2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

நாளை புலரும் பொழுது புத்தாண்டு

Mayu   / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ்,
முன்னாள் ராஜதந்திரி

உலக நாடுகள்  புதிய 2025ஆம் ஆண்டினை வரவேற்பதற்கு தம்மைத்  தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன.  2024ஆம் ஆண்டானது சர்வதேச ரீதியில் எண்ணற்ற நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டு உலகில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகளை மீட்டுப் பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.
2024ஆம் வருடமானது உலகளவில் மிகப் பெரிய தேர்தல் வருடமாகத் திகழ்ந்தது. சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் மக்கள் அதாவது உலக சனத் தொகையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு  முகங் கொடுத்தன.
அமெரிக்கா, பிரிட்டன், மெக்சிகோ, பாகிஸ்தான், இந்தியா, ஸ்ரீலங்கா, இந்தோனேசியா,  தென்னாபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் புதிய தலைவர்களைத் தெரிவு செய்தன.

இந்தத் தேர்தல்கள் உலக ரீதியாக ஒரு மாறுபாட்டினை வெளிப்படுத்தியதோடு, தேசியம், பொருளாதார  சீர்திருத்தங்கள், ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதாக அமைந்திருந்தது.

உலக நாடுகளில் இடம்பெற்ற தேர்தல்களானது அந்தந்த நாடுகளின் தேசிய அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது மாத்திரமல்லாது, சர்வதேச உறவுகளிலும் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தியது என கருத இடமுண்டு. மேலும் ரஷ்யா- யுக்ரைன்,  இஸ்‌ரேல்- ஹமாஸ் யுத்தங்கள், அதன் தொடர்ச்சியாக மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றங்கள், சூடான் மற்றும் பல நாடுகளில் நிலவும் பதற்றங்கள் என்பன தொடர்ச்சியாக நடைபெற்று வரும் யுத்தங்களாகக் கருதப்படுகின்றன. இதற்குத் தீர்வு காண சர்வதேச ரீதியாக எந்த விதமான வழிவகைகளும் தென்படவில்லை என்பதே இன்றைய யதார்த்தம்.

தென் சீனக் கடற்பரப்பில் நிலவுகின்ற பதற்ற நிலைமையானது அதனை அண்டிய நாடுகளில் குறிப்பாக பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளில் ஒரு பதற்ற நிலையினை உருவாக்கியது எனலாம்.

இவற்றைத் தவிர உலக ரீதியாக மாறி வருகின்ற காலநிலை மாற்றம், நாடுகளுக்கு இடையிலான குடி பெயர்வுகள், யுத்தங்கள் காரணமாகப் பெருமளவு சிறார்களின் இறப்புக்கள், உணவு, உடை, உறையுள் இன்றி, அகதிகளாக மாறுகின்ற மக்களின் நிலைமைகள், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி போன்றன உலகின் போக்கில் ஒரு பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தினவெனக் கருத இடமுண்டு.

பங்களாதேஷ் 
ஜனவரி மாதம் இடம்பெற்ற  பொதுத் தேர்தலில் பங்களாதேஷ் பிரதமரான ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அவாமி லீக் கட்சி 223 இடங்களில்  அமோக வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக அவர்  பிரதமராகப் பதவியேற்றார்.

ஆயினும், ஆகஸ்ட் மாதம் அந்நாட்டில் இடம் பெற்ற  அரசியல் எழுச்சியின் காரணமாக அவர் தனது பதவியினை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைய நேரிட்டது.
இடைக்கால அரசாங்கமானது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில்  அமைக்கப்பட்டதானது, பங்களாதேஷின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்கத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அங்கு அதிகரித்து வரும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள்  இந்தியா- பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளின் நல்லுறவுகளில் ஒரு விரிசலினை ஏற்படுத்துவதாகக் காணப்படுகின்றது

பாகிஸ்தான்
பாகிஸ்தானில் பெப்ரவரி மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி ஆதரவு வேட்பாளர்கள் 95 இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தினை வகித்தனர். ஆயினும், 64 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியானது பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன்  இணைந்து புதிய அரசை அமைத்தது. அந்தக் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் 
பொறுப்பேற்றுக் கொண்டார்.

ரஷ்யா
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற  ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின்  87 வீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
யுக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு முன்னுரிமை, ரஷ்யாவின் இராணுவத்தைப் பலப்படுத்துவது ஆகியனவற்றை உறுதிப்படுத்துவது அவசியமெனத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தேர்தலின் பின்னர் குறிப்பிட்டிருந்தது நோக்கப்பட வேண்டியது  ஆகும்.

மெக்சிகோ
வட அமெரிக்க  நாடான மெக்சிகோவின் 200 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக யூத இனப் பெண்மணியான கிளாடியா ஷேன்பாம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ரோமன் கத்தோலிக்க சமூகப் பிரிவைச் சார்ந்த கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட மெக்சிகோவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி (இடதுசாரி) சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.

உலகின் இரண்டாவது ரோமன் கத்தோலிக்க மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடு மெக்சிகோ ஆகும்.

இஸ்‌ரேல் - ஹமாஸ் யுத்தம் 
2024ஆம் ஆண்டில் இஸ்‌ரேல் தனது இராணுவ செயற்பாடுகளை லெபனான், ஈரான், சிரியா, யேமன் போன்ற நாடுகளுக்கு விஸ்தரித்து, தனது இராணுவ வலிமையை உலகுக்கு வெளிப்படுத்த முற்பட்டதெனக் கருதலாம். ஹமாஸ் இயக்கத்துக்கு எதிராக காசாவில் தனது  தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளை,  இஸ்‌ரேல்,  லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராகவும் தமது  போரினை முடுக்கி விட்டது. அதன் தொடர்ச்சியாக, தமது  தேசத்திற்கு  எதிராக செயற்பட்ட பல தலைவர்களையும் கொன்றது.

இஸ்‌ரேல்-ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேயை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்துக் கொன்றதனை இஸ்‌ரேல் ஒப்புக் கொண்டது. செப்டெம்பர் மாதமளவில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை வான்வெளித் தாக்குதலின் மூலம் கொன்றது. தொடர்ந்து  ஹமாஸ் இயக்கத் தலைவரான  யஹ்யா சின்வரையும் அழித்தது.

ஈரானுக்கு எதிராக வான்வெளித் தாக்குதலை மேற் கொண்டு வந்த இஸ்‌ரேலானது தற்போது தொடர்ச்சியாக  யேமனில் உள்ள ஹவுதி படையினர் மீதும் தாக்குதலைத் தொடர்கின்றது.
தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பது அவசியமென இஸ்‌ரேல் தொடர்ச்சியாகக் கூறி வந்ததனையும்  அவதானிக்க முடிந்தது.

ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற இயக்கங்கள்   இஸ்‌ரேலை நோக்கி தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டன. அதன் தொடர்ச்சியாக இஸ்‌ரேலும்  வான்வழித் தாக்குதல்களை மேற் கொண்டது குறிப்பிடத்தக்கது. பரஸ்பர தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியமானது தொடர்ந்தும் ஒரு  பதற்ற நிலையில் இருந்ததனை  அவதானிக்க முடிந்தது.

ஐக்கிய இராச்சியம் 
2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து பாராளுமன்றத் தேர்தலில் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி அங்கு ஆட்சியைக் கைப்பற்றி, அந்நாட்டின் பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் கியர் ஸ்டாமர் பதவியேற்றார். 

பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-கனடா 

இராஜதந்திர உறவுகள்  கனேடிய பிரஜையும், காலிஸ்தான் செயற்பாட்டாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குப் பங்கிருப்பதாகக் கனடா  குற்றஞ் சாட்டியதனைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பின்னடைவு ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

இந்திய அரசு கனடா நாட்டுக்கான தனது தூதர்களை இந்தியாவிற்கு  திருப்பி அழைக்க உத்தரவிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள கனடா நாட்டுத் தூதர்களையும் வெளியேற உத்தரவிட்டிருந்தது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான இந்த சர்ச்சை நீடித்தால் இரு நாடுகளினதும் உறவுகள் நீண்டகால தாக்கத்துக்கு உள்ளாகுமென கருதப்படுகின்றது.

ரஷ்யா- யுக்ரைன் யுத்தம்
ரஷ்யா மற்றும் யுக்ரைன்   நாடுகளுக்கு இடையிலான யுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த யுத்தமானது ரஷ்யாவுக்கும், நேட்டோ (NATO) நாடுகளுக்கும்  இடையிலான உறவுகளில்  மேலும் விரிசலினை ஏற்படுத்தும் சாத்தியம் தென்படுகின்றது.

ஏவுகணைத் தாக்குதல்கள், பரவலாகக் காணப்படுகின்ற பொதுமக்களுக்கான சேதங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்த யுத்தத்திற்கு ஒரு தீர்வு காணுமாறு உலக நாடுகளால் அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த யுத்தத்தின் காரணமாக ஏற்படுகின்ற பொருளாதாரப் பின்னடைவுகள், உலகப் பணவீக்க அதிகரிப்பு,  உணவுப் பற்றாக்குறை ஆகியன உலக நாடுகளின் கவனத்தைப் பெரிதும்  ஈர்த்துள்ளதெனலாம்.

“யுக்ரேன் இந்தப் போரில் அமெரிக்கா கொடுத்திருக்கும் நீண்ட தூரம் சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்தினால், நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்”  என்ற ரஷ்ய ஜனாதிபதியின்  எச்சரிக்கையானது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது எனலாம்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா, யுக்ரைனுக்கு எதிராகப் பயன்படுத்தி உள்ளமையானது இந்த போர் இன்னும் நீண்டு செல்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இதேவேளை, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய இராணுவத்தினர் யுக்ரைனுக்கு எதிராக போரிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி நிலைமையை இன்னும் சிக்கலாக்கக் கூடிய தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது.யுத்தம் காரணமாகப் பெருமளவான  மக்கள் அகதிகளாக அயல் நாடுகளுக்குச் செல்கின்றதானது அகதிகள் 
பிரச்சினையை உருவாக்கும் எனலாம்.

“நான் போர்களைத் தொடுக்கப் போவதில்லை. நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்களை நிறுத்தப் போகின்றேன்”  என அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றானது உலகில் போர் நிறுத்தத்திற்கான சமிக்ஞையாகத் தென்படுகின்றது. ஆனாலும், அவரது கூற்றுக்குப் பின்னரும் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதானது கவலைக்குரிய  விடயமாகும்.

இந்தியா 
18ஆவது இந்திய மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமரானார்.

ஐக்கிய அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்க உள்ளார்.அமெரிக்காவின் 47ஆவது அதிபராகும் இவர்  தனது தேர்தல் பிரசாரத்தின் பொழுது பொருளாதார சவால்கள்,  குடியேற்றம் தொடர்பான சீர்திருத்தங்கள்,  யுக்ரேன் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருதல் போன்ற அம்சங்களை முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் 
பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்று பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான 
91 நாட்களே ஆட்சியிலிருந்த அரசு டிசெம்பர் மாதம் நான்காம் திகதி  கவிழ்க்கப்பட்டது.

ஜேர்மனி 
சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக டிசம்பர் மாதம்  16ஆம் திகதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார். 2025ஆம் ஆண்டு   பெப்ரவரி மாதம் 23ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா 
செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார திசநாயக அறுதிப் பெரும்பான்மை 
பெற்று வெற்றியீட்டினார்.

சிரியா 
2000ஆம் ஆண்டு முதல் சிரியாவை  ஆட்சி செய்து வந்த ஜனாதிபதி  பஷர் அல்- அசாத்தின் சர்வாதிகார ஆட்சி  டிசெம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. இவரது ஆட்சிக்கு  எதிராக சுமார் பதினான்கு ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் எனப்படும் ஹெச்.டி.எஸ். இஸ்லாமிய ஆயுதக்குழு தலைமையிலான கிளர்ச்சிப் படையும், சிரியன் தேசிய இராணுவம் என்ற கிளர்ச்சிக் குழுவும், இராணுவம் என்ற கிளர்ச்சிக் குழுவும் இணைந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக டிசெம்பர் மாதம் எட்டாம் திகதி சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் கைவசம் மாறியது. 

முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்தும், அவரது குடும்பத்தினர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தனர். ஆட்சி மாற்றத்துடன் துருக்கி,  இஸ்‌ரேல் போன்ற நாடுகளின் 
ஊடுருவல் சிரியாவின் சில பகுதிகளில் தென்பட்டது. எதிர்காலத்தில்  எவ்வாறான விளைவுகளை இது  ஏற்படுத்தும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இயற்கை பேரழிவுகள் 

 ஜப்பான் 
2024ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த  தினத்தன்று ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த  நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
பலர் காயமடைந்தனர். 

இந்தோனேசியா 
மே மாதமளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள எரிமலையின் சரிவுகளில் பெய்த கனமழை மற்றும் குளிர்ந்த லாவா மற்றும் சேறு ஆகியவை திடீர் வெள்ளப்பெருக்கைத் தூண்டியதால் பலர் உயிரிழந்ததுடன், பலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

பப்புவா நியூ கினி 
ஜூன் மாதம் பப்புவா நியூ கினியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் குறைந்தது 2,000 பேர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக அந்நாட்டு அரசு  அறிவித்தது.
 ஐக்கிய அமெரிக்கா 
செப்டெம்பர் மாதத்தில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தைத் தாக்கிய ஹெலன் புயல் காரணமாக பலர் உயிரிழந்ததுடன்,  புளோரிடா உட்பட ஏழு மாகாணங்கள் பேரழிவை சந்தித்தன.

மொரோக்கா 
ஒக்டோபர் மாதத்தில் சகாரா பாலைவனத்தில் ஏற்பட்ட மழை வீழ்ச்சியின் காரணமாகப் பாலைவனத்தில் ஒரு சில பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்தக் கடும் மழைப் பொழிவுக்குப் பிறகு, ஐம்பது  ஆண்டுகளாக வற்றியிருந்த ‘இரிக்கி’ ஏரி தண்ணீரால் நிரம்பியதாக  ‘ஏபி’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஸ்பெயின் ஒக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வாலென்சியாவில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   

பிலிப்பைன்ஸ் 
ஒக்டோபர் மாதத்தில்  பிலிப்பைன்ஸின் வடகிழக்கில் தாக்கிய டிராமி புயல் மற்றும் வெள்ளத்தினால் பல பகுதிகள் நீரில் மூழ்கியதோடு பலர் உயிரிழந்தனர்.
வரலாறு காணாத வெப்பநிலை  2024ஆம் ஆண்டு  அதிக வெப்பமான காலப் பகுதியாகக் கருதப்பட்டது. 

2023ஆம் ஆண்டு தொடங்கி  சுமார்  13 மாதங்களுக்கு இந்த வெப்பம் நீடித்தது. உலகின் அதிக வெப்பமான நாளாக  ஜூலை மாதம்  22ஆம் திகதி காணப்பட்டது.
விமான விபத்துக்கள்  தாய்லாந்தில் இருந்து பயணித்த விமானமானது தென்கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையில் இருந்து விலகிச் சென்றதால் அதில் பயணித்த 179 பயணிகளும் இந்த வருட  இறுதி வாரத்தில் உயிரிழந்தனர்.

இதுபோல, அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானமானது கசகஸ்தானில் உள்ள அத்தெள நகர விமான நிலையம்  அருகே தரையில் மோதி 
வெடித்ததனால் அதில் பயணித்த  38 பேரும் மரணம் அடைந்தனர்.

இந்த இரண்டு சம்பவங்களும்  இந்த வருட இறுதியில் நடைபெற்றதானது ஒரு சோக நிகழ்வாகும்.

செயற்கை நுண்ணறிவு 
செயற்கை நுண்ணறிவானது இந்த ஆண்டு தலைப்புச் செய்திகளில் முன்னணியில் இருந்தது. 2024ஆம் ஆண்டில், குரல் குளோனிங், இமேஜ் உருவாக்கம், டிரான்ஸ்கிரைபிங், மியூசிக் மேக்கிங் மற்றும் யதார்த்தமான வீடியோ உருவாக்கம் போன்ற திறன்களுடன், செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பானது முக்கியமாக மனிதரைப் போலவே வாடிக்கையாளருடன் பேசுவதற்கான கம்ப்யூட்டர்  செயற்பாடுகளை (Chatbot) மையமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.

அமெரிக்காவும், சீனாவும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளை, ஐரோப்பா நெறிமுறை சார்ந்த விடயங்களிலும் மற்றும் சாத்தியமான துஷ்பிரயோகங்களை நிவர்த்தி  செய்ய கடுமையான விதிமுறைகளை 
மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

தொழில்நுட்ப போட்டியானது புவிசார் அரசியலில்  பதற்றங்களை ஏற்படுத்துவதோடு, செயற்கை நுண்ணறிவுத் திறன்கள் பாதுகாப்பு தந்திரோபாயங்கள், சைபர் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரப் போட்டிகள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. 2024ஆம் ஆண்டானது ஒரு சவால் மிக்க ஆண்டாகத் தென்பட்டது.

மனிதகுலத்தின் பின்னடைவு, தொடர்ச்சியான யுத்தங்கள், அகதிகள் பிரச்சினை, பெருமளவான சிறுவர்களின் மரணங்கள், செயற்கை நுண்ணறிவின் செல்வாக்கு, காலநிலை மாற்றம் போன்றவைகள் சவால் மிக்கவைகளாகக் காணப்பட்டன.

சிக்கல் மிகுந்த இன்றைய உலகப் போக்கின் காரணமாகப்   பொறுப்புக் கூறக்கூடிய நிர்வாகம், நிலையான நடைமுறைகள் மற்றும் நெறிமுறை தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றின்  அவசியத்தை இது வலியுறுத்துகின்றது.

12.31.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X