Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 30, வியாழக்கிழமை
Mayu / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
நாடு ஓரளவுக்கு அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், அறுகம்பே பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என வெளியான எச்சரிக்கைத் தகவல் அரசையும், மக்களையும் ஒருவித பதற்றத்திற்குள் தள்ளி இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் - அறுகம்குடா பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலை அடிப்படையாகக் கொண்டு முதலில் அமெரிக்கத் தூதரகமே பொதுவெளியில் ஒரு முன்னெச்சரிக்கையை விடுத்து, தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவித்தது.
இதனையடுத்து, அரசாங்கம் பாதுகாப்பைப் பலப்படுத்தி, நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஏனைய பல நாடுகளும் அறுகம்பே மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன.
உண்மையில், இந்தத் தகவல் ஏற்கெனவே அரச புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்திருந்ததாகவும், இருப்பினும் தேர்தல் காலம் என்பதாலும் இது வெளிநாட்டவர்களுடன் தொடர்புபட்ட விவகாரம் என்பதாலும் இதனைப் பகிரங்கப்படுத்தாமல் இரகசியமான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் இப்போது தெரியவந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி தமக்கு முன்னமே தெரியுமென கூறியிருந்த இந்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கை பற்றியும் ஏற்கெனவே தெரியும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும். அமெரிக்கத் தூதரகம் இதனைப் போட்டு உடைத்துள்ளது. அதுமட்டுமன்றி, இலங்கை பற்றிய அவதானம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாத் துறையும் அது சார்ந்த பொருளாதார பிரிவுகளும் பாதிக்கப்படலாம் என்ற நியாயமான ஒரு கவலை எழுந்துள்ளது.
எது எப்படியோ, உண்மையில் அப்படியான ஒரு சதித்திட்டம் யாருக்காவது இருந்திருக்கின்றது என்றால், அந்த அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னால் நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர அரசாங்கம் எடுத்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். வேறு நாடுகளோ, பயங்கரவாத, அடிப்படைவாத அமைப்புக்களோ தமது எதிரிகளை இலக்கு வைப்பதற்கான ஒரு களமாக இலங்கையைப் பாவிப்பதற்கு யாரும் இடமளிக்கமுடியாது. அவர்களது சண்டைக்குள் இலங்கையர் மாட்டிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இது மிகப் பாரதூரமான ஒரு விவகாரமாகும். இதனை இப்படியே கண்டும் காணாமல் விட்டு விடமுடியாது. இந்த விடயத்தை ஒரு வெறும் தாக்குதல் எச்சரிக்கையாக மட்டுமன்றி, வேறு பல கோணங்களிலும் நோக்க வேண்டியிருக்கின்றது.
பொத்துவில்-அறுகம்பே என்பது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசம் தமிழ் மக்களும், சிறிதளவான சிங்களவர்களும் உள்ளனர். இங்கு கடந்த சில காலமாக முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியைக் கொள்வனவு செய்து, அங்கு யூத சன சமூக நிலையம் என்ற பெயரில் ஒரு மையம் இயங்கி வருகின்றது.
ஒரு பள்ளிவாசலுக்கு மிக அருகில் அமைந்துள்ள இவ்விடத்திற்குச் சுற்றுலாப் பயணிகளான இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட யூதர்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும் அவர்களின் ஒரு முக்கிய தலமாக அது மாறி வருகின்றதா என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பொத்துவில் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் பல பாகத்திற்கும் சுற்றுலாப் பயணிகள் செல்கின்றார்கள். யூதர்கள் தங்கியுள்ளார்கள். ஆனால் அறுகம்பே இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு. மேற்குறிப்பிட்ட தலமும், அறுகம்பேயில் இஸ்ரேலியர்களின் அதிகரித்த பிரசன்னமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
பொத்துவிலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமானது. அது அப்பிரதேசத்திற்கு மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரத்திற்கே பல அனுகூலங்களைத் தருகின்றது என்பதை மறுக்க முடியாது.
ஆனால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இப்படியான ஒரு யூத மையத்தை அமைத்து, சர்ச்சையை ஏற்படுத்தி ஏன் இஸ்ரேலியர்கள் காலூன்ற நினைக்கின்றனர். தொழிலுக்காக அல்லது சுற்றுலாவுக்காக வந்த இடத்தில் ஆக்கிரமிப்பு பாணியில் செயற்படுவது உரிமை, ஜனநாயகம் என்று சொல்ல முடியுமா?
நமது நாட்டிற்குள் வரும் எந்த நாட்டவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவரது உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் நமக்குள்ளது. ஆனால், அதற்கு சில வரன்முறைகள் உள்ளன என்பதையும் மறந்து விடக் கூடாது.
இங்கு இஸ்ரேலியர்கள் குழுமியிருப்பதால்தான் தாக்குதல் அபாயமுள்ளது என்றால், இது இலங்கை மக்களுக்கு உண்மையில் ஒரு தேவையற்ற தலையிடி ஆகும். உலகில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கின்ற ஒரு மக்கள் பிரிவினர் நமது நாட்டுக்குள் அளவுக்கதிகமாக காலூன்ற முனைவதும் அது நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் நல்லதல்ல.
உலகில் பலஸ்தீனம் உள்ளடங்கலாக யூதர்கள் ஆக்கிரமித்த நிலப் பரப்புக்களில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை எல்லோரும் அறிவோம். ஆகவே, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பிரதேசத்தில், யூதர்களின் பிரசன்னம் உள்ளது என்பதற்காக அது ஒரு தாக்குதல் இலக்காக ஆக்கப்படுவதற்கான களநிலைமைகளுக்கு இடமளிக்கக் கூடாது.
அடுத்த விடயம், இலங்கையை ஆட்டிப் படைக்க நினைக்கின்ற வெளிநாடுகள் நாட்டில் குழப்பத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தி இலங்கையை வழக்கம்போல அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை அற்ற நாடாக ஆக்கும் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முனைகின்றனவா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தமது நலன்களை உறுதிப்படுத்த முழுக் கவனத்தையும் செலுத்திச் செயற்படுகின்றன. அதற்காக உள்நாட்டில் உள்ள சில பேர்வழிகளும் விலைபோகின்றார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும்.
அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், சீனா சார்பு போக்குள்ளதாகக் கருதப்படுகின்றது. அனுரவை தம்பக்கம் இழுத்துக்கொள்ள இந்தியா பகீரதப் பிரயத்தனங்களை எடுத்து வருகின்றமை கண்கூடு.
இருப்பினும், இந்தியாவின் ஒரு பிரபல நிறுவனத்தின் செயற்றிட்டத்தை மீள் பரிசீலனை செய்ய புதிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே இலங்கையில் வர்த்தக நலன்களை எதிர்பார்த்துள்ள தமிழ் வர்த்தகர் ஒருவரின் ஆதரவுடன் புதிய அரசியல் கட்சியொன்று இத்தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் வகிபாகம் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், இப் பிராந்தியத்தில் ஏனைய பல நாடுகளிலான இந்தியாவின் ஆதிக்க அரசியல் சரிவைச் சந்தித்துள்ளது.
எனவே, மீதமுள்ள இலங்கையையும் கைநழுவ விட்டுவிடப் புதுடில்லி விரும்பாது என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த அரசியலாகும்.
இதேவேளை, அனுரகுமார அரசாங்கம் இடதுசாரிக் கொள்கையின் பக்கம் முழுமையாகப் போவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும். இருப்பினும், அப்படியொரு பயம் மேற்குலகுக்கு இருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர். இப்படியான பின்னணியில், தமக்குக் கிடைத்த புலனாய்வு தகவலை அரச தரப்புடன் பகிர்ந்து கொள்ளாமல் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டதாகக் கூறப்படுகின்றது. இது உண்மை என்றால், இது பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்ற விடயமாகின்றது.
இலங்கையில் புதிதாக ஒரு அரசாங்கம் பதவியேற்றுள்ளது. மக்களுக்கு சிறியதொரு நம்பிக்கையும் நாட்டில் ஒருவித ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளதான தோற்றப்பாடு காணப்படுகின்றது.
இந்நிலையில், இதனைக் குழப்புவதற்கு ஏதேனும் குழுக்கள் அல்லது வெளிநாடுகள் விளைகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்று தூதரகங்களே அறிவிப்பது சாதாரணமான விடயமல்ல.
இது நாட்டின் பாதுகாப்பு பலவீனம் பற்றிய கேள்விகளை எழுப்புவது மட்டுமன்றி, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைச் சீண்டிப்பார்க்கின்ற விடயமும் ஆகும்.
மிக முக்கியமாக, இலங்கையில் சுற்றுலாத்துறை மிக வளர்ச்சி கண்டு வருகின்றது. எனவே, நாட்டின் சுற்றுலாப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணைகளை நடத்த வேண்டி இருக்கின்றது.
இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை தாக்குவதற்குத் திட்டமிட்டவர்கள் யார்? இஸ்ரேலுக்கு வெளியே உள்ள ஒரு நாட்டில் ஏன் அவர்கள் குறிவைக்கப்பட வேண்டும்? முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அறுகம்பே பிரதேசம் அதற்காகத் தெரிவு செய்யப்பட வேண்டும்? இதற்குப் பின்னால் பயங்கரவாதம் உள்ளதா? அல்லது வெளிச் சக்திகள் உள்ளனவா?
என்ற பல வினாக்களுக்கு, விசாரணைகள் ஊடாக விடை காண வேண்டும்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் வலிகளிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை. அது தொடர்பில்
இன்னும் நீதி நிலைநாட்டப்படவும் இல்லை.
நிலைமை இவ்வாறிருக்கையில், இலங்கையில் இன, மத முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கான ஒரு திடலாக அல்லது வெளிச் சக்திகள் தங்களுக்கு இடையில் மோதிக் கொள்வதற்கான களமாக பயன்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுமாயின், அதனை அரசாங்கமும் மக்களும் தடுத்து நிறுத்தியே தீரவேண்டும்.
10.29.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago