2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

நேரத்தை சமாளிக்க எதையாவது செய்யும் அரசாங்கம்

Freelancer   / 2023 நவம்பர் 22 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

* பண்டோரா பேப்பர்ஸ் விசாரணை அறிக்கை எங்கே?
  * மனித உரிமை தொடர்பான நவாஸ் கமிட்டி அறிக்கை எங்கே?
* சனல் 4 விடியோவைப் பற்றிய விசாரணையின் முடிவு என்ன?

எம்.எஸ்.எம். ஐயூப்  

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (கிரிக்கெட் சபையின்) அங்கத்துவத்தை அப்பேரவை கடந்த 10ஆம் திகதி இடைநிறுத்தியிருக்கிறது. இலங்கையில் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றஞ்சாட்டியே அப்பேரவை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

இம்முறை கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளின்போது இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடந்த வாரம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்குப் பதிலாக கிரிக்கெட் நிர்வாகத்துக்காக இடைக்கால குழுவொன்றை நியமித்தார். அதனை எதிர்த்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவொன்றை அடுத்து நீதிமன்றம் அக்குழுவுக்கு 14 நாள் இடைக்காலத் தடையை விதித்தது. ஜனாதிபதியும் இடைக்கால குழுவை எதிர்த்து கருத்து தெரிவித்து இருந்தார். 

இப்போது சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விதித்திருக்கும் தடையை அடுத்து இலங்கை அதிகாரிகள் என்ன செய்யப் போகிறார்கள்? அரசியல் தலையீடு என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை எதைக் குறிப்பிடுகிறது? அமைச்சரின் இடைக்கால குழுவையா? அல்லது அமைச்சர் இடைக்கால குழுவை நியமித்ததை அடுத்து கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றையும் நியமித்துள்ளதே அதையா?

அமைச்சர் ரணசிங்க தமது இடைக்கால குழு மீதான இடைக்காலத் தடையை நீக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். நீதிமன்றம் அதனை ஏற்காது தடையை நீடித்தால் அமைச்சர் தமது குழுவைக் கைவிட்டு விடுவாரா? அரசாங்கம் மேற்படி அமைச்சர்கள் குழுவை வாபஸ் பெறப் போகிறதா? அரசாங்கம் அண்மைக்காலமாக அவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாலேயே அக்கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. 

உதாரணமாக, இராஜாங்க அமைச்சர் ஒருவரும் அவரது கணவரும் வெளிநாடுகளில் இரகசிய வங்கிக் கணக்குகளில் பெரும் தொகை பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் வெளிநாடுகளில் சொத்துக்களைத் திரட்டி வைத்திருப்பதாகவும் பண்டோரா பேப்பர்ஸ் என்றழைக்கப்படும் ஆவணங்களைச் சுட்டிக் காட்டி புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பு தெரிவித்த கருத்தைப் பற்றி மேற்கொள்ளப்பட விசாரணைக்கு என்ன நடந்தது? 

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மாற்றம் நிதி நெருக்கடிக்கு ஏதுவான காரணங்களையும் அதற்கு பொறுப்பானவர்களையும் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு என்ன நடந்தது?

2021 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகப் பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சி அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பற்றி விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு எங்கே? அதன் விசாரணைக்கு என்ன நடந்தது? 

உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதலின் பின்னால் மாபெரும் சதியொன்று இருந்திருக்கிறது என்று முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கூறிய கருத்தைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப் பாராளுமன்ற தெரிவுக் குழுலொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி கூறினார். அக்குழு எங்கே? 

புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பு 2021இல் பல்வேறு நிறுவனங்களிலிருந்து கசிந்த ‘பண்டோரா பேப்பர்ஸ்’ எனப்படும் ஒரு கோடியே 19 இலட்சம் இரகசிய ஆவணங்களைப் பரிசீலனை செய்தே முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்‌ஷவும் அவரது கணவர் திருகுமார் நடேசனும் ஒரு கோடியே என்பது இலட்சம் டொலர் பணத்தை உலகில் வரி ஏய்ப்பாளர்கள் பணம் பதுக்கும் இடங்களில் வைத்திருப்பதாகக் கூறியிருந்தது.

இது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே அந்த விடயத்தைப் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய இலஞ்சம் ஆணைக்குழுவுக்கு 2021 ஒக்டோபர் 6ஆம் திகதி பணிப்புரை விடுத்தார்.

ஒரு மாதத்துக்குள் தமக்கு அறிக்கை வேண்டும் என்றே ஜனாதிபதி கோட்டாபய அக்குழுவுக்குக் கட்டளை பிறப்பித்தார். ஆயினும் இரண்டு வருடங்கள் கழிந்தும் இலஞ்ச ஆணைக்குழு இன்னமும் அது தொடர்பாக ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. 

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விடயத்தில் ஐ.நா மனித உரிமை பேரவை மேற்கொண்டுவரும் நெருக்குதலின் மத்தியில் எதையாவது செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட கோட்டாபய 2021 ஜனவரி மாதம் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையில் மூவர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்தார். மனித உரிமை விடயத்தில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட சகல ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் அறிக்கைகளைப் பரிசீலனை செய்து அவ்விடயத்தில் என்ன செய்யலாம் என்று பரிந்துரை செய்வதே நவாஸ் குழுவின் கடமையாகக் குறிப்பிடப்பட்டது. 

இப்பணிக்காக அவ்வாணைக்குழுவுக்கு ஆறு மாத கால தவணை வழங்கப்பட்ட போதிலும், அக்காலக்கெடு பலமுறை நீடிக்கப்பட்டு இறுதியில் இவ்வருடம் பெப்ரவரி 6ஆம் திகதி அவ்வாணைக்குழு தமது பரிந்துரைகளின் சாராம்சம் ஒன்றை ஜனாதிபதி ரணிலிடம் கையளித்தது. அவ்வளவு தான், ஒன்பது மாதமாகியும் ஜனாதிபதி அப்பரிந்துரைகள் விடயத்தில் எதையும் செய்தாக தெரியவில்லை. அதுவும் அந்த நேரத்துக்கு மனித உரிமை பேரவையை ஏமாற்றக் கோட்டா மேற்கொண்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. 

பொருளாதார நெருக்கடி நாட்டின் சகலரினதும் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியையே குறை கூறுகிறார்கள். 
அதே பொதுஜன முன்னணி அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு ஏதுவான காரணங்களையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் கண்டறிய கடந்த ஜூலை மாதம் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்தது. இன்று வரை அத்தெரிவுக்குழு ஒரு நாள் மட்டுமே கூடியதாகத் தெரிய வருகிறது. அதுவும் குற்றச்சாட்டுக்களைத் திசை திருப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருத முடியும்.  

செனல் 4 விவகாரம் தொடர்பான விசாரணையும் அரசாங்கம் ஆரம்பித்து கைவிட்டு இருக்கும் மற்றொரு விடயமாகவே தெரிகிறது. கோட்டாபய 2019இல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்கும் நோக்குடன் அரச புலனாய்வு சேவையின் பிரதானி சரேஷ் சலேயின் திட்டப்படியே உயிர்த்த ஞாயிறுத் தினப் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதே செனல் 4 தமது விவரணப் பட நிகழ்ச்சி மூலம் கூறுகிறது. 

இந்த குற்றச்சாட்டை பற்றி விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ரணில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாமின் தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்தார். ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் விசாரணையின் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் அவர் அக்குழுவைப் பணித்தார். ஆனால், இன்று வரை அறிக்கையைப் பற்றி எதனையும் ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கவில்லை. 

செனல் 4 நிகழ்ச்சி வெளியிடப்பட்ட உடனேயே அதனை மறுத்த பாதுகாப்பு அமைச்சு உள்நாட்டு வெளிநாட்டு விசாரணைகள் மூலம் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமே உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதலின் சூத்திரதாரி என்பது நிருபிக்கப்பட்டுவிட்டுள்ளது என்று அறிக்கையொன்றின் மூலம் கூறியது. அந்த நிலையில் தான் ஜனாதிபதி செனல் 4 குற்றச்சாட்டை விசாரிக்கக் குழுவொன்றை நியமித்தார்.

கடந்த மாதம் 2ஆம் திகதி ஜனாதிபதி,ஜேர்மன் தலைநகர் பேரலினில் ஜேர்மன் தொலைக்காட்சியான டௌஷ் வெலாவுடன் நடத்திய நேர்காணலின் போதும் பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாட்டையே எடுத்துரைத்தார். சர்வதேச விசாரணைக்குழுக்கள் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருக்கும்போது, மேலும் இதைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும் என்று  அவர் மிகவும் கோபமாக அந்த நேர்காணலின் போது கேட்டார். எனவே விசாரணைக் குழு அமைத்தாலும் விசாரணை செய்யும் நோக்கம் ஜனாதிபதியிடம் இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.   

அரசாங்கம் எந்தவொரு பாரதூரமான விடயத்தையும் பாரதூரமானதாகப் பார்க்காமல் அந்தந்த நேரத்தைச் சமாளிப்பதற்காக எதையாவது செய்கிறது என்பதே இவற்றின் மூலம் தெளிவாகிறது.  

2023.11.15 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X