Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Mayu / 2024 மே 09 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
ஜனாதிபதித் தேர்தலோ பாராளுமன்றத் தேர்தலோ இவ்வருடத்தில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான இயலுமையானது வரி வருமானத்தை அதிகரித்தல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், நிதியியல் கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றின் செயற்திறன்மிக்க மறுசீரமைப்பினாலேயே சாத்தியமாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கிறது.
அதே வேளையில், தேர்தல்களில் இவற்றின் தாக்கம் வலுவானதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வருடத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாகப் போட்டியிட இருக்கின்ற தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க ஆகிய மூவரில் யாருக்கும் 50 வீத பெரும்பான்மை கிடைக்காது.
இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்கு கோரும் நிலைமை காணப்படும் என்பதே இன்றைய கள நிலவரமாக இருக்கிறது. இதனை மாற்றியமைப்பதற்கான கோதாவிலேயே போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் ஆதரவைத்திரட்ட முற்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றாகவேண்டும்.
அரசாங்கம் அந்தத் தேர்தலையும் நடத்தாமல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரப்பட்டுத் தேர்தல் நடைபெறாது போனால், இதற்கு முன்னர் நடைபெற்ற அரகலயவினைவிடவும் மிகப்பெரியதொரு போராட்டம் வெடிக்கும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்ற ஜனநாயகம் மற்றும் தேர்தல்களின் பால் சமகால சவால்கள் எனும் தலைப்பிலான கருத்தாடல் ஒன்றின்போது தெரிவித்திருக்கிறார்.
தமிழர் தரப்பினைப் பெறுத்தவரையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஒருவரை களத்தில் இறக்க முயன்று வருகின்றனர். இந்த முயற்சி பலனளிக்குமா? இல்லையா? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. அதேநேரத்தில், சிறுபான்மைத் தரப்பு என்ற வகையில், முஸ்லிம்கள் தங்களுடைய பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்திக் கொள்வதற்காக நடைபெறவுள்ள தேர்தல்களைப் பயன்படுத்துவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் சுட்டலின்படி, சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துதல் என்பது சாதாரணமாக ஒதுக்கிவிட்டுப் போகக் கூடிய விடயமல்ல. வடக்கு, கிழக்கில் மத வழிபாட்டுச் சுதந்திரம் மறுக்கப்படும் நிலை, காணி அபகரிப்புகள், உரிமை மீறல்கள் என நடைபெற்று வருகின்ற பாதுகாப்பற்ற செயற்பாடுகளும் இதனுள் அடக்கம்.
ஒரு பாராக நம்மை முன்னேற்றகரமானதாக மாற்ற வேண்டுமாக இருந்தால் மேற்குறிப்பிட்டவை தவிர வேறு பல்வேறு விடயங்களில் நாம் கவனம் செலுத்தியாகவேண்டும்.
சர்வதேச நாயண நிதியத்தின் கட்டுப்பாடுகள் வரையறைகள் மிகவும் இறுக்கமானதாகவே இருக்கின்றன. அதன் கட்டுப்பாடுகள் அனைத்துமே நாட்டின் மக்களையே பாதித்துக் கொண்டிருக்கின்றன. வெளிப்பேச்சில் நாடு சிறப்பாக இருப்பதாகக் காண்பிக்க முயன்றாலும் மக்கள் பெரும் சிரமங்களையே அனுபவித்து வருகின்றனர்.
இதில் வரிச் சுமை மிகவும் கொடுமையாகவே காணப்படுகிறது. இரண்டாம் கட்ட நிதி விடுவிப்பு நடைபெற்றாலும், மூன்றாவது கட்ட நிதி விடுவிப்பு வரையில் நாடு காத்திருக்கவே வேண்டும். அதற்குள் சர்வதேச கடன் மறுசீரமைப்பில் சீனாவின் ஒப்புதல் தாமதமானால் மூன்றாம் தவணையைப் பெற்றுக்கொள்வதில் மேலும், தாமதம் ஏற்படலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது.
இதற்குள் அரை நூற்றாண்டையும் தாண்டி நடைபெற்று வருகின்ற தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இதுவரையில் முன்வைக்கப்படவில்லை.
இதற்குள் தொடங்கப்பட்டிருக்கின்ற உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய பேச்சு மீண்டும் தொடங்கப்பட்டிருக்கின்ற வேளையில் மந்திரத்தால் மாங்காய் வீழ்த்த முடியுமா
என்று கேட்கவும் தோன்றுகிறது.
1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், சமத்துவம், நீதித்துறைச் சுதந்திரம், சுயாதீனத்தன்மை, சட்டத்தின் முன் யாவரும் சமம் என்கிற விடயங்கள் இதுவரை முறையாகப் பேணப்படுகின்றனவா என்றால் இதிலுள்ள பாகுபாடு வெளிப்படும்.
அரசியலமைப்பின் உறுப்புரைகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட சட்ட வாட்சித் தத்துவம் முறையாகப் பின்பற்றப்படவில்லை. நாட்டில் மீண்டும் மீண்டும் வன்செயல் நிகழாமைக்கு உறுதிப்படுத்தலில்லை.
அதேநேரம், மீண்டும் மீண்டும் வன்செயல் நடைபெறுவது ஊக்குவிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. அரசியலமைப்பை உருவாக்கிய ஆட்சியாளர்களே அரசியலமைப்பை மீறும் நிலைமை காணப்படுகிறது.
இவ்வாறிருக்கையில் நாட்டின் நல்லிணக்க, சமத்துவத்துக்கான அடியெடுப்பு எப்படி நடைபெறும் என்பது கேள்வியாகவே இருக்கிறது. இலங்கையின் பல்லினத்தன்மை, பல் மதத்தன்மை, பல் காலாசாரத் தன்மை, மொழி உரிமைகள் முறையாக இதய சுத்தியோடு ஏற்றுக் கொள்ளப்பட்டு முதலில் பின்பற்றப்பட வேண்டும். அல்லாவிட்டால் அது நகைப்புக்குரிய விடயமேயாகவே இருக்கும் என்ற விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உண்மையிலேயே நல்லிணக்கம் என்பது ஆட்சியாளரதும் நாட்டு மக்களதும் மனங்களிலிருந்து உருவாக வேண்டியதாகும். அதனைச் சட்டங்களை உருவாக்கி ஏற்படுத்த முனைவதானது எம் நாட்டின் மீது இன நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேச சமூகங்களால் ஏற்பட்டுவரும் அழுத்தத்தைக் குறைப்பாதற்கான ஒரு செயற்பாடாக இருக்கும் என்பதே உண்மையானது.
சிங்களத் தேசியவாதிகள் இன முரண்பாடுகள் தொடர்பாக கருத்து வெளியிடுவது அவர்களது அடிப்படை உரிமையாகவும் தமிழ்த் தேசியவாதிகளின் இனம் தொடர்பான பேச்சுக்கள் பயங்கரவாதமாகவும் பார்க்கப்படுகின்ற நிலை காணப்படுகின்ற நாட்டில் தமிழர்கள் ஜனாதிபதி வேட்பாளராகத் தமிழர் ஒருவரை பொதுவானவராக நிறுத்தி மீண்டும் ஒருமுறை தம்முடைய தனித்திருத்தல் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முனைவது சரியானதாகவே இருக்கும்.
நாட்டின் இன்றைய பொருளாதார நிலையில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என அது பிற்போடப்பட்டது.
ஆனால், மாகாண சபைத் தேர்தலானது அக்காரணத்துக்காக நடத்தாமல் விடப்படவில்லை. அவ்வாறிருக்கையில் பாராளுமன்றம் கலையுமா ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா என்பது சிக்கலானதாக மாறி வருகிறது. மாகாண சபைத் தேர்தல்கள் 7வருடங்களாக நடைபெறாமல் இருக்கிறது.
மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கான காலம் வரும் போது அந்த மாகாண சபைத் தேர்தல் முறையில் மாற்றம் நிறைவு பெறாமை காரணமாகச் சொல்லப்பட்டு வருகிறது.
உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திப்போடப்பட்டுள்ளது. தேர்தல்களை ஒத்திப்போடுவதில் வல்லமையுள்ளவர்களைக் கொண்ட நமது நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதில் சிக்கல் காணப்படுகிறது. இந்த நிலையில்தான் ஜனாதிபதித் தேர்தலா பாராளுமன்றத் தேர்தலா என்ற எதிர்பார்ப்பிருந்து வருகிறது. எதிர்வரும் தேர்தல்களையும் தள்ளிப் போடுவதற்கான ஆயத்தங்கள் நடந்து வருவதாகக் கூட அச்சம் இருக்கிறது.
தற்போதைய ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் 3ஆவது தவணைக்கான நிதி விடுவிப்பைப் பார்த்தே ஜனாதிபதித் தேர்தலுக்கான முடிவை எடுப்பார் என்ற தகவல்களும் வெளிவருகின்றன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தமது கட்சியின் சார்பில் ஒருவரை அத் தேர்தலில் களமிறக்க முடியாத நிலையும் காணப்படுகிறது.
இருந்தாலும் தமது கட்சியின் நிலையை நாடி பிடித்துப்பார்ப்பதற்கான தேர்தல் ஒன்றை அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் எனலாம். அந்தவகையிலேயே பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்கிற நிலைப்பாட்டை அவர்கள் முன்வைத்துவருகின்றன.
இதற்கான சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுகின்றபோதிலும் இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தலாம் என்ற முன்மொழிவுகளும் வந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில் நிலைபேறான இலங்கையை அடைந்து கொள்வதற்கான எவ்வாறான வழிவகைகள் தேர்தல்களை இலக்காகக் கொண்டு செயற்படுபவர்களிடம் இருக்கின்றன என்பது வினவப்பட வேண்டும்.
அவ்வாறானால், நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து மீட்டு 2048 இலக்கை நோக்கி நகரும் பிரச்சாரத்துடனான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள், அனுரகுமார திசாநாயக்கவின் அரசியல் நகர்வுகளும், சஜித் பிரேமதாசவின் பௌத்த தேசியவாத நிலைப்பாட்டுடனான சிறுபான்மைக் கட்சிகளையும் அனுசரிக்கும் பிரச்சாரம் போன்றவகைளுக்குள் சிக்குண்டதாகவே நிலைபேண்தகு அபவிருத்தி இலக்கு அல்லல்படும் என்பதே நிலைப்பாடு.
04.08.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago