Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 09 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை
சுதந்திரத்துக்கு முந்தைய பொருளாதாரப் போக்குகள்
இலங்கையின் கொலனித்துவ பொருளாதாரத்தின் பலம் மற்றும் பலவீனங்கள் ஆகிய இரண்டும் அதன் அடிப்படை கட்டமைப்பு மற்றும் இயக்கவியலில் இருந்து வளர்ந்தன. கட்டமைப்பில், பொருளாதாரம் இரட்டை ஏற்றுமதி பொருளாதாரம் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு மாதிரியைக் கொண்டிருந்தது. இந்த வகையான பொருளாதாரத்தில் இரண்டு அடையாளம் காணும் அம்சங்கள் உள்ளன. முதலாவது, வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதான தேசிய வருமானத்தை நெருக்கமாகச் சார்ந்திருத்தல். இரண்டாவது,பொருளாதாரத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தமை, ஒன்று நிறுவன அமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் நவீனமானது. இது உலகச் சந்தைக்கு
உற்பத்தி செய்கிறது, மற்றொன்று இந்த இரண்டு விஷயங்களிலும் பாரம்பரியமானது, உடனடி கிராம சந்தைக்கு உற்பத்தி செய்கிறது. இலங்கையின் இந்த இருமைவாதமானது பல வேறுபட்ட சொற்களில் வரையறுக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவம் மற்றும் வாழ்வாதாரம், பணமாக்கப்பட்டது மற்றும் பணமாக்கப்படாதது, ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுத் தேவைக்கானது. இவ்வாறு இரண்டு வேறுபட்ட தன்மைகளை உடையதாகப் பொருளாதாரம் அமைக்கப்பட்டிருந்தது. இதை ஆழமாக நோக்கின், இவ்விரண்டு துறைகளை அடையாளம் காண, ‘நவீன மற்றும் பாரம்பரியம்’ என்ற பொதுவான சொற்கள் மூலம் இதை அடையாளப்படுத்தவியலும். ‘நவீன முறைகள்’ என்பவை தோட்டங்கள், கொழும்பு மற்றும் சில சிறிய நகரங்களின் நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தை உள்ளடக்கியதாக இருந்தன. ‘பாரம்பரியத் துறையானது’ கிராமங்களால் ஆனது மற்றும் பூர்வீக கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய சேவைத் தொழில்கள் ஆகியவற்றுடன் விவசாயத்தை முதன்மையாகச் சார்ந்திருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே, பெருந்தோட்ட விவசாயத்துடன் நேரடியாகத் தொடர்பில்லாத தொழில்துறை மற்றும் நகர்ப்புற நடவடிக்கைகளை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க ‘மூன்றாம் துறை’ வளர்ச்சியடையத் தொடங்கியது.
பொருளாதாரத்தின் இருமைத்துவம் சுதந்திரம் வரைச் செல்வாக்குச் செலுத்தியது. தோட்ட மற்றும் விவசாயப் பொருளாதாரங்கள் ஒப்பீட்டளவில் சில புள்ளிகளில் சந்தித்தன. சிறிய வாழ்வாதார தோட்டங்கள் மற்றும் பெரிய முதலாளித்துவ தோட்டங்கள் இரண்டையும் கொண்ட தேங்காய் தொழில் ஒரு கலவையான வடிவமாக இருந்தது. ஆனால், மற்ற ஏற்றுமதி தொழில்களான தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றில், சிறிய உரிமையாளர்கள் ஒப்பீட்டளவில் முக்கியத்துவமற்றவர்களாக இருந்தனர். அவர்கள் 15 சதவீதத்திற்கும் குறைவான பயிரையே உற்பத்தி செய்தனர். மீதமுள்ள பொருளாதாரம் அதிகம் கணக்கிடப்படவில்லை. ஒரு சிறிய கிராஃபைட் சுரங்கத் தொழிலிருந்தது. பழைய வாசனைத்திரவிய வர்த்தகம் முக்கியமற்றதாக இருந்தது. போர்த்துகீச மற்றும் டச்சுக் கொலனித்துவ காலங்களின் முக்கிய வணிக நடவடிக்கையாக இருந்த வாசனைத் திரவியங்கள் மீது அக்கறை காட்டப்படவில்லை. இவை குடிசைத் தொழில்களாக மாபெரும் ஏற்றுமதிப் பெறுமதியைக் கொண்டிருந்தன. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதனையும் அரசு மேற்கொள்ளவில்லை. தேயிலை, இறப்பர் ஆகியவற்றின் ஏற்றுமதி தந்த இலாபம், பிற வாய்ப்பான துறைகள் மீதான அக்கறைக்கு அனுமதிக்கவில்லை. உள்நாட்டு அதிகார வர்க்கத்திற்கும் பெருந்தோட்டத் தொழிற்றுறையில் பங்கிருந்தததால் பிற துறைகள் புறக்கணிக்கப்பட்டன. இதனால் எளிமையான உற்பத்திப் பொருட்களுக்குக் கூட, இறக்குமதியை நம்பியிருப்பது ஏறக்குறைய முழுமையாக இருந்தது.
1920கள் மற்றும் 1930களில் சிங்கள தொழில்முனைவோரால் முன்னெடுக்கப்பட்ட தென்னைத் தொழில்துறையின் வளர்ச்சி முக்கியமாக இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வாகும். தோட்டங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளைப் பெரிய நகரங்களுக்கு நவீன போக்குவரத்துக்குத் திறந்து விடுவதும் ஒருங்கிணைக்கும் விளைவை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போரின் போது கொழும்பைச் சூழவுள்ள முழு ஈர வலய தாழ் நிலப் பகுதியும் முற்றிலும் வணிகமயமாகி விட்டது. வாழ்வாதார உற்பத்தி அனைத்தும் மறைந்துவிட்டன, மேலும் அப்பகுதியில் வசிப்பவர்களில் பலர் பாரம்பரிய, தோட்ட மற்றும் நகர்ப்புற நடவடிக்கைகளுக்கு இடையே சுதந்திரமாக இடம்பெயர்ந்தனர். இதற்கு நேர்மாறாக, தீவின் பல பகுதிகள் 1939இல் முடிவடைந்த பொருளாதார வளர்ச்சியின் நூற்றாண்டில் கிட்டத்தட்டத் தீண்டப்படாமல் விடப்பட்டன.
இலங்கையின் தொழிலாளர் படை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோட்ட அமைப்பு உறுதியாக நிறுவப்பட்டவுடன்,நவீன மற்றும் பாரம்பரிய துறைகளுக்கு இடையே
சுமார் 40-60 என்ற அடிப்படையில் பிரிந்தது. இந்த விகிதம் இரண்டாம் உலகப் போர் வரை குறிப்பிடத்தக்க வகையில் நிலையானதாக இருந்தது. கிடைக்கும் தொழிலாளர் சக்தியில் 30 சதவீதம் தோட்டங்களிலும், மற்றொரு 30 முதல் 35 சதவீதம் பாரம்பரிய விவசாயத்திலும், மீதமுள்ள 35 முதல் 40 சதவீதம் விவசாயம் அல்லாத பணிகளிலும் பயன்படுத்தப்பட்டது. விவசாயத்திற்கு வெளியே பணிபுரியும் 40 சதவீதத்தினரில் சிலர் நவீன துறையிலும் சிலர் பாரம்பரிய துறையிலும் பணியாற்றினர். இக்காலத்துத் தகவல்களின் அடிப்படையில் தெளிவான துல்லியமான பிரிவியைச் செய்ய முடியாது போனாலும்,நான்கில் மூன்று பங்கினர் பாரம்பரியத் துறையுடன் இணைக்கப்பட்டதாகவே இருந்தனர் என்று கருதப்பட வேண்டும். இதில் பெரும்பான்மையானோர், பெரும்பாலும் சேவைத் தொழில்களிலேயே பங்களித்தனர்.
1920களின் பிற்பகுதி வரை நவீன துறையின் பங்களிப்பு கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை. தேசிய வருமானம் மற்றும் வெளிநாட்டு வர்த்தக புள்ளிவிவரங்களின் அண்ணளவான மதிப்பீடுகளைப் பார்க்கும்போது,பெரும்பாலும் நவீன துறையின் உற்பத்தியாக இருந்த ஏற்றுமதிகள் தேசிய வருமானத்தில் 35 முதல் 40 சதவீதம் வரை இருப்பதைக் காணலாம். அரசாங்கத்தின் பங்களிப்பையும், உளர் பயன்பாட்டிற்காக நவீன துறையால்
உற்பத்தி செய்யப்படும் சில பொருட்கள் மற்றும் சேவைகளையும் சேர்த்தால், மொத்த
தேசிய வருமானத்தில் பாதியளவு நவீன துறையில் வேலை செய்யும்
40 சதவீத தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
இரண்டாம் உலகப் போர் வரையிலான இலங்கையின் பொருளாதாரம், ஒரு நவீன மற்றும் பாரம்பரிய துறையை உள்ளடக்கியதாக இருந்தது. இவை இரண்டும் ஒருவருக்கொருவர் மற்றும் வெளி உலகத்துடன் வர்த்தகம் செய்யத் திறந்திருந்தது. இருப்பினும், பெருமளவிலான வர்த்தக ஓட்டங்கள் நவீன துறையிலிருந்து வெளியிலும் மீண்டும் மீண்டும் இயங்கின. சில பொருட்கள் மற்றும் சேவைகள் பாரம்பரிய துறைக்கும் நவீன துறைக்கும் இடையில் அல்லது பாரம்பரிய துறைக்கும் வெளிக்கும் இடையே பாய்ந்தன. அரசு, துறைகளுக்கிடையேயான இந்த ஓட்டங்களின் வடிவத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு நிறுவனமானது, அந்த நேரத்தில்
சிறியதாக இருந்தது மற்றும் இந்த அடிப்படை முறையை மாற்றுவதற்கு
அது எதனையும் செய்யவில்லை.
1929 இல் இலங்கையின் சனத்தொகையில் சுமார் 60 வீதம் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பாரம்பரியத் துறையை வாழ்வாதாரத்திற்காக நம்பியிருந்த போதிலும், நாட்டின் அனைத்து வெளிநாட்டு வர்த்தகமும் நவீன துறையினாலேயே நடத்தப்பட்டது. 1929 இல் நாட்டின் நான்கில் மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதிகள் நவீனத் துறையில் அவற்றின் தோற்றத்தைக் கொண்டிருந்தன. மேலும்,ஏறக்குறைய அனைத்து ஏற்றுமதிகளும் குறைந்த பட்சம் நவீனத் துறை ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றன.
1929இல் மேற்கத்தியப் பாணி நுகர்வு பொருட்கள் இந்த நேரத்தில் மொத்த இறக்குமதியில் 16.8 சதவீதமாக இருந்தது.அக்காலப்பகுதியில் இலங்கையிலிருந்த ஐரோப்பிய சனத்தொகை 7,000 தொடக்கம் 8,000க்கு இடைப்பட்டதாக இருந்தது. அவர்கள் மொத்த சனத்தொகையில்
ஒரு சதவீதத்திற்கும் குறைவாகப் பகுதியினரே. இந்த எண்ணிக்கை இலங்கையில் உள்ள சில ஐரோப்பியர்கள் அனுபவித்த மிக உயர்ந்த வருமான நிலைகள் மற்றும் பரவல் (பின்னர் இது மிகவும் பரந்ததாக மாறியது) இலங்கை மக்களின் மேற்கத்திய வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டுகின்றன. மேற்கத்திய வகைப் பொருட்களின் இலங்கை நுகர்வோர்கள் கிட்டத்தட்ட 10,000 அல்லது 20,000 பேர் ஆக இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தோட்டங்கள், வர்த்தகம் மற்றும் அரசாங்கத்தில் உயர்மட்ட பதவிகளைக் கொண்டவர்கள், அத்துடன் சிறிய ஆனால் வளர்ந்து வரும் சுதந்திரமான இலங்கை நடுத்தர மற்றும் உயர் வர்க்கம், நில உரிமையாளர்கள் மற்றும் சட்டம், மருத்துவம், தொழில் வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்டிருந்தது.
1929இல் இறக்குமதி
செய்யப்பட்டவற்றில் பாதிக்கு மேல் பாரம்பரிய நுகர்வுப் பொருள்களாக இருந்தது. பெரும்பாலும் பிரதான உணவுகள் (குறிப்பாக அரிசி), பருத்தி ஜவுளிகள், மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டிகள் போன்ற அடிப்படை உற்பத்திப் பொருட்களைக் கொண்டிருந்தது. இங்கு இரண்டு முக்கிய போக்குகள் தோற்றம் பெறுவதை அவதானிக்கலாம். முதலாவது, ஒரு குறிப்பிட்ட உள்நாட்டு வர்க்கத்தின் தேவைகளுக்காக அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றமை. அதன் மூலம்
நாட்டின் அந்நியச் செலாவணி பயனற்ற முறையில் செலவானது. இரண்டாவது, நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய நுகர்வுப் பொருட்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டன.
தெ. ஞாலசீர்த்தி மீநிகோலங்கோ
07.02.2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .