Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 நவம்பர் 01 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
ஜனாதிபதியாக இருப்பவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்து 1978 ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் நிலவி வந்தது. அக்கருத்து பிழையானது என்பது அண்மைக் காலத்தில் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சில தீர்ப்புக்கள் மூலம் தெரிய வருகிறது.
சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் செய்த சில நடவடிக்கைகளுக்கு அவர் குற்றவாளி என உயர் நீதிமன்றம் அவரது பதவிக் காலத்துக்குப் பின்னர் வோடர்ஸ் எஜ் வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியில் அமர்த்தியமை சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலைத் தடுக்க தவறிவிட்டார் என்ற அடிப்படையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்காக அவர் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டது.
இப்போது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதியும் பொறுப்பாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கடந்த 14ஆம் திகதி வழங்கப்பட்ட அத்தீர்ப்பின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய மட்டுமன்றி நிதி அமைச்சர்களாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பசில், ஜனாதிபதியின் செயலாளராக இருந்த
பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கி ஆளுநர்களாக இருந்த அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ டி. லக்ஷ்மன, திறைசேரி செயலாளராக இருந்த எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் நிதிச்சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பல்கலைகழக கல்விமான்களான கலாநிதி அத்துலசிறி சமரகோன், கலாநிதி மஹிம் மெண்டிஸ் மற்றும் சூசையப்பு நேவிஸ் மொராயஸ், நீச்சல் வீரர் மற்றும் நீச்சல் பயிற்றுவிப்பாளர் ஜூலியன் போலிங் இலங்கை வர்த்தக சங்கத்தின் முன்னாள் தவிசாளர் சந்திரா ஜயரத்ன, டினான்பெரன்ஸி இண்டர்நஷ்னல் அமைப்பு மற்றும் ஜெஹான் கணகரத்ன ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனெக்க அலுவிஹாரே, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோரே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை வழங்கியுள்ளனர். மேற்படி நபர்களின் நடவடிக்கைகளால் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் இவ்விடயத்தில் அடிப்படை உரிமை மீறல் எதுவும் இடம்பெறவில்லை என நீதியரசர் குழாமில் இருந்த நீதியரசர் பிரியந்த ஜயவர்தன மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பெரும்பான்மை தீர்ப்பு என்ற வகையில் மேற்படி பிரதிவாதிகள் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆயினும் மனுதாரர்கள் நட்டஈடு எதுவும் கோராததால் தாம் பிரதிவாதிகளுக்கு நட்டஈடு எதுவும் விதிப்பதில்லை என்று பிரதம நீதியரசர் கூறியிருந்தார். ஆனால், அவர்கள் மனுதாரர்களுக்கு சட்டச் செலவாக 150,000 ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
பிரதிவாதிகளின் தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தாம் தமக்கு மட்டும் நட்டஈடு கோருவது நாகரிகமான செயலாகாது என்று நினைத்து மனுதாரர்கள் நட்டஈடு கோராமல் விட்டுவிட்டார்களோ அல்லது அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லையோ தெரியாது.
என்ன காரணத்துக்காக அவர்கள் பிரதிவாதிகளுக்காக குறிப்பிட்டோர் தண்டனையைக் கோராமல் இருந்தாலும் தண்டனை எதுவும் விதிக்கப்படாததால் தீர்ப்பின் பாரதூரதன்மை நாடு புரிந்து கொள்ளவில்லைப் போல் தான் தெரிகிறது. முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டோ அல்லது அவர்களது குடியியல் உரிமை இரத்துச் செய்யப்பட்டோ இருந்தால் அது சர்வதேச ரீதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்.
இது ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்காகும். அடிப்படை உரிமை மீறல் வழக்குகளில் குற்றவாளிகளாகக் காணப்படுவோருக்குச் சிறை தண்டனையோ குடியியல் உரிமை இரத்துச் செய்தலோ விதிப்பதை நாம் ஒருபோதும் கேட்டதில்லை. அநேகமாக நட்டஈடே தண்டனையாக விதிக்கப்படுகிறது.
ஆனால், இது சிறை தண்டனையை விட குற்றவாளிகளின் குடியியல் உரிமையை இரத்துச் செய்யவேண்டிய விடயமாகும். பிரதிவாதிகளின் நடவடிக்கைகளால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்பதே மனுதாரர்களின் வாதமாகியது. அது உண்மையாகும். வழக்கின் தீர்ப்பில் பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் எவ்வாறு பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்தது என்பது விளக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய, 2019இல் பதவிக்கு வந்த உடன் பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்தார். அச்சலுகைகளைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளவில்லை. பெரும் வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோருக்கே அச்சலுகைகளை வழங்கப்பட்டன. அவற்றின் மூலம் நாடு முன்னேறும், பொதுமக்கள் நன்மையடைவர் என்றே கூறப்பட்டது. ஆனால், மக்கள் அவ்வாறு நன்மையடையவில்லை. மாறாக திறைசேரி வருடத்துக்கு 68,000 கோடி ரூபாவை இழந்தது. இது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அதேவேளை, 2021இல் அமெரிக்க டொலரின் பெறுமதியை 203 ரூபாவாக செயற்கையாக வைத்துக் கொள்ள மத்திய வங்கி நடவடிக்கை எடுத்தமை பொருளாதார நெருக்கடிக்கு மற்றொரு காரணம் என்ற மனுதாரர்களின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
நாம் அதனை எவ்வாறு விளங்கிக் கொள்வதென்றால் 2021இல் ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியுறும் நிலை ஏற்பட்டது. சந்தையில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டமையே அதற்குக் காரணமாகும். எனவே, மத்திய வங்கி இலங்கை நாணயத்தின் பெறுமதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தம்மிடமிருந்த டொலரில் பெரும் பகுதியைச் சந்தையில் அள்ளிக் கொட்டியது. அதன் மூலம் சில மாதங்களாக டொலரின் பெறுமதியை 203 ரூபாவாக தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், தொடர்ந்து அதனை செய்ய மத்திய வங்கியில் டொலர் இருக்கவில்லை. இறுதியில் மத்திய வங்கியின் டொலரும் முடிவடைந்து ரூபாவின் பெறுமதியும் மீண்டும் சரிய ஆரம்பித்ததது.
நாட்டில் வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடி ஏற்படும் அபாயம் இருந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவதே அதனை சமாளிக்க இருக்கும் ஒரு வழியாகும். ஆனால், பல நிபுணர்கள் இதனை சுட்டிக் காட்டியும் கோட்டாவின் அரசாங்கம் உரிய நேரத்தில் நாணய நிதியத்திடம் செல்லவில்லை என்பதே மனுதாரர்களின் மற்றொரு குற்றச்சாட்டாகும். அரசாங்கம் கடந்த வருடமே நாணய நிதியத்திடம் உதவி கோரியது. அதனையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இவ்வாறு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்களின் அடிப்படை உரிமைகளை இழந்தனர். உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எரிபொருள், எரிவாயுவுக்காக நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருந்தனர். எரிபொருள் தட்டுப்பாட்டால் போக்குவரத்து வசதியில்லாமல் பல நோயாளர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாமல் வீடுகளிலேயே உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தொழில்களை இழந்தனர். மேலும், பலரது சம்பளம் குறைக்கப்பட்டது. விலைவாசி மும்மடங்காக உயர்ந்தது. எனவே, கிடைத்த வருமானத்தின் உண்மையான பெறுமதியும் வெகுவாக குறைந்தது. வீடு கட்டவும் வாகனம் விலைக்கு வாங்கவும் கல்விக்காக வெளிநாடு செல்லவும் உள்நாட்டிலேயே உயர் கல்வியைப் பெறவும் கனவு கண்டோரின் கனவுகள் சிதறடிக்கப்பட்டன. மூன்று நேரம் சாப்பிட்டவர்கள் இரண்டு நேரம் சாப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால் நாட்டில் முன்னொரு போதும் இல்லாதவாறு போஷாக்கின்மை பரவியது. கியூ வரிசைகளை ஒழித்தோம் என்று அரசாங்கம் மார்த்தட்டிக் கொண்டாலும் இந்த நிலைமைகள் இன்னமும் மாறவில்லை.
இந்த நிலைமையை உருவாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களுக்குச் சலுகைகளை வழங்க அரசாங்கம் இன்னமும் கோடிக்கணக்கில் பொதுப் பணத்தைச் செலவிடுகிறது. இந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டாலும் தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை.
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார் என்றும் ஊழலில் ஈடுபட்டார் என்றும் 1980ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமை இருத்துச் செய்யப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபாலவுக்கு பத்து கோடி ரூபாய் நட்டஈடு விதிக்கப்பட்டது. முறைகேடாகக் காப்புறுதி கூட்டுத்தாபனத்தைத் தனியாருக்கு விற்றமைக்காக நிதி அமைச்சின் செயலாளராக இருந்த பி.பி.ஜயசுந்தரவுக்கு அரசதுறை தொழில்கள் தடைசெய்யப்பட்டன. இலஞ்சம் வழங்க முற்பட்டார் என்று முன்னாள்
எம்.பி மயோன் முஸ்தபாவின் குடியியல் உரிமை இரத்துச் செய்யப்பட்டது.
எனினும் நாட்டில் இலட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையையே அதள பாதாளத்தில் இழுத்துத் தள்ளியவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டாலும் தண்டிக்கப்படவில்லை. கள் மீண்டும் அரசியலிலும் அரச சேவையிலும் சேராத வகையில் தண்டிக்கப்பட் வேண்டியவர்களாவர். குடியியல் உரிமையை இரத்துச் செய்வதே அதற்கு சிறந்த வழியாகும்.
2023.11.22
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago