Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2023 ஜனவரி 24 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.கே அஷோக்பரன்
Twitter: @nkashokbharan
இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு புனர்வாழ்வு மையங்களை நடத்தும் அதிகாரத்தை வழங்கும் புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம், புதன்கிழமை (18) இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் எதிரிகளை, இராணுவத்தால் இயக்கப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் அதிகாரத்தை, இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு வழங்கும் என, இந்தச் சட்டமூலத்தின் விமர்சகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் அமைச்சரவையில் அங்கிகரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலமானது 23 ஆதரவு வாக்குகளுடனும், வெறும் ஆறு எதிர்ப்பு வாக்குகளுடனும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலத்தின் மூல வடிவம், 2022 செப்டெம்பர் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் அரசிலயமைப்புடன் இயைபுடையது அல்ல என சிவில் சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி எம்.பிக்கள் போன்றோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தியிருந்தனர்.
இந்தச் சட்டமூலம் முற்றிலும் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தை வௌியிட்டிருந்தது. குறித்த சட்டமூலத்தில் உள்ள பெரும்பாலான சரத்துகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையின் ஒப்புதல் தேவை என்றும், அத்தோடு சர்வசனவாக்கெடுப்பொன்றில் மக்கள் அங்கிகாரமும் பெறப்படவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
ஆயினும், குறித்த சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், சாதாரண பெரும்பான்மையோடு திருத்தப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட முடியும் என்றும் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
குறிப்பாக, இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையங்களுக்கு ‘முன்னாள் போராளிகள்’, ‘வன்முறை மற்றும் தீவிரவாத குழுக்கள்’, ‘வேறு எந்த நபர்களின் குழு’க்களையும் அனுப்புவதற்கு, அரசாங்கத்தை அனுமதிக்கும் விதிகள் நீக்கப்பட்டால், சாதாரண பெரும்பான்மையோடு திருத்தப்பட்ட சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
போதைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வுக்கானது என்ற நோக்கில் சமர்ப்பிக்கப்படுவதாக அரசாங்கம் வியாக்கியானம் சொன்ன சட்டமூலத்தில், ‘ஏனையோரை’ உள்ளடக்குவது ஏன் என்ற கேள்வி நியாயமானதே!
சட்டமூலத்தின் மீதான உயர்நீதிமன்றின் தீர்மானத்துக்குப் பின்னர், சட்டமூலத்தின் புதிய பதிப்பை பாராளுமன்றத்தில் முன்வைத்த அரசாங்கம், நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க சட்டமூலத்தைத் திருத்தியதாகவும், குறித்த சட்டமூலம் ‘போதைப்பொருள் சார்ந்த நபர்கள்’ மற்றும் ‘சட்டத்தால் வழங்கப்பட்ட பிற நபர்களுக்கு’ மட்டுப்படுத்தப்பட்டதாக அமையும் என்றும் கூறியது.
ஆயினும், பாராளுமன்ற விவாதத்தில் சுட்டிக்காட்டியபடி, ‘சட்டத்தால் அடையாளம் காணப்பட்ட பிற நபர்கள்’ என்ற சொற்றொடரைச் செருகுவது என்பது தௌிவற்ற நிலையை உருவாக்குகிறது என்ற அச்சம் வௌியிடப்பட்டிருந்தது. ‘சட்டத்தால் அடையாளம் காணப்பட்டது’ என்பது, நீதித்துறையால் நிர்ணயிக்கப்படுவதா இல்லையா என்ற கேள்விக்கு, பாராளுமன்றத்தில் தெளிவான பதில் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த அடக்குமுறைச் சட்டத்தின் நோக்கத்தையும் பயன்பாட்டையும் விரிவுபடுத்துவதற்காக, அடுத்தடுத்து திருத்தங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை இது பரந்த அளவில் திறந்து விடுகிறது.
இது மிகவும் ஆபத்தானது. ஆகவே, இலங்கை வாழ் மக்களை நேரடியாகப் பாதிக்கக் கூடிய சட்டம் இது. குறிப்பாக, மக்களின் உரிமைகளை அடக்க, இதனை ஒரு பலமான ஆயுதமாக அரசாங்கம் பாவிக்க முடியும். அப்படிப்பட்ட சட்டமூலம் வாக்களிப்புக்கு வரும்போது, மொத்தப் பாராளுமன்ற உறுப்பினர்களில் 13% மட்டுமே பாராளுமன்றத்தில் இருந்து வாக்களிப்பில் பங்குபற்றியிருந்தனர்.
225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்புக்கு வந்திருந்தனர். ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 29 பேர் மட்டுமே மொத்தமாக வாக்களித்திருந்தனர். ஏனையோர் எவரும் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. மிகக்குறிப்பாக ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரேனும் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.
குறித்த சட்டமூலம் மீதான விவாதம் நடந்த போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்வீச்சு விமர்சனங்களுக்கு குறைவிருக்கவில்லை. ஆனால், வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் 54 பாராளுமன்ற உறுப்பினர்களில், வெறும் ஐந்துக்கும் குறைவானவர்களே பாராளுமன்றத்தில் இருந்தனர்.
இந்தச் சட்டமூலம் மீதான விவாதம் இந்த வருடத்தின் முதல்வாரத்தில் நடந்தபோது, அதில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், “அமைச்சரிடம் நான் கூற விரும்பும் மற்றோர் அடிப்படைப் பிரச்சினை உள்ளது. ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படுவதென்பது, நீதித்துறையின் தீர்ப்புக்குப் பிறகுதான் நடக்க வேண்டும். இப்போது அந்தக் குறிப்பில் இருந்து, இது ஒரு விலகலாக அமைகிறது. நாம் இப்போது குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறியாமல் ஒரு நபரை சிறையில் அடைக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளோம். இந்த வார்த்தைகளை நன்றாக யோசித்துத்தான் பயன்படுத்துகிறேன். ஏனெனில் ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறித்தபின், அவர் ஓடிப்போனால், அவரை மீண்டும் பிடித்து வரும் ஏற்பாடுகள் இந்தச் சட்டமூலத்தில் உள்ளன. போதைப்பொருள் மறுவாழ்வு திட்டத்தில் ஒரு முக்கியமான அடிப்படையானது, குறித்த நபரின் தன்னார்வத் தன்மையாகும். அந்த நபர் மறுவாழ்வு பெற வேண்டும் என்று, நீங்கள் அதை அவரது தொண்டைக்குள்ளே கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. எனவே, போதைப்பொருள் சார்பு சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் நீதித்துறை தீர்ப்புக்கு கூடுதலாக மருத்துவக் கருத்தையும் கருத்திற் கொள்ள வேண்டும். அந்த இரண்டு நிபந்தனைகளும் இணைக்கப்பட்டால், நீங்கள் ஒரு மறுவாழ்வு மையத்தை அமைக்கலாம். ஆனால் அது அந்தத் துறையில் உள்ள நிபுணர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்; பாதுகாப்பு நிபுணர்களால் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.
மிகத் தேர்ந்த அனுபவமும், நிபுணத்துவமும் மிக்க மனித உரிமைகள் சட்டத்தரணியான சுமந்திரன், இந்தச் சட்டமூலம் சட்டமாக்கப்படுவதால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்தை மிகச்சரியாக எதிர்வுகூறியிருக்கிறார்.
சட்டங்கள் என்பவை ஆயுதத்தைப் போல; ஒரு பலமான ஆயுதத்தை உருவாக்கிவிட்டு, அதனை நான் சரியான தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஒருவர் சொல்லலாம். உருவாக்கியவர் அத்தகைய நல்லவராகவே இருக்கட்டும்; ஆனால், நாளை அந்த ஆயுதம் இன்னோர் அராஜகவாதியின் கைக்கு சென்றுவிட்டால், ஓர் அராஜகவாதியிடம் ஒரு பலமான ஆயுதம் கிடைத்துவிடுமில்லையா? இதுதான் இங்குள்ள பிரச்சினை.
பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அவசரகாலச் சட்டமும், இந்நாட்டு மக்களை, குறிப்பாக சிறுபான்மையினரை, மிகக் குறிப்பாக தமிழர்களை அடக்கியொடுக்க எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு அந்த இருண்ட வரலாறே சாட்சி!
இன்றும் குற்றம்சாட்டப்படாது, பல்லாண்டுகளாக ‘அரசியல் கைதி’களாக எத்தனை பேர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? இந்தப் புனர்வாழ்வுப் பணியகச் சட்டமும் இந்த வகையறாச் சட்டம்தான். இது தனிமனித உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் எதிரான பெரும் சவால். இப்படியொரு சட்டம் வாக்கெடுப்புக்கு வரும்போது, இதை எதிர்த்துப் பேசிய சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவையிலிருந்து தமது எதிர்ப்பு வாக்கைப் பதிவு செய்திருக்க வேண்டாமா? அது அவர்களது கடமையல்லவா? இதைவிட என்ன பெரிய கடமை அவர்களுக்கு இருக்கிறது?
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முதற்கடமை பாராளுமன்றத்துக்கு சமூகமளித்து, அவைச் செயற்பாடுகளில் அக்கறையோடு பங்குபற்றுதல் ஆகும். அதற்குப் பிறகுதான் மற்றையதெல்லாம். இதற்குத்தான் மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்றத்துக்குத் தமது பிரதிநிதிகளாக அனுப்புகிறார்கள். இதற்குத்தான் மக்கள் பணத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
இத்தனைக்கும் ஒரு மாதத்தின் ஒவ்வொரு வேலைநாளும் பாராளுமன்ற அமர்வுகள் இருப்பதில்லை. பாதீடு சமர்ப்பிக்கப்படும் மாதத்தைத்தவிர, விசேட காரணங்கள் இருந்தாலன்றி, ஒரு மாதத்தில் 10ற்கும் குறைவான நாள்களே பாராளுமன்ற அமர்வுகள் இருக்கின்றன. அவற்றில்கூட, முறையாகப் பங்குபற்ற முடியாதவர்கள், சட்டமூலம் மீதான விவாதங்களில், வாக்கெடுப்பில் பங்குபற்றாதவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து யாருக்கு என்ன பயன்?
தேர்தல் காலத்தில் மக்களை வந்து வாக்களியுங்கள் என்று சொன்னவர்கள், தாம் பாராளுமன்றத்தில் வந்து வாக்களித்து, தமது கடமையைச் செய்ய வேண்டாமா? இனியாவது மக்கள், கடமையைச் செய்யத்தக்கவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால், பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படுவது ஒரு சிறப்புரிமை அல்ல; அது அடிப்படையில் ஜனநாயகக் கடமை. அதைச் சரியாகச் செய்யாதவர்கள் ஜனநாயக விரோதிகளே!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago