Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 27 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
இந்தத் தேர்தல் காலங்களில், இன ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி, அரசியல் செய்கின்ற இனவாதத்துக்குத் துணை போகின்ற விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு,
கேள்வி - உங்களைப் பற்றிய அறிமுகம்?
கடந்த காலத்தில், கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்து, எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். என்னால் முடியுமானளவு, இன, மத பேதங்களுக்கப்பால், எனது சமூகப் பணியைச் செய்து வருகிறேன்.
அபிவிருத்திப் பணிகள், மக்களின் தேவைகளை, அவர்களின் காலடிக்குச் சென்று தீர்த்து வைக்கின்ற ஓர் அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக, “வீதிக்கு ஒரு நாள்” என்ற வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்து, அதனூடாக மக்களை வீடு வீடாகச் சென்று சந்திக்கின்ற வேலைத்திட்டத்தினூடாக, மக்களுக்கான சேவைகளை வழங்கியிருந்தேன்.
நல்லதோர் அரசியல் கலாசாரம் வரவேண்டும்; அதனூடாக மாற்றங்கள் வரவேண்டும்; நல்லவர்கள் அரசியலில் உள்வாங்கப்பட்டு, எதிர்கால சமுதாயத்துக்கு நல்ல வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
கேள்வி - கிழக்கில் உடனடியாகத் தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் என நீங்கள் எவற்றை இனங்கண்டுள்ளீர்கள்?
இனங்களுக்கிடையிலான நல்லுறவைப் பேணுகின்ற செயற்றிட்டம், உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
கேள்வி - வேலையில்லாப் பட்டதாரிகளின் தற்போதைய நிலைமை என்ன?
வேலையில்லாப் பட்டதாரிகள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்குரிய தகுதியான வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.
கேள்வி - தொழிற்சாலைகளில் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தத் திட்டங்கள் உள்ளனவா?
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, சுற்றுலாத்துறை போன்ற ஏனைய வளங்கள் நிறைந்த ஒரு தேசமாகும். அதிலும் குறிப்பாக, நீர் நிலைகள் நிறைந்த மீன்வளத்தை அதிகமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணம், விவசாயத்துறையில் பாரியளவு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை மேம்படுத்த, நீர்ப்பாசனத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். வருமானம் குறைந்தவர்களின் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிப்பதற்காக, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
கேள்வி - காணி அபகரிப்பு, சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய பிரச்சினைகளை, சட்டரீதியில் தடுத்து நிறுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் விகிதாசாரத்துக்கேற்ப, காணிகளை அரசாங்கம் பங்கிட்டு வளங்க வேண்டும். காணிகளில்லாத மக்களுக்கு காணிகளை வழங்கி, அவர்களைக் குடியமரச் செய்யவேண்டும்.
காணிகளின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த வேண்டும். காணி அபகரிப்பு விடயம், இனங்களுக்கிடையிலான பல முறுகல்களை ஏற்படுத்தக் கூடியதாக மாறிக் கொண்டிருக்கின்றது. காணி தொடர்பான சட்ட விடயங்களை இறுக்கமாக்கும் போது, காணி அபகரிப்பு விடயத்தை முற்றாக நிறுத்த முடியும். காணி விடயத்தில் சட்டரீதியான தேவைப்பாடு இருக்கின்றது.
வீடுகளில்லாத மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும்.
கேள்வி - சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான இனமுறுகல், பெரும்பான்மை இனத்தினருக்கு வாய்ப்பாக உள்ளது. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?
சிறுபான்மை இனங்களுக்கு இடையில் இன முறுகலை ஏற்படுத்துகின்ற விடயங்களை, பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, காணி விவகாரம் தீர்த்து வைக்கப்படல் வேண்டும்.
கேள்வி - நுண்கடன் பிரச்சினையால் கிழக்கில் பல குடும்பங்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளன. அவர்களை, அதிலிருந்து மீட்டெடுப்பதற்கும் நுண்கடன் திட்டத்தால் ஏமாற்றும் நபர்களைத் தடுத்து நிறுத்தவும், நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?
நுண்கடன் எனும் திட்டத்துக்குள் ஈர்க்கப்பட்டு, அதனை மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை நிலைக்குச் சென்று விடுகின்றனர். இவ்வாறு பலர் தற்கொலை செய்துள்ளனர். இது பெரும் கவலையான விடயமாகும்.
இதனால், பல பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்குகின்றனர். இதனைத் தடுக்க வேண்டும். இவர்களுக்குச் சுய தொழிலுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.
கேள்வி - பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேம்படுத்தத் திட்டங்கள் உள்ளனவா?
பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களைக் கவனத்திற்கொண்டு, அவர்களின் அன்றாட தேவைக்குரிய வருமானங்களை ஈட்டக்கூடிய வழிவகைகளைச் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறான குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி - சிறுபான்மையின வாக்குகளை உடைப்பதற்காக, போலி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அவர்களை இனங்கண்டு, மக்களுக்குத் தெளிவூட்டியுள்ளீர்களா?
சிறுபான்மை சமூகத்தினுடைய வாக்குகளைப் பிரிப்பதினூடாக அமையவுள்ள நாடாளுமன்றத்தில், சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கின்ற செயற்பாடுகள், போலித் தேர்தல் முகவர்களால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்கள் இதில் தெளிவாக இருக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில், ஒரே ஒரு முஸ்லிம் ஆசனம் கிடைக்க இருக்கின்றது. அதையும் இல்லாமல் செய்வதற்கு, அரசாங்கத்தின் சில முகவர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தங்களின் எஜமான்களுக்கு, தங்களது விசுவாசங்களை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தோற்கடிப்பதற்குமான வேலை செய்துவருகின்றனர். இதேபோன்று, ஏனைய இடங்களிலும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கும் அரசாங்கத் கட்சியின் முகவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
7 hours ago