Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளியிட்டிருக்கின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது முழு நாட்டிற்கும் நன்மை பயக்கும்.
அதிலும் குறிப்பாகத் தமிழர்களுக்கு நன்மையே என்ற ஒரு கதையை ஓய்வு பெற்ற நீதியரசரும், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
அதற்காக அவர் சொல்லும், ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரைக்கும் வேட்பாளர் எவரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறமுடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால் அவர்கள் சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெற வேட்பாளர்கள் முனைப்புக் காட்டுவார்கள்.
அதேநேரம், ஜனாதிபதி தேர்தலில் எவரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாத நிலைமை ஏற்படும் போது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும். ஏற்கெனவே நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் காணப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது போனால் நாடு மிக மோசமான பொருளாதார பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும். அத்துடன், தேர்தலுக்காகப் பெருமளவான நிதிகள் செலவழிக்கப்பட வேண்டிய நிலைமையும் ஏற்படும்.
அதுவும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் போன்ற காரணங்கள் பெரும் பொருத்தப்பாடானதாக இல்லை.
இந்த அளவில்தான் நாம் நாட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் அது தொடர்பில் நடைபெற்று வருகின்ற வாதப் பிரதிவாதங்களும் வேட்பாளர் தெரிவு தொடர்பான முயற்சிகளும் பற்றியும் சிந்திக்க வேண்டியவர்களாக மாறுகின்றோம்.
ஏதோ ஒருவகையில், பெரும்பான்மைக் கட்சிகளுக்கான நெருக்கடியாக அறிவிக்கப்படவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் இருக்கிறது என்பதே உண்மை.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளுக்கே இந்த நெருக்கடி இருக்கிறது, பொது வேட்பாளர் என்பவர் எந்த எந்தக் கட்சிகளின் இணக்கத்துடன் நிறுத்தப்படுவார் என்பது இதுவரை தெரியவில்லை.
இவ்வாறானால் தற்போதைய ஜனாதிபதிதான் அந்தப் பொது வேட்பாளரா? என்பது இதுவரை கேள்வியாக இருக்கிறது. தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்பவர் எவ்வாறு தீர்மானிக்கப்படுவார்.
அவர்களுடைய முதல் நிலைப்பாடு, இரண்டாவது நிலைப்பாடு என்ன என்பது தெரியாமலேயே இருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசியப் பேரவையின் புரிந்துணர்வு உடன்பாடு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடப்படுகிறது.
தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக எதிர்பார்க்கின்ற தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை அடைந்து கொள்வதற்குத் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் களமிறக்கல் எவ்வாறு சாதகமானதாக இருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய கட்டாயத்திலிருக்கும் நிலையில் தமிழர்களின் அரசியல் தலைமைகள் இதில் இன்னமும் ஒற்றுமைப்படவில்லை.
தமிழ் மக்களுக்கான அரசியலைச் செய்யும் பிரதான அரசியல் கட்சியாகப் பார்க்கப்படுகின்ற இலங்கை தமிழரசுக்கட்சி இன்னமும் இந்த விடயத்தில் ஒத்துவரைவில்லை.
அதேநேரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இருக்கின்ற அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இதற்கு முழுமையான எதிர்ப்பினையே தெரிவித்துவருகிறது.
நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தமட்டில், எந்தவொரு பிரதான வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறப்போவதில்லை என்ற எதிர்வு கூரல்கள் வந்தவண்ணமிருக்கின்றன. இது போலவே கடந்த 2020இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் எதிர்வு கூரல்கள் காணப்பட்டன. இருந்தாலும் கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை ஜனாதிபதியாகியிருந்தார்.
இருந்தாலும் தற்போதைய நிலையில், வெளிவருகின்ற எதிர்வு கூரல்கள் பலிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே கொள்ளமுடிகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்குக் கிடைத்த வாக்குகளை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தத் தேர்தலைக் கணிப்பிடுகின்றார்.
அப்போதைய அரசியல் கள நிலைமை வேறு என்பதனை இதில் அவர் மறந்துவிடுகிறார். அதே நேரத்தில், மக்கள் விடுதலை முன்னணி- தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகக் களமிறங்கும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க அரகலயவின் அதிர்வுகளில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் கடந்த 16ஆம் திகதி முதல் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கைகளுக்குச் சென்றிருந்தாலும் தேர்தல் ஆணைக்குழு இதுவரையில் அதற்கான அறிவிப்பினை வெளியிடவில்லை. இடையில், ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை நீடிப்பது, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது என பலவாறாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறன.
ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மற்றும் தேர்தலைப் பிற்போடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு போன்றன தோல்வியடைந்த யுக்திகளாகப் போயிருக்கின்றன. இருந்தாலும், இவற்றுக்குப் பின்னால் தற்போதைய ஜனாதிபதி இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவர் பொது வெளியில் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் என்றே அறிவித்துவருகிறார்.
ஆனால், அவருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட 22ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்தப் பின்புலத்தினை வெளிக்காட்டுவதாகவே அவதானங்கள் வெளிவருகின்றன. இருந்தாலும் அடுத்த வாரத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
அது நடைபெற்றாலே உண்மையாகும். 22ஆவது திருத்தச் சட்டத்துக்கான அங்கீகாரம் அமைச்சரவையில் பெற்றபட்டிருந்தாலும் தற்போதைக்கு அதனை வர்த்தமானியில் வெளியிடப்போவதில்லை என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியிருந்த போதிலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
22ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை அத்துடன், சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.
இவ்வாறிருக்க ஏன்? ரணில் இந்த விசப் பரீட்சையில் இறங்கினார் என்பது புரியாத புதிராக இருந்தாலும் அவருக்கு ஏதோ பலமான நம்பிக்கை இருக்கிறது என்பது ஒன்று மாத்திரம் நிச்சயம். அந்தவகையில்தான், 22ஆவது திருத்தம் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கான கடைசி முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், 19ஆம் திருத்தத்தின் போது, அரசியலமைப்பானது சரியாகத் திருத்தப்படாவிடினும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்று உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பல இடங்களில் தனது தெளிவான அபிப்பிராயத்தைத் தெரிவித்து விட்டது. ஆகவே, 22ஆம் திருத்தச் சட்டம் தேவையற்றதொன்று.
இதனை வைத்துத் தேர்தலைப் பிற்போட முயற்சிப்பதையோ மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதையோ விட்டுவிட்டு, ரணில் முறையாகத் தேர்தலை எதிர்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்படுகின்றது. இதற்குள் இருக்கும் சுருக்குகள் அவிழ்க்கப்படுவதே முக்கியமாகும்.
ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தின் மூலமாக ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன.
இந்த இரண்டு வருடங்களில் எதனைச் சாதித்தார் என்று கேள்வி கேட்கப்பட்டால் அதற்கு ஒரேயொரு பதில் பொருளாதாரத்தினைத் தூக்கி நிமிர்த்தினார் என்று அவருக்கு ஆதரவானவர்கள் பதில் சொல்வார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூலமாகப் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், பிரதியமைச்சர், பிரதமர் என பல பதவிகளிலும் அமர்ந்திருந்தாலும் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் அவருக்குக் கைகூடவில்லை. அந்த நிலையில் அவருக்கு அடித்த அதிர்ஷ்டமாக தான் இந்த ஜனாதிபதி பதவியை அவர் கொள்ளவேண்டும்.
அந்த அதிர்ஷ்டத்தினை அவர் முழுமையாக அனுபவிக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழமையாக ஒத்துழைத்து வருகின்றது. இந்த ஒத்துழைப்பினை அவர் தனக்குச் சாதகமாகப்பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்துக்காகவே இதனைச் செய்து வருகிறேன் என்று ஒரே எடுப்பில் சொல்லித் தப்பித்துக் கொள்பவராகவே அவர் இருந்துவருகிறார்.
நடைபெறும் அல்லது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றிபெறுவாரா என்பதே தெரியாவிட்டாலும் அதற்கு நாட்டிற்காகச் சிலவற்றைச் செய்துவிட்டுச் செல்வோம் என்ற சிந்தனையில் கூட இந்த 22ஆவது திருத்தத்தை அவர் சிந்தித்திருக்கலாம்.
எது எவ்வாறானாலும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் நீண்ட காலம் எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க அமைச்சராக, பிரதமராக இருந்த காலங்களில் செய்யமுடியாதவற்றை, ஜனாதிபதி பதவிக் காலத்தில் நாட்டுக்காக செய்ய முனைவது நல்லதே. அதிலொன்றாக 22உம் இருப்பதாக் கொள்வோம். அதே நேரத்தில் இவ்வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காகவும் காத்திருப்போம்.
07.22.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago