2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

‘நான் அரசியல்வாதி அல்ல’ சமூகசேவகன் என்கிறார் கலாநிதி வீ. ஜனகன்

Editorial   / 2020 ஜூலை 30 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்களுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்ட நிலையில், நாடாளுமன்றில் தமிழ் - சிங்கள - முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் வரவேண்டும் என்ற நோக்கில்,  கொழும்பில் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதித்து வத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முக்கியத்துவம் வழங்கியுள்ளார் என, அக்கட்சியில் சார்பில், தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வீ.ஜனகன் தெரிவித்தார். தமிழ்மிரருக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயங்களைக் கூறினார். அவர் வழங்கிய செவ்வியின் விவரம் வருமாறு:

கே: நீங்கள், அரசியல்வாதியாக வரவேண்டும் என்று யார் தீர்மானித்தது? உங்களது அரசியல் பிரவேசம் எப்படி அமைந்தது?

அரசியல்வாதியாக வேண்டும் என்பதை நான்தான் தீர்மானித்தேன். அரசியல் பிரவேசம் என்று சொல்லும்போது, 2014ஆம் ஆண்டு தமிழர்  முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை நிறுவி, அரசியல்சார் செயற்பாடுகளில், தொடர்ச்சியாக ஈடுபட ஆரம்பித்தேன். 

எனினும், அதற்கு முன்னதாக  2009ஆம் ஆண்டு, ‘ஜனனம் பௌன்டேசன்’ என்ற அமைப்பை நிறுவி, சமூக ரீதியான பணிகளை மேற்கொண்டபோது,  அதை மேலும் முனைப்புடன் முன்னெடுக்க, அரசியல் ரீதியான சக்தி தேவை என்று எனக்குத் தோன்றியது. எனவே, எனது சமூகப் பணியை, அரசியல் சார்ந்த பணியாக மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன். 

2009ஆம் ஆண்டு, யுத்தம் நிறைவடைந்த பின்னர், தமிழர்களின் அரசியல் களம், புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எனவே, நான் 2015ஆம் ஆண்டு, வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம், நேரடியான அரசியல் பயணம் ஆரம்பித்தது.

கே: ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்து கொண்டமைக்கான காரணம் என்ன?

2017ஆம் ஆண்டு, தலைவர் மனோ கணேசனின் அழைப்பின் பேரில், ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்து, அரசியல் கட்சி சார்ந்து எனது பணிகளை முன்னெடுத்தேன். எமது அரசியல் பயணமானது, தமிழர் சார்ந்த கட்சியில் இருந்து போகவேண்டும் என்ற விடயத்தில் உறுதியாக இருந்தேன். வடக்கிலோ மலையகத்திலோ, புதிதாகத் தமிழ்க் கட்சியை உருவாக்குவது இலகுவான விடயம். ஆனால், தமிழர்கள் சிறுபான்மையாக இருக்கக்கூடிய கொழும்பு மாவட்டத்தில்,  தமிழ்க் கட்சியை உருவாக்கி, அதைப் பிரமாண்டமாகக் கட்டியெழுப்பக்கூடிய ஆளுமை மனோ கணேசனிடம் இருந்தது. 

அவரது செயற்பாட்டுக்கு வலுச் சேர்க்கக் கூடியவனாக, நான் இயங்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்தக் கட்சியில் இணைந்துகொண்டேன். இணைந்த பின்னர், அமைப்பு செயலாளராக, கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபட்டேன்.

கே: வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட நீங்கள், கொழும்பில் இம்முறை போட்டியிட முடிவு செய்தமைக்கு, விசேட காரணங்கள் உண்டா?

மக்கள் எங்கு, அதிகளவில் நேரடியாகப் பாதிக்கப்பட்டார்களோ, அங்கிருந்து எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று யோசித்திருந்தேன். அங்குதான், அரசியலை உண்மையில் கற்றுக்கொள்ள முடியும். 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில், வன்னியில் பல்வேறு தலைமைத்துவப் பிரச்சினைகள் இருந்தன. 

யுத்தம் காரணமாக, ஸ்திரமான அரசியல் நிலையொன்று இல்லாமல், மக்கள் தடுமாறிக்கொண்டிருந்ததை நான் பார்த்திருந்தேன்.  அங்கிருந்து, அரசியல் பயணத்தை ஆரம்பித்ததால், அரசியல் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், இது என்னுடைய மாவட்டம். இங்குதான் நான் கற்றிருக்கின்றேன்; என்னுடைய நிறுவனங்கள் இங்குதான் உள்ளன. சமூக சேவைகளை, இங்குதான் அதிகளவில் முன்னெடுத்திருக்கின்றேன்; இங்குதான் வசிக்கின்றேன். எனவே, இங்கு போட்டியிடுவது என்பது, கேள்விக்கு உட்படுத்தப்படத் தேவையில்லாத விடயம்.

கே: கொழும்பு மாவட்ட அரசியல் சூழ்நிலையில், உங்களுக்கு எவ்விதமான சவால்கள் உள்ளன?

வன்னி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்கான தேவைகளில்  வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இரண்டு மக்களுக்கும் இருப்பு ரீதியான பிரச்சினை உள்ளது. நாட்டில், தமிழர்கள் வாழும் சகல இடங்களிலும், அவர்கள் மத்தியில் உரிமைப் பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. எனவே, அந்தவகையில் கொழும்பு மாவட்டத்துக்குப் பாரிய வேற்றுமைகள் இல்லை. கொழும்பு மாவட்டமானது, நிர்வாக மாவட்டம்; வந்தாரை வாழவைக்கின்ற மாவட்டம். நாட்டின் அனைத்துப் பகுதியில் உள்ள மக்களும் இங்கு வசிக்கின்றனர். 

அரசியல் தீர்மானங்கள், கொழும்பிலேயே எடுக்கப்படுகின்றன. எனவே, கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், வாழ்ந்து கொண்டிருக்கும் மாவட்டமாகக் கொழும்பு உள்ளது. எமக்கு, ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான வாக்கு வங்கி உள்ளது. 

எனவே, தமிழர்கள் முக்கியமாக வாழும் மாவட்டங்களில் ஒன்றாக இதனைப் பார்க்கின்றேன்.  கொழும்பு மாவட்டத்தில், தமிழ்ப் பிரதிநிதித்துவம் சக்திவாய்ந்தாக இருக்க வேண்டும் என்று தலைவர் மனோ கணேசன் விரும்புகின்றார்; நானும் விரும்புகின்றேன்.

கே: ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில், நீங்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளீர்கள்?

கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது கட்சியினரும் தமிழர்களும்  முஸ்லிம்களும் தேவையில்லை என்பதை, நேரடியாகக் கூறிவிட்டனர். அவர்களது வேட்பாளர் தெரிவுகளும் அவ்வாறே அமைந்துள்ளன. தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களுக்குத் தேவையில்லை என்ற அடிப்படையில் அவர்களது பிரசாரங்களும் அமைந்துள்ளன. 

அதுபோலவே, ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுத்தவரையில், பெயரளவிலான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.  வாக்குகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களையே, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக நியமிப்பார்கள். ஆனால், ஐ.தே.கவின் தலைமையானது, பெயரளவிலான இரண்டு வேட்பாளர்களை நியமித்திருக்கின்றது. 

ஒருவருக்குத் தமிழ்பேச வராது; மற்றையவரின் வாக்கு வங்கியில், கேள்விக்குறியான நிலை உள்ளது. மஹிந்தவுக்கும் ஐ.தே.கவுக்கும் தமிழர்கள் தேவையில்லை என்ற நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியானது, மூவின மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்தது. 

கொழும்பு மாவட்டத்தில், தமிழ்ப் பிரதிநிதித்துவம் வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான், சஜித் பிரேமதாஸ மூன்று தமிழர்களை நியமித்திருக்கின்றார். அதேவேளை, முஸ்லிம் பிரதிநிதித்துவம் வரவேண்டும் என்ற நோக்கத்தில், மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றார். நாடாளுமன்றில், தமிழ்,  முஸ்லிம் பிரதிநிதிகள் வரவேண்டும் என்று நினைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதில், எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதே எமது நிலைப்பாடு.

கே: ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து, ஒரு தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியாகப் பிரிந்துள்ளமை, கொழும்பில் தமிழ்ப் பிரதிநிதிகளை உருவாக்குவதில் தாக்கம் செலுத்தும் என்று நினைக்கின்றீர்களா?

ஐக்கிய தேசிய கட்சிதான், ஐக்கிய மக்கள் சக்தியாகப் பரிணமித்துள்ளது. இதைப் பிளவு என்று சொல்ல முடியாது. ஏனென்றால், 50: 50 என்றாலோ, 60: 40 என்றாலோ, 30: 70என்றாலோ பிளவு என்று கூறலாம். ஆனால், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 90 சதவீதமானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். அங்கு வெறும் 10 சதவீதமானவர்களே உள்ளனர்.  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வெறுமனே பெயரையும் கட்சியின் பெயர் பலகையையும் தூக்கிக்கொண்டு போய்விட்டார். 

அவ்வாறு இருப்பது கட்சி அல்ல; ஐக்கிய தேசிய கட்சி என்பது, ஐக்கிய மக்கள் சக்திதான் என்பதைக் கூறிக்கொள்ள விருப்புகின்றேன்.  தம்மை வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு, தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். எனவே, ஒரு இலட்சத்து 40ஆயிரம் தமிழர்களுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியே தெரிவாக அமையும். எனவே, தமிழர்களின் வாக்குகள் எமது பக்கம் உள்ளன. 

எனினும், சிங்களவர்களின் வாக்குகள் அவ்வாறு இல்லை. கொழும்பில் 44 கட்சிகளில் 924 வேட்பாளர்கள் உள்ளனர். இவ்வளவு கட்சிகளும் வேட்பாளர்களும் சிங்கள மக்களுடைய வாக்குகளைப் பிரிக்கப் போகின்றனர். எனவே, தமிழ் மக்களின் அனைத்து வாக்குகளும் எமக்கு வந்தால், எமது மூன்று தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

கே: கொழும்பு மக்களை மய்யப்படுத்தி, நீங்கள் கொண்டிருக்கும் திட்டங்கள் பற்றிக் கூறமுடியுமா?

மூன்று விடயங்களை நான் அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  முதலாவது, கல்வித்துறை சார்ந்த விடயத்துக்கு முக்கியப் பங்கு வழங்கியுள்ளேன். பாலர், ஆரம்பப் பாடசாலைகள் என, தமிழ்ப் பாடசாலைகள் தமிழர் வசிக்கும் பிரதேசங்களில் பற்றாக்குறையாகக் காணப்படுகின்றன. அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  பாடசாலைகளைவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு, தொழில்சார் கல்வி இல்லை. 

வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு ஒரு இலட்சத்து 20ஆயிரம் பேர் தொழில்சார் கல்விகற்று நல்ல வேலைகளில் உள்ளனர். கொழும்பில் ஒரு இலட்சத்து 20ஆயிரம் வேலைவாய்ப்புகள் இருந்திருக்கின்றன. எனினும், இங்குள்ளவர்களுக்கு அதற்குத் தேவையான தொழில்சார் கல்வி இல்லை. எனவே, பாடசாலைக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு, தொழில்சார் கல்விமீது ஆர்வத்தை ஏற்படுத்தி, இதைப் பெற்றுக்கொடுக்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அடுத்ததாக, தோட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு, வீடுகள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன.  நடுத்தர மக்களுக்கும் தமது ஆட்சியில் வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என, சஜித் பிரேமதாஸ கூறியிருக்கின்றார். 

வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு, நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகள் இல்லாத யுகத்தை ஒழிக்க வேண்டும் என்பதே எமது இலக்காக உள்ளது. அத்துடன், வர்த்தகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, குறைகேள் மய்யங்களை உருவாக்கத் தீர்மானித்துள்ளோம்.

கே: கொழும்பில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளீர்களா?

கொழும்பு மக்களுக்கும் உரிமைசார் பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்காகக் குரல் கொடுக்கவுள்ளோம். எனவே, எமக்கு மூன்று தமிழ்ப் பிரதிநிதிகளை மக்கள் பெற்றுக்கொடுத்தால், அவர்களுக்காகக் குரல் எழுப்ப, எமது பலம் அதிகரிக்கும்.

கே: இந்துக் கல்லூரியில் இருந்து, நாடாளுமன்றம் செல்லும் முதலாவது நபராக நீங்கள் மாற, பழைய மாணவர்கள் எவ்வாறான ஒத்துழைப்பை வழங்குகின்றனர்?

கொழும்பு இந்துக் கல்லூரியானது, பிரமாண்டமான ஒரு சமூகமாகும். 60 -70 வருடங்கள் பாரம்பரியத்தைக் கொண்டது. இந்துக் கல்லூரியில் இருந்து அரசியலுக்கு வருவது, மிக முக்கியமானது என்று நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். கொழும்பு மாநகர சபையில், மூவர் உறுப்பினர்களாக உள்ளனர். எனினும், நாடாளுமன்றில் இந்தமுறை யாரும் இல்லை. எனவே, இப்போது அவர்கள் என்னை நேரடியாக ஆதரிக்கக்கூடிய முயற்சிகளை உருவாக்கியுள்ளனர். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள்,  தற்போது உள்ளவர்கள் என, அனைவரும் என்னை இன்முகத்துடன் வரவேற்கக்கூடிய நிலையை நான் பார்க்கின்றேன். எனவே, இந்துக் கல்லூரிக்காக நாடாளுமன்றம் செல்லும் கனவை, நனவாக்க நான் போராடுவேன் என்பதை, இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றேன்.

கே: நாடாளுமன்றத்துக்குச் செல்லும் 225 பேரில் ஜனகன் எவ்வாறு தனித்து வெளிப்படுவார்?

மக்களின் குறைகளை நிவர்த்திக்கும் ஒருவராக இருக்க நான் ஆசைப்படுகின்றேன். என்னை இலகுவாக மக்கள் சந்திக்கும் வகையிலான கட்டமைப்பை உருவாக்கியுள்ளேன். குறைகேள் மய்யங்களை உருவாக்குகின்றேன். இலகுவாக என்னைத் தொடர்புகொள்ள, செயலியொன்றை அறிமுகப்படுத்துகின்றேன். என்னுடைய நாடாளுமன்ற காலத்தை முழுமையாக, எமது மக்களுக்குக் குரல் கொடுப்பதற்காகப் பயன்படுத்துவேன். களத்தில் நின்று செயற்படுகின்ற தமிழ்ப் பிரதிநிதியாக வேண்டும் என்றே ஆசைப்படுகின்றேன். நான் அரசியல்வாதி அல்ல; மக்கள் பிரதிநிதி.

கே: படித்த இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போது, எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

225 உறுப்பினர்களில் 60 - 70 சதவீதமானவர்கள் கல்வித்துறை பற்றிக் கதைப்பதில்லை என்று நாங்கள் குறைபட்டுக்கொள்வோம். எனினும், படித்த இளைஞர்கள், நாடாளுமன்றம் செல்ல முன்வருவது இல்லை; சமூக ஊடகங்களில் மாத்திரம் அரசியல் பேசிவிட்டு நின்றுவிடுகின்றனர். இதனை மாற்ற வேண்டும்; படித்த இளைஞர்கள், நாட்டுக்குச் சேவை செய்ய முன்வர வேண்டும். ‘அரசியல் ஒரு சாக்கடை’ என்று கூறி ஒதுங்காமல், மக்களுக்காகக் களமிறங்க வேண்டும் என்று, இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

கே: உங்கள் வாக்காளர்களுக்கு நீங்கள், இந்த நேரத்தில் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலானது, எங்களுடைய தேர்தல்; தமிழ் மக்களுக்கான தேர்தல்; எங்களுடைய தமிழ்ப் பிரதிநிதிகளைத் தயக்கமின்றித் தெரிவுசெய்வதற்கான தேர்தல்.  இந்தத் தேர்தலை, நாங்கள் யாருமே தவறவிட்டுவிடக்கூடாது.  தவறினால், எமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை, நாங்கள் இழந்துவிடுவோம்.  எனவே, தயவு செய்து அனைவரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி, வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களியுங்கள். வாக்களிக்கும்போது, உங்களுக்கான சரியான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யுங்கள். அதில், நாங்களும் உங்களின் பிரதிநிதியாக இருந்தால், எங்களையும் தெரிவு செய்யுங்கள். வாக்களிக்காமல் வீடுகளில் இருப்பதால், நாங்கள் சாதிக்கப் போவது எதுவுமில்லை என்பதைவிட, இழப்பவைகள்தான் அதிகமாக இருக்கும் என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X