2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

”தோல்வி முகம்’’ தொடரவே போகிறது

Mayu   / 2024 நவம்பர் 27 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம்

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அந்த தேர்தலை எதிர்கொண்டு  பெரும்பான்மையுடன் அரசமைக்க தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முனைப்புடன் உள்ள நிலையில்  அதனைத் தடுத்து பிரதமர் பதவியுடன் அரசமைக்க சில கட்சிகளும் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கைப்பற்ற சில கட்சிகளும்  வியூகங்களை அமைத்து வருகின்ற போது ஏற்கனவே எதிர்கட்சியாகவிருந்த சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இந்த தேர்தலில்  ‘‘தோல்வியடைகின்றேன் பந்தயம் பிடி’’என்றவாறாக செயற்பட்டு வருகின்றமை கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் விசனமும் வேதனையுமடைய வைத்துள்ளது.  

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான சஜித்  பிரேமதாச மீது வறட்டு பிடிவாதம் கொண்டவர்,தலைக்கனம் பிடித்தவர்,கட்சியின் அடுத்த நிலை,தலைவர்கள்,உறுப்பினர்களின் கருத்துக்களை  மதிக்காதவர்,மனைவி பேச்சைக் கேட்டு கட்சியை வழிநடத்துபவர் என்றவாறாக  பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது அந்த குற்றச்சாட்டுக்களை  உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்திக்குள்   புறக்கணிப்புக்களும் பதவிபறிப்புக்களும் ,கழுத்தறுப்புகளும் இடம்பெறுவதனால் கட்சி பலவீனமடைந்து வருகின்றது.

ஏற்கனவே நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து    போட்டியிடுமாறும் அதன் மூலம் இரு கட்சி ஆதரவாளர்களையும்  ஒன்றிணைத்து வெற்றியை உறுதிப்படுத்த முடியுமெனவும்  ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தலைவர்கள், உறுப்பினர்கள் சிலர் ஆலோசனைகளை வழங்கிய போதும் தனது தலைக்கனத்தாலும் வறட்டுப்  பிடிவாதத்தாலும் அதனை  நிராகரித்ததுடன் அவ்வாறான ஆலோசனைகளை முன் வைத்தவர்களை துரோகிகள் போன்று நடத்தியதாலுமே ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைய நேரிட்டதாக அவரின் கட்சிக்குள்ளேயே குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தும் அதன் மூலம் பாடம் கற்காது தனது பிடிவாத கொள்கைகளில், குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது அதே சர்வாதிகாரத்தனத்தோடு சஜித் பிரேமதாச நடந்து வருவதனால்தான் எதிர்வரும் பாராளுமன்றத்  தேர்தலுக்கான வேட்பாளர்களை கட்சிகள் தங்களுக்குள் இறுதி செய்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தலைமையுடனான முரண்பாடுகள் காரணமாக வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதுடன் இன்னும் சில முக்கியஸ்தர்கள் கட்சியின் முக்கிய பதவிகளிலிருந்து விலகியும் வருகின்றனர்.

இதில் முதல் எதிர் நடவடிக்கையாக ஐக்கிய மக்கள் சக்தியின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளதுடன் தனக்கு எவரும் வாக்களிக்க வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களையும் கேட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதிக்கான பிரதம அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னறிவித்தலின்றி கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசாவினால் தான் நீக்கப்பட்டதையடுத்தே அஜித் மானப்பெரும எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

இது தொடர்பில் அஜித் மானப்பெரும வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முடிவு குறித்து விரக்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன்  ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதிக்கான பிரதம அமைப்பாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டமை   தனக்கு அறிவிக்கப்படாமல் எடுக்கப்பட்ட முடிவு  எனவும்  கட்சித்தலைவரின் இந்த முடிவால் பழிவாங்கப்பட்டதாக   உணர்வதாகவும் அதனாலேயே ஏற்கனவே தேர்தலுக்கான வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ள நிலையில்  கட்சித்தலைவரின் பழிவாங்கலுக்கு  பதிலடியாக தனது வேட்புமனுவை  வாபஸ் பெற முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

       இதன் தொடர்ச்சியாக பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த கருணாரத்ன பரணவிதானவும்  தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார் அத்துடன் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தனக்கான வேட்பாளர் எண்ணுக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் கட்சி ஆதரவாளர்களிடம் கேட்டுள்ளார்.தமது கட்சியான ஐக்கியக் குடியரசு முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருக்கும்  இடையிலான உடன்பாடு தொடர்பான பிரச்சினை காரணமாகவே தன்னால்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய  மக்கள் சக்தியில் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நெருங்கி செயற்படும் பெண் முக்கியஸ்தர்களும் தற்போது ஓரம்கட்டப்படத்  தொடங்கியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர செயற்பாட்டாளரான  பிரபல நடிகை  தமிதா அபேரத்ன இதன் முதல் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார்.  ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டத்தின் வேட்பாளர் நியமனப் பட்டியலில் நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் முதலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில்  அவர் வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக  இரத்தினபுரி மாவட்டச் செயலகத்திற்கு வந்தபோது, அந்தப் பட்டியலில் அவரது பெயர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு திருப்பி  அனுப்பப்பட்டுள்ளார்.நடிகை தமிதா அபேரத்ன பாராளுமன்றத்  தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட  வேட்பு மனுவில் கையொப்பமிட்டிருந்தார். இந்நிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்றபோதே  வேட்பாளர் பட்டியலில் அவருடைய பெயர் மையிட்டு அழிக்கப்பட்டிருந்தமை அவருக்கு தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஹேஷா விதான சகோதரர் என்னிடம், சகோதரி தமிதா, நீங்கள் ஏன் இரத்தினபுரியில் போட்டியிடக் கூடாது எனக் கேட்டார். 
நான் எங்கு கேட்பது என்று யோசிக்கவில்லை என்றேன். அதற்கு இல்லை அக்கா, நான் உங்களை இங்கு போடுகிறேன், இங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்றார். நீங்கள் முன்மொழிந்தால் நான் வருகிறேன் என்றேன். அப்படித்தான் எனது பெயர் வந்தது. அதனை இல்லை என்று கூறினால் என்னிடம் ஆதாரம் உள்ளது.என் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று. நான் ஆதாரத்துடன் பேசுகிறேன். இந்த ஆதாரங்கள் அனைத்தும் ஊடகங்கள் முன் காட்ட தயாராக உள்ளன.நான் நீதிமன்றம் செல்வேன். எனது அடிப்படை உரிமைகள் தெளிவாக மீறப்பட்டுள்ளன என்றார்.
அடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவி  மற்றும் கட்சியின் ஏனைய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாகவும்  ஹிருணிகா பிரேமச்சந்திர  அறிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் ஏற்பட்ட மன விரக்தியே தனது பதவி விலகலுக்கு  காரணம் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மற்றும் கட்சியின் ஏனைய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாகவும் எனினும் கட்சியிலிருந்து விலகவில்லையெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பெண் பிரமுகரான  ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பை நடத்தியே இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், சஜித் பிரேமதாசவின் தோல்வியின் பொறுப்பை, சஜித் பிரேமதாசவுக்கு மிகவும் நெருக்கமான கட்சிகள் மற்றும் கட்சியின் அடிமட்டத் தலைவர்கள் மீது சுமத்தியுள்ளமை குறித்து தாம் ஏமாற்றமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.  அத்துடன் நடிகை தமிதா அபேரத்ன கட்சித்தலைமையினால் ஏமாற்றப்பட்டமை தொடர்பிலும் தனது விசனத்தை வெளியிட்டுள்ளார்.

அடுத்தாக ஐக்கிய மக்கள்  சக்தியின் பிரதி செயலரும் வடக்கு மாகாண பிரதான அமைப்பாளருமான   உமா சந்திரபிரகாஷ் ஓரம்கட்டப்படுள்ளார். சஜித் பிரேமதாவின் வடக்கு விஜயங்களின் போதெல்லாம் அவரின் நிழலாகவே இருந்ததுடன் வடக்கு  மக்களுக்கும் சஜித் பிரேமதாசாவுக்குமிடையிலான ஒரு உறவுப் பாலமாகவும்  இருந்தவர் இந்த உமா சந்திரபிரகாஷ். சஜித் பிரேமதாசவின் பாடசாலைகளுக்கான நிதி உதவி ,பஸ் வழங்கல் போன்ற விடயங்களில் வடக்கு பாடசாலைகளும் நன்மை பெற்றதில் உமா சந்திரபிரகாஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரும் தற்போது கட்சித்தலைவரினால் ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்க உமா சந்திரபிரகாஷ் விரும்பியிருந்தபோதும் யாழ்ப்பாணத்தில் களமிறங்குமாறும் முதன்மை வேட்பாளர் என்ற அந்தஸ்தை தருவதாகவும் உமா சந்திரபிரகாஷுக்கு சஜித் பிரேமதாசவினால் உறுதியளிக்கப்பட்டது. 

கட்சி தலைவரின் பணிப்புக்கு கட்டுப்பட்ட அவர் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக சமத்துவக்கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சந்திரகுமார் நியமிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. உமா சந்திரபிரகாஷுக்கு கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வாய்ப்பும் மறுக்கப்பட்டு இறுதியில் யாழ் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளர் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்திக்குள் நடக்கும் குத்து வெட்டுக்கள்,   விலகல்கள்,வெளியேற்றங்கள், தலைவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள்,ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள புத்தியுள்ளவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்தமை போன்றவற்றால் சஜித் பிரேமதாசவின்  ‘‘தோல்வி முகம்’’தொடரவே போகின்றது.

10.17.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .