Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரங்களை விட, பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விடயமே இப்போது மக்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் அதிக கவனத்தைப் பெற்றிருப்பதாக தெரிகிறது.
2022ஆம் ஆண்டு இலங்கையின் எழுத்தறிவு 92 சதவீதமாக இருந்தது. என்றாலும், சாதாரண மக்களின் வாக்குகள், படித்து தொழில் பெற்ற அரச அதிகாரிகளின் வாக்குகள் கணிசமான அளவுக்கு நிராகரிக்கப்படுகின்ற நிலை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதேபோன்று, தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற வேட்பு மனுக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் நிராகரிக்கப்படுவதும், அவற்றுள் ஓரிரு கட்சிகள் நீதிமன்றத்தை நாடுவதும் வழக்கமான நடைமுறைகள் தான். ஆயினும், இம்முறை இது ஒரு பெரிய விவகாரமாக மாறியுள்ளது எனலாம்.
அதற்குக் காரணம், நாடு முழுவதும் 400இற்கு மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளமையும், இவை தொடர்பில் உயர்நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதி மன்றத்திலும்
99 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையும் ஆகும்.
புதிய கட்சிகள், சுயேச்சைக் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மட்டுமன்றி, நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், சில தமிழ்க் கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் வேட்பு மனு கூட நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கணிசமான வேட்பு மனுக்கள் சிறிய காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட கட்சிகள் கூறியுள்ளன.
அவற்றுள் முக்கியமான காரணம், சட்டத்தால் விதந்துரைக்கப்பட்ட சதவீதத்திலான, இளம் வேட்பாளர்களின் வயதை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பிறப்பு அத்தாட்சிப் பத்திர பிரதிகளின் சட்ட வலு தொடர்பான பிரச்சினையாகும்.
இந்த அடிப்படையில், உயர்நீதிமன்றத்தில் 59 மனுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 40 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. உயர்நீதிமன்றத்தில் 56 மனுக்கள் ரிட் (எழுத்தாணை) மனுக்களாக சமர்ப்பிக்கப்பட்டதுடன், 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டன. மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி, அரச அதிகாரி ஒருவரினால் இழைக்கப்படுகின்ற தவறு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். எனவே, பிறப்புச் சான்றிதழின் பிரதிகளை ஏற்க மறுத்தவர்கள் அதிகாரிகள் என்ற அடிப்படையில் ஒரு தரப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதேவேளை, தேர்தல் திணைக்களத்தின் விடயங்களை உயர் நீதிமன்றத்திலேயே சவாலுக்கு உட்படுத்த முடியும் என்று சட்டமறிந்தோர் சிலர் விவாதிக்கின்றனர். எனவே, இவ்விவகாரம் தேர்தல் திணைக்களத்துடன் தொடர்புபட்டது என்ற அடிப்படையில் இன்னும் ஒரு சில தரப்பினர் உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.இரு பிரிவுகளின் கீழ் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், குறிப்பிட்ட சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்த மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த 4ஆம் திகதி தமது தீர்ப்பை அறிவித்து விட்டது. அதன்படி 37 வேட்பு மனுக்களையும் மீள ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.
இதேவேளை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 53 ரிட் மனுக்கள் மற்றும் 6 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரிட் மனுக்கள், இவ்விடயம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உரியது என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாதத்தை ஏற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
எவ்வாறிருப்பினும், ஒரு பொது மகனின் பார்வையில், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் தொடர்பான ஒரே காரணத்திற்காக இருவேறு நியாயாதிக்கங்களைக் கொண்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு இரு விதமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இது இலங்கை அரசியலில் மட்டுமன்றி சமூக மட்டத்திலும் பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் இருந்து அவர்களாக விலகி இருக்க முடியாது. அப்படியென்றால் இது தொடர்பாக அவர்கள் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும். அதைச் செய்வதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு விரும்புமா என தெரியாது.
இதேவேளை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், இவ்வழக்குகளுக்கு பொருத்தமானது என கருதப்படும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுக்களைத் தாக்கல் செய்து, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், தமது மனுக்களுக்கும் நியாயம் கோருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதற்கிடையில் பிந்தி கிடைத்த தகவல்களின் படி ஆறு சபைகளின் தேர்தல் நடவடிக்கைளை மே.16 வரை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இது பற்றிய ஏகப்பட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிக் கிடக்கின்றன. ஆனால் உண்மையில், இது நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளுடன் தொடர்புபட்ட விவகாரம் என்பதால், சட்ட ரீதியாக இந்த விடயத்தை நாம் இதற்கப்பால் எழுதவோ பேசவோ முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன? சட்ட ரீதியாக இவ்விடயம் எவ்வாறு முடிக்கு வரப்; போகின்றது என்பது இன்றோ நாளையோ தெரிய வரும். ஒருவேளை இந்தப் பத்தியை நீங்கள் வாசிக்கும் போதே சில முடிவுகள் வெளியாகியிருக்கக் கூடும்.
எது எவ்வாறிருப்பினும், பல கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையாலும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் பிரதிகளின் சட்ட வலுத் தன்மையே இதற்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுவதாலும், சமூக மட்டத்தில் அதாவது வாக்காளர்களிடையே பாரியதொரு அங்கலாய்ப்பு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
இவ்வாறான இழுபறி நிலை காரணமாகத் தேர்தல் பிரசார நடவடிக்கையில் சில இடங்களில் சோர்வு நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழு இவ்விடயத்தில் ஒரு காத்திரமான முடிவை எடுத்து உடனடியாக நடைமுறைப்படுத்தலாம். அல்லது நீதிமன்றத்தை நாடலாம்.
ஆனால், தேர்தல் உரிய தினத்தில் நடைபெறும் என்றும், வாக்காளர்கள் அட்டைகள் குறிப்பிட்ட காலத்தில் விநியோகிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இழுபறியாக இன்னும் தொடரும் என்றால் அது மேற்படி தேர்தல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டபடி மேற்கொள்வதில் தாமதங்களை ஏற்படுத்தலாம்.
உண்மையில், வாக்காளப் பெருமக்களின் பக்கத்தில் இருந்து பார்க்கின்ற போது, இது ஒரு தேவையற்ற குழப்பமாகும். சிறிய விடயங்களில் விடப்படுகின்ற தவறுகள் ஜனநாயகப் பொறிமுறையான தேர்தல் நடவடிக்கைகளில் தாக்கத்தையோ தேக்கத்தையோ ஏற்படுத்துவதை இனிவரும் காலங்களில் தவிர்க்க வேண்டியுள்ளது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்குத் தேர்தல்கள் திணைக்களமும் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல்கள் ஆணைக்குழு வேட்புமனுக்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை மும்மொழியிலும் தெளிவாக வெளியிட வேண்டும். உதாரணமாக, பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியா, புகைப்படப் பிரதியா, உண்மைப் பிரதியா, அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிரதியா என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். யார் அதனை உறுதிப் படுத்தி ஒப்பமிடலாம் என்பது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
அதேபோன்று, தமக்கு நீண்ட கால அனுபவம் உள்ளதென்றும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆவணங்களை நூறு வீதம் சரியாக பூரணப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன். கடைசி நேரத்தில் வேட்பாளர் தேடுவதை நிறுத்த வேண்டும்.
உதாரணமாக வேட்பு மனுவில் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிரதி ஆவணம் ஒன்றையே கோரி இருந்தாலும், அவற்றுள் சட்ட வலு அதிகம் உள்ள ஆவணத்தை அல்லது முடியுமாயின் அசல் பிரதியைச் சமர்ப்பிக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்த குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது.
உண்மையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவோ அல்லது வேறு அரச நிறுவனம் ஏதாவது ஒரு தேவைக்கான ஆவணங்களின் தன்மையைத் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்குமாயின், அதற்கமைவாக ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்சிகள், சுயேச்சை குழுக்களின் பொறுப்பாகும்.
அப்படியான ஒரு சூழ்நிலையில், முறைப்படி ஓர் ஆவணத்தைக் கூட சமர்ப்பிக்க முடியாத தரப்புக்கள் இருக்குமாயின், அவர்கள் மக்கள் நலனை மையப்படுத்தி முறையான அரசியலை முன்னெடுப்பதற்கு எந்தளவுக்குப் பொருத்தமானவர்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago