Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Johnsan Bastiampillai / 2022 ஜனவரி 31 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
நினைவுகூரல்களுக்கும் நீதி கோரல்களுக்கும் விதிக்கப்பட்டு வருகின்ற தடையானது மிக மோசமானதொரு ஜனநாயக மீறல் என்பதை அறியாதவர்களாகவே இலங்கையின் அரசாங்கமும் அதன் படைகளும் பாதுகாப்புத் தரப்பினரும் இருந்து வருகின்றனர். அதற்குரிய மாற்று நடவடிக்கையினை யார் முன்னெடுப்பது என்பதே இப்போதைக்கு எல்லோரிடமும் உள்ள கேள்வி. ஆனால் ஏதோ நடப்பதெல்லாம் நடக்கட்டும் நமக்கென்ன என்றிருப்பவர்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர் என்பதே கவலை.
முக்கியமாக போராட்டம் நடைபெற்று அப்போராட்டம் மௌனிக்கப்பட்ட இலங்கையில், அதிகமாகவே படுகொலைகள், கொலைகளுக்கான நினைவு கூரல்களைக் கூட யாரும் செய்துவிடமுடியாதளவுக்கான அடக்குமுறைகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் நடைபெற்ற அநீதிகளுக்காக நீதிகளைக் கோர முடியாதளவுக்கு நிலைமை காணப்படுகிறது. “நடைபெற்றவைகளை மறந்துவிடுங்கள்” என்று சொல்வதைவிடவும், அவை மறைக்கப்பட்டு மறந்துவிடும் படியான செயற்பாடுகளெ நடைபெறுகின்றன.
உலகின் பல நாடுகளில் படுகொலைகள் பலவிதமான நடைபெற்றிருக்கின்றன. அவை ஒரு நாடால் இன்னொரு நாட்டிலும், சொந்த நாட்டுக்குள் அதன் அரசாங்கங்களாலும், ஒரு நாட்டினுடைய அதிகார வர்க்கத்தினராலும் இனங்களுக்கெதிரானவும் பண்பாடுகளுக்கெதிராகவும் பல முறைகளில் நடைபெற்ற வரலாறுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு உதாரணமாக, ஆர்மீனிய இனப்படுகொலை, அசிரிய இனப்படுகொலை, கம்போடிய இனப்படுகொலை, ருவாண்டா இனப்படுகொலை என ஒரு சிலவற்றைக் கூற முடியும்.
இந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற படுகொலைகள் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் மீதானவைகளாக இருக்கின்றன என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், இலங்கை தமிழர் இனப்படுகொலை என்பது, பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும் வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும் எறிகணைகளை வீசியும் நேரடியாகச் சுட்டும் சித்திரவதை செய்தும் தமிழர்களைப் படுகொலை செய்த வரலாறுகளே அதிகம். இதனை திட்டமிட்ட இன அழிப்பாகவே வரலாறுகளில் பதிவு செய்தல் வேண்டும்.
இலங்கையில், தமிழர்களை நாட்டைவிட்டு வெளியேறச்செய்து அவர்களின் விகிதாசாரத்தைக் குறைத்தல், அல்லது தமிழர்களின் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு விகிதாசாரத்தைக் குறைத்து, அங்கிருக்கும் தமிழர்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் காலங்காலமாக அரசாங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.
குறிப்பாக, தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொள்ளப்பட்ட போரில், ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிற போதும் அவற்றினை அரசு சட்டை செய்யவில்லை. இதற்கான மனித உரிமை போராட்டமே ஐக்கிய நாடுகள் சபையை நம்பி ஒவ்வோர் அமர்விலும் தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1948ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நாள்முதல் நடைபெற்று வருகின்ற தமிழ் மக்களுக்கெதிரான செயற்பாடுகள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அந்நாள்முதல் தமிழர்களின் மனித உரிமைகளை மீறி திட்டமிட்ட இனவழிப்பை நடத்திவருகிறது என்பதே தமிழர்களின் வாதம். அந்த வாதம் உள்நாட்டுக்குள் எடுபடாத ஒன்றாக இருக்கையில், இந்த நகர்த்தலை புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
சிங்கள மொழிக்கு, சிங்களவர்கள் பின்பற்றும் பௌத்த சமயத்துக்குச் சிறப்புரிமைகள் காணப்படுகின்ற நிலையில் தமிழர்களின் கல்வி வேலைவாய்ப்புகளை அபகரித்து, திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தி, நியாமற்ற முறையில் கைதுசெய்து சிறையில் அடைத்தல் என, நீண்ட உரிமை மீறல் நடைபெறுகையில் அதற்கெதிராகப் போராட வேண்டிய நிலைக்கு தமிழர் தரப்பு தள்ளப்பட்டது என்பதே வரலாறாக இருந்தாலும் அடிமைகளாகவும் வாய்பேசா மடந்தைகளாகவும் தமிழர்கள் வாழவேண்டும் என்பதற்கான அழுத்தங்களையே பட்டியலிடப்படும் படுகொலைகள், அழிவுகள் தொடர்பான நினைவுகூரல் நாள்களில் நடைபெறுகின்றன.
ஆரம்பத்தில் பொதுமக்கள் கூடுவதால் கலவரங்கள், பிரச்சினைகள் ஏற்படலாம் போன்ற வேறுவேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்போதைய கொவிட் சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் வகையில் நீதிமன்றங்களை நாடி தடையுத்தரவுகளைப் பெறுதல் பொலிஸாரின், பாதுகாப்புத்தரப்பினரின் வேலைகளாக இருக்கின்றன.
தமிழர்களின் மனித உரிமைகளை சிங்கள அரசுகள் மீறின என்பதற்கன ஆதாரங்களாக இருந்து கொண்டிருக்கின்ற படுகொலைகள், மறைக்கப்படுவதற்கு இவை காரணமாக இருக்கும் என்று அரசும் அதன் பாதுகாப்புத் தரப்பினரும் நம்பிக்கை கொண்டிருப்பதே அதன் உள்நோக்கமாகும். ஆனால் இவ்வாறான அடக்கு முறைகள், நெருக்குதல்கள் மென்மேலும் எதிர்ப்புகளையும் எதிர்ச்செயற்பாடுகளையும் கொண்டுவரும் என்பதனை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
யுத்தம் மௌனிக்கப்பட்டது முதல் நடைபெறுகின்ற சர்வதேச அளவிலான மனித உரிமை மீறல்களுக்கெதிராக இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பான அழுத்தங்களால் எந்தப் பயனும் ஏற்பட்டதாக இல்லை. ஆனாலும் தமிழர்கள் வருடா வருடம் முயன்றே வருகிறார்கள். இந்த நிலையில்தான் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்த பிரிட்டன், அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள், அண்டை நாடான இந்தியா போன்ற நாடுகள் தமிழர்களுக்கு உதவியாக வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டும் இருக்கிறது.
தமிழர்கள் தங்கள் பாரம்பரியமான சடங்கு முறைகளைக் கூட நடத்துமுடியாதளவுக்கு இலங்கையில் நெருக்குதல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதற்கு கடந்த வருடத்தில் பாரம்பரியமான கார்த்திகை தீபத்தினைக்கூட அவர்கள் ஏற்றி மகிழக்கூடாது என்கிற கடப்பாட்டைக் குறிப்பிட முடியும். இவ்வாறான தடைகளை மீறிய செயற்பாடுகளுக்கு அவர்களை தள்ளிவிடுகின்ற நிலையே இவற்றால் உருவாகின்றன. மரணித்த உறவுகளுக்கான அஞ்சலியைச் செலுத்தி ஆறுதலடைவதற்கான உரிமையைக் கூட வழங்க முடியாதளவுக்கான ஜனநாயக மீறலுக்கு எவ்வாறு பெயர் வைப்பது என்பது இந்த இடத்தில் கேள்வியாக இருக்கிறது.
ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினையால் உருவான விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில், அவர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான நீதி எவ்வாறு வழங்கப்பட முடியும் என்ற வகையில் இலங்கை அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டவைகளும் மறக்கப்பட வேண்டும் என்ற சமப்படுத்தல் முன்வைக்கப்படுவது பிழையான அணுகுமுறையாகவே கொள்ளப்பட வேண்டும். இதில் நகைப்பான விடயம் என்னவென்றால் தமிழர்களின் ஒரு சில தரப்புகளே இவ்வாறான நிலைப்பாடுகளுடன் இருப்பதுதான்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறான மோசமான கட்டுப்பாடுகள், எதற்கெடுத்தாலும் நீதிமன்றத் தடையுத்தரவு பெறுகின்ற, போராட்டங்கள் நினைவு கூரல்களை நிகழ்த்துவதற்காக தங்களது மன ஆளக்கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவதற்காக என கைதுகள் நடைபெற்றிருக்கவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் இவை மிகவும் மோசமாகவே இருக்கின்றன.
நேற்றைய தினம் கொக்கட்டிச்சோலை மனிழடித்தீவு இறால் பண்ணைப் படுகொலை நினைவு தினமாகும். இதனை வருடா வருடம் நடத்தும் அவர்களுடைய உறவினர்கள் கிராமத்தவர்களுக்குக் கூட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படுகொலையானது உண்மையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற்றிருந்ததாகும். ஆனால் தற்போதைய அரசாங்கம், சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன சார்ந்ததாகும். அந்த நினைவேந்தலுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏன் இந்த இடத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்று சிந்தித்தால், அதற்குக் காரணம் அந்தப் படுகொலையானது அரசின் இராணுவத்தினரால் நடத்தப்பட்டதாகும். இது போலவே அனைத்து படுகொலைகளும் அழிப்புகளும் நடைபெற்றிருக்கின்றன.
இலங்கையில் நினைவுகூரல்களுக்காக நடைபெறுகின்ற அடக்குமுறை ரீதியான தடைகளுக்கு முக்கியமான காரணம் நடைபெற்ற அத்தனை படுகொலைகளும் இலங்கை இராணுவத்தினர், இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டவர்கள், இராணுவத்தினரின் உதவியாக இருந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இராணுவத்தினருக்கெதிரான விடயங்களை மக்கள் மேற்கொள்கிறார்கள். பாதுகாப்புத் தரப்பினருக்கெதிராகச் செயற்படுகிறார்கள் என்ற பொதுமையில் இவற்றுக்கெல்லாம் தடைகள் கொண்டுவரப்படுகின்றன. ஆனால் போரில் மரணித்த இராணுவத்தினருக்காக நிகழ்வுகள் நடத்தப்பட்டே வருகின்றன. அதே போன்று கார்த்திகை வீரர்கள் எனும் மக்கள் விடுதலை முன்னணியினரின் நிகழ்வுகள் கூட நடைபெறுகின்ற போது, பொது மக்கள் கொல்லப்பட்ட படுகொலைகளை நினைவுகூர முடியாதளவுக்கான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு தமிழர்கள் என்று பிரிப்புப்பார்வையே காரணம் என்ற முடிவுக்கு வர முடிகிறது.
இந்த வகையில்தான், நாட்டுக்குள்ளேயே வேறு ஒரு நாட்டக்கெதிரான யுத்தத்தினை நிகழ்த்திய பதிவுள்ள இலங்கையில் தம் உறவினர்களை நினைவுகூருவதற்குகூட அனுமதியில்லாத ஜனநாயக மீறல்கள் நடைபெறுகின்றன. இந்த மீறல்களுக்கு எங்கெங்கே நீதியைத் தேடுவது என்பதே எல்லோர் மத்தியிலும் இருக்கின்ற கேள்வி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
22 minute ago
2 hours ago