Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 09 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதான மாற்றம் ஏதுமில்லை
தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில், இலங்கையின் 77ஆவது சுதந்திரதின நிகழ்வு நாளைய தினம்
நடைபெறவிருக்கிறது. இதுவும் வழமைபோலவே பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் 80 மில்லியன் ரூபா செலவில் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் தமிழ் மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனே இந்த நாளைக் கடத்துவது வழமை. அந்தவகையில்தான், கடந்த பல வருடங்களாக இலங்கையின் சுதந்திர தினத்தினை கருப்பு தினமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இம்முறையும் அதுபோன்ற அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
இலங்கையில் ஆயுத யுத்தம் முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கச் செய்யப்பட்டு 15 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்படுவதோடு இருப்பும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் மாறுகின்றனரே தவிர, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றகரமான எந்தவொரு வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கான தீர்வு என பல்வேறு விடயங்களுக்குத் தீர்வில்லை என்ற வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் இலங்கையின் சுதந்திரதினக் கரிநாள் அறிவிப்பில் தெரிவித்திருக்கின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணி
(ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத, ஏற்கெனவே அரச சக்கரத்தில் இணைந்திருக்கின்றவற்றைக் கொண்டுநடத்துகின்ற, செயற்படுத்துகின்றதொன்றாகவே இருந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சுதந்திர தினத்துக்குப் பின்னர்தான் இந்த அரசாங்கத்தின் முதலாவது வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. இந்த வரவு-செலவுத் திட்டம் மக்களது மனதிலும் வயிற்றிலும் பாலை வார்க்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் எதிர்பார்க்கின்றனர். இந்தப் பால் வாற்றல் என்பது பல்வேறு விடயங்களை உள்ளடக்கியது. சாதாரண மக்கள் அன்றாடப் பொருட்களுக்கான விலைக் குறைப்பு, வாழ்வாதாரம் தொடர்பிலான நிவாரணங்களை தங்களுக்காக அரசாங்கம் அள்ளிக் கொடுக்கும் என்று நம்புகின்றனர். அரசாங்க மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள். ஊழியர்கள் சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்திருக்கின்றனர்.
இருந்தாலும், வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தாம் சுதந்திரம் பெற்றவர்களாக இலங்கை நாட்டுக்குள் இதுவரை தம்மை இணைத்துக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். அந்த இணைப்புக்கு அவர்கள் முழுமையான விருப்பமுடையவர்களாக இருக்கின்ற போதும் அது நடைபெறுவதற்கான ஏதுநிலைகளை 77 வருடங்களாக இலங்கையின் ஆளும் தரப்பினர் உருவாக்கிக் கொடுக்கவில்லை.
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறது. கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில், அரசியலமைப்பு
உருவாக்கம், திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் இருக்கின்ற போதும், இப்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பினையே உருவாக்குவோம் என்று அறிவித்திருக்கிறது. இதற்குள் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்ட விடயங்களின் முடிவுகளும், முயற்சிகளும் சேர்த்துக் கொள்ளப்படுமா என்பது குறித்தும் அரசாங்கம் எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை. இருந்தாலும், ஒவ்வொரு தடவைகளிலும் புதிய அரசியலமைப்புக்கான வேலைகளை ஆரம்பிப்பதும் இடை நடுவில் கைவிடப்படுவதும் நடைபெறுவது வழமையாக மாறிப்போன. நாட்டில் இம்முறை அது திருத்தமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.
அந்தவகையில்தான் தமிழர்களின் தீர்வு எட்டப்படும் வரை போராடியே ஆகவேண்டும் என்பதே வரலாற்று உண்மை என்ற அடிப்படையில் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. சர்வதேச நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புக்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குமாறு தொடர்ந்தும் கூறிக் கொண்டிருக்கையில், அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பொலிஸார் கைவிடாது மக்கள் மீது நெருக்கடிகளைக் கொடுத்த வண்ணமிருக்கின்றனர். அவ்வாறானால், அரசாங்கத்தினால் இன்னமும் எந்தவிதமான அறிவுறுத்தல்களும் கொடுக்கப்படவில்லை என்பதே பொருளாகும் என்று கொள்ளமுடியும்.
இதுவரையில் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் நீக்கம் பற்றி எந்தவிதமான கருத்துக்களையும் உறுதியாக வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள், கொடுமைகளை அனுபவித்த மக்கள் தங்களுக்காக நீதியைத் தொடர்ச்சியாகக் கோரி வருகின்ற நிலையே தொடர்கின்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எமது நாட்டு மக்களின் நீண்ட கால கனவாகக் காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகக் கூறிவருகிறார். அத்தோடு, அரசியல் ரீதியாக தமக்குப் பல நிலைப்பாடுகள் இருந்தாலும், நாட்டில் இனவாத அரசியலுக்கு இடம் கொடுக்கப்போவதில்லை. எந்த
விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள்
எழுச்சி பெறுவதற்கும் இடமளியோம்.
நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பைக் கண்டவர்கள். ஆறுகள் நிறையக் கண்ணீரைக் கண்டோம். ஒவ்வொருவர் இடையிலும் பொருளாதாரம், ஜனநாயகம் என்று பல வகைகளிலும் குரோதமும் சந்தேகமும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது. இனி எவரும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று அறிவித்திருந்தார். ஆனால், கடந்த காலங்களைப் போல, ஆட்சி வேறு அதிகாரம் வேறு, நிருவாகம் வேரென்ற நிலைமை உருவாகாதிருப்பதை அவர் உறுதிப்படுத்துவதே இதில் முக்கியமானது. இருந்தாலும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருப்பதாகத் தெரியவில்லை.
ஏனெனில், ஏற்கெனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் முடக்கி விடப்பட்டிருந்தவர்களுகு எதிரான விசாரணைகள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன. இந்தத் தொடர்ச்சி அதனையே காண்பித்து நிற்கின்றன.
வகுப்பறைக்குள் கற்பித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலய ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனை, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பரந்தன் பிரிவின் இரண்டு அதிகாரிகள் ஜனவரி 20ஆம் திகதி பாடசாலையின் அதிபருக்கு அறிவிக்காமல் வகுப்பறைக்குள் நுழைந்து விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போது, தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பல தடவைகள் அழைத்த பயங்கரவாத பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தியிருக்கின்றனர்.
2024ஆம் ஆண்டு ஒக்ரோபரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த ஆசிரியர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார். அவர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றீர்களா? என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அதில், சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோரின் பெயர் விபரங்கள் கோரப்பட்டபோது அவர் அவற்றினை வழங்க மறுத்திருக்கிறார். அதன் பின்னர்தான் ஜனவரி மாதத்தில் மீண்டும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பாடசாலைக்கு வருகை தந்திருக்கின்றனர். நீங்கள் எங்களுக்கு நாம் கோரும் தகவல்களைத் தர வேண்டும். ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையேல் கொழும்பிற்கு உங்களை மீண்டும் அழைக்க வேண்டியேற்படும். உங்களைக் கைது செய்ய வேண்டியேற்படும் என
எச்சரித்துச் சென்றிருக்கின்றனர்.
ஜனவரி 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அதேபோல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அது எங்கள் இலட்சியமோ கொள்கையோ அல்ல, ஆனால், புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை நாட்டின் சட்டங்களை நாங்கள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த
வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறானால், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்பதே அரசாங்கத்தின் முடிவு.
மொத்தத்தில் புதிதான மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடப் போவதில்லை. நடப்பதையே மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றே தீர்மானத்துக்கு வர முடிகிறது. இந்தத் தீர்மானம் கடந்த கால அரசாங்க காலங்களின் தீர்மானங்களிலிருந்து வித்தியாசம் எதனையும் காண்பிக்கப் போவதில்லை. தனி நபரோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ தாமே தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. நாட்டுக்கு உள்ளேயும் ஒன்றும் நடைபெறப்போவதில்லை. நாட்டுக்கு வெளியேயும் எதுவும் நடைபெறாது என்ற முடிவுக்கே வரலாம். எது நடைபெற்றாலும் நடைமுறைகள் ஒன்றுதான். அவ்வளவே.
லக்ஸ்மன்
03.02.2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .