2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

பயங்கரவாத தடை சட்டத்தை பாவிக்க NPPக்கு தார்மிக உரிமை உண்டா?

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

கடந்த 46 ஆண்டுகளாக பல நூறு குடும்பங்களின் எதிர்க்காலத்தை சீர்குலைத்த பயங்கரவாத தடைச் சட்டமும், சர்வதேச குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தச் சட்டமுமே இலங்கையில் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளாலும் பதவியில் உள்ள அரசியல்வாதிகளாலும் மிகவும் மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சட்டங்களாகும்.

பிரிவினைவாதிகள் என்றோ பிரிவினைவாதத்துக்கு உதவினார்கள் என்றோ குற்றஞ்சாட்டப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழர்களினதும் அவர்களது உறவினர்களினதும் வாழ்க்கை பொலிஸாராலும் அரசியல்வாதிகளாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்  மூலம் மிக மோசமாக சீர்குலைக்கப்பட்டுள்ளது.

பல நூறு தமிழ் இளைஞர்கள் இச்சட்டத்தைப் பாவித்து வருடக் கணக்கில் அல்ல தசாப்தக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் இப்போதும் சிறைகளில் தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.

தமது வயதைப் பார்க்கிலும் நீண்ட காலமாக சில தமிழர்கள் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக 2021ஆம் அப்போதைய ராஜாங்க அமைச்சரான நாமல் ராஜபக்‌ஷ வெலிக்கடை சிறைச்சாலையைப் பார்த்து விட்டு வந்து பாராளுமன்றத்தில் கூறினார். அப்போது அவருக்கு வயது 35 ஆக இருந்தது. ஆனால், அவரது அரசாங்கம் அதற்குப் பின்னராவது அக்கைதிகளை விடுதலை செய்ய எதனையும் செய்யவில்லை.

ஆயினும், பிரிவினைவாத போராட்டத்தின் தலைவர்களாக இருந்து படையினரை மட்டுமல்லாது, சாதாரண சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும் கொடூரமான முறையில் படுகொலை செய்யக் கட்டளையிட்ட புலிகள் அமைப்பின் சில தலைவர்கள், அரச அனுசரணையுடன் சுகபோக வாழ்க்கையை நடத்தினர். சிலர் இன்னமும் அரச விருந்தாளிகளாக இருக்கின்றனர்.

இது எவ்வளவு பெரிய அக்கிரமம்?தமிழர்களின் எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும், பல முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஆசிரியர் அஹ்னாப் ஜசீம் அவர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்களாவர்.

சுருக்கமாகப் பலரால் ICCPR என்றழைக்கப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (International Civil and political; convention Act) 1966ஆம் ஆண்டு ஐ,நா. பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்டு 1976ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அதனை தமது உறுப்பு நாடுகள் தத்தமது வரையறைகளுக்குள்; சட்டமாக்க வேண்டும் என்று ஐநா எதிர்பார்த்தது. அதன் பிரகாரம் இலங்கையில் அது 2007ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.

பல்வேறு நாடுகளில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே அவ்வொப்பந்தம் வகுக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் அது சிறுபான்மையினருக்கு எதிராகவே பாவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அதுவும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் போலவே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை விகாரைகளில் நடைபெறும் சில நடவடிக்கைகளை சிறுகதையாக எழுதிய 
ஒரு சிங்கள எழுத்தாளருக்கு எதிராகவும் அது பாவிக்கப்பட்டது. மற்றொரு முறை அது ஒரு ஏழை முஸ்லிம் பெண்ணுக்கு எதிராகப் பாவிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற 2019ஆம் ஆண்டு மஹியங்கனை பிரதேசத்தில் ஹசலக்க என்ற கிராமத்தைச் சேர்ந்த அப்பெண் வண்டிச் சில்லை பொறித்த ஆடையொன்றை அணிந்து வீதியில் செல்லும் போது அவர் புத்தரின் தர்ம சக்கரத்தை அவமானப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார். அவருக்கு எதிராக பொலிஸார்  ICCPR சட்டத்தையே பாவித்தனர்.

பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்ட போதிலும் அது வரையிலான காலத்தில் அவரும் அவரது குடும்பமும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.இரண்டு கிளர்ச்சிகளில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியும் பயங்கரவாத தடைச் சட்டத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அக்கட்சி ஆரம்பத்திலிருந்தே அச்சட்டத்தை எதிர்த்து வந்துள்ளது. தாம் பதவிக்கு வந்தால் அதனை இரத்துச் செய்வோம் என்றும் உறுதியளித்தது. எனினும், அக்கட்சியை மையமாகக்கொண்ட தேசிய மக்கள் சக்தியே இப்போது பதவியியல் இருக்கிறது.

இந்த அரசாங்கமும் பல சந்தேக நபர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பாவித்து வருகிறது. அதேவேளை தாம் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் இன்னமும் கூறி வருகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே பிரதேசத்தில் சில இஸ்‌ரேலிய உல்லாசப் பிரயாணிகள் சட்ட விரோதமான முறையில் தமது சமயத் தளமொன்றை நிறுவி வழிபட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக கடந்த ஒக்டோபர் மாதம் பிரதேச மக்கள் குரலெழுப்பினர். அத்தோடு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் எனவே 
அங்கே செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்க அரசாங்கம் தமது பிரவைகளை எச்சரிக்கை செய்தது.

இதனை அடுத்து, இஸ்‌ரேலிய உல்லாச பிரயாணிகளுக்கு எதிராக செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதன்முதலாக பயங்கரவாத் தடைச் சட்டத்தைப் பாவித்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி இவ்வாறு செய்ததைப் பலர் விமர்சித்தனர்.

அதற்கு பதிலளித்த வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத், தாம் பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்த போதிலும், புதியதோர் சட்டத்தைக் கொண்டு வரும் வரை பயங்கரவாத செயற்களுக்கு எதிராக தற்போது அமுலில் உள்ள சட்டத்தையே பாவிக்க நேரிடும் என்றார்.

 பயங்கரவாத செயல்களை முறியடிக்க வேறு எத்தனையோ பல சட்டங்கள் இருக்கின்றன என்பது முன்னர் மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த ஒரு வாதமாகும். அந்த வாதம் இப்போது செல்லுபடியாகவில்லை போலும்.
தற்போது பொலிஸார் மற்றொரு இளைஞரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளனர். இஸ்‌ரேலியர்கள் காவில் மேற்கொண்டு வரும் பலஸ்தீன இன அழிப்புக்கு எதிராக ஸ்டிக்கர் ஒன்றை கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள கட்டிடமொன்றில் ஒட்டியதை அடுத்தே அவர் கடந்த மார்ச் 22ஆம் திகதி கைது செய்யப்பட்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டம் பாவிக்கப்பட்ட இரண்டு சம்பவங்களிலும் இஸ்ரேலர்களுக்க எதிராக செயற்பட்டவர்களைக் குறிவைத்தே அச்சட்டம் உபயோகிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமான விடயமாகும்.

இரண்டாவது சம்பவத்தை அடுத்து, அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த 30ஆம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்ட பொலிஸார் அந்நபர் ஸ்டிக்கர் ஒட்டியதற்காகக் கைது செய்யப்படவில்லை என்றும் ஸ்டிக்கர் சம்பவத்தை அடுத்து அவரைப் பற்றி விசாரித்ததில் அவர் தீவிரவாத கருத்துடையவர் என்பது தெரிய வரவே அவர் கைது செய்யப்ப்டார் என்றும் கூறினர். அவரிடம் இருந்த தீவிரவாத கருத்து என்ன என்பதை பொலிஸார் குறிப்பிடவில்லை.

அவ்விளக்கத்தை நாம் ஏற்றாலும், இங்கே எழும் கேள்வி என்னவென்றால் காசா இன அழிப்பை அரசாங்கம் எதிர்ப்பதாக இருந்தால் அவ்வின அழிப்பை எதிர்த்து ஸ்டிக்கர் ஒட்டியவரைப் பற்றி பொலிஸார் ஏன் விசாரணை நடத்த வேண்டும் என்பதாகும். அதேபோல, பயங்கரவாத தடைச் சட்டத்தை 46 வருடங்களாக எதிர்த்து வரும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக அச்சட்டத்தை எவ்வாறு பாவிக்க முடியும் என்பதும் 
முக்கிய கேள்வியாகும்.

மிகக் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கராத தடைச் சட்டத்துக்குப் பதிலாகப் பயங்கரவாத செயல்களைக் கையாள்வதற்காக சர்வதேச தரத்திலான சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதாக அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் வாக்குறுதி அளித்துள்ளது.

அதன் பிரகாரம்,2018ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சித் தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான சட்டம் ((Counter Terrorism Bill) என்ற சட்ட மூலத்தை முன்வைத்தது. 2019ஆம் ஆண்டு அரசாங்கம் மாறியதை அடுத்து அது இரத்துச் செய்யப்பட்டது.

2013ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கமும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (Anti-Terrorism Bill) என்ற சட்ட மூலத்தை முன்வைத்தது. இந்த இரண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் போதே முன்வைக்கப்பட்டன. முதல் சட்ட மூலம் அவர் பிரதமராக இருக்கும் போதும் இரண்டாவது சட்ட மூலம் அவர் ஜனாதிபதியாக இருக்கும் போதும் முன்வைக்கப்பட்டன. இரண்டும் தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்கிலும், 

மோசமானவை எனக் கூறிய ஐநா மனிய உரிமை பேரைவை உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அவற்றை நிராகரித்தன.
தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் தயவால் உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ளும் நிலையில்இருக்கும் அரசாங்கம் ஐரோப்பிய நாடாளுமன்றம் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பற்றி நிறைவேற்றிய பிரேரணையை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாகவும் அதன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாகவும் திருப்திகரமாக 
நடவடிக்கை எடுக்காவிட்டால் 

இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை இருத்துச் செய்ய நேரிடும் என்று அப்பிரேரணையில் எச்சரிக்கப்பட்டு இருந்தது.  தமது தார்மிக கடமையைப் பற்றி அக்கறையில்லாவிட்டால் அரசாங்கம் மிகவும் மோசமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய நிலையில் குறைந்தபட்சம் இந்த அச்சுறுத்தலைப் பற்றியாவது சிந்தித்து செயலாற்ற வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X