2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

நீதிக்கு வாய்ப்பில்லை

Mayu   / 2024 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம் 

1983 ஜூலை 23ஆம் திகதி பேரினவாத ஆட்சியாளர்களினால் தமிழ் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ‘கறுப்பு ஜூலை’ இனக் கலவரத்துக்கு   
41 வருடங்களுக்குப் பின்னர்  தமிழ் மக்களிடம்   மன்னிப்பு கோரியுள்ளார். இலங்கையின்  நீதியமைச்சரான விஜயதாஸ ராஜபக்‌ஷ. பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம்  மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே  அவர் இந்த பகிரங்க மன்னிப்பைக் கோரியுள்ளார்.
1983 ஜூலை 23ஆம் திகதி இலங்கைக்கு கரும் புள்ளியாகக் காணப்படுகிறது. 

41 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு நேர்ந்த  சம்பவங்கள்  பாரிய விளைவுகளை ஏற்படுத்தின. அக்காலப்பகுதியில் நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை.  இருப்பினும் நாட்டுப் பிரஜை என்ற ரீதியில்  41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவத்துக்குத்  தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன் என சபையில் பகிரங்கமாகக் கூறி மனம் வருந்தியுள்ளார்.

இலங்கை வரலாற்றிலும் இலங்கைத் தமிழர்  வரலாற்றிலும் 1983 ஜூலை  23ஆம் திகதி  ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய நாள். தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தை ஆட்சியாளர்கள்  கட்டவிழ்த்துவிட்ட நாள்.

1983 ஜூலையில்  நடந்தது வெறும் கலவரம் அன்று. அது உள்நாட்டுப் போரின் தொடக்கம். சிங்களம்-தமிழ் என்ற இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில்  முடிவு ஏற்பட்ட நாள் அந்த அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட நாளைத்தான்  இன்றுவரை ‘கறுப்பு ஜூலை’ என்று  தமிழர்கள் தமது வரலாற்றில் பதிவிட்டுள்ளனர்.

இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் கொடூரமாகக் கொல்லப்பட்ட  உயிர்களும்  இதயங்களை உறைய வைத்த  கதறலும், கண்ணீரும் காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும்   இலங்கை தலைநகரத்தின் வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்?

கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த தமிழினப் படுகொலை நடந்து கடந்த  23ஆம் திகதியுடன்  41 ஆண்டுகள். ஆனாலும், இன்றுவரை அந்தக்கொடூர நாட்களை (ஜூலை 23, 24, 25, 26ஆம் திகதிகள்) நினைத்தாலே உடல் நடுங்கும், உயிர் பதறும், உறக்கமே வராது. அந்தளவுக்குத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாகவும் அழியாத துயராகவும் கறுப்பு ஜூலை பதிந்து போயுள்ளது.

 வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள், வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெடுத்து  வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் பிள்ளைகளுக்கு  முன்பாக அன்னையர்களும் இக்காடைக் கும்பல்களினால் நிர்வாணமாக்கப்பட்ட, கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட  கொடூரங்களும்  கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்களும்  தமிழர் மனங்களிலிருந்து எப்படி மறைந்து போகும்? 

ஜனநாயகத்தின் அடிப்படையில் இனங்களுக்கிடையில் வேறுபாட்டை நோக்காத நேர்மையான சிங்களவர்களின் மனசாட்சிகளை இருளாக்கிய அந்த  ‘ஜூலை கலவரம்’ எனப்படும் தமிழினப் படுகொலையே  30 வருட யுத்தத்துக்கு வழிகோலி இலட்சக்கணக்கான உயிர்களை  பலியெடுத்ததுடன், உடைமைகளை அழித்து இலட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக்கி,  சிங்களவர்-தமிழர்களை இன்றுவரை எதிரிகளாகவும் இணக்கப்பாட்டுக்கு வர முடியாதவர்களாகவும் வைத்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய இனத்துக்கு எதிராக இடம்பெற்ற இந்த சிங்களவர்களின் கடைகெட்ட காடைத்தனம்  தேசிய அடக்குமுறையினது உச்சக்கட்டம். 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம்-திருநெல்வேலியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தாக்குதலில்  13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாகத் தலைநகர் கொழும்பில்  வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக இந்த தமிழினப் படுகொலை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டது.

திட்டமிட்ட இனக் கலவரம் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில் என தொடர்ந்து ஏழு நாட்களாக இடம்பெற்றன. அது மட்டுமன்றி, கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் பொலிஸார், சிறைக்காவலர்களின் ஒத்துழைப்புடன் சிங்களக் கைதிகள், காடையர்களினால்  கண்கள் தோண்டப்பட்டும் கொடூர சித்திரவதைகள் செய்யப்பட்டும் 
படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த தமிழினப் படுகொலையால் தலைநகரில் உள்ள பாடசாலைகள், கோவில்கள் தமிழ் அகதிகளால் நிரம்பி  வழிந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றப்பட்டு  “உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்” என கூறி ஆட்சியாளர்களால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டும்  வெளியேறினர்.

தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட சிங்களக் காடைக்கூட்டத்துக்கு  சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ-பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி, கொலை செய்யப்பட்டவர்களை மரண விசாரணையோ அல்லது நீதி விசாரணையோ இல்லாமல் தகனம் செய்ய  பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன. தமிழினப் படுகொலைகளைத்   தலைநகரில் ஆரம்பிப்பதற்கென முன்கூட்டியே தயார்செய்யப்பட்டது.

இதற்காகவே  யாழ் திருநெல்வேலியில் கொல்லப்பட்ட  இராணுவத்தினரின்  சடலங்கள்  கொழும்பு கனத்தையில்  தகனம் செய்யப்படுமென அரசு அறிவித்தது. அது சிங்களக் காடையர்கள் தமிழினப் படுகொலைக்காக  அணித் திரள விடுக்கப்பட்ட அரசின் ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாகவே இருந்தது.

ஜூலை 23ஆம் திகதியில் இருந்து காடையர் கும்பல்களும் அவர்களுடன் இணைந்து தமிழினப் படுகொலைகளில்  ஈடுபட்ட பொலிஸாரும் இராணுவமும் ஒன்றரை நாட்கள் சுதந்திரமாகத் தமிழர்களைத் தேடித் தேடிக் கொல்லவும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுகள் செய்யவும், தமிழர் சொத்துக்களை அடியோடு அழிக்கவும்  இடமளித்ததன் பின்னர், ஜூலை 25ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன  கொழும்பில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தார். ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியான விதத்தில் அன்று மாலை 6 மணிக்கே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதனையும் மீறி ஜூலை 26ஆம் திகதி கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருநாகல், இரத்தினபுரி, பலாங்கொடை முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தமது காடைத் தனங்களை அரங்கேற்றினர்.

இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், இராணுவத்தினர் உயிரிழந்தமைக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களுக்கு அளிக்கப்பட வில்லை. அந்த சம்பவங்கள் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன.

அப்போது கொழும்பில் இருந்த வெளிநாட்டு செய்தியாளர்கள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்களுடைய ஹோட்டல் அறைகளில் இருந்து வெளியில் வருவதற்கும் சில நாட்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்ட வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜூலை 23இல் ஆரம்பித்த தமிழினப்படுகொலை மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்றது. 83 கலவரம் என்ற பெயரில் நடந்த தமிழினப் படுகொலையில் 3,000 பேர் வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்களின்  வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன எனவும் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன எனவும் தரவுகள் கூறுகின்றன.

தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம்  உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டமையும்  பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியமையும் இன்றும் தமிழர்களால் நன்றியுடன் நோக்கப்படுகின்றது.

இந்த 1983 ஜூலை கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலையே பல  வரலாறுகளை எழுதியது. பல வரலாறுகளை மாற்றியது.

தமிழர்களின்  ஆயுதப் போராட்டம் விடுதலைப்புலிகள் தலைமையில் தீவிரம் அடைவதற்கு ஜூலை கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினருமான சிங்களவர்கள் மேல், சிங்கள 
ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்து சந்தேகம் கொள்ள வைத்தது. இந்த நாட்டிலே சிங்களவர்-தமிழர்கள்  ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலை கலவரம் ஏற்படுத்தியது. 

1983 ஜூலையில்  நடந்தது வெறும் கலவரம் அன்று. அது உள்நாட்டுப் போரின் தொடக்கம். சிங்களம் -தமிழ் என்ற இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில் எற்பட்டுவிட்ட முடிவு. அந்த நிலைதான் இன்றுவரை தொடர்கின்றது.  

41 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்காதது போலவே இலங்கையின் தேசியப் பிரச்சினையாக மாறிய தமிழ்மக்களின் பிரச்சினைக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்புக்களும் இல்லை. 

07.25.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X