2025 மார்ச் 31, திங்கட்கிழமை

பலனை அனுபவிக்கும் அரசியல்

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் ஒன்று உருவாகி வருகிறது. அதற்கு கொழும்பில் நீதிமன்றத்திற்குள் நடந்து முடிந்திருக்கின்ற துப்பாக்கிச் சூடு முற்றுப் புள்ளியாகஅமையுமா என்பது தெரியாமலிருக்கிறது. ஊழல், இலஞ்சம், போதைப்பொருள் பிரச்சினையென அடுக்கிக் கொண்டு செல்லக் கூடியளவுக்கான சிக்கல்கள் நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் திருத்தங்கள் ஏதுவுமின்றி, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.  அந்தவகையில் உள்ளூராட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்பது உறுதியாகியிருக்கிறது.
இந்த நிலையில்தான்,உள்ளூராட்சித் தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான ஆரூடங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும், ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் என தகவல்கள் வந்தாலும், 
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, மற்றும் சித்திரைப் புத்தாண்டு  போன்ற விடயங்கள் கவனத்திலெடுக்கப்பட்டே திகதி தீர்மானிக்கப்பட வேண்டும். இருந்தாலும், வேறு பல காரணங்கள் இந்தத் திகதித் தீர்மானத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், மார்ச் 21 வரை நடைபெற்று வருக்கின்ற வரவு-செலவுத் திட்ட விவாதமும் காரணமாகும்.
வரவு-செலவு திட்ட விவாத காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்களது அரசியலமைப்பு ரீதியான கடமையை நிறைவேற்றுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற வகையில், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எதிர்க்கட்சிகள் தங்களது இயலாமை காரணமாக உள்ளூராட்சித் தேர்தலைக் காலம் தாழ்த்தும்படி கோருவதாக அளும் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்களும் வெளிவருகின்றன. 
இருந்தாலும் பாராளுமன்ற செயற்பாடுகள் எந்தளவுக்கு சிக்கலானவை என்பதைத் தெரியாத புதியவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என பெருந்தன்மையுடன் எதிர்க்கட்சிகள் கடந்து சென்றிருக்கின்றன.  அதே நேரத்தில், பாராளுமன்றத்தில் சட்ட மூலங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க ஆளுங்கட்சிக்கு அதிகாரம் உண்டு. அதற்காக தேர்தல் ஆணைக்குழுவை தமது கைப்பாவையாகப் பாவிக்க முடியாது.  தேர்தல் தினத்தையோ, வேட்புமனுக் காலத்தையோ தீர்மானிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி தெரிவித்திருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் பொருளாதாரக் காரணங்கள் காண்பிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், அது நடத்தப்படாமல் விடப்பட்டு,  தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குடைச்சல்கள் எந்தப் பயனையும் தரவில்லை. உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாகவே இருந்தது.

பின்னர், கடந்த வருடத்தில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியானார். அவர் பதவியேற்றவுடன் பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை நடத்தி பெரும்பான்மையான ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்.
ஆனால், பாராளுமன்றத் தேர்தல் போன்று அவரால் எடுத்த எடுப்பில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. அதற்கு நாட்டின் சட்டம் காரணமாக இருந்தது. இப்போதுதான் உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் கொண்டுவரப்பட்டு, அது எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியிருக்கிறது.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் உள்ளூராட்சித் தேர்தல்கள் தேசியக் கட்சிகளின் அரசியல் நிலைமையை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான ஒரு இடமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டு அவர்கள் உடனடியாக நாடி பிடித்துப் பார்த்தது உள்ளூராட்சித் தேர்தலையேயாகும். உள்ளூராட்சித் தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி அக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ வெற்றிபெற வாய்ப்பளித்தது. 
இதனையடுத்து, பெரும்பான்மை அதிகாரத்துடனான ஆட்சியை ஏற்படுத்த முடிந்தது. ஆனால், அதனைச் சரியாகக் கொண்டு நடத்த முடியாமல் போனதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஒருவருடம் கடந்த நிலையில், அதிகாரத்தினைக் கைப்பற்றியது, ஜே.வி.பியிலிருந்து தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்தப்பட்டு ஒரு சில வருடங்களிலேயே முழு நாட்டையும் கைப்பற்றிக்கொள்ள முடிந்திருக்கிறது.


இவ்வாறான அதிகார நிலைமைகள் இருக்கையில்தான் தற்போது நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தலை எதிர்க்கட்சிகள் தங்களது நாடி பிடிப்புக்கானதாகவும் தங்களுக்கான ஆதரவு அலையினை அதிகரித்துக் கொள்வதற்கான களமாகவும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.  அப்படியென்றால், அடுத்து நடைபெறவுள்ள மாகாண சபைகள்,  பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றினை இலக்காகக் கொண்டதாக இந்த உள்ளூராட்சித் தேர்தல் களம் அமையும். இது ஆளும் கட்சிக்கும் பொருந்தும். பல வருடங்களாக நடைபெறாமலிருக்கின்ற மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்படாமல் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவிருப்பதிலும் இந்த அதிகாரக் கைப்பற்றல் தந்திரம் இருக்கிறது.


இந்த இடத்தில்தான் தமிழர்களும், தமிழர்களுடைய அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்வார்கள் என்பது உரசுகிறது. தேசியக் கட்சிகள் தங்களுடைய அரசியலைத் தேசிய களம் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கையில் உள்ளூராட்சித் தேர்தலைத் தமிழர் அரசியல் மாகாண சபையை இலக்காகக் கொண்டதாகவே நகர்த்துவார்கள்.
பாராளுமன்றத் தேர்தலில் அனுர அலை தாக்கம் செலுத்தியது. ஆனால், அது எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் சற்றுத் தாக்கம் குறைந்ததாகவே இருக்கும் என்ற கருத்து உருவாகத் தொடங்கிவிட்ட நிலையில், தேசிய மக்கள் உள்ளூராட்சித் தேர்தலில் பிரகாசிக்காது என்பது சிலரது கருத்தாக இருக்கிறது. அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொள்வது தேசிய அரசியலை இலக்கை அடிப்படையாகக் கொண்டது. இருந்தாலும், வட்டாரங்களைக் கொண்டதாக இருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை சற்று வித்தியாசமான அணுகுமுறைகளையே கையாளவேண்டியிருக்கும்.


ஏனெனில், ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரங்கள் மாற்றம் என்ற கோசத்துடனேயே கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் அமைந்திருந்தன. ஆனால், ஏப்ரலின் பின்னர் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் இந்த மாற்றம் கோசம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துமா என்பது ஆராயப்படவேண்டியதே.
மக்களின் அடிப்படையான பிரச்சினைகளைத் தேர்தல் கோசமாகக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி இதுவரையில் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறதா? என்று கட்டாயமாக மக்கள் சீர்தூக்கிப் பார்ப்பர். அவ்வாறான தெளிவுபடுத்தல்களை எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளவேண்டியுமிருக்கும். இந்த வேறுபட்ட நிலைகளுக்குள் தேசிய மக்கள் சக்தி தங்களுடைய பிரசாரங்களை மேற்கொண்டாகவேண்டும்.
இருந்தாலும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் வீசிய அனுர அலையானது மாற்றம் பெற்றிருக்கிறதா என்பதனை அறிந்துகொள்வதற்கான தேர்தலாகவும் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் 
தேர்தல்  இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் அதிகாரங்களை இழப்பதற்குத் தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனரா? என்பதற்கான பதிலாகவும் அமையும். வெறுமனே அபிவிருத்திகளைக் காண்பித்து தமிழ் மக்களின் உரிமை சார் கோரிக்கைகளை நீர்த்துப் போகச் செய்து விட முடியுமா? என்பது சவாலான கேள்வியே.
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி விட சில குழுக்கள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக மேற்பூச்சுக்குச் சொல்ல முயன்றாலு,ம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கின்ற செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட வேண்டும். அதனை விடுத்து, வெறுமனே  விம்பங்களினூடு எதனையும் சாதித்து விட முடியாது. ஜனாதிபதி மாற்றத்தில் தொடங்கிய ஆட்சி மாற்றம்  மக்களுக்குப் பெரியளவில் வரப்பிரசாதங்களை அள்ளி வீசும் என்று நம்பிய மக்களுக்கு வரவு- செலவுத் திட்டம் பெரிதாக எதனையும் கொண்டுவரவில்லை. இவ்வாறான நிலையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான பதிலை வெளிப்படுத்துவதாகவே அமையும். அந்தவகையில் ஆட்சி மாற்றத்தின் மூலமாக நாட்டு மக்கள் அடைந்து கொள்ள நினைத்தவைகளுக்கான பலனாக 
அல்லது பதிலாக  அமையும் என்றே சொல்ல வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X