Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 டிசெம்பர் 30 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் ஐயூப்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவுக்கு முன்னர், இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றும் அதற்காக சகல அரசியல் கடசிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, முடிவொன்றைக் காணவேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
அவ்வாறாயின், தாம் முன்வைத்துள்ள மூன்று கோரிக்கைகளுக்கு அரசாங்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் கூறியுள்ளன.
அண்மையில், பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றும் போதே, ஜனாதிபதி சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று கூறினார். ஆனால், அதே விவாதத்தின் போது அவர் வெளியிட்ட மற்றொரு கருத்து, இந்த விடயம் அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்பதையும் எடுத்துக் காட்டியது.
முன்னைய கருத்தை ஜனாதிபதி வெளியிட்டதை அடுத்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்ட அபிவிருத்திச் சபைகளே இனப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வாகும் என்று கூறினார். அப்போது எழுந்திருந்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை அமலாக்கத் தயார் என்றார்.
மாவட்ட அபிவிருத்திச் சபைகள், 1981ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு, அக்காலத்திலேயே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவையாகும். அதன் பின்னர், மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு, அதற்கும் மேலாக தமிழ் தலைவர்கள் சமஷ்டி முறைமையை நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் காலம் இது.
இந்த வரலாற்று யதார்த்தத்தை ஜனாதிபதி உணர்ந்திருந்தால், அவர் மைத்திரிக்கு அவ்வாறு பதில்கூறி இருக்கமாட்டார். அரசியல் தலைவர்கள் குறிப்பாக ஜனாதிபதி, இவ்வாறு இந்தப் பிரச்சினையை மிகவும் ‘சிம்பிளாக’ கருதுவதாக இருந்தால், எல்லாவற்றுக்கும் மேலாக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அறியாமல் இருப்பாரேயானால், பிரச்சினைக்கு தீர்வு காண்பது எளிதான விடயமாகாது.
சுதந்திர தினத்துககு முன்னர் தீர்வு காணவேண்டும் என்று ஜனாதிபதி கூறிய போது, ஏற்கெனவே பல வருடங்களாக இந்தப் பிரச்சினையைப் பற்றி எவ்வளவோ பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருப்பதால், வேண்டுமானால் ஒரே நாளில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் கூறியிருந்தார்.
மேலோட்டமாகப் பார்ததால் அது உண்மை போல்த்தான் தெரிகிறது. ஆனால், ஜனாதிபதியின் மேற்கூறிய கருத்தைப் பார்த்தால், அது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பது தெளிவாகிறது.
பல தசாப்தங்களாக அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையிலும், கட்சிகளுக்கும் அரசாங்கங்கத்துக்கும் இடையிலும், அரசாங்கத்துக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலும், பாராளுமன்ற விவாதங்களிலும் என இனப்பிரச்சினையைப் பற்றி எவ்வளவோ பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதால், இனியும் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தேவையில்லை என்பதே, சுமந்திரனின் வாதமாக இருப்பதாகத் தெரிகிறது. அந்த அடிப்படையில் அது உண்மைதான்!
ஆனால், 40 ஆண்டுக்கும் அதிகமான நீண்ட கால அனுபவமுள்ள பழுத்த அரசியல்வாதியான ஜனாதிபதியே, இவ்வாறு தமிழர்களின் உணர்வுகளை உணராதவரைப் போல் பேசுவதாக இருந்தால், பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எளிதானதல்ல என்பதை உணர வேண்டும்.
ஒரு சமூகத்தின் உணர்வுகளை, மற்றைய சமூகத்தின் தலைவர்கள் உணரவில்லை என்பது, தலைவர்களின் பிரச்சினை மட்டுமல்ல; இது சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து சமூகங்களினது தலைவர்களின் பிரச்சினையாகும்.
அதனால்தான் அவர்கள் விட்டுக் கொடுப்புக்கே இடமில்லை என்று, தத்தமது நிலைப்பாடுகளில் ‘உடும்புப் பிடி’யாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இறங்கி வர ஒருவருமே தயாராக இல்லாவிட்டால், உடன்பாட்டுக்கு வாய்ப்பே இல்லை.
எனவேதான் அரசியல்வாதிகளின் இந்தக் கருத்துகள், மக்களின் உத்வேகத்தை தூண்டாமல் இருக்கின்றன. எவரும் ஏதாவது உருப்படியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் இல்லை. செவ்வாக்கிழமை (13) இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த, ஜனாதிபதி ஒரு கூட்டத்தை கூட்டி இருந்தார். தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களைப் பார்த்தால், அதைப் பற்றிய எந்தவித நம்பிக்கையையும் மக்கள் வைத்திருப்பதாகத் தெரியவில்லை.
இந்தக் கூட்டத்துக்கு முன்னர், தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடி, அரசாங்கத்திடம் தீர்வு எதிர்ப்பார்க்கும் மூன்று கோரிக்கைகளைப் பற்றி, தம்மிடையே உடன்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டன. தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெறும் காணி அபகரிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் அபகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் காணப்படுகின்ற அனைத்து விடயங்களும் அமலாக்கப்பட்டு, மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்; புதிய அரசியலமைப்பில் சுயநிர்ணய அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சமஷ்டி கட்டமைப்பில், அதியுச்ச அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும். அது மற்றைய மாகாணங்களுக்கு வழங்கப்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம் என்பதே அந்த உடன்பாடாகும்.
இவற்றில் காணி தொடர்பான கோரிக்கையை சுமந்திரன் கூறுவதைப் போல் ஒரே நாளில் தீர்க்க முடியும். அதற்கு ஜனாதிபதியின் ஒரு பணிப்புரை மட்டுமே போதுமானதாகும். அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் காணப்படுகின்ற அனைத்து விடயங்களும் அமலாக்கப்படுவதாக இருந்தால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
எனினும், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அமலில் இருக்கும் நிலையிலும் நாட்டில் காணிகளின் உரிமை மத்திய அரசாங்கத்துக்கே இருக்கிறது என்று 2013ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் ஒரு வழக்கின் போது தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கில் சுமந்திரனும் வாதாடியிருந்தார். ஆயினும் காணி நிர்வாகத்துக்காக சட்டப்படி காணி ஆணைக்குழு ஒன்றை அரசாங்கம் நியமிக்க முடியும். அவ்வளவுதான் காணி விடயத்தில் எதிர்பார்க்க முடியும்.
பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதாக இருந்தால், இந்தியாவில் இருப்பதைப் போல் தற்போதைய பொலிஸ் படையை அரசாங்கம் தேசிய பொலிஸ் பிரிவாகவும் மாகாண சபை பிரிவாகவும் பிரிக்க வேண்டும். மாகாண சபை பிரிவை தனியானதோர் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரிடம் கையளிக்க வேண்டும். அப்பிரிவுக்கு எந்தெந்த ஆயுதங்களை வழங்க முடியும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் படி, அவ்வாறான இரண்டு பிரிவுகள் உருவாக்கப்பட்டாலும் அவை இரண்டும் பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும். எனவே அடிப்படையில் இது அரசாங்கம் பயப்பட வேண்டிய விடயம் அல்ல.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உருவாக்கப்படும் பொலிஸ் பிரிவுகள், அம் மாகாணங்களில் பிரிவினைவாத சக்திகளுடன் இணைந்து செயற்படும் என்ற பயத்திலேயே அரசாங்கம் மாகாண பொலிஸ் பிரிவுகளை அமைக்க பயப்படுகிறது. எனினும் இந்தியாவின் நெருக்குதலின் காரணமாக, வரதராஜப் பெருமாளின் தலைமையிலான வட- கிழக்கு மாகாண சபையின் கீழ், சிவில் தொண்டர் படை அமைக்கப்பட்டது. பின்னர் இது பொலிஸ் பிரிவாக மாற்றப்படும் எனக் கூறப்பட்டது.
இந்தியப் படைகள் இலங்கையை விட்டு வெளியேறி, மாகாண சபைத் தலைவர்களை புலிகள் அழித்துவிடும் நிலை ஏற்பட்ட போது, இப்படையும் கலைக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மாகாண சபைத் தலைவர்கள் விரக்தியடைந்து இருந்த நிலையில், அதில் இணைந்திருந்த 41 முஸ்லிம் இளைஞர்களைத் தனியாக பிரித்தெடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இது மாகாண பொலிஸ் பற்றிய தெற்கில் இருந்த அச்சத்தை மேலும் வலுப்பெறச் செய்தது. எனினும் தற்போதைய நிலையில் மாகாண பொலிஸ் பிரிவைப் பற்றியும் அதற்கு வழங்கப்பட வேண்டிய ஆயதங்களைப் பற்றியும் ஆராய்ந்து முடிவு எடுக்கலாம். ஆனால், அதனை ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே!
தமிழ்த் தலைவர்களின் மூன்றாவது கோரிக்கை, இரு சாராரின் விட்டுக்கொடுப்பிலேயே தங்கியிருகிறது. சுயநிர்ணய உரிமை, சமஷ்டி போன்ற வார்த்தைகளிலேயே தமிழ்த் தேசிய அரசியலின் உயிர் இருக்கிறது. அவற்றை கைவிட்டால் அவ்வரசியலின் உயிர் பிரிந்துவிடும் என தமிழ்த் தலைவர்கள் கருதுகிறார்கள். அதேபோல் அச்சொற்களை ஏற்றால் தமது அரசியல் உயிர் பிரிந்துவிடும் என சிங்கள அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.
இருசாராரும் அதிகார பரவாக்கலின் அளவைப் பற்றியல்லாது இச்சொற்களின் மீதே கவனம் செலுத்துகிறார்கள். இதனை நாம் மூன்று வாரங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையொன்றில் விவரித்தோம். இதுவும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னரோ பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னரோ தீர்க்கக்கூடிய விடயமல்ல.
ஆகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கத்தை வற்புறுத்தி, மாகாண சபைகளை தேர்ந்தெடுத்து, அவற்றை முன்னர் போல் அரசியலாக்காமல் கூடிய வரை மத்திய அரசாங்கத்திடமிருந்து பணத்தைப் பெற்று, கூடிய வரை வடக்கு - கிழக்கு மக்களின் கல்வி மற்றும் ஏனைய வாழ்வாதார பிர்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதே தற்போதைக்கு பொருத்தமான காரியமாகும்.
சிக்கலான விடயங்களைப் பின்னர் தீர்த்துக் கொள்ளலாம். அதற்காக இப்போதிருந்தே போராடுவது வேறு விடயம். அதுதான், போர் முடிவடைந்ததன் பின்னர் கடந்த 13 வருடங்கள் தந்த பாடமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
24 Nov 2024
24 Nov 2024