2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’

Johnsan Bastiampillai   / 2023 ஏப்ரல் 06 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் ஐயூப்

 

 

 

 

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம்:

சர்வதேச ரீதியாக விமர்சிக்கப்பட்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக, ஏற்கெனவே தெற்கிலும் வடக்கிலும் சர்வதேச ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர், தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்கிலும், புதிய சட்டம் மோசமானது எனக் கூறுகின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் வற்புறுத்தலாலேயே, அரசாங்கம் தற்போது அமலில் உள்ள சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் ஒன்றை வரைந்துள்ளது. இலங்கைக்கு தொடர்ந்தும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை வழங்குவதற்கு, பயங்கரவாத தடைச் சட்டம் தடையாக அமையலாம் என, 2021ஆம் ஆண்டு ஐரோப்பிய பாராளுமன்றம் சூசகமாகக் குறிப்பிட்டு இருந்தது. 

தற்போது அமலில் உள்ள சட்டத்தின் கீழ், சந்தேக நபர்களை நீண்ட காலம் தடுத்து வைத்திருக்க முடியும். “சில தமிழ் கைதிகள், வழக்குகள் தாக்கல் செய்யப்படாமலேயே பல தசாப்தங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என நாமல் ராஜபக்‌ஷவே, 2021ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கூறினார். அதேவேளை, அந்தச் சட்டத்தின் கீழ், சந்தேக நபர் ஒருவர் சித்திரவதை போன்ற நிர்ப்பந்தங்கள் காரணமாக வழங்கப்படும் ஒரு வாக்குமூலத்தை, அவருக்கு எதிரான சாட்சியமாக பாவிக்க முடியும். 

இதுபோன்ற மிகவும் மோசமான மற்றும் அநீதியான வாசகங்கள், அந்தச் சட்டத்தில் அடங்கி இருந்தமையால், அதை இரத்துச் செய்து சர்வதேச தரத்துக்கு அமைவாக புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் அரசாங்கத்தை வற்புறுத்தின. 

இதன் பிரகாரம், ‘நல்லாட்சி’ அரசாங்கம் ஒரு புதிய சட்டமூலத்தை தயாரித்தது. ஆனால், வெளிநாட்டு சக்திகளின் நிர்ப்பந்தத்தால் உள்நாட்டில் சட்டம் அமைக்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையிலான அரசாங்கம், அதை 2020 ஆம் ஆண்டு இரத்துச் செய்தது. அதையடுத்து பயங்கரவாத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற சர்வதேச நெருக்குதல் மீண்டும் அதிகரித்தது. 

அரசாங்கத்துக்கு எதிராக, தமிழ் ஆயுதக் குழுக்கள் பல, வடக்கில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், 1978ஆம் ஆண்டு அப்போது பதவியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், ‘தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் அதுபோன்ற அமைப்புகளைத் தடை செய்யும் சட்டம்’ என்ற பெயரால் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. 

பின்னர் அதற்குப் பதிலாக, 1979ஆம் ஆண்டு தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நிறைவேற்றியது. 

இப்போது, வடக்கிலோ தெற்கிலோ ஆயுதக்குழுக்கள் இல்லை. ஆனால், வடக்கிலும் தெற்கிலும் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்கள், அரசாங்கத்துக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளன. எனவே, அவற்றைத் தடுப்பதற்காக புதிய சட்டத்தை, அரசாங்கம் பாவிக்கப் போவதாகத் தெரிகிறது. 

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் அரச படைகளால் கைப்பற்றப்பட்டு இருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறும் காணாமலாக்கப்பட்டோரை தேடித்தருமாறும் கோரி, வடக்கில் பல வருடங்களாக ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்ற போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதேபோல் தெற்கே பொருளாதார காரணங்களை முன்வைத்து போராட்டங்கள் இடம்பெறுகின்றன. 

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு உதவும் நோக்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் பல நிபந்தனைகளை அரசாங்கத்துக்கு விதித்துள்ளது. அவற்றின்படி, அரசாங்கம் அண்மையில் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் பெறுவோரிடம் இருந்து, வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. 

இலங்கை மின்சார சபை, ஸ்ரீ லங்கன் விமான சேவை போன்ற பல அரச நிறுவனங்களை, தனியாரிடம் கையளிக்க உள்ளது. மின் கட்டனம், மின்சார சபையின் செலவுக்கேற்ப அதிகரிக்கப்பட உள்ளது. இவற்றுக்கு எதிராக, தொழிற்சங்கங்கள் தற்போது போராட முன்வந்துள்ளன. இந்த நிலையில் தான், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. 

இச்சட்ட மூலம், மார்ச் 22ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அது, 97 பக்கங்களைக் கொண்ட மிக நீளமான சட்ட வரைவாகும். எனவே, பலர் அதை இன்னமும் வாசிக்காததாலோ என்னவோ, அது பெரிதாக ஊடகங்களில் அலசப்படவில்லை. இதுவரை, சர்வதேச நீதித்துறையினர் ஆணையகம் மட்டும், சற்று விளக்கமான விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. 

பழைய சட்டத்தோடு ஒப்பிடுகையில், புதிய சட்டத்தில் பல முன்னேற்றகரமான வாசகங்கள் இருந்த போதிலும், ஆர்ப்பாட்டங்கள், கருத்து வேறுபாடுகளை வௌிப்படுத்தல் (Dissents) போன்றவற்றை முறியடிப்பதற்கு, புதிய சட்டமூலம் வழிவகுத்து உள்ளதாக சர்வதேச நீதித்துறை ஆணையகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பயங்கரவாத செயல்களாக, இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை, மயக்கத்தை தருகின்றன. அவ்வாறான நடவடிக்கைகள் பட்டியலொன்றும் அதில் உள்ளது. அதேவேளை, பயங்கரவாத செயல்களாவதற்கு அவை, சில நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று, நோக்கங்கள் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. 

‘ஒரு செயலை செய்யுமாறோ அல்லது செய்யாது விடுமாறோ, இலங்கை அரசாங்கத்தையோ பிறிதோர் அரசாங்கத்தையோ சர்வதேச நிறுவனத்தையோ, தவறான முறையில் அல்லது சட்ட விரோதமாக நிர்ப்பந்திக்கும் நோக்கத்துடன்...’ என்று ஒரு வாசகம் அந்த நோக்கங்கள் பட்டியலில் உள்ளது. 

அத்தோடு, இந்த நோக்கத்துடன் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தல் அல்லது, போக்குவரத்துக்கு இடையுறு ஏற்படுத்தல் போன்றவை பயங்கரவாத செயலாக கருதப்படும். எனவே, இச்சட்டத்தில் பயங்கரவாத செயல்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு குறிப்பிடப்படவில்லை என சர்வதேச நீதித்துறை ஆணையகம் சுட்டிக் காட்டியுள்ளது.

அதாவது, வடக்கில் காணிகளை விடுவிக்குமாறோ, மின் கட்டனத்தை குறைக்குமாறோ ‘தவறான முறையில் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் நோக்கத்துடன்...’ மக்கள் வீதிகளில் இறங்கி, அது போக்குவரத்துக்கு இடையுறாக அமைந்தால் அல்லது வேலை நிறுத்தம் செய்தால், அது பயங்கரவாத செயலாக கருதப்படும். இங்கே, ‘தவறான முறையில் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் நோக்கத்துடன்...’ என்னும் போது, அது தவறான முறையிலானது என்பதை, யார் தீர்மானிப்பது என்பது தெளிவாகவில்லை. 

தொழிற்சங்கங்களோ, அரசியல் கட்சிகளோ, மற்றோர் அமைப்போ அரசாங்கத்திடம் ஏதாவது கோருவதாக இருந்தால், அதைத் தவறான முறையில் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் நோக்குடனான செயலாக, இதன்படி கருதலாம். 

இவ்வாறான நோக்கத்துடன் ஒரு கொலையை செய்தால், அதற்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கொலைக்கு மரண தண்டனை என்பது தண்டனைக் கோவையில் இருக்கிறது. மரண தண்டனையை நிராகரிக்கும் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த வரையப்பட்ட இந்தச் சட்டமூலத்திலும் அது உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒரு கட்டளையை மீறுவதும், குற்றமாக இச்சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, தற்போதைய அரசாங்கத்தாலும் எதிர்காலத்தில் வரப்போகும் அரசாங்கங்களாலும் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய வாசகமாகும் என சர்வதேச நீதித்துறை ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. 

புதிய சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பயங்கரவாத செயலொன்றுக்காக, ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 இலட்சத்துக்கு மேற்படாத அபராதமும் விதிக்கப்படும். அவரது சொத்துகள் பறிமுதல் செய்யுமாறு மேல்நீதிமன்றம் உத்தரவிடலாம். இச்சட்டத்தில் குறிப்பிடப்படும் பயங்கரவாத செயலைச் செய்ய முயன்றவருக்கு, 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஐந்து இலட்சத்து மேற்படாத அபராதமும் விதிக்கப்படும். 

ஆர்ப்பாட்டங்களும் பயங்கரவாத செயலாக கருதப்படும் அபாயம் இருக்கும் நிலையில், அவ்வாறான செயலொன்றுக்கு மக்களை தூண்டும் வகையில் ஒரு கருத்தை ஊடகங்கள் மூலமாகவோ வேறு விதமாகவோ வெளியிட்டால் அதுவும் குற்றச் செயலாகவே கருதப்படும். நாம் பேசுவதாலோ பத்திரிகையில் எழுதுவதாலோ எதையாவது செய்யவோ அல்லது செய்யாமலிருக்கவோ மற்றொருவரை தூண்டுகிறோமா என்பது தெளிவில்லாத சிக்கலான விடயமாகும். 

அவ்வாறு மற்றொருவர் தூண்டப்படுவாரா என்பதை, முதலில் பொலிஸாரே தீர்மானிக்கப் போகின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்படாமல் இருப்பதென்றால், நாட்டில் எது நடந்தாலும் தம்பாட்டில் இருக்க வேண்டும். 

கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்புக்கு, பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்கிலும் இச்சட்டத்தால் சில உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருவர் கைது செய்யப்பட்டால் பொலிஸாரோ படையினரோ அதை, 24 மணித்தியாலத்துக்குள் அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்க வேண்டும். அந்த அறிவித்தலின் பிரதி, சந்தேகநபரிடமும் வழங்கப்பட வேண்டும். 

கைது செய்பவர், கைது செய்யப்படுபவரிடம் தம்மை அறிமுகப்படுத்த வேண்டும். அவரது குற்றத்தை விளக்க வேண்டும். சட்டத்தரணி ஒருவரின் உதவியைப் பெற முடியும் என்பதையும் அவரிடம் தெரிவிக்க வேண்டும். கைது இடம்பெற்று 24 மணித்தியாலத்துக்குள் கைதைப் பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும். இச்சட்டத்தின் கீழ், தடுப்புக் காவலில் உள்ளவர்களை நீதிவான் ஒருவர் வாரந்தோரும் சந்தித்து உரையாட வேண்டும். 

இவை நல்ல ஏற்பாடுகள் தான். ஆனால் இவற்றின் சிலவற்றின் நடைமுறை சாத்தியப்பாட்டை சர்வதேச நீதித்துறை ஆணையகம் சந்தேகிக்கிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .