Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். கே அஷோக்பரன்
Twitter:@nkashokbharan
(கடந்த வாரத் தொடர்ச்சி)
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அபாயம் என்பது, வெறுமனே ஒரு நபரை நீண்டகாலத்துக்கு, நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமின்றி, தடுத்து வைக்கக்கூடிய அதிகாரத்தை, நிர்வாகத்துறையிடம் வழங்குவது என்பதோடு சுருங்கிவிடவில்லை.
மாறாக, சான்றுக் கட்டளைச் சட்டம் வழங்குகிற மிக முக்கியமான பாதுகாப்புகளுள் ஒன்றையும், பயங்கரவாத தடுப்புச் சட்டம் மறுக்கும் வகையில் அமைகிறது என்பது, மிகவும் பிரச்சினைக்குரிய விடயமாகும்.
குற்றவியல் சட்டத்தின் அடிப்படையாக இருப்பது, ‘குற்றமற்றவர் என்ற எடுகோளாகும்’. அதாவது, எந்தவொரு குற்றத்திலும், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு நபரும், குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை, நிரபராதி என்று கருதப்படுவார்கள்.
ஆகவே, குற்றம்சாட்டுவோர், அதனை சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு நிரூபிக்கும்போதுதான், ஒருவர் குற்றவாளியாகக் காணப்படுவார்.
இலங்கையின் சான்றுக் கட்டளைச் சட்டமானது, பிரித்தானியரால் இலங்கைக்கு வழங்கப்பட்ட முக்கிய சட்டங்களுள் குறிப்பிடத்தக்கதாகும். இன்றுவரை, சில புதிய சேர்க்கைகளுடனும் மாற்றங்களுடனும் ஆனால், அடிப்படைகளில் மாற்றமின்றி, சான்றுக் கட்டளைச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.
இந்தச் சான்றுக் கட்டளைச் சட்டத்தின் 25(1) சரத்தானது, ‘நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமொன்றை, அந்நபருக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது’ என்றும், 26ஆம் சரத்தானது, ‘பொலிஸாரின் காவலில் உள்ள நபரொருவர், நீதிவானின் முன்னிலையில் அன்றி, பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமொன்றை அந்நபருக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது’ என்றும் வழங்குகிறது.
இதன் சுருக்கம், நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி, அவருக்கெதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது. ஒப்புதல் வாக்குமூலமானது, நீதிவானின் முன்பு வழங்கப்படின் மட்டுமே, அதனை வழங்கிய நபருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.
பொலிஸார் முறையற்ற வழிகளில், ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்; அதனைப் பயன்படுத்தி, அந்த ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவரைக் குற்றவாளியாகக் காண்பது பாதுகாப்பானதல்ல என்பது, சான்றுக் கட்டளைச் சட்டத்தின், இந்த ஏற்பாடுகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
பயங்கரவாத தடுப்புச் சட்டமானது, சான்றுக் கட்டளைச் சட்டத்தின் இந்த ஏற்பாடுகளுக்கும், விதிவிலக்கை ஏற்படுத்தியது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 17ஆம் சரத்து, சான்றுக் கட்டளைச் சட்டத்தின் 25, 26, 30ஆவது சரத்துகள் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பற்றிய விடயங்களில் செல்லுபடியாகாது என்று வழங்குவதுடன், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 16ஆம் சரத்தானது, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது, அதற்கு மேற்பட்ட தரமுடைய ஒரு பொலிஸ் அதிகாரியிடம், நபரொருவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகும் என்ற வகையிலான ஏற்பாட்டை வழங்குகிறது.
இதையொத்த ஏற்பாடொன்று, அவசரகால சட்ட ஒழுங்குகளின் கீழும் பொதுவாகக் காணப்படுகிறது. ஆகவே, பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகால சட்டம் ஆகியவற்றின் ஒழுங்குகளின் கீழ், நபரொருவர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அதற்கு மேற்பட்ட தரமுடைய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளியாகக் காண முடியும். மேலும், குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது ஏதேனும் தூண்டுதல், அச்சுறுத்தல், வாக்குறுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டதெனில், பொதுவாகச் சான்று கட்டளைச் சட்டத்தின் 24ஆம் சரத்தின் கீழ், அத்தகைய ரீதியில் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகாது.
பயங்கரவாத தடுப்புச் சட்டமானது, குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதியின்படி பெறப்பட்டது என்பதை நிரூபிக்கும் பொறுப்பை, குறித்த நபரிடம் சாற்றுகிறது. ஆகவே, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது, தூண்டுதல், அச்சுறுத்தல், வாக்குறுதியின் படி பெறப்படவில்லை என நிரூபிக்கும் பொறுப்பு பொலிஸாருக்கில்லை. இது, மிக மிக ஆபத்தானது.
ஒட்டுமொத்தமாக, மாதக்கணக்கில் நீதித்துறையின் மேற்பார்வை, பாதுகாப்பு ஏதுமின்றி தடுத்துவைக்கப்பட்ட ஒரு நபர், பொலிஸாரிடம் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமானது செல்லுபடியாகும் என்ற எடுகோளை, பயங்கரவாத தடுப்புச் சட்டம் தாபிக்கிறது. அத்துடன், தூண்டுதல், அச்சுறுத்தல், வாக்குறுதியின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு, தடுப்பில் வைத்திருக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாக, சொன்ன அந்த நபர் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதனை நிரூபித்தல் என்பது, சாத்தியம் மிகக்குறைந்த காரியம் என்பதற்கு வரலாறும், வழக்குகளுமே சாட்சி.
மிகக் கொடுமையான சட்டங்களைச் சுட்டிக்காட்ட, ஆங்கிலத்தின் ‘ட்ரேகோனியன் லோ’ (Draconian Law) என்ற சொற்றொடரைப் பயன்படுத்தப்படுவது வழமை. கிரேக்கத்தில் வாழ்ந்த ‘ட்ரேகோ’ என்ற நபர், எதென்ஸ் நகரின் சட்டங்களைக் கோவைப்படுத்தப் பணிக்கப்பட்டார். வழக்கத்தில் மட்டுமிருந்த பழைய சட்டங்களை எல்லாம் அவர் கோவைப்படுத்தியதில், மிகச் சிறு குற்றங்களுக்கு எல்லாம் கடும் தண்டனையான மரணதண்டனை விதிக்கப்பட்டது.
உதாரணமாக, ஓர் அப்பிளைத் திருடியவனுக்கும் மரண தண்டனை என்றவாறு அமைந்தது. அவர் கோவைப்படுத்திய சட்டங்கள் மிகக் கடுமையாக, கொடுமையாக இருந்ததால், அதனை ‘இரத்தத்தில் எழுதிய சட்டங்கள்’ என்று குறிப்பிடுவதுமுண்டு. ஆகவே, கொடுமையான சட்டங்களை ‘ட்ரேகோனியன்’ சட்டங்கள் என விளிக்கும் வழக்கம் ஏற்பட்டது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, சர்வ நிச்சயமாக ‘ட்ரேகோனியன்’ சட்டம் தான். அதனால்தான், கால தசாப்தங்களாகவே, சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சிவில் ஆர்வலர்களும் புத்திசீவிகளும் இந்தக் கொடுமையான, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், எந்நபரையும் நீதிமன்றின் தலையீடின்றியே பலகாலம் தடுத்து வைக்கக்கூடிய பெரும்பலத்தைத் தரும் இச்சட்டத்தை, இல்லாதொழிக்கும் விருப்பம், இதுவரை எந்த அரசாங்கத்துக்கும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.
இந்தப் பயங்கரவாத தடுப்புச் சட்டம், தமிழ் மக்களின் போராட்டத்தை ஒடுக்கக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதில் மாற்றுக்கருத்துகள் இருக்க முடியாது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கோரப்பிடியில் அதிகமாகச் சிக்கியதும் தமிழ் மக்களே! குறிப்பாக, தமிழ் இளைஞர்கள் ஆவார்.
இந்தப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க இன்னோர் அம்சம் உண்டு. அதாவது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரொருவருக்கு, குற்றவியல் சட்டத்தின் கீழ் மரண தண்டனைதான் வழங்கப்பட வேண்டுமெனினும், அவருக்கு ஆயுள் தண்டனையே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூன்றாம் சரத்து குறிப்பிடுகிறது.
அதாவது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், எத்தகைய பாரிய குற்றத்துக்கும் மரண தண்டனை கிடையாது; உச்சபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாகும். இதன் கீழ் தண்டனை பெறும் யாரும், அரசியல் ரீதியாகத் ‘தியாகி’களாகக் காணப்பட்டு விடக்கூடாது என்பதே, இந்த ஏற்பாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என, சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிறைவேற்றுக் குழுவின் தவிசாளராக இருந்த சூரிய விக்கிரமசிங்க, தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.
தமிழ் மக்களைத் தாண்டி, ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சியின் போதும் (1988-1989) பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டு தரப்பும், இலங்கையின் அந்தந்தந்த காலத்தில் பெரும்பான்மை மக்கள் வெறுக்கும் தரப்புகளாகவே இருந்தமையால், இந்தக் கொடூரச் சட்டத்துக்கு எதிரான குரல்கள் எழவேயில்லை. மாறாக, இதன் அவசியத்தன்மை பற்றிய அரசாங்கத்தின் நியாயப்பாடுகளாகச் சொல்லப்பட்டவை, பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இன்று, 2022இல், கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் எழுச்சிக்கு பயந்து, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் பற்றிய உண்மையானதொரு புரிதல், தென்இலங்கையில் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இந்த விழிப்பு, ஏறத்தாழ 42 வருடங்கள் கடந்தாவது ஏற்பட்டிருப்பது நல்லதுதான். இந்த விழிப்பு, இந்த ‘ட்ரேகோனியன்’ சட்டங்கள் இல்லாது ஒழிக்கப்படுவதை உறுதிப்படுத்துமா என்பதை காலம்தான் சொல்லும்!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago