Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
புதிய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை எப்போது நீக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காதிருக்கின்ற நிலையில், பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அழிச்சாட்டியம் தொடர்பாக அரசாங்கம் உண்மையிலேயே என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்ற கேள்வியும் இப்போது எழுந்திருக்கின்றது.
பலஸ்தீனத்தில் யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் கடுமையான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றது. புனித நோன்பு காலத்தில் கூட கொத்துக்கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இது இன்று இஸ்லாத்தைப் பின்பற்றாத மக்களையும் கண்கலங்கச் செய்துள்ளது.
இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக உலக அரங்கில் கொக்கரிக்கின்ற பல நாடுகள் இன்று, ‘பொலிஸ்’ வேடமணிந்த ‘கள்வர்களுககு’ பின்னால் முட்டுக் கொடுத்துக் கொண்டு நிற்கின்றன. பலஸ்தீன குழந்தைகளும் பெண்களும் தங்களது சொந்த மண்ணிலேயே பலியெடுக்கப்படுவதை வெறும் செய்தியாகவே நோக்குகின்றன.
கடந்த காலங்களில் இதுபோன்ற மனிதப் பேரவலங்கள் இடம்பெற்ற வேளைகளில் அதற்கு எதிராக ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டு அல்லது ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு சும்மா இருந்ததைப் போல, ஐ.நா. உள்ளிட்ட உலக அமைப்புக்கள் காசா விடயத்திலும் இஸ்ரேலை கண்டித்து விட்டு வாழாவிருப்பதைக் காண்கின்றோம்.
ஆனால், கடந்த 2023 ஓக்டோபரில் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தம் ஆரம்பமாகியதில் இருந்து மட்டுமன்றி, அதற்கு முன்னர் கடந்த அரை நூற்றாண்டாகக் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பலஸ்தீன மக்களுக்காக மனித நேயமுள்ள யாரும் குரல் கொடுக்கவே செய்கின்றனர்.
வேறு மதங்களைப் பின்பற்றும் மக்களே இஸ்ரேலின் அழிச்சாட்டியத்தை எதிர்க்கத் தலைப்பட்டுள்ள ஒரு கால சூழலில், இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற மக்கள் இலங்கையிலோ வெளிநாடுகளிலோ எதிர்ப்பைவெளிக்காட்டுவது
எந்த வகையிலும் நியாயமானதே.
கொழும்பில் பல்பொருள் அங்காடித் தொகுதி ஒன்றில் பணிபுரியும் ஒரு இளைஞன் இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டினான் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இத்தனை வருடங்களாக நியாயங்கள், அநியாயங்கள் பற்றி பாராளுமன்றத்தில் வகுப்பு நடத்திய ஜே.வி.பி. அதாவது, என்.பி.பி. அரசாங்கமே இந்தக் கைதின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது.
இந்நிலையில்தான், பொலிஸ் திணைக்களம் சட்டப்படி, ஒரு விளக்கத்தை இப்போது வெளியிட்டுள்ளது. ‘அவர் ஸ்டிக்கர் ஒட்டியதைத் தாண்டிய சில அடிப்படைவாத கருத்துக்களைக் கொண்டிருந்தவர்’ என்றும் ‘அவர் ஏதோ ஒரு வகையில் பயங்கரவாதச் செயலைச் செய்யக் கூடியவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்ததாகவும்’ அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அவர் உண்மையில் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவரா, குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் தான் தீர்மானிக்க வேண்டும். இவர் சமூக உணர்வுடன் செய்தாரா? அல்லது பாதுகாப்பு தரப்பு சந்தேகப்படுவது போன்று வேறு தூண்டுதலில் செய்தாரா என்பதைப் பாதுகாப்பு தரப்பு அறிய விரும்பினால் அதனைச் செய்யட்டும்.
ஆனால், மேற்படி இளைஞர் ஸ்டிக்கர் ஒட்டியதற்காகவே ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டார் என்பது இங்குக் கவனிக்கத்தக்க விடயமாகும்.
இலங்கையில் ஒரு காலத்தில் தமிழர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுந்தன. கடந்த 15 வருடங்களில் முஸ்லிம் விரோத வாசகங்களும் ‘சிங்ஹலே’ என்ற ஸ்டிக்கர்களும் பரவலாக ஒட்டப்பட்டன. இதுவெல்லாம் பெரிய விடயங்களாகப் பார்க்கப்பட்டு கைதுகள் இடம்பெற்றதாக நினைவில் இல்லை.
ஆனால், பலஸ்தீனத்தில் கொல்லப்படுகின்ற மக்களுக்காக இலங்கை முஸ்லிம்கள் அரசியலமைப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கீழ் எடுக்கின்ற நடவடிக்கைகள் ஒரு கைதுக்கு காரணமாக ஆகி விடுகின்றது என்பது தான், ஆட்சியாளர்களின் நியாயத்தின் பக்கம் நிற்கும் நிலைப்பாடு பற்றிய பல கேள்விகளை எழுப்புகின்றது.
எல்லோரும் இந்த நாட்டில் சமமாக நடத்தப்படுவார்கள் என்று கூறியே என்.பி.பி. கட்சி ஆட்சியைப் பிடித்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற அடிப்படையில், இதனை நீக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி குரல் கொடுத்து வந்ததும் நினைவிருக்கிxன்றது.
“தாம் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம்” என்று இவர்கள் மக்கள் மன்றத்தில் கூறினர். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிப்பதாக அரசு ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியிருந்தாலும், அந்த சட்டத்தின் பிரயோகம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
இது ஒரு முரண் நகையாகும். அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்த அரசாங்கமும் பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அதற்கு ஒப்பான ஒரு சட்ட ஏற்பாடு கைவசம் இருப்பதை விரும்புவதைப் போலவே தோன்றுவதாகக் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் விமர்சித்து வருகின்றார்கள்.
இந்நிலையிலேயே, இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கரை ஒட்டிய ஒரு இளைஞன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வின் சூடு ஆறுவதற்கிடையில், பிரித்தானியா அரசாங்கம் முன்னாள் தளபதிகள் மூவருக்குத் தடை விதித்துள்ள நிலையில். சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது.
நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கின்றது. சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் உள்ளது. எனவே, எடுத்த எடுப்பில் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது. சில நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் சமூகம் ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும்.
ஆனால், முஸ்லிம்களுக்கு இப்படியொரு கேள்வி எழுவதற்கு இந்த கைது மட்டுமே ஒரு காரணமல்ல. வேறு பல காரணங்கள் உள்ளன.
அண்மைக்காலமாக இஸ்ரேலியர்களின் போக்குகள் இலங்கையில் வித்தியாசமாகத் தெரிகின்றன. அவர்கள் வெறுமனே சுற்றுலாப் பயணிகளாக வருகின்றார்கள் என்று கூறப்பட்டாலும், பல இடங்களில் வேறு நபர்களின் பெயர்களில் காணிகளை வாங்கி மறைமுகமாகக் காலூன்ற முயல்வதாகப் பல செய்திகள் வெளியாகியிருந்தன.
குறிப்பாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பொத்துவில் உல்லை பிரதேசத்தில் இஸ்ரேலிய வழிபாட்டுத்தலம் ஒன்று இயங்குகின்றது. அதனை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டது.
அதன் பிறகு, பொத்துவிலில் மட்டுமன்றி, கொழும்பின் மையப் பகுதியிலும், தெஹிவளை போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் யூதர்கள் கட்டிடங்களை அமைப்பதாகவும் அவற்றுக்கு அரச படையினர் பாதுகாப்பு வழங்குவதாகவும் ஏகப்பட்ட தகவல்கள் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டன.
அரேபிய நிலப்பரப்பில் அடைக்கலம் கொடுத்த பலஸ்தீன மண்ணை, யூதர்கள் மெல்ல மெல்ல ஆக்கிரமித்தே இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினர் என்பது யாவரும் அறிந்ததே. அப்படியிருந்தும் கூட, இஸ்ரேலியர்கள் காலூன்றும் முயற்சிகள் தடுக்கப்படவில்லை என்றே முஜிபுர் ரஹ்மான் போன்ற முஸ்லிம் எம்.பிக்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டாகும்.
இதேவேளை, இஸ்ரேலுக்கு எதிரான அல்லது போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் அறிவிப்பொன்றை அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்நிலையில், ‘காசாவில் நிலவும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், இந்நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் தவிர்க்கப்படவேண்டுமென அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கிறது’ என்ற ஒரு அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டதும் நினைவு கொள்ளத்தக்கது.
இலங்கை வரும் இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறுவதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், முஸ்லிம்களும் ஏனைய இனங்களைச் சேர்ந்த மக்களும் ஐக்கியத்தோடு வாழ்கின்ற நாட்டில், இஸ்ரேலியர்கள் மறைமுகமாக முற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றே இங்கு கோரப்படுகின்றது.
இதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?கடந்த காலங்களில் பலஸ்தீனம் தொடர்பாகக் கொண்டிருந்த நிலைப்பாடுகள் மாறி வருகின்றதா என்ற சந்தேகத்தை அரச இயந்திரத்தின் சில நடவடிக்கைகள் ஏற்படுத்துவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இஸ்ரேல் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பலல்தீனத்தில் தாக்குதலைத் தொடங்கிய ஒரு சில நாட்களுக்குள்ளேயே 700 அப்பாவி முஸ்லிம்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது. இதில் கணிசமானவர்கள் 18 வயதிற்கு குறைந்தவர்களும் சிறுவர்களும் ஆவர்.இப்படியாக மொத்தமாக 50 ஆயிரம் பேர் தங்களது சொந்த நிலத்தில் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டுள்ளார்.
அகதிகளாக்கப்பட்டவர்கள், அநாதையாக்கப்பட்டவர்கள், ஊனமுற்றோருக்குக் கணக்கில்லை. எனவே, இதனை இன்று உலகில் உள்ள மனிதநேயமுள்ள அனைவரும் எதிர்க்கும் போது, இலங்கை முஸ்லிம்கள் இந்த அழிச்சாட்டியத்தை விமர்சிப்பதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா?
நாட்டில் நல்ல விடயங்கள் நடக்கின்ற போது, அதனை அரசாங்கம் செய்தது
என்றும். தவறான காரியங்களுக்காக விமர்சனங்கள் எழுகின்ற போது அதனை அதிகாரிகள் செய்து விட்டார்கள் என்றும் கூறி மழுப்ப முடியாது.
ஒரு காலத்தில் பலஸ்தீன மக்களுக்காக முன்னிற்போம் என்று கூறியவர்கள்,
இப்போது அவ்வாறு செயற்பட முடியாத நிலைக்கு அல்லது இலங்கை முஸ்லிம்கள் இஸ்ரேலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதை விரும்ப முடியாத இக்கட்டுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனரா என்ற கேள்விக்கு அவர்கள்தான் விடையளிக்க வேண்டும்.
2025.04.01
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago