொருளாதாரம் தொடர்பில் நிலவின. அவை அரசியல் நிலைப்பாடுகளால் மையப்படுத்தப்பட்டவை. டி.எஸ்.சேனநாயக்கா விவசாயத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததாகக் காட்டிக் கொண்டார்.

ஐ.தே.க. ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் பாரம்பரிய விவசாயத்தைக் கட்டியெழுப்புவது வலியுறுத்தப்பட்டது, குறிப்பாக நில மேம்பாடு மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் பரந்த நிலப்பரப்பிற்கு விவசாய விரிவாக்கம்.

தொழில்துறை மேம்பாடு பொதுவாகத் தனியார்த் துறைக்கு விடப்பட்டது. ஏற்றுமதி சந்தைகள் தொடர்பில் பங்கெடுக்க அரசு ஆர்வம் காட்டவில்லை. அதேவேளை தனியார்த் துறைக்கு தீர்மானகரமான வரிவிதிப்பின் மூலம் அரச வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுமில்லை.

1956 இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பதவிக்கு வந்ததும் சில முற்போக்கான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தார். சித்தாந்தமும் சூழ்நிலைகளும் இன்னும் துணிச்சலான போக்கை ஆணையிட்டன. ஐ.தே.க ஆட்சியின் கீழ், கவனியாது விடப்பட்ட  தொழில்துறை மீது அரசின் கவனம் குவிந்தது.

மக்கள் நல நோக்கிலான பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்தது.  பண்டாரநாயக்கவின் பொருளாதாரக்  கொள்கைகள் நன்மை பயக்குவனவாக இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது இலேசானதாக இருக்கவில்லை.  ஏனெனில் அவை  தனியார் பொருளாதாரத்திற்கும் செல்வந்தர்களுக்கும்  அச்சுறுத்தலாக இருந்தன.

பண்டாரநாயக்கவின் கொலை, 1956 தனிச் சிங்களச் சட்டம், 1958 கலவரங்கள் ஆகியவற்றின் பின்புலத்தில் இனமுரண்பாடு புதிய கட்டத்தை எட்டியது. சுதந்திரம் முதலாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள், 1960களின் முற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்தனர்.

இருப்பினும், அந்த சரிவை விவரிக்கும் முன், பின்னோக்கிப் பார்க்கும்போது எந்த வகையான அபிவிருத்திச் செயன்முறை இடைக்கால பொருளாதார அமைப்பைக் காப்பாற்றியிருக்க முடியும் மற்றும் அறுபதுகளின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் தவிர்க்க முடியும்.

என்ற கேள்வியை விசாரிப்பது தகும். அதன் உற்பத்தியில் பெரும் பகுதியை முதலீட்டிற்கு ஒதுக்க வேண்டிய அவசியம் இருப்பதைத் தவிர, அடிப்படைக் கொள்கையில் என்ன மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்? இலங்கையின் பொருளாதாரம் பாரம்பரியமாக முதன்மைப் பொருட்களின் ஏற்றுமதியைச் சார்ந்து இருந்தது, ஆனால், இப்போது அது ஏற்றுமதித் துறையால் உள்வாங்க முடியாத அளவுக்குக் கணிசமான தொழிலாளர் உபரியை விரைவாக வளர்த்து வந்தது.

பாரம்பரிய ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் கணிசமான விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததால், பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் தெளிவாகத் தெரிந்தது. மேலும், ஒப்பீட்டளவில் மூலதனம் பெருகிய முறையில் பற்றாக்குறையாகி வருவதால், மூலதனத்தின் விளிம்பு அலகு அதிகபட்ச வருமானத்தை அளிக்கும் இடத்தில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமும் தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் அது எங்கே? பொருளாதாரத்தை மறுசீரமைத்தல், தேசிய உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் விரிவடையும் தொழிலாளர் படைக்கு வேலைவாய்ப்பை வழங்குதல், அதே நேரத்தில், மொத்த வெளிப்புற ஏற்றத்தாழ்வைத் தவிர்க்க நிர்வகித்தல் போன்ற தனித்தனி ஆனால் ஒன்றோடொன்று தொடர்புடைய இலக்குகளை எந்த முதலீட்டு ஒதுக்கீடு சமரசம் செய்திருக்க முடியும்?

ஐம்பதுகளின் தசாப்தம் பெருகிய முறையில் திறமையான விவசாயத் துறைக்கான அடிப்படையை உருவாக்கியது. இருப்பினும், இன்னும் பலவற்றைச் செய்திருக்க முடியும். ஒரு உதாரணத்தை மட்டும் குறிப்பிட வேண்டுமென்றால், 1950களில் ஒப்பீட்டளவில் வெற்றிகரமான ஒரு பகுதியாக இருந்தபோதிலும், இலங்கையின் விவசாயத்தின் நீண்டகால செயல்திறனை மேம்படுத்துவது மிகப் பெரிய நன்மைகளைத் தந்திருக்கும். ஆனால், அதில் அரசு முதலிடவில்லை

இலங்கையின் ஒப்பீட்டளவில் சிறிய மக்கள் தொகை மற்றும் மிதமான தனிநபர் வருமான அளவைக் கருத்தில் கொண்டு, செயல்திறன் அளவுகோல் முதன்மையாக நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் முதல் கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஐம்பதுகளின் முற்பகுதியில் தொழில்துறை முதலீட்டிற்கான தெளிவான, நிலையான கொள்கை அறிவிக்கப்பட்டு, பின்னர் தசாப்தம் முழுவதும் கணிசமாக அப்படியே பராமரிக்கப்பட்டு, பகுத்தறிவு செய்யப்பட்ட கட்டணக் கட்டமைப்பின் மூலம் வெளிப்புற போட்டியிலிருந்து நியாயமான அளவிலான பாதுகாப்போடு இணைக்கப்பட்டிருந்தால், 1960 அளவில் இலங்கை தொழில் மயமாக்கலுக்கான பாதையில் நன்றாக இருந்திருக்கும்.

தசாப்தத்தின் பெரும்பகுதி முழுவதும் இலங்கை நுகர்வோர் அனுபவித்த இறக்குமதிகளுக்கான மலிவான மற்றும் எளிதான அணுகல் மிகவும் கூர்மையாகக் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். இது நடைபெறவில்லை. மாறாக அரச வளங்கள் ஆடம்பர மற்றும் அரை ஆடம்பர நுகர்வுப் பொருட்களை இறக்குமதி 
செய்வதற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டது. பொருளாதாரம் செல்வந்தர்களது உயர்குடிகளதும் நலனை கவனத்தில் கொண்டதேயன்றி நாட்டின் எதிர்காலத்தை அல்ல.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X