Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 27 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தம் தவம்
ஜே .வி.பியினரின் (மக்கள் விடுதலை முன்னணி) ஆயுதக் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கவென 1988, 1989களில் நடத்தி செல்லப்பட்டதாகக் கூறப்படும் ‘பட்டலந்த வதை முகாம்’ தொடர்பான ‘பட்டலந்த அறிக்கை’
25 வருடங்களின் பின்னர், தூசி தட்டப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு தற்போதைய
ஜே.வி.பி., என்.பி.பி. அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாள் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கை தொடர்பில் இலங்கையில் மீண்டும் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சி புரிந்த காலத்தில், இளைஞர் விவகார, தொழில் வாய்ப்புக்கள் அமைச்சராகவும், பின்னர் கைத்தொழில் அமைச்சராகவும் இருந்த ரணில் விக்ரமசிங்கவே இந்த ‘பட்டலந்த வதை முகாம்’ சூத்திரதாரியென்ற குற்றச்சாட்டுக்கள் மீண்டும் முன்வைக்கப்பட்டு, அவரைக் கைது செய்ய வேண்டும், குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்ற குரல்கள் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளன. ஆட்சியாளர்களும் நாம் விசாரணை நடத்துவோம், நீதி வழங்குவோம் என உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவில் கிரிபத்கொட- பியகம வீதியின் சந்தியிலிருந்து தெற்காக சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் உரத் தொழிற்சாலை ஒன்று உள்ள பகுதியிலேயே இந்த பட்டலந்த வதை முகாம் இருந்தது. இந்த பட்டலந்த வதை முகாமில் வைத்தே ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இளைஞர், யுவதிகள் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்படுவதை இந்த வதை முகாமின் சூத்திரதாரியென குற்றம்சாட்டப்படும் அப்போதைய அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இவ்வாறான நிலையில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995இல் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய பட்டலந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டதையடுத்து, 1988, 1989களில் பட்டலந்த உரத் தொழிற்சாலையில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில் நடத்திச் செல்லப்பட்ட வதை முகாம் தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகின. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிர் தப்பியவர்கள் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளை ஆணைக்குழு முன்னிலையில் அடையாளப்படுத்தினர்.
இந்நிலையில், ‘பட்டலந்த வதைமுகாம்’ படுகொலைகள் பற்றி குற்றத்தடுப்பு பிரிவினராலும், ஜனாதிபதி ஆணைக் குழுவினராலும் ரணில் விக்ரமசிங்க விசாரணை செய்யப்பட்டிருந்தார். ஆனால், அந்த விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. அதன் பரிந்துரைகள் வெளிப்படுத்தப்படவும் இல்லை. அறிக்கை சந்திரிகா அரசினால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறான நிலையில், ‘பட்டலந்த வதைமுகாம்’ சித்திரவதைகள், படுகொலைகளை, அதுதொடர்பிலான ஆணைக்குழு அறிக்கையினை மக்களும் இந்த நாடும் மறந்து விட்டன. ஏன்? பட்டலந்த வதைமுகாமில் தமது ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்த இன்றைய ஆட்சியாளர்களான
ஜே.வி.பியினர் கூட, பட்டலந்த அறிக்கையை மறந்து விட்டனர்.
இவ்வாறான நிலையில்தான், கடந்த 06-03-2025 அன்று அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு முன்னாள் ஜனாதிபதியும் ‘பட்டலந்த வதைமுகாம்’சூத்திரதாரியென குற்றம் சாட்டப்படுபவருமான ரணில் விக்ரமசிங்க வழங்கிய பேட்டியும் அதில் ஜே.வி.பி. ஆயுத கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை, மற்றும் படுகொலை பற்றிய கேள்விக்கு அவர் கூறிய பதில்களும் மீண்டும் பட்டலந்த வதைமுகாமை மக்கள் முன் கொண்டு வந்துள்ளதுடன், அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் வெளிப்பாடாக, அப்போது ஆயுத கிளர்ச்சியாளர்களாக இருந்தவர்களும் தற்போது ஆட்சியாளர்களாக உள்ளவர்களுமான ஜே.வி.பியினர், அந்த ‘பட்டலந்தை வதைமுகாம்’ தொடர்பான அறிக்கையை 25 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மாளிகையிலிருந்து எடுத்து தூசு தட்டி, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டம் பாயும் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் தற்போது நாட்டில் உள்ள அனைத்து நெருக்கடிகளும் மறக்கடிக்கப்பட்டு ‘பட்டலந்த அறிக்கை’ முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ‘பட்டலந்த வதை முகாம்’ செயற்பட்ட காலத்தில் அந்த வதைமுகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள், ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்த தற்போதைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர். ‘பட்டலந்த அறிக்கை’யைத் தயாரிக்க உத்தரவிட்ட அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவினரின் கட்சியினரும் இந்த ஜே.வி.பியினரால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், 2005இல் இந்த ஜே.பி.யினர் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அரசின் பங்காளிகளாக இருந்ததுடன், அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர். அப்போது ஜே.வி.பியினருக்கு இந்த ‘பட்டலந்த அறிக்கை’ தேவைப்படவில்லை.அதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிபீடம் ஏற இதே ஜே.வி.பியினர் பேராதரவு வழங்கியதுடன், பக்க பலமாகவும் இருந்தனர். அப்போதும் இந்த ‘பட்டலந்த அறிக்கை’யை வெளியே கொண்டுவர வேண்டுமென்பதில் இவர்கள் கிஞ்சித்தும் அக்கறை காட்டவில்லை.
அதன் பின்னர், 2015இல் ரணில் விக்ரமசிங்க அரசுக்கும் ஆதரவளித்தனர். அப்போதும் இந்த ‘பட்டலந்த அறிக்கை’யை வெளியே கொண்டுவர வேண்டுமென்பதில் எந்த அக்கறையும் காட்டவில்லை. தற்போது தமது ஆட்சி அமைந்த நிலையில் கூட, அல்-ஜஸீரா தொலைக்காட்சி ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் கேள்வி எழுப்பும் வரை அந்த அறிக்கை தொடர்பில் ஒரு துரும்பைக்கூட இந்த ஜே .வி.பியினர் நகர்த்தவில்லை.
அல்-ஜஸீரா தொலைக்காட்சி ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் கேள்வி எழுப்பிய பின்னர்தான் ஏதோ அப்போதுதான் ‘பட்டலந்த வதைமுகாம்’ தொடர்பான அறிக்கை ஒன்று இருப்பதனை அறிந்து கொண்டதுபோல, துடித்தெழுந்து அதை ஜனாதிபதி மாளிகையின் இருட்டறையிலிருந்து தேடிக் கண்டுபிடித்து எடுத்ததாகக் கூறி பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.-என்.பி.பி. அரசின் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க அந்த ‘பட்டலந்த அறிக்கை’யை சமர்ப்பித்து உணர்ச்சிகரமாக உரையாற்றியதும் சபாநாயகர் கண்கலங்கியதும்
ஜே.வி.பி.-என்.பி.பி. அரசின் அமைச்சர்கள் எம்.பிக்கள் இறுகிய, துயரம் தோய்ந்த முகங்களுடன் அமர்ந்திருந்தது எல்லாம் அப்பட்டமான அரசியல் நாடகம். நடிப்பு
கடந்த காலங்களில் சந்திரிகா அரசாங்கம், ராஜபக்ஷ அரசாங்கம் ஆகியவற்றில் பங்காளிகளாக இருந்த போது, இந்த ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் வாய்திறக்காதவர்கள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தாதவர்கள், தற்போது இவர்கள் சித்திரவதைக்காரர் என்று குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து.
2015இல் அரசாங்கத்தை அமைத்த போது கூட, ‘பட்டலந்த அறிக்கை’யைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தாதவர்கள் ஒருவருக்கும் தெரியாத இந்த அறிக்கையை அல்-ஜஸீரா தொலைக்காட்சி கண்டுபிடித்து அறிவித்ததையடுத்தே அது தொடர்பில் தெரிந்து கொண்டவர்கள் போல, உணர்ச்சிவசப்படுவது, கண்கலங்குவது, துயரமடைவது ஜே.வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்களின் அரசியல் நாடகமின்றி, நடிப்பின்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
அதேவேளை, ‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’ தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 16ஆம் திகதி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், முழுமையான அரசியல் அவதூறு பிரசாரத்தை நோக்கமாகக் கொண்டு ‘பட்டலந்த ஆணைக்குழு’ நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
அறிக்கையின் முடிவுகளில், ஒரு அமைச்சராக, பொலிஸ் கண்காணிப்பாளர் மூலம் பொலிஸாருக்கு வீட்டு வசதி வழங்குவது எனக்கு சரியாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளை ஐ.ஜி.பியிடம் ஒப்படைத்து, அவர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதே சரியான முறையாக இருக்க வேண்டும். இந்தச் செயலுக்கு நளின் டெல்கோடாவும் நானும் மறைமுகமாகப் பொறுப்பு என்று ஆணைய அறிக்கை கூறுகிறது.
ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற விடயங்கள் எதுவும் எனக்கு பொருந்தாது. 1988இல் ஜே.வி.பி. மேற்கொண்ட ஏராளமான பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் அவதானிப்புகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளன. பின்னணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்த குற்றச்சாட்டுகளும் எனக்கு பொருந்தாது. அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
எனவே, ஆட்சிபுரிந்த அனுபவமற்ற ஜே .வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றவாளியாக்க வேண்டும், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அனுதாப வாக்குகளை அள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அவசரப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இந்த ‘பட்டலந்த அறிக்கை’ விவாதத்திற்கு வரும்போது, பட்டலந்த வதைமுகாமில் சித்திரவதைப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஜே.வி.பியினரைப் பற்றி மட்டுமல்லாது, அப்போது ஆயுதக் கிளர்ச்சி என்ற பெயரில் ஜே.வி.பியினரால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் படுகொலைகளையும் அம்பலப்படுத்தப் போகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து ஜே.வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்கள் வீசிய ‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’ இறுதியில் ஜே.வி.பி. என்.பி.பி. ஆட்சியாளர்களையே மோசமாகத் தாக்கப் போகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .