2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

பெறுவதைக் காட்டிலும் கொடுப்பது மேலானது

Janu   / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெரியசாமிப்பிள்ளை  செல்வராஜ்

முன்னாள் ராஜதந்திரி 

" பெறுவதைக் காட்டிலும், கொடுப்பது மேலானது" என்பது ஒரு முதுமொழி. அன்னை தெரேசாவின் தியாகச் சிந்தனையைக் கருத்திற் கொண்டு , அவர் அமரத்துவம் அடைந்த செப்டம்பர் 5 ஆம் திகதியினை ஞாபகார்த்த நாளாகக் கருதி,  2012 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகளின்  பொதுச் சபையால் எடுக்கப்பட்ட   A/RES/67/105  தீர்மானப்படி, சர்வதேச தொண்டு தினம்  2013 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.

ஐ.நா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகளும் , இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டன.  26 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1910-ஆம் ஆண்டு அல்பேனியாவின் ஸ்கோப்ஜே கிராமத்தில் ( தற்போதுள்ள வட மெசிடோனியக் குடியரசு)  பிறந்த அன்னை தெரெசாவின் இயற் பெயர் "எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ".

இந்தியாவில் உள்ள கல்கத்தா நகரில் காணப்பட்ட குழந்தைகள், கைவிடப்பட்டோர் மற்றும் தொழுநோயாளிகள் மீது அன்பு காட்டி, அவர்களுக்கு மருத்துவ சேவையாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.

உலகம் முழுவதும் வாழ்ந்த  நலிவுற்றவர்களுக்கான உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்க பல நாடுகளில் தனது அமைப்பின் கிளைகளை நிறுவியவர்.1979 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை அன்னை தெரேசா பெற்றார்.1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.

அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது, காப்ரியேல் விருது, அமெரிக்காவின் மிக உயரிய விருதான சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றார். இவர் அன்னை தெரேசா அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். வாழ்ந்த போதே ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட முதல் பெருமை "அன்னை தெரேசா"வுக்கு மட்டுமே உரியது.

தனது 18 ஆவது வயதில் தொண்டுப் பணியை கல்கத்தாவில் ஆரம்பித்து,  சுமார் 45  வருடங்களுக்கு மேலான தன்னலமற்ற தியாகத்துடன் கூடிய சேவையை மக்களுக்கு ஆற்றிய அன்னை தெரேசா,  தனது 87 ஆவது வயதினில், செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி 1997 ஆம் ஆண்டு மண்ணுலகை விட்டு விண்ணுலகம் நோக்கி சென்றார்.

2011 ஆம் ஆண்டு ஹங்கேரி பாராளுமன்றம் அன்னை தெரெசாவின் இறப்பு தினத்தை தேசிய விடுமுறையாக அறிவித்தது.

இவரின் இறப்புக்குப் பின், 2016 ஆம் ஆண்டு ,   திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால், அன்னை தெரேசா அவர்கள்  முக்திபேறு அடைந்தவராக அறிவித்து,  கொல்கத்தாவின் 'அருளாளர் தெரேசா' என்ற பட்டமும் சூட்டப்பட்டது.

இவ்வாறு பட்டம் சூட்டப்பட்ட இத்தினத்தினை,  அல்பேனியா தேசமானது பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியது.

வெள்ளம், போர், நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா அமைப்பின் மூலம் பேருதவி செய்வதே  இந்த தினத்தின் நோக்கமாகும்.

ஐ. நாவின் 2030 ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி நிரலின்படி உலகில் வறுமையினை அழித்தல் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

உலகிலுள்ள வறுமையான மக்களின் பிரச்சினைகளை இனங் கண்டு, அவற்றை பரோபகார மக்களுடன் இணைந்து , தீர்க்கக் கூடிய வழிவகைகளையும் மேற்கொள்ள ஐ.நா முயற்சிக்கின்றது.

இன்று உலக சனத்தொகையில் சுமார் அரை வாசி மக்கள் வறுமையால் வாடுகின்றனர். கிட்டத்தட்ட 2.50 அமெரிக்க டொலருக்குக் குறைவான வருமானத்தில் சுமார் மூன்று பில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.  ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வறுமை நிலையில் உள்ளனர்.  ஒவ்வொரு நாளும் சுமார் 2 20000  சிறார்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். வறிய மக்களின் இறப்புக்கு வறுமை மிக முக்கிய காரணியாக உள்ளது.  குடிக்கின்ற நீர் இல்லாமல் மில்லியன் கணக்கான மக்கள் உலகில் கஷ்டப்படுகின்றனர்.

தவிர்க்கக்கூடிய நோய்களினால் பீடிக்கப்பட்டு அண்ணளவாக இரண்டு மில்லியன் சிறார்கள் இருக்கின்றார்கள்.  25% மான மக்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்கின்றனர். இவற்றைத் தவிர இயற்கை அனர்த்தங்களான வெள்ளம் , பூகம்பம்.  எரிமலை வெடிப்பு , பனி, காலநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளாலும் , மனிதனால் உருவாக்கப்பட்ட அனர்த்தங்களான போர் , திட்டமிடப்பட்ட அழிவுகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றாலும், பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

உலக உணவுத் திட்டத்தின் படி , உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து உணவு பொருட்களும் நுகரப்படுவதில்லை.  அவ்வாறு நுகரப்படும் பட்சத்தில் ,  அவை உலகிலுள்ள இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் நுகர்ச்சி செய்ய முடியும். உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களில் 1/3 பங்கு வீணடிக்கப்படுகின்றன. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 40 % மான உற்பத்தி பொருட்கள் உற்பத்தியின் பொழுதும்,  உற்பத்திக்கு பிறகு மேற் கொள்ளப்படுகின்ற செய்முறைகளின் பொழுதும் வீணடிக்கப்படுகின்றன.

இந்த புள்ளி விபரங்களை நோக்குகின்ற பொழுது , உலகில் பெரும்பாலான மக்கள் இன்றும் வறுமையில் வாடிக் கொண்டிருப்பதுவும்,  அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்குவதுவும் அவசியம் என்ற நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுகின்ற பொழுது மனித அவலத்தை குறைப்பதற்காகவும், மக்கள் படுகின்ற வேதனைகள் , கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் முகமாகவும், அன்னை தெரேசாவின் மக்கள் நலன் நோக்கிய பங்களிப்பினை அங்கீகரிக்கும் முகமாகவும், இது போல,  தனிப்பட்ட நபர்களாலும், தொண்டு செய்யும் நிறுவனங்களாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படும் உதவிகளை அங்கீகரிக்கும் முகமாகவும்,  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது  ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் திகதியன்று சர்வதேச தொண்டு தினத்தை கொண்டாடுகின்றது.

சமூக உறவினையும்,  சமுதாயத்தின் பலத்தையும், அதனது ஒற்றுமையையும் கொண்டு செல்வதில் மனிதர்களால் செய்யப்படுகின்ற தொண்டுகள் , சேவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சுகாதாரம் , கல்வி , வீட்டு வசதி,  குழந்தை பாதுகாப்பு போன்ற இன்னொரன்ன தொண்டுகள் , சேவைகள் மூலமாக மனித அவலங்களை, துயரங்களை இந்த உலகில் இருந்து களைய முடியும் என்பது நம்பிக்கை.

ஒரு சமுதாயத்தின் கலாசாரம், விஞ்ஞானம், விளையாட்டு போன்ற பல அம்சங்களையும் பேணிப் பாதுகாக்க உதவுகின்றது. நன்கொடைகள் வழங்கப்படுவது என்பது தொன்று தொட்டு எமது கலாசாரத்தில் காணப்படுகின்ற ஒரு  எழுதப்படாத மரபாகக் காணப்படுகின்றது.

மனிதர்களால் பண ரீதியான, பொருள் ரீதியான உதவிகளை வழங்க முடியாவிட்டாலும் கூட,  சரீர ரீதியான உதவிகளையாவது வழங்குகின்ற பொழுது அது ஏனையவர்களின் துயரங்களை களைய வழிவகுக்கும் .

மிகப் பெரிய உதவிகளை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை அவசியம் இல்லை. கர்ணனைப் போல கொடை செய்ய வேண்டும் என்ற நியதியும் இல்லை. சாதாரணமாக , மேலதிகமாக வீடுகளில் தயாரிக்கப்படுகின்ற மீதமான உணவுகளை இல்லாத ஏழை மக்களுக்கு கொடுப்பதுவும், தனிமையில் வாழுகின்ற நபர்களுடன் மனம் விட்டு அளவளாவுவதுவும் கூட ஒரு விதமான கருணையாகவும், கொடையாகவும் கருதப்படும் .

எமது நாடான ஸ்ரீலங்காவில் மிகவும் பழமை வாய்ந்த தொண்டு நிறுவனமாக கருதப்படுவது "Colombo Friend-in-Need Society" (CFINS)  என்பதாகும்.   இலங்கை காலனித்துவ ஆட்சியினரின் காலத்தில் இருந்த பொழுது,  1831 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் சர் எட்வர்ட் பார்ன்ஸ் அவர்களின் அனுசரணையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்தச் சங்கம், தற்போது இலங்கை மக்களுக்கு 191 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை  செய்து வருகின்றது.

1840 ஆம் ஆண்டு தனது முதலாவது மருத்துவ வசதியினை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த இந்த நிறுவனம்,  அதனைத் தொடர்ந்து 1850 களின் மத்திய காலப்பகுதியில் இலங்கையின் அனேகமான பகுதிகளில் தனது சேவையினை விஸ்தரித்தது.

விபத்து , வெடிகுண்டு , கண்ணிவெடி, நீரிழிவு நோய்,  புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களினால் தமது கால்களை இழந்த மக்களுக்கு செயற்கை ரீதியிலான கால்களை வழங்குகின்ற ஒரு தொண்டு நிறுவனமாக இந்த நிறுவனம் தனது பணியை செவ்வனே நடாத்திச் செல்கின்றது.

செயற்கை ரீதியிலான கால்கள் , சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்றவற்றை  மாத்திரமல்லாது,  நாட்டின் மிகப் பின்தங்கிய கிராமங்களுக்கு நடமாடும் சேவையின் மூலமாக சிறந்த சுகாதாரப் பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருவதனைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

எம்மால் முடிந்த ஏதாவது ஒரு சிறிய  உதவியையாயினும்  மிகவும் வறிய,  எளிய மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற உன்னதமான உணர்வுடன் இன்றைய நாளை (செப்டெம்பர் 05) ஆரம்பிப்போம் .

04.09.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .