2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

பங்களாதேஷ்: போரில் பிறந்த தேசம்

Editorial   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாம் ஒருவரை முற்றிலும் சாா்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது ஆனால் இவ்வுலகில் நாம் ஒருவரை ஒருவா் சாா்ந்து வாழ்கிறோம்”    இந்தியாவின் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் கூற்று இது.

“ஒரு மோசமான அண்டை நாடு ஒரு துரதிர்ஷ்டம்; அதுவே ஒரு நல்ல நாடாக அமையுமேயானால் அதைவிட ஆசீர்வாதம் வேறு இல்லை” என்று ஒரு கிரேக்க அறிஞா் சொல்லியிருக்கிறாா்.

அண்டைய நாட்டின் உதவி ஒத்தாசை மூலம் இன்று சுதந்திர நாடாக எழுந்து நிற்கின்ற பங்களாதேஷ் என்ற நாட்டிற்கு மேலே சுட்டிக்காட்டிய கருத்துக்கள்  சரியாக பொருந்திப் போகின்றன.

பங்களாதேஷ் என்ற நாடு அது எதிா்கொண்ட அடக்குமுறைகளிலிருந்து மீண்டு, உலக வரைபடத்தில் தனிநாடாக  இடம்பெறுவதற்கு அதன் அண்டை நாடான இந்தியா கரம் கொடுத்தது.  பங்களாதேஷ் என்ற  நாடு உருவாகி ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டன. 1971ம் ஆண்டு டிசம்பா் மாதம்  பங்களாதேஷ், பாகிஸ்தானோடு  போராடி விடுதலை பெற்று  சுதந்திர நாடாக மாறியது. 

இந்தியாவை ஆண்ட பிாித்தானியர்கள் தங்களது ஆட்சி அதிகாரம் நிலைத்திருக்க, பல்வேறு பிாித்தாளும் சூழ்ச்சிகளை செய்து வந்தனர். அதில் ஒன்றுதான் வங்கப்பிரிவினை.

1905ம் ஆண்டு இந்தியாவின் வங்காள மாகாணம் மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் என இரண்டு  மாகாணங்களாக பிரிக்கப்பட்டன. மேற்கு வங்காளத்தில் இந்துக்களும், கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக இருந்தனர்.

பிாித்தானியர்களின் இந்த மதரீதியிலான பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தேசியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் தொடா் போராட்டங்கள்  நடத்தப்பட்டன. இதன் விளைவாக 1911ம் ஆண்டு, பிாித்த  இரண்டு மாகாணங்களையும் ஒருங்கிணைந்த வங்காளமாக பிாித்தானிய அரசு மீண்டும் அறிவித்தது.

பிாித்தானியாின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா 1947ம் ஆண்டு  இந்து, முஸ்லிம் என்ற இன அடிப்படையில் இரண்டாகப் பிாிக்கப்பட்டு, விடுதலை வழங்கப்பட்டது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி பாகிஸ்தான் என்ற பெயரில் தனிநாடாக உருவானது.  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த “கிழக்கு வங்காளம்”  என்ற பகுதியும் கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டது.  

கிழக்கு பாகிஸ்தானில், பெங்காலி மொழியை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்து வந்தனா். கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில்  பாகிஸ்தானோடு இது இணைக்கப்பட்ட போதும், பாகிஸ்தானுடனான எவ்வித நிலத்தொடா்பையும்  இந்த கிழக்கு பாகிஸ்தான் கொண்டிருக்கவில்லை.

அது தவிர, பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்குமிடையிலான தூரம் சுமார் 1600 கிலோ மீட்டர்களாக இருந்தது.  மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான போக்குவரத்து  இந்தியாவினூடாகவே நடைபெற்று வந்தது.       

பாகிஸ்தான் அரசு, கிழக்கு பாகிஸ்தானின் மக்கள் மீது அதிக பாகுபாடு காட்டி வந்தது.  மொழி வேறுபாடு காரணமாகவும், அடக்குமுறை காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் பலத்த நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனா்.

பாகிஸ்தானின் இந்த அடக்குமுறையை சுமாா் இரண்டரை தசாப்த காலம் பொறுத்துக் கொண்டிருந்த மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கிளா்ந்தெழ ஆரம்பித்தனா். அடக்குமுறையை அடித்து நொறுக்க அவா்கள் அணி திரண்டனா். தனிநாடு கோரிக்கையை முன்வைத்து அங்கு போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன.

பாகிஸ்தானின் ஆட்சியின் கீழ் இருந்த “கிழக்கு பாகிஸ்தான்” பிளவுபட்டு  தனி நாடாக  பிரிந்து செல்வதற்குாிய  நியாயமான காரணிகளை பாகிஸ்தானின் அதிகார வா்க்கமே  உருவாக்கியிருந்தது.  கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மீதான பாகிஸ்தானின் எதேச்சதிகார அடக்குமுறைச் செயற்பாடுகளினால் இந்த எழுச்சிகள்  ஏற்பட்டன.

கிழக்கு பாகிஸ்தானில் வாழும் மக்களுக்கு தேவையான அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும், அவா்களின் அடிப்படை  உாிமைகளை பாதுகாப்பதற்கும், வளப்பகிா்வுகளை நியாயமான முறையில்  வழங்குவதற்கும்  பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது. கிழக்கு பாகிஸ்தான்  மக்களுக்கு காட்டப்பட்ட பாரபட்சம் இந்தப் பிாிவினைக்கு அடிப்படைக் காரணிகளாகின.

கிழக்கு பாகிஸ்தான் மக்களின் அடிப்படை உாிமைகளை மறுத்து வந்த பாகிஸ்தானின் அதிகார வா்க்கம், பெங்காலி மொழியை தாய்மொழியாகக் கொண்ட அந்த மக்கள் மீது உருது மொழியை பலாத்காரமாக திணிக்கும் அவலமான  நடவடிக்கையில் இறங்கியது. 

கிழக்கு பாகிஸ்தான் மக்களின் தாய் மொழி பெங்காலி மொழியாக இருந்தது.  என்றபோதிலும், பாகிஸ்தான்  அரசு, உருது மொழியை அதன் நிர்வாக மொழியாக அறிவித்து கிழக்கு பாகிஸ்தான் மக்களின் மொழியுரிமையை  இருட்டடிப்பு செய்தது.

அது மாத்திரமல்லாமல், அந்த மக்கள் மீது அரசியல் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டது.  1970ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் இடம் பெற்ற, தேர்தலில் ஷேக் முஜிபுா் றஹ்மானின் அவாமி லீக் அமோக வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அரசு அந்தத்  தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்தது. மேலும், வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதுடன், தோ்தலில் வெற்றி பெற்ற ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு அதிகாரத்தை வழங்கவும் மறுத்தது.

1970ம்  ஆண்டு,  போலா என்ற சூறாவளி கிழக்கு பாகிஸ்தானைத் தாக்கியதால்  மூன்று லட்சம்  மக்கள் உயிரிழந்தனர். இந்த அழிவுக்கு மேற்கு பாகிஸ்தான் அரசாங்கம் சரியாக நிதியுதவி வழங்காமல் பாரபட்சம் காட்டியதாக  கிழக்கு  பாகிஸ்தானியர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் குதித்தனா்.

பாகிஸ்தான் அரசின் அத்துமீறல்களுக்கும், பாரபட்சமான நிலைப்பாட்டிற்கும் எதிராக மக்கள் குரல் எழுப்பத் தொடங்கினா். கிழக்கு பாகிஸ்தான் மக்களின் போராட்டம் கூா்மையடைந்தது.

1971ம் ஆண்டு மார்ச் 26ம் திகதியன்று, கிழக்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தானிடமிருந்து பிரிய வேண்டுமென்ற கோரிக்கையை அறிவித்தது.

பாகிஸ்தானின் அடக்குமுறைகளுக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானுக்கு உதவுமாறு, அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம், அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் முஜீபுர் ரகுமான் கோரிக்கை விடுத்தார்.

போராட்டத்தை மோசமான முறையில் நசுக்க பாகிஸ்தான் அரசு முன்வந்தது. கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. பலா் சிறைகளில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டனா். இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தனா்.

கிழக்கு பாகிஸ்தானின்  விடுதலை தொடா்பாக இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளுக்கிடையில் யுத்தம் ஒன்று வெடிக்கும் அளவிற்கு நிலைமை உக்கிரமடைந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தான் மக்கள் “முக்தி வாகினி” என்ற மக்கள் போராட்டத்தில் இணைந்த போது, இந்தியாவும் பங்களாதேஷ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவியது.

இதன் விளைவாக,  பாகிஸ்தான் இராணுவம், இந்தியா மீது முதலாவதாக தாக்குதல் நடாத்த திட்டமிட்டது.   பாகிஸ்தான் அரசு,  இந்தியா மீது “செங்கிஸ் கான் நடவடிக்கை” என்ற பெயரில் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டது.  இந்தியாவின் 11 விமானப் படை தளங்கள் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இலக்காகின.

இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக  இந்திய இராணுவம் கிழக்குப் பாகிஸ்தான் மீது படையெடுத்தது. வான்வழி, கடல் வழி, தரைவழி  மூலம் இந்தியா கடுமையான தாக்குதல்களை ஆரம்பித்தது.  இந்திய இராணுவமும் சோவியத் ஒன்றியமும் கிழக்கு பாகிஸ்தானின் விடுதலை இராணுவமான  “முக்தி பாகினி”க்கு பூரண உதவிகளை  வழங்கின.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் 1971ம் ஆண்டு டிசம்பா் மாதம் 3ம் திகதி  ஆரம்பமான போா், 13 நாட்கள் நீடித்தது.   இதே நேரத்தில் ஐக்கிய அமெரிக்காவும், சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவிகளை  வழங்கின.

இந்த போரில்  இந்திய விமானப்படையின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்திருந்தது.   இந்திய கடற்படை  “ஒபரேஷன் ட்ரைடென்ட்” என்ற தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு, டிசம்பா் 4ம் திகதி,  கராச்சி துறைமுகம் அருகே நின்றிருந்த நான்கு பாகிஸ்தான் கப்பல்களை தாக்கியழித்து மூழ்கடித்தது.

போரின்  காரணமாக  10 மில்லியன் மக்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்தனா். போரில் இந்தியா வென்றது.   93 ஆயிரம் பேரை இந்திய இராணுவம் கைது செய்தது. 75 மில்லியன் மக்கள் பாகிஸ்தானின் அடக்குமுறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா். இது உலகளவில் ஆகக் குறைந்த நாட்களில் இடம்பெற்ற போா்களில் ஒன்றாகவும் பாா்க்கப்படுகிறது.

டிசம்பர் 16ஆம் திகதி  பீல்ட் மார்ஷல் சேம் மணிக்ஷா  “இந்திய இராணுவம் தற்போது பங்களாதேஷ் நாட்டில் இருக்கிறது. உங்கள் விமானப்படை முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. நீங்கள் நாலா பக்கமும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளீா்கள். நீங்கள் உடனடியாக சரணடையாவிட்டால் கொல்லப்படுவீா்கள்.” என்ற அறிவித்தலை  பாகிஸ்தான் இராணுவத்திற்கு விடுத்தாா்.

இந்த அறிவித்தலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் இராணுவ கட்டளைத் தளபதி அமீா் அப்துல்லாஹ்கான் நியாசி உட்பட பாகிஸ்தானின் இராணுவமும், கிழக்கு பாகிஸ்தானில் இயங்கி வந்த மதவாத துணைப்படைகளும்  இந்திய இராணுவ கட்டளைத் தளபதி ஜெக்ஜிட் சிங் அரோராவிடம்  சரணடைந்தன.  

இந்த யுத்தத்தில், சரணடைந்த பாகிஸ்தான் இராணுவ வீரா்களின் எண்ணிக்கை 93 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது.  இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னா்  இடம்பெற்ற மிகப்பொிய “சரணடைதல் சம்பவம்”  இது என சொல்லப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து போா் நிறைவுக்கு வந்தது. பங்களாதேஷ் நாடு சுதந்திரமான தனி நாடாக விடுதலையானது. இந்த போர் புவியரசியலிலும், பிராந்தியத்திலும், உலக வரைபடத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.

இறுதியில் பாகிஸ்தான் இராணுவம், இந்திய இராணுவத்திடம் தோற்று சரண் அடைந்ததால், 16 டிசம்பர் 1971 முதல் வங்காளதேசம் சுதந்திர நாடாக உத்தியோகபூா்வமாக அறிவிக்கப்பட்டது. ஷேக் முஜீபுர் ரகுமான் தலைமையிலான புதிய பங்காளதேஷ் நாட்டை  அங்கீகரித்த முதல் நாடு இந்தியா ஆகும்.

இப்போரில் பாகிஸ்தான் தரப்பில் பல மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அறிவிக்கப்பட்டது.  பங்களாதேஷ் நாட்டின்  அரச ஆவணங்கள்  சுமாா் மூன்று மில்லியன் பங்களா தேஷ் நாட்டு  மக்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது.  ஆனால் பாகிஸ்தான் அரசு 26,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது. இந்த போரின் போது  பாகிஸ்தான் இராணுவத்தாலும், துணைப்படைகளாலும் இரண்டு லட்சம்  பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகினர் என்றும் கூறப்படுகிறது.

சுதந்திர பங்களாதேஷ் நாட்டின் உருவாக்கத்தின்  ஐந்து தசாப்த பூா்த்தியை கடந்த வருடம் பங்களாதேஷ், இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் நினைவு கூா்ந்தன. 

ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கும் முன்னேற்றம் அடைவதற்கும் அண்டைய நாடுகளுடனான அதன் உறவு முக்கியமானதாகும். இந்தியா அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். அதைச் சூழ்ந்துள்ள அண்டை நாடுகளுடன்  நட்புறவு மற்றும் நல்ல உறவினைப் பராமரிக்க வேண்டிய தேவை அந்நாட்டுக்கு இருக்கிறது. பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கியதில் பெரும் பங்கை இந்தியா வகிப்பது மட்டுமல்லாமல், அந்த நாட்டுடன் ஓா் உணா்வு பூா்வமான பிணைப்பையும் இந்தியா கொண்டுள்ளது.

இந்தியாவின் தேசீய கீதத்திற்கும் பங்களாதேஷின் தேசீய கீதத்திற்கும் இடையில் கூட மிக நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது. இந்திய தேசீய கீதமான ‘ஜன கன மன” வையும், பங்களாதேஷத்தின் தேசீய கீதமான  ”அமொர் சோனார் பங்கலா” வையும் ரவீந்திரநாத் தாகூரே இயற்றினாா். இந்த இரண்டு கீதங்களும் பெங்காலி மொழியில் எழுதப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஹிந்தி மொழியே பெரும்பான்மையினா் பேசக் கூடிய மொழியாக இருக்கிறது.  அடுத்த படியாக, அதிகமானோா் பேசும் மொழியாக பெங்காலி மொழி இருக்கிறது. இருந்த போதிலும், ஹிந்தி அல்லாத மொழியில் எழுதப்பட்ட, அதாவது பெங்காலி மொழியில் எழுதப்பட்ட  ஒரு கீதத்தை இந்தியா தனது  தேசிய கீதமாக்கி பெருமை கொள்கிறது.

ஒரு போரின் மூலம் விடுதலை பெற்று எழுந்து நிற்கும் பங்களாதேஷ் நாடு,  இன்று வரையிலும் இந்தியாவுடன்,  நட்புறவுடன் செயற்பட்டு வருகிறது.  பாகிஸ்தானோ தொடர்ந்தும்  இந்தியாவோடு “எதிரி” என்ற போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

டிசம்பர் 16ம் திகதியை பங்களாதேஷ் நாடு சுதந்திர தினமாக கொண்டாடி வரும் அதே வேளை, இந்தியா அந்த தினத்தை  போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாக தினமாக  கொண்டாடி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .