Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Mayu / 2024 நவம்பர் 15 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்றது. பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. இவ்வளவு குறுகிய இடைவெளியில் நாட்டில் முக்கிய இரண்டு தேர்தல்கள் இம்முறை நடைபெறுகிறது. இரண்டு தேர்தல்களுக்கும் இடையே 54 நாட்களே இருக்கின்றன.
இதற்கு முன்னர் மிகவும் குறுகிய இடைவெளியோடு ஜனாதிபதித் தேர்தலொன்றும் பொதுத் தேர்தலொன்றும் 1988 - 89 ஆண்டுகளிலேயே நடைபெற்றுள்ளன.
அப்போது ஜனாதிபதித் தேர்தல் 1988ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி நடைபெற்றது. பொதுத் தேர்தல் 1989ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி நiபெற்றது. இரண்டுக்கும் இடையே 64 நாட்களே இருந்தன.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் வித்தியாசமானதொரு தேர்தலாகும். ஏனெனில், வரலாற்றில் முதன்முறையாக உயர்குடி செல்வந்தர்களிடம் இருந்து சாதாரண மக்களால் நடத்தப்படும் ஒரு கட்சியிடம் ஆட்சி மாறியிருக்கிறது.
ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணி பாரியதோர் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் தற்போதைய ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளது.
ஆனால், அக்கட்சிக்குப் பாராளுமன்றத்திலும் அதிகாரம் கிடைத்தால் மட்டுமே அதன் தலைவர்களால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனினும், அவ்வாறான மாற்றம் ஏற்படுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பாராளுமன்றத்திலும் பாரிய மாற்றம் ஏற்படவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஏனெனில், இலங்கையின் பாராளுமன்றம் எந்த அளவுக்கு மக்கள் நலனை முதன்மையாகக் கருதிச் செயற்பட்டுள்ளது. என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையை அடைவதற்கு இனப் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தீராதிருப்பதற்கும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் பிரேரணைகளும் தேவையான சட்டங்கள் மற்றும் பிரேரணைகளை நிறைவேற்றப்படாமையுமே பிரதான காரணமாகும். தற்போதைய அரசியல் கள நிலைவரங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பார்க்கும்போது, பாராளுமன்றத்தில் ஏற்பட வேண்டிய இந்த மாற்றத்தைப் பற்றிய தேவை மென்மேலும் அதிகமாகவே தென்படுகிறது.
ஏனெனில், நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் வரலாறு காணாத பாரியதோர் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரும் மாறி இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டை பொருளாதார பாதாளத்திலிருந்து மீட்டெடுப்பதோ அல்லது சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதோ இன்னமும் அவர்களது நோக்கமாகத் தெரியவில்லை. எவ்வகையிலேனும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவது மட்டுமே அவர்களது நோக்கமாகும்.
ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டணியாக இயங்கிய கட்சிகள் அனைத்தும் பொதுத் தேர்தலிலும் அதே கூட்டணிகளாக? இயங்குமா? என்பதை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் தெரிய வரும். ஆனால், சில அரசியல்வாதிகள் மாறி இருப்பதையும் காணமுடிகிறது.
ஏனைய கட்சிகளின் அரசியல்வாதிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பதைப் போல், செயற்படும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியோடும் இணைய மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கீழ் பாராளுமன்றத்துக்குத் தெரிவான சில அரசியல்வாதிகள் முன்வந்துள்ளனர். ஆயினும், தேசிய மக்கள் சக்தி இன்னமும் அதைப் பற்றி தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான சில அரசியல்வாதிகள் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்தனர். இப்போது அவர்களில் சிலர் வேறு வழிகளில் பயணிக்க முற்படுவதாகத் தெரிகிறது.
அவர்களில் சிலர் ஜனாதிபதித் தேர்தலின் போது, ரணிலை ஆதரித்தாலும் தேர்தலுக்கு முன்னரே மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் பிரதமருமாக இருந்த தினேஷ் குணவர்தனவின் தலைமையில் மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி என்றதொரு கூட்டணியை அமைத்தனர். தேர்தல் சின்னமாகக் கிண்ணத்தையும் தெரிவு செய்தனர். அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் பொதுத் தேர்தலில் கூட்டாகப் போட்டியிடுவதற்காகப் பொதுஜன முன்னணியோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்ற ரணிலை விட்டால் வேறு ஆளில்லை என்று கூறிய இவர்கள், பொருளாதார நெருக்கடியை உச்சக் கடத்துக்குக் கொண்டு வந்த பொதுஜன முன்னணியோடு பேச்சுவார்த்தை நடத்துவது விந்தையான விடயமாகும்.
பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிட்டுத் தெரிவான சில ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ரணிலை ஆதரித்தனர். அவர்கள் தொடர்ந்தும் ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடத் தயாராகின்றனர்.
அதேவேளை, இவ்வாறே ரணிலைப் போற்றிய சில சிறுபான்மையின கட்சிகளும் தனி வழியில் போகத் தயாராவதாகச் செய்திகள் கூறுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலின் போது, சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத் தேர்தலின் போது, தமது வீடு சின்னத்தின் கீழ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
அக்கட்சி தனித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத நிலையில், பிரதான கட்சி ஒன்றை ஆதரிப்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால், அதற்குக் கொள்கை ரீதியிலான அடிப்படை இருக்க வேண்டும்.
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கே தமது கட்சி ஆதரவு வழங்கும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தில் முதலில் கூறினர். ஆனால், பின்னர் அந்த விடயத்தில் எந்த விதமான உத்தரவாதத்தையும் வழங்காத ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க முடிவு செய்தனர்.
குறைந்தபட்சம் தாம் பதவிக்கு வந்தால் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பூரணமாக அமுலாக்குவதாக கூறிய சஜித் பிரேமதாசவினால் அதனை அமுலாக்க முடியுமா என்பதையாவது அக்கட்சி சிந்தித்ததா? சஜித் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு கூறும் போது அச்சம் கொண்ட அவரது கட்சித் தலைவர்கள் கொழும்பிலிருந்து பல்வேறு விதமாக இக்கூற்றை விளக்கினர்.
அதன் அர்த்தம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது என்பதல்ல என்று எஸ்.எம்.மரிக்கார கூறினார். தற்போது செயலிழந்து இருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தி மாகாண சபை முறையை மீண்டும் இயங்கச் செய்வதையே சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்
என்று திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
எவ்வாறாயினும், தனித்துப் போட்டியிட்டு தமது பலத்தைக் காட்டக்கூடிய பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டிப் போடுவதையும் விளங்கிக்கொள்ளலாம்.
ஆனால், அதன் பின்னர் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தோல்வியடைந்தாலும் தமிழரசுக் கட்சி தொடர்ந்து அதனை ஆதரிக்க இருக்கிறதா? அல்லது அனுர குமார ஜனாதிபதியாக இருப்பதால் மற்றொரு கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போய்விடும் என்ற அடிப்படையில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு அளித்ததைப் போல் தேர்தலின் பின்னர் அனுரகுமாரவின் அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கப் போகிறதா?
தெற்கே உள்ள பிரதான அரசியல் கட்சிகளுடன் எந்த அடிப்படையில் செயல்படுவது என்ற கொள்கை தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லை.
அவ்வாறானதொரு கொள்கையை வகுப்பதும் இலகுவானதல்ல என்பதை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிக்க மக்கள் விடுதலை முன்னணி சட்ட நடவடிக்கை எடுத்தது என்ற காரணத்தால், சிலர் அதற்கு ஆதரவு வழங்க மறுக்கின்றனர். ஆனால் புலிகளை முற்றாக அழித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அப் போர் முடிவடைந்த உடனேயே 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அவர்கள் ஆதரவு வழங்கினர்.
2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் ஐ.தே.க தலைமையிலான கூட்டணிகளுக்கு ஆதரவு வழங்கின.
அந்த ஐ.தே.க. புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருக்கும் போதே அவ்வமைப்பிலிருந்து பிரிந்து செல்ல கருணா அம்மானுக்கு உதவியது. புலிகள் தோல்வி அடைய அது பிரதான காரணமாகியது.
அப்போது சஜித்தும் ஐ.தே.கவின் தலைவர்களில் ஒருவராகவே இருந்தார். அந்த சஜித்துக்கு தமிழரசுக் கட்சி 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற
ஜனாதிபதித் தேர்தல்களில் உதவியது.
தெற்கை மையமாகக்கொண்ட எந்தவொரு பிரதான கட்சியும் வடக்கு, கிழக்கு இணைப்பையோ, சமஷ்டி என்ற சொல்லையோ ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. இந்த நிலையில், தமிழ் கட்சிகள் மாகாண இணைப்பையும் சமஷ்டியையும் ஏற்கும் கட்சியை ஆதரிப்போம் என்று கூறிவிட்டு எவரும் ஏற்காத நிலையில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்குவதை விட இப்பிரதான கட்சிகளுடனான உறவு தொடர்பாகப் பொருத்தமானதொரு கொள்கையை வகுத்துக் கொள்வதே சிறந்ததாகும். முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரை அவற்றின் தலைவர்களுக்குப் பட்டம், பதவிகள் கிடைத்தால் போதுமானதாகும்.
எனவேதான், முஸ்லிம்களுக்கு எதிராகக் கறுப்பு ஜூலையைப் போன்றதொரு நிலை உருவாகுமோ என்று அஞ்சும் அளவுக்கு 2019ஆம் ஆண்டு இனவாதத்தைத்
தூண்டிய ராஜபக்ஷக்களுக்கு எதிராகக் குரலெழுப்பி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குச் சென்ற முஸ்லிம் தலைவர்கள் சிலர் பின்னர் அதே ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் சேர்ந்தனர். ஆனால், அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
10.09.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
15 minute ago
28 minute ago