2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

“நல்ல” அரசியல்வாதிகளை மக்கள் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை?

Editorial   / 2023 செப்டெம்பர் 20 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே அஷோக்பரன்

“என்னது அரசியல்வாதிகளுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதும், தேர்ந்தெடுத்த பின் அவர்கள் சரியில்லை என்று புலம்புவதும் ஒரே ஆட்களா?” என்பது போலத்தான் உலகளவில் ஜனநாயக நாடுகளில் வாழும் கணிசமானளவு மக்களின் நிலை இருக்கிறது. மக்களே தான் தேர்ந்தெடுக்கிறார்கள், தாம் தேர்ந்தெடுத்தவர்கள் பற்றி மக்களே தான் அசூயையும், அதிருப்தியும் கொள்கிறார்கள். மீண்டும் கொஞ்ச நாளில் தாம் வெறுத்த அதே நபர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நல்லவர்கள், வல்லவர்கள் எல்லாரும் அரசியலுக்கு வருவதில்லை. பலரும் வர விரும்புவதில்லை. அதற்குப் பல காரணங்களுண்டு. அது தனத்து ஆராயப்பட வேண்டிய விடயம். ஆனால், அரசியலில் உள்ளவர்களுள், நல்லவர்களைத் தாண்டி, சுத்துமாத்துப் பேர்வழிகள், ஏமாற்றுக்காரர்கள், அப்பட்டமான ஊழல் பேர்வழிகள், கடைந்தெடுத்த ரௌடிகள், வெற்றுவார்த்தை ஜாலக்காரர்கள், தனிநபர் ஒழுக்கமற்றவர்கள், மக்களுக்காக உண்மையாக நன்மையேதுமே செய்திராதவர்கள், வாய்ச்சொல் வீணர்கள், அடிப்படை அரசியல், சட்ட, பொருளாதார அறிவு கூட இல்லாதவர்கள், வேறு தொழில் செய்வதற்கான தகுதியோ, தராதரமோ, இலாயக்கோ இல்லாதவர்கள், ஓய்வுபெற்ற வயோதிபர்கள், எதுவித உறுதியான கொள்கைகளும் இல்லாதவர்கள், கொள்கை வகுப்பு என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் என சமூகத்திற்கும், மக்களுக்கும் எதுவித பயனும் தராதவர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுப்பது ஏன்?

உண்மையிலேயே மக்கள் இப்படியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனாலும் தேர்ந்தெடுக்கிறார்கள். நீங்கள் உங்கள் சேமிப்பையெல்லாம் முதலீடு செய்து ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறீர்கள், உங்களதும், உங்கள் குழந்தைகளினதும் எதிர்காலம் இந்த நிறுவனத்தின் வெற்றியில்தான் தங்கியிருக்கிறது. அப்படியான சூழலில், அந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்ய, நீங்கள் நாட்டையாள வாக்களித்த மேற்சொன்ன அரசியல்வாதிகளில் ஒருவரையேனும் தேர்ந்தெடுப்பீர்களா? இது ஒரு மிக முக்கியமான கேள்வி. இதற்கு உங்கள் பதில் “இல்லை” என்றால், நாட்டை ஆள்வதற்கு மட்டும் அத்தகையவர்களைத் தேர்ந்தெப்பது ஏன் என யோசிக்க வேண்டியது அவசியம்.

“நல்ல” அரசியல்வாதிகளை மக்கள் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை? எந்தவொரு சமூகத்தின் செழுமைக்கும் நல்வாழ்வுக்கும் “நல்ல” அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஆனால் “நல்ல” அரசியல்வாதி என்றால் யார்? இது மிகக் கடினமான கேள்வி. நேர்மை, திறமை, பச்சாதாபம் மற்றும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருவர் நல்ல அரசியல்வாதியாவார்.

இங்கு நேர்மை என்பது சட்டம், மானுட நெறிமுறைகள், தனிநபர் ஒழுக்கம் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இங்கு திறமை என்பது படிப்பறிவு, பட்டறிவு, தலைமைத்துவம், ஆற்றல் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இருப்பினும், பல ஜனநாயக சமூகங்களில், இந்தப் பண்புகளை உண்மையாக உள்ளடக்கிய நபர்களைத் தேர்ந்தெடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை நாம் அலசிப் பார்க்கலாம்.

ஒன்று, அரசியல் துருவமுனைப்பும், பக்கச்சார்புகளும் ஆகும். அரசியல் துருவமுனைப்பு மற்றும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சரணாகதியான விசுவாசம் ஆகியவை ஒரு வேட்பாளரின் குணங்களை புறநிலையாக மதிப்பிடுவதிலிருந்து வாக்காளர்களைத் தடுக்கிறது. குறித்த நபர் எனது இனத்தைச் சேர்ந்தவர், எனது மதத்தைச் சேர்ந்தவர், அவர் மற்ற இனத்திற்கு, மதத்திற்கு எதிராக எனது இனத்திற்கு, மதத்திற்கு ஆதரவாக கத்துகிறார். திருடன், ஊழல் பேர்வழியாக இருந்தாலும் எனது சாதி, இனம், மதத்தைச் சார்ந்தவன். என் இனத்தவன் வராவிட்டால், மற்ற இனத்தவன் வந்துவிடுவான். நான் விரும்பும் கட்சியினால் தேர்தலில் நிறுத்தப்பட்டவன். எனது கட்சித் தலைவர் வாக்களிக்கச் சொன்ன நபர், போன்ற குழுநிலை மனப்பான்மைச் சிந்தனையில் வாக்களிப்பதுதான் பெரும்பாலும் மிகக்கேவலமான அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்பட முக்கிய காரணம்.

குறித்த கட்சியில் குறித்த சின்னத்தில் ஒரு நாயை தேர்தலில் நிறுத்தினாலும், அந்த நாய் வெற்றிபெறும் என்ற சொல்லாடல் இங்கு புதியதல்ல. இது எத்தனை தூரம் கேவலமானதொரு நிலை என்பதை வாக்களிப்பவர்கள் உணர வேண்டும்.

இன்னொரு முக்கிய காரணம், சந்தைப்படுத்தல் மற்றும் அடையாளப் பெயரின் பெறுமதி. பரம்பரை பரம்பரையாக ஒரு அரசியல் குடும்பம் நாட்டைக் கொள்ளையடித்தாலும், அது வௌிப்படையாகத் தெரிந்தாலும், அதையும் மீறி மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பதற்கு சந்தைப்படுத்தலும், அந்த கட்சியின் / அந்தக் குடும்பத்தின் அடையாளப் பெயருக்கு உள்ள செல்வாக்கின் பெறுமதி முக்கிய காரணம். இதனால் இன்று அரசியல் என்பது சந்தைப்படுத்தல் மற்றும் தனிநபர் பிம்பத்தைக் கட்டியெழுப்பும் விஷயமாக மாறிவிட்டது.

அரசியல்வாதிகள் உண்மையான திறமை அல்லது கொள்கைப்பிடிப்பைக் காட்டிலும், தம்மைப்பற்றிய சாதகமான பிம்பத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கவர்ச்சி மற்றும் கவர்ச்சிகரமான சொல்லாட்சி சில நேரங்களில் பொருள் அல்லது தகுதிகளின் பற்றாக்குறையை மறைக்கப்பயன்படுகிறது.

இன்று அரசியல்வாதிகள் எல்லாம் நடிகர்களைப் போல பன்ஞ்ச் வசனங்கள் பேசுகிறார்கள். அதற்குள் விஷயமே இருக்காது, ஆனால் பேசுவார்கள். பொருளாதாரத்தின் அரிச்சுவடிகூட தெரியாத, புரியாத “தலைவர்கள்” எல்லாம், மணிக்கணக்கில் பொருளாதாரம் பற்றியும், வறுமை ஒழிப்புப் பற்றியும் பேசுவார்கள். வாக்காளர்கள் கொள்கைகள் மற்றும் திறன்களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யாமல் ஒரு கவர்ச்சியான வேட்பாளரிடம் ஈர்ப்புக் கொண்டு வாக்களிப்பதால் ஏற்பட்ட விளைவு இது. “பில்டப்பிலேயே” அரசியலைக் கொண்டு நடத்தும், மிகக் கேவலமான அரசியல்வாதிகள் எல்லாம் “தலைவர்கள்” என்று தம்மைத்தாமே சொல்லிக்கொண்டு தம்மைப் போன்றவர்களையே தொண்டரடிப்பொடிகளாகக் கொண்ட அடிவருடி இரண்டாம்கட்ட அரசியல்வாதிகளைக் கொண்டு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், மக்களின் கருத்தை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் பிம்பங்களை உருவாக்குதிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊடகங்கள் பக்கச்சார்பானதாகவோ / பரபரப்பானதாகவோ இருக்கவே விரும்பும் தன்மையை நாம் அவதானிக்கலாம். உண்மைகளை முன்வைப்பதற்குப் பதிலாக மிகைப்படுத்தலை உருவாக்குவதில் ஊடகங்கள் கவனம் செலுத்துகிறன.

கவனமெடுக்கத் தேவையற்ற வேட்பாளர்களுக்கு பிரபல்யத்தை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்களை நோக்கி வாக்காளர்களின் கவனத்தை திசை திருப்புகின்றன. உதாரணத்திற்கு, இன்று மலையக மக்களின் மிகப்பெரிய பிரச்சினைகளுள் முக்கியமானது, 200 வருடங்கள் தாண்டியும் அவர்கள் வரிசை அறைகளில் (“லைன்களில்”) வீடற்றவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் அவல நிலை. இதைப் பற்றிப் பேசி தீர்வு கொடுக்கக் கூடிய நிலையில் அனைத்து மலையக அரசியல்வாதிகளும் ஏதோவொரு காலகட்டத்தில் இருந்தார்கள்.

அதாவது ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால் அதைச் செய்ய அவர்களால் முடியவில்லை. தமக்கான வரப்பிரசாதங்களை அமைச்சர்களாக அனுபவித்துக்கொண்டு இருந்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் இதே நபர்கள், ஒரு சதத்திற்குப் பயனில்லாத பிரச்சினைகளையெல்லாம், ஏதோ மக்களின் வாழ்வாதாரத்தையே தாக்கியழிக்கும் பிரச்சினையைப் போல பூதாகாரப்படுத்தி, தம்மை ஏதோ பெரும் புரட்சியாளர்களாகக் காட்டும் பிரச்சார உத்திகளைக் கையாண்டு, மக்களை முட்டாளாக்குகின்றனர். இதற்கு ஊடகங்கள் உறுதுணையாக நிற்கின்றன. இதுதான் இன்றைய அரசியலின் பேரவல நிலை.

மேலும், ஊடக நிறுவனங்கள் தங்கள் சொந்த நலன்கள் அல்லது அரசியல் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம், இது வேட்பாளர்களின் சித்தரிப்பை பாதிக்கலாம். இதை இலங்கையின் அன்றாட அரசியலில் நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவை எல்லாம் மக்கள் “நல்ல” அரசியல்வாதிகளை அடையாளங்கண்டுகொள்ள முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன.

ஆகவே “நல்ல” அரசியல்வாதிகள் இல்லை என்று சொல்லும் மக்கள், நல்ல அரசியல்வாதிகள் வேண்டுமென்றால், அவர்களைத் தேடித் தேடி ஆதரிக்க வேண்டியது அவசியம். கருங்கற் பாறைகள் பெரிதாக இருக்கும், அனைவருக்கும் பெரிதாகத் தெரியும். ஆனால் விலைமதிப்பற்ற இரத்தினங்கள் எங்கோ ஒளிந்திருக்கும், அவற்றைத் தேடித் தேடித்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்! “நல்ல” அரசியல்வாதிகளைத் தெரிவுசெய்வதும் அப்படிப்பட்ட காரியம்தான். நல்லவனுக்கும், வல்லவனுக்கும் தன்னை நல்லவன், வல்லவன் என்று சொல்லித் திரிய வேண்டிய தேவை இல்லை. இதையும் மக்கள் கருத்தில்கொள்வது அவசியம். இனியாவது மக்கள் விளித்துக்கொள்ள வேண்டும்.

18.09.2023

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .