2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

தோற்றது பிரேரணையா, சபாநாயகரா?

Mayu   / 2024 ஏப்ரல் 04 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பாராளுமன்ற மரபு மிகவும் இறுக்கமானது. ஆனாலும், குற்றச்சாட்டுக்களும்,  நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் அதற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவது வழமையே. அதன் வரிசையில் கடந்த வாரத்தில் பெரும் குழப்பமாக மாறிய ஒரு பிரேரணைதான் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை.  

சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் பாராளுமன்றத்தைத் தலைமை தாங்கும் நபர் ஆவார். பிரித்தானியாவின் ‘வெஸ்ட் மின்ஸ்டர்’ மக்களாட்சி முறைமையின் கீழ், அமைக்கப்பட்ட இலங்கை பாராளுமன்றத்தின் நாளாந்த அலுவல்களையும், அதன் முக்கிய கருமங்களையும் சபாநாயகரே கவனிப்பார்.

வரலாற்றில் அரசாங்க சபை, பிரதிநிதிகள் சபை, தேசிய அரசுப் பேரவை, பாராளுமன்றம் என 1931 முதல் தற்போது வரையில் 27 பேர் சபாநாயகர்களாகப் பதவி வகித்துள்ளனர்.

எமது நாட்டின் பதவித் தரநிலை அடிப்படையில் ஜனாதிபதி, பிரதமர் போன்ற பதவிகளுக்கு அடுத்ததாகப் பிரித்தானிய  ‘வெஸ்ட் மினிஸ்டர்’ பாராளுமன்ற சம்பிரதாயத்தின் அடிப்படையில் உருவான சபாநாயகர் பதவி கௌரவமுடையதாக இருக்கிறது. 

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகராகத் தெரிவானால், தான் தெரிவு செய்யப்பட்ட கட்சியிலிருந்து விலகியவராகவே கருதப்படுவார்.

அதன் பின்னர் அவர் நடுநிலைமையுடைய, பக்கச்சார்பற்ற வெளிப்படையானவராகப் பாராளுமன்றத்தின் கௌரவத்தை, நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பவராக இருத்தல் வேண்டும். அத்தகைய கௌரவம், சம்பிரதாயத்தையுடைய சபாநாயகருக்கெதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. கொண்டுவரப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டது என்பது இங்கே பேச்சில்லை.

அந்தவகையில்தான், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதென்பது எமது  நாட்டின் பாராளுமன்ற வரலாற்றில் வெட்கப்பட வேண்டிய விடயம் என பேசப்பட்டு வருகிறது.

சபாநாயகருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதற்கான காரணங்களாக அவருடைய பக்கச்சார்பான நடவடிக்கைகள் என்று பொதுவில் சொல்லப்பட்டாலும், உடனடிக்காரணம் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டம் மற்றும் புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் ஆகியனவே. 

அவ்வளவு அவசர அவசரமாக உயர் நீதிமன்றத்தின் விதப்புரைகளையும் பொருட்படுத்தாமல் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கான காரணம்தான் என்ன என்பதே இங்குக் கேள்விக்குரியது. சட்டமாக்கப்பட்ட கையோடு அது திருத்தத்துக்குள்ளாகும் என்ற அறிவிப்பும் வெளியானது இதில் இன்னுமொரு வேடிக்கை.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் தவிர அனைத்து அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், உள்நாட்டு மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள், சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் என நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் தமது கவலையையும் கரிசனையையும் வெளியிட்டிருந்தனர்.

ஆனால், அவை எவையும் கணக்கிலெடுக்கப்படாமல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் கையொப்பமிட்டு சட்டமாக்கப்பட்டது.

சபாநாயகருக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தின் போது, உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர், நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை அரசியலமைப்புக்கு முரணாக, உயர் நீதிமன்றத்தின் விதப்புரைகளை புறக்கணித்து தனது ஒப்பத்தை இட்டதன் மூலம் அவர்  கூறும் செய்தி என்ன? ‘வெஸ்ட் மினிஸ்டர்’  சம்பிரதாயத்தை இதன் மூலம் எமது சபாநாயகர் அவமதித்துள்ளதுடன், அதனை முற்றாக மீறியுமுள்ளர்.

தென் கிழக்காசியாவில் பெருமைமிகு பாராளுமன்ற சம்பிரதாயம் கொண்ட நாட்டில், இதுவரையில் இருந்து வந்த சம்பிரதாயம் இதன் மூலம் முற்றாக மீறப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயக நாட்டில் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை சமமானதும் ஒன்றையொன்று ஒப்பாரும் மிக்காரும் இல்லாததாக இருக்கவேண்டுமென்ற வலு வேறாக்கல் தத்துவம் தன் காலில் போட்டு மிதித்துள்ளார்.

இது எமது பாராளுமன்றச் சம்பிரதாயத்துக்குப் பெருமையா, எமது சபாநாயகருக்கு இது பெருமையா?   என்றும் கேள்வி எழுப்பினர்.

அதே நேரத்தில், சட்டமா அதிபர், பாராளுமன்றச் செயலாளர் ஆகியோர் சபாநாயகருக்கு போதுமான ஆலோசனை வழங்கவில்லை. பொலிஸ் மா அதிபர் நியமனத்தின்போது அரசியலமைப்பினை சபாநாயகர் மீறியுள்ளார் போன்ற குற்றச்சாட்டுக்களும் வேறு பலராலும் முன்வைக்கப்பட்டன.

அதே நேரத்தில், சபை விவாதங்களின் போது உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டும் போதும், ஆளும் கட்சியினை ஒரு விதமாகவும் எதிர்க்கட்சியினரை வேறுவிதமாகவுமே நடத்திச் செல்கின்ற நிலைமை காணப்படுவதாகவும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.

முக்கியமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களது சிறப்புரிமைகள் மீறப்படுகின்ற வேளைகளில், குறிப்பாக சிறுபான்மைத் தமிழ் உறுப்பினர்களது பாராளுமன்றச் சிறப்புரிமைகள் மீறப்படும் வேளைகளில், பாராளுமன்றத்தில் எடுத்துரைக்கும் போதும், அவை முறையான கவனத்துக்கு உட்படுவதில்லை.

அவர்களுக்குரிய முறையான நீதி கிடைப்பதில்லை என்றும் கருத்துரைக்கப்பட்டது. இதற்கு நல்லதோர் உதாரணம் அண்மைக் காலங்களில் வடக்கு கிழக்கில் நடைபெறுகின்ற சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

பாராளுமன்ற விவகாரங்களை விமர்சனத்துக்குட்படுத்த முடியாது என்றாலும், சில விடயங்கள் பேசப்படுவதாக மாறியிருக்கிறது. பாராளுமன்றத்தில் பல சட்ட மூலங்கள் முன்வைக்கப்படுகின்றன. விவாதங்கள் நடைபெறுகின்றன. அவைகள் யாவும் மக்கள் நலன் பேணும் நாட்டுக்கு முக்கியமானவை என்ற பாகுபாடுகளுக்கப்பால் முன்னெடுக்கப்படுகிறதா என்ற கேள்வியும் காணப்படுகிறது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட விவாதத்தின் முடிவில் நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை.

இந்தப் பிரேரணை வாக்கெடுப்பில் யார் யாரெல்லாம் இவற்றினைச் செய்தார்கள் என்ற வாதத்துக்கு மறுபுறமாக வெறுமனே அரசுக்கெதிரான பிரேரணையாகவே இது பார்க்கப்பட்டதாகவே கொள்ளலாம். அதே நேரத்தில்,  அரசாங்கக் கட்சியினரால் இப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டதாகவே முடிவுக்கு வரமுடியும்.

அந்தவகையில், தோற்கடிக்கப்பட்டது எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல, மாறாகப் பாரம்பரிய பெருமைமிக்க எமது பாராளுமன்ற சம்பிரதாயமும் ‘வெஸ்ட் மினிஸ்டர்’  சம்பிரதாயத்தில் பெருமைமிகு பதவியாகக் கருதப்பட்ட ஒரு சபாநாயகர் பதவியினையுமாகும் என்ற கருத்து நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் கொள்ளமுடியும்.

எங்களுக்குள் எவ்வாறான பிரச்சினைகள் இருந்தாலும் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் பலனளிக்காது என்பதுவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாக இருக்கிறது.

இந்த நிலைப்பாடுதான் பாராளுமன்றத்தில் நிகழ்ந்து வருகிறது. இல்லையானால் மக்களுக்கும், நாட்டுக்கும் எதிரான பல விடயங்களுக்கு எதிர்விளைவுகள் கிடைத்திருக்கும்.

இது சபாநாயகருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பிலும் வெளிப்பட்டிருக்கிறது.  இதில் யாருக்கும் ஜனநாயகமோ, மனசாட்சியோ வாக்களித்த மக்களின் எண்ணப்பாடோ, எதிர்பார்ப்போ கணக்கிலில்லை.

சபாநாயகர் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற பேதமின்றி சபையினை நடுநிலைத் தன்மையுடனும் நீதி நெறி முறையுடனும் சபையினை வழிநடத்த வேண்டிய கடப்பாட்டுக்குரியவர்.

அந்த வகையில், பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் உரையாற்றுகையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை.

“ஜனாதிபதியின் அழுத்தத்தால் சில முடிவுகளை நான் எடுத்ததாகச் சிலர் தொடர்ந்து குற்றம் சாட்டுவதை நான் பார்த்திருக்கிறேன்.

ஜனாதிபதி எனது நீண்டகால நண்பர் என்பது உண்மையே. எவ்வாறாயினும். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், நாங்கள் இருவரும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தோம்.

ரணில் விக்ரமசிங்க எனது நண்பர், நாங்கள் இணைந்து நாட்டுக்காக சில பணிகளைச் செய்திருந்தாலும், அவர் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் பெற்ற பிறகு சட்டமன்றத் தலைவர் என்ற முறையில் எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.

கடந்த 40 வருடங்களாக மஹிந்த யாப்பா அபேவர்தனவாகிய நான் கொள்கைகளைத் தவிர வேறு யாருடைய அரசியல் கைக்கூலியாக இருக்கவில்லை என்பதை ஜனாதிபதி உட்பட அனைவரும் நன்கு  புரிந்து கொண்டுள்ளார்கள். 40 வருடங்களுக்கு மேலாக எனது அரசியல் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.

மூன்று நாட்களுக்கு மாத்திரம்  40 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு எனது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகளை நான் முடக்கவில்லை என்பதைப் பெருமையுடன் என்னால் குறிப்பிட முடியும்.இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எனக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அனைவரின் நம்பிக்கைக்கும் நாட்டு  மக்களின் நம்பிக்கைக்கும் அமைய நான் 
செயற்படுவேன். சபாநாயகராக எனது அலுவலகம் அனைவருக்கும் என்றும் திறந்தே இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

எது எவ்வாறானாலும், சபாநாயகருக்கெதிராகக்  கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சிகளின் பிரேரணையானது பாராளுமன்றத்திற்கு அவர் சபைக்குத் தலைமை தாங்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.

ஆளும் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் இனி வரும் காலங்களில் சபாநாயகர் பாராளுமன்ற மரபுகளைச் சரியான முறையில் கடைப்பிடிப்பதற்கான ஓர் உந்துதலை ஏற்படுத்தியிருக்கும் எனலாம்.

03.25.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .