Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஜூன் 22 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
‘குருடர்கள் யானை பார்த்த கதை’ போல, ஒவ்வொருவரும் அரசியலை ஒவ்வொரு விதமாகவே புரிந்து வைத்திருக்கின்றனர். ‘தும்பிக்கையும் பெரிய செவிகளும் உடையதே யானை’ என்று ஒரு தரப்பு கூறுகின்றது. இன்னுமொரு தரப்பு ‘தும்பிக்கை மட்டும் இருந்தாலே அது யானை’ என்கின்றது. இன்னும் சில அரசியல்வாதிகள், ‘உடற்பருத்த எல்லா மிருகங்களையும் யானைகள்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையிலேயே, மக்களுக்கு அவசியமான அரசியலைத் தமது வழித்தடமாக கொண்டு செயற்படுவர்களை, அரிதாகவே காண முடிகின்றது. மீதமுள்ள பெரும்பான்மையானோர், தங்களுக்குச் சாதகமான அடிப்படையில், அரசியலை மக்களுக்கு அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றனர்.
தமது சொந்த அரசியலில், பொருளாதார இலாபத்தையும் பதவிகளையும் நோக்கிய ஒற்றையடிப் பாதைகளையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதுதான் சரியான அரசியல் வழித்தடம் என்று, மக்களை நம்பவைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களது நோக்கம், சமூகம் சார்ந்ததாக ஒருபோதும் இருப்பதில்லை.
தரமற்ற நகல் (டுப்ளிகேட்) பொருள் ஒன்றை, அசலான (ஒரிஜினல்) உற்பத்திகள் என்று, வாடிக்கையாளர்களுக்கு சந்தைப்படுத்தும் வியாபாரத்துக்கும் இந்த அரசியலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.
குறிப்பாக, முஸ்லிம் அரசியலின் தலைவிதி, இதுவாகத்தான் உள்ளது. இதனால், சமூகத்துக்கான அரசியலைப் பொறுத்தமட்டில், முஸ்லிம் அரசியல்வாதிகள், இன்னும் கற்றுக்குட்டி நிலையிலேயே இருக்கின்றனர். தமிழ் அரசியல்வாதிகளில் கணிசமானோர், இது விடயத்தில் கொஞ்சம் பரவாயில்லை.
தமிழர் அரசியலானது, தமிழ் மக்களுக்கான அரசியலாகச் சரியான பாதையில் பயணிக்கின்றதா என்பதில், நிறையவே வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. சாதாரண தமிழ் மக்கள், அன்றாடம் வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசிய விடயங்கள் எதுவென அறிந்து, அதை நிவர்த்தி செய்யாமல், யதார்த்தத்தில் சாத்தியமற்ற கோஷங்களை முன்வைத்து, காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற விமர்சனங்களையும் புறந்தள்ளி விட முடியாது.
அதேவேளை, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், ஓர் அரசியல் தரப்பாக, பலமான அடித்தளத்தை இட்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் அபிலாஷைகளை மனதிற்கொண்டு, மிகவும் ராஜதந்திரமான, மூலேபாய நகர்வுகளின் ஊடாக, இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆட்சியாளர்களோடு அளவுக்கதிமாக ஒட்டி உறவாடி, நக்குண்டு நாவிழந்து போகாமலும், சமகாலத்தில் ‘உச்சாப்பு’த் தனமாக அரசாங்கத்தை எதிர்த்தாடி, மக்களை சூடேற்றாமலும், நகர்வுகளைச் செய்கின்ற ஒரு மிதமான அரசியல் கலாசாரத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கிலுள்ள அரசியல்வாதிகள் மட்டுமன்றி, அதற்கு வெளியிலுள்ள ஓரிரு தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வகைக்குள் உள்ளடங்குகின்றனர்.
இலங்கையில் இப்போது பரவுகின்ற கொரோனா வைரஸ் தவிர, பாரிய பொருளாதார, சூழலியல் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்குச் சமாந்திரமாக ஆளும்கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சிக்குள்ளும் குழப்பங்கள் தலைதூக்கியுள்ளன. இதனால், ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு அரசியல் ஸ்திரத்தன்மையில், கடுமையான அதிர்வுகள் உணரப்படுகின்றன.
இந்தப் பின்னணியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் பல சம்பவங்கள் இடம்பெற்றன. இவையெல்லாம், திட்டம் எதுவுமின்றி தற்செயலாக நடந்தவையாக இருக்கலாம். ஆனால், அரசியலில் அப்படிச் சொல்ல முடியாது. இவற்றை நிகழ்வுகளின் தொடராக, ஒரு கோர்வையாக நோக்கினால் இன்னும் பல விடயங்கள் புரிய வரும்.
அரசாங்கத்துக்கு எதிராக, சர்வதேச நெருக்குதல்களை அதிகரிக்கும் நகர்வுகளைச் செய்து வருகின்ற தமிழ் அரசியல்வாதிகள், “நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை, அரசாங்கம் சரியாகக் கையாளவில்லை” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். “நாட்டை முன்கொண்டு செல்ல முடியாத நிலையில், அரசாங்கம் இருக்கிறது” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சொல்லியிருந்தது. அத்துடன், ஆட்சி மாற்றம் பற்றிய கருத்துகளும் அவர்களது உரைகளில் தொனித்தன.
இந்தப் பின்னணியிலேயே, கடந்த சில தினங்களுக்கு முன்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சந்திப்பதற்கு, அரசாங்கம் நேரம் ஒதுக்கிக் கொடுத்திருந்தது. கடந்த 16ஆம் திகதி நடைபெறவிருந்த இந்தச் சந்திப்பு, கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது. பிறிதொரு தினத்துக்கு, இச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அரசாங்கம் அறிவித்தது. கூட்டமைப்பு, அரசாங்கத் தரப்பைச் சந்திக்க முற்பட்டமை தொடர்பில், விமர்சனங்களும் இல்லாமலில்லை.
இச்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டதன் பின்னணி தொடர்பில், பல அனுமானங்கள் வெளியாகின.
ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவற்றையெல்லாம் பொதுவெளியில் அசட்டை செய்யவில்லை. மாறாக, சத்தமில்லாமல் சென்று, இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்துள்ளனர்.
சில நாள்களாக ஓய்ந்திருந்த, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் பற்றி, உயர்ஸ்தானிகர் மீண்டும் கருத்துத் தெரிவித்து இருக்கின்றார். உடனே மறுநாள், மேற்படி சந்திப்பை, மீண்டும் நடத்துவது தொடர்பாக, ஜனாதிபதி தரப்பில் இருந்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதனால், தமிழர்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றோ, அவர்கள் வேண்டியதை அரசாங்கம் கொடுத்துவிடும் என்றோ கூற முடியாது. ஆனால், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை, மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் என்று, ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்.
இல்லாவிட்டால், ‘வேண்டத்தகாத’ நெருக்கடிகளை, அவர்கள் மறைமுகமாக ஏற்படுத்துவார்கள் என்று கருதுகின்றார்கள் என்றே, எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் விடயத்தில், இப்படியான ஒரு நிலைமை இல்லை.
பாராளுமன்ற அண்மைய அமர்வுகளில், ஏறத்தாள 20 முஸ்லிம் எம்.பிக்கள் பங்குபற்றி வருகின்றனர். மூன்று பெரிய முஸ்லிம் கட்சிகளையும் வேறுபல சிறு கட்சிகளையும் இவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள். இப்போது, நீதி அமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருக்கின்றார்.
இருந்துமென்ன? முஸ்லிம்களுக்கான அரசியல், பலம் பெறவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளின் ‘வயிற்றுப் பிழைப்பு’க்கான தொழிலாக, அரசியல் மாறியிருக்கின்றதே தவிர, சமூகத்தின் நலன்கருதிய அரசியலாக, தம்மை முன்னிறுத்திக் கொள்ளவில்லை.
மேடைகளிலும் விமர்சனங்கள் எழுகின்ற வேளையிலும், பெரும் தியாகிகள் போல பேசுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும், யதார்த்தத்தில் இரண்டாம் தர அரசியல்வாதிகளாகவே செயற்படுகின்றார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் நாள்பட்ட பிரச்சினைகள், இன்னும் தீர்க்கப்படாமல் கிடப்பில் கிடக்கத் தக்கதாக, புதிய புதிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள், இனவாத நெருக்குவாரங்கள், தீர்வுத்திட்டம் அல்லது, அதுபோன்ற எதாவது ஒன்று வழங்கப்படுமாயின், அதில் முஸ்லிம்களின் பங்கு என, நீண்டகாலமாகப் பேசப்படும் விடயங்கள் உள்ளன.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் என்ற தோரணையில், பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி, அரசியல் தலைவர்கள் முதல் செயற்பாட்டாளர்கள் வரை, வகைதொகையின்றி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், உண்மையான பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்குவதையும் ஏனைய அப்பாவிகளை விடுதலை செய்வதையும் துரிதப்படுத்த வேண்டியுள்ளது.
எனவே, தாங்கள் வேலைப்பழுவுடன் இருப்பதாகப் பம்மாத்துக் காட்டிக் கொண்டு காலத்தை வீணடிக்காமல், கொரோனாவுக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்குக்கு இசைவாக, ‘முஸ்லிம் அரசியல்’ தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. முஸ்லிம் எம்.பிக்கள், ஒரு கட்சியின் கீழ் தேர்தலில் நின்றுவிட்டு, வெற்றி பெற்றதன் பின்னர், இன்னொரு கட்சியின் பக்கம் ‘பல்டி’ அடிப்பது போல, இரவோடிரவாக இதைச் செய்து விட முடியாது.
முதலாவதாக, மக்கள் திருந்த வேண்டும். முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உள்ளடங்கலாக, அனைத்து எம்.பிக்களும் செய்கின்ற பெரும்பாலான தவறுகளுக்கான மறைமுக ஆதரவையும் அதிகாரத்தையும் முஸ்லிம் மக்களே வழங்கி இருக்கிறார்கள். எனவே, இதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, அரசியல்வாதிகள் சமூக விடயத்தில் ஒற்றுமைப்பட வேண்டும். முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு என்ன, அதற்கான அரசியல் செல்நெறி எது, என்பவற்றைத் தீர்மானிக்க வேண்டும். பிரச்சினைகள், அபிலாஷைகளை ஆவணப்படுத்த வேண்டும். மேடைகளில் ‘கொக்கரிப்பது’ போல அல்லது, நினைத்த மாதிரி சமூகத்தின் பிரச்சினைகளைக் கையாள முடியாது.
பெருந்தேசிய அரசியல்வாதிகள் எல்லோருரையும் ஒரே தட்டில் வைத்து எடைபோட வேண்டும். நமக்கு எல்லாரும் ஒன்றுதான். முஸ்லிம் சமூகத்துக்காக யாரிடம் இருந்து, எவ்வாறு, எந்த அபிலாஷையை நிறைவேற்றிக் கொள்ள முடியுமோ, அவற்றை அவ்வவ்வாறு பெற்றுக் கொள்ள வேண்டும். ‘வைத்தால் குடும்பி; அடித்தால் மொட்டை’ என்றில்லாமல், ஆளும் மற்றும் எதிர்தரப்புடன் மிதமான உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றில் பெரும்பாலான விடயங்களை, தமிழர் அரசியலில் இருந்தோ பெரும்பான்மை மற்றும் உலக அரசியலில் இருந்தோ, இன்னும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளவில்லை என்பதே யதார்த்தமாகும்.
பெரும் ஞானிகள் போலவும், அரசியல் மேதைகள் போலவும் தமது பிம்பங்களை வெளியில் காட்டுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், உண்மையில் இன்னும் பாலர் வகுப்பு, முன்பள்ளி மாணவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள், இதைப் புரிந்துகொண்டு, தம்மை முன்னேற்றிக் கொள்ளாமால், அந்த வகுப்பிலேயே தொடர்ந்தும் இருக்க விரும்புகின்றமை, மோசமான மனநிலையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
27 minute ago
27 minute ago