2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

தோல்விகளை மறைப்பதற்காக கதவடைப்பு போராட்டமா?

Editorial   / 2023 ஒக்டோபர் 21 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

புருஜோத்தமன் தங்கமயில் 

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அச்சுறுத்தல்களினால் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவருக்காக நீதி கோரி தமிழ்த் தேசியக் கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி நடத்தத் தீர்மானித்திருக்கின்றன. நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்கள் அச்சுறுத்தலுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தினை நடத்தின. ஆனால், அந்தப் போராட்டத்தில் சில நூற்றுக்கணக்கானவர்களே கலந்து கொண்ட பின்னணியில், அது தோல்விகரமான போராட்டம் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

மக்களை போராட்டக்களத்தினை நோக்கி அழைத்து வருவதற்கான திராணியை தமிழ்க் கட்சிகள் இழந்துவிட்டன என்ற விடயமும் மேலெழுந்தது. பிரதான ஊடகங்கள் தொடங்கி சமூக ஊடகங்கள் வரையில், மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்ட விதம், அங்கு நிகழ்த்தப்பட்ட மண்டியிட்டு ஜெபிக்கும் தோரணையிலான அரங்காற்றுகை வரை கேலிக்குள்ளானது. இதனால், தமிழ்க் கட்சிகள் அவசரமாக கூடி கதவடைப்பு போராட்டத்துக்கான அழைப்பை விடுத்திருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாட்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மெல்ல மெல்ல விரிசல் அடைந்து வந்திருக்கின்றது. ஏனெனில், தமிழ்க் கட்சிகள், அதன் தலைவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் வெகுவாக இழந்துவிட்டமையே அதற்கு காரணமாகும். முள்ளிவாய்க்கால் கொடூரங்களுக்கு எதிராக நீதி கோரி மக்கள் கனதியான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அதில், பல போராட்டங்கள் அரசியல் கட்சிகளால் அன்றி பாதிக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்டன.

அரச புலனாய்வுத்துறை உள்ளடங்கி அரச படைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பேரெழுச்சியான போராட்டங்களை கடந்த பதின்நான்கு ஆண்டுகளில் மக்கள் நடத்தியிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களின் எழுச்சியின் போக்கில், ராஜபக்ஷக்களைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற உணர்வும் கனதியாக மேலெழுந்தது. அதனால், அதற்காக கருவியாக தேர்தல்களை தமிழ் மக்கள் கையாண்டிருக்கிறார்கள்.

அதுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015 பொதுத் தேர்தல் வரையில் அபரிமிதமான வாக்குகளைப் பெற்று தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற நிலையை அடையக் காரணமானது. ஆனால், ராஜபக்ஷக்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தோடு காட்டிய இணக்கமும், அதன் விளைவுகளும் மக்களை பாரியளவு விரக்தியடைய வைத்தது. ஏனெனில், கூட்டமைப்பு மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை பெரியளவில் நிறைவேற்ற முடியாமல் போனது. அதிக நேரம் நல்லாட்சி அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கான போராட்டத்திலேயே காலத்தைக் கடத்தியது. அதுதான், 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும், கடந்த பொதுத் தேர்தலிலும் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு காரணமானது.

அந்தப் பின்னடைவை, அரச ஆதரவுக் கட்சிகள் சில அறுவடை செய்தும் கொண்டன. 2015 பொதுத் தேர்தலில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றி கொண்டிருந்த கூட்டமைப்பு கடந்த பொதுத் தேர்தலில் 10 உறுப்பினர்களுக்குள் சுருங்கியா. ஆறு உறுப்பினர்களின் இழப்பு என்பது, பாரிய வீழ்ச்சியாகும்.

ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி வருவதற்கும் வந்த பின்னரும், சிங்கள பௌத்த அடிப்படைவாதம் என்கிற ஒன்றை இலக்கை முன்னிறுத்திக் கொண்டிருந்தார்கள். அதனால், நாட்டின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி உள்ளிட்ட அடிப்படையான எவை பற்றியும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. அதனால், அவர்களை கடந்த ஆண்டு தென் இலங்கை மக்களே விரட்டியடிக்கும் நிலை ஏற்பட்டது. அத்தோடு, கொரோனா தொற்று என்கிற நிலை மக்களின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்கியது. அதன் பின்னர், ராஜபக்ஷக்கள் நாட்டை திவாலாக்கிவிட்டு ஓடியதனாலும் மக்களின் மீதான பொருளாதாரச் சுமை என்பது தலைநிமிர முடியாதளவுக்கு அதிகரித்தது.

அப்படியான சூழலில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாய்மாலங்களை கேட்பதற்கான சூழல் இல்லாமல் போனது. அதிக தருணங்களில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒலிவாங்கியின் முன்னால்  மணிக்கணக்கில் வீர வசனம் மட்டுமே பேசுவதற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அதனைவிடுத்து, தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை அடைவதற்கான செயற்திட்டங்களோ, அதனை நோக்கி பயணிப்பதற்கான அர்ப்பணிப்பையோ வெளிப்படுத்தவதில்லை.  இவ்வாறான நிலை மக்களை இன்னும் இன்னும் சோர்வடையச் செய்தது. அப்படியான சூழலில் மக்களின் பெரும் பங்களிப்போடு கடந்த காலங்களில் எழுந்த போராட்டங்கள் மெல்ல மெல்ல காணாமற்போகத் தொடங்கின.

இன்றைக்கும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராடத்தான் செய்கிறார்கள். ஆனால், அதில், மக்களின் பங்களிப்பின் அளவுக்கு என்பது வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த காலங்களில் ஒரு போராட்டக் களத்தை நோக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்தார்கள். ஆனால் இன்றைக்கு அது சில நூறாக சுருங்கி விட்டது. ஏன், சில தருணங்களில் நாற்பது ஐம்பது பேர் என்ற அளவுக்குள் சுருங்கி விட்டது.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது அநீதிகளுக்கு எதிரான அர்ப்பணிப்பான போராட்டங்களினால் எழுந்து வந்தது. ஆனால், இன்றைக்கு தங்களை தமிழ்த் தேசியக் கட்சிகளாக, இயக்கங்களாக, தலைவர்களாக முன்னிறுத்தும் பெரும்பாலானோரிடம் அர்ப்பணிப்பு என்ற ஒன்றைக் காணவே முடியாது. மாறாக, பதவி பகட்டுக்காக தமிழ்த் தேசிய அரசியலைக் கருவியாக அவர்கள் கையாள்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் ஏன் தோல்வி கண்டது? அங்கு மக்களை திரட்ட முடியாமைக்கான காரணங்கள் என்ன? என்றெல்லாம் இந்தக் கட்சிகள் சிறிதும் யோசிக்கத் தலைப்படவில்லை. மாறாக, போராட்டத்தின் தோல்விக் கணத்தினை மறைப்பதற்காக அவசர அவசரமாக கதவடைப்பு போராட்டம் என்ற அறிவித்தலை விடுத்திருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பலர் வயது மூப்பினால் அல்லாடுகிறார்கள். அவர்களினால் அதிக நேரம் போராட்ட களத்தில் நிற்க முடியாது. கட்சிக்காரர்களையோ, ஆதரவாளர்களையோ திரட்டுவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை. மாறாக, பெயருக்கு போராட்ட அறிவித்தலை விடுத்துவிட்டு, அரை மணிநேரம் போராட்டக் களத்துக்கு வந்துவிட்டு, ஊடகங்களிடம் ஏதாவது பேசிவிட்டு சென்றால் போதுமானது என்று நினைக்கிறார்கள். ஏனெனில், மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாமும் பங்கு பற்றின. ஒவ்வொரு கட்சியும் 500 பேரவை அழைத்து வந்திருந்தால்கூட போராட்டக்களத்தில் 3000 பேராவது திரண்டிருப்பார்கள். அதனைப் பார்த்து மக்களும் வந்திருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு கட்சியும் இருபது முப்பது பேரோடு போராட்டக் களத்திற்கு வருகிறார்கள். அப்படியான இடத்தில் எப்படி மக்கள் நம்பிக்கை கொண்டு வருவார்கள்?

மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மக்கள் பங்களிப்பின்னை குறித்து கட்சிகளை நோக்கி கேள்வி எழுப்பியதும், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மக்களின் மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள். போராட்டம் அறிவிக்கப்பட்டால் மக்கள் பெருவாரியாக வர வேண்டும் என்ற தோரணையிலான அணுகுமுறையாக இருக்கின்றது அது. போராட்டத்தின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தி மக்களைத் திரட்டுவதற்கான எந்த எத்தணிப்பையும் எடுக்காமல் விட்டுவிட்டு மக்கள் மீது குற்றஞ்சாட்டும் நிலை என்பது, கட்சிகளின் அபத்தமான அரசியலாகும். தங்களின் அரசியல் தோல்விகளை மறைப்பதற்காக கதவடைப்பு போராட்டத்தை அவசரமாக அறிவிப்பது என்பது, மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பொறுப்பற்ற செயல் என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

ஜனநாயக போராட்டத்தில் கதவடைப்பு போராட்டம் என்பது ஒரு வடிவம். ஆனால், அது,  மூன்றாம் நான்காம் நிலையில் வருவது.  கூட்டமாக திரளுதல், பேரணியாக எழுதல், மனிதச்சங்கிலி என்ற தொடர் போராட்டங்களுக்குப் பின்னரே, கதவடைப்பு என்ற போராட்ட நிலையை எட்ட வேண்டும். ஏனெனில், கதவடைப்பு போராட்டம் பிள்ளைகளின் கல்வியை குலைக்கும். பொருளாதார முன்னெடுப்புக்களைத் தடுக்கும். மருத்துவ, போக்குவரத்து சேவைகளை பாதிக்கும். குறிப்பாக, அன்றாடம் காய்ச்சிகளின்  வாழ்வை மிக மோசமாக பாதிக்கும். ஏனெனில். ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு சென்றால்தான் வயிறு நிறையும் என்கிற நிலையில் இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன.

அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காமல், கதவடைப்பு போராட்டத்தை அறிவிப்பது அபத்தமானது. ஏனெனில், போராட்டத்தை அறிவிக்கும் தலைவர்களோ, அவர்களின் குடும்பங்களோ அன்றாடம் காய்ச்சிகள் இல்லை. அவர்களுக்கு வருமான வழிகள் நிறைய இருக்கின்றன. அப்படியான நிலையில், தங்களின் தலைமைத்துவ தோல்வி, பலவீனங்கள், செயற்பாடற்ற தன்மை, மக்களிடம் சந்தித்து நிற்கின்ற அதிருப்தி ஆகியவற்றை சமாளித்து மறைப்பதற்காக கதவடைப்பு என்ற போராட்ட வடிவத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். அது தமிழ்த் தேசியக் கட்சிகள், தலைவர்களின் தோல்வி. அந்தத் தோல்வி கால ஓட்டத்தில் தமிழ் மக்களை மிக மோசமாக பாதிக்கும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X