Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2022 டிசெம்பர் 13 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.கே அஷோக்பரன்
Twitter: @nkashokbharan
அறகலய’வின் சொந்தக்காரர்களாகத் தம்மைத் தாமே இப்போது ஆக்கிக்கொண்டுள்ள சில இடதுசாரிக் கட்சிகளும் அவற்றோடு ஒத்தியங்கும் மாணவர் ஒன்றியங்களும் தொழிற்சங்கங்களும், வாரமொரு முறையேனும் வீதியோர ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்துவதற்கான காரணங்களுக்கு, எந்தக் குறைவும் இந்நாட்டில் இல்லை என்பது உண்மை! பணவீக்கத்தின் விளைவாக விலைவாசி எக்கச்சக்கமாக எகிறிப்போயிருக்கிறது. அதன் விளைவாக, அன்றாட உணவுத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாது, குறிப்பிட்ட தொகையினரான மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்துப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என எல்லாமே இந்நாட்டின் கணிசமான மக்களுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றன. இத்தனைக்கும் இலவசக் கல்வியையும் இலவச மருத்துவத்தையும் வழங்குகின்ற நாடு இது! ஆகவே, அரசாங்கம் மீதான மக்களின் கோபத்துக்கும் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் அசூயைக்கும் நிறையவே காரணங்கள் இருக்கின்றன.
ஆனால், மக்களினுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிசொல்லாமல், அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தையும் அதிருப்தியையும் வெறுப்பையும் அசூயையும் தமது அரசியலுக்கு சாதகமாக்கிக்கொள்ளவே ‘அறகலய’ போராட்ட நாடகங்களை இந்த இடதுசாரிக்கூட்டம் இன்னும் நடத்திக்கொண்டிருக்கிறது.
‘இது வேலைக்காகாது’ என்று மக்களுக்குத் தெரிந்ததால்த்தான், இடதுசாரிக்கட்சிகள், தொழிற்சங்கத்தினர், என்.ஜி.ஓவினர், சில ‘அறகலய’ பிரபலங்கள் என ஒரு 50 பேரைத்தவிர, இந்தப் போராட்டங்களுக்கு பொதுமக்கள் திரண்டெழுந்து வருவதில்லை.
எதிர்ப்பு தெரிவிப்பது, போராடுவது என்பன, பொருளாதார செழுமையை அடைவதில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சிறந்த வழியாகும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், போராட்டம் நடத்தினால் சுபீட்சம் கிடைக்கும் என்ற கருத்தும் வாதமும் நம்பிக்கையும் தவறானது. இங்கு போராட்டத்தால் சுபீட்சமடைந்த நாடு என்று ஒருநாடுகூட இல்லை.
முதலாவதாக, போராட்டம் அடிக்கடி நடப்பது இடையூறு மற்றும் குழப்பத்துக்கு வழிவகுக்கிறது. இது தனிநபர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, பரவலான எதிர்ப்புகள் சொத்துகளை அழிக்க வழிவகுக்கும்; இது வணிகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்; மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை குறைக்கும். இதனால்தான் சிறுவணிகர்கள் உள்ளிட்ட தொழிற்றுறையினர், இந்தப் போராட்டங்களை எதிர்க்கிறார்கள்.
ஏற்கெனவே நாட்டின் பொருளாதார நிலைமையால் அவர்களது தொழில் அடிவாங்கிப்போயுள்ள நிலையில், இன்னும் இதுவகையான போராட்டங்கள் தொடர்வது, அவர்கள் மீண்டும் தொழிலில் தலைநிமிர எடுக்கும் முயற்சிகளை மறைமுகமாக பாதிப்பதாக இருப்பதுதான் அவர்களின் கவலைக்குக் காரணம்.
எதிர்ப்பு தெரிவிப்பது, போராடுவதினூடாக மட்டுமே தேவையான மாற்றங்களைக் கொண்டு வந்துவிடமுடியாது. குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி, பொருளாதார செழுமை என்பனவற்றை போராட்டத்தால் அடைந்துவிட முடியாது.
போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் என்றாலும், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் அப்படியே இரவோடிரவாக நிறைவேற்றப்படும் என்று சொல்லிவிட முடியாது. அது நடைமுறைச்சாத்தியம் இல்லாதது.
இந்த இடதுசாரிகள், பொருளாதார சமத்துவமின்மை அல்லது வறுமையை ஏற்படுத்தக்கூடிய அடிப்படை பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்கிறார்கள். இவையெல்லாம் ஓரிரவில் அடையக்கூடியவையல்ல.
நாடு பெரும் பொருளாதாரப் பிறழ்வைச் சந்தித்து நிற்கிறது. இது, அதிலிருந்து சாத்தியமான வழிகளில் மீள்வதற்காகச் செயற்பட வேண்டிய நேரம். இடதுசாரி, மற்றும் கம்யூனிஸ பொருளாதார முறைகளைப் பரீட்சிப்பதற்கான நேரமல்ல இது! நாட்டின் பொருளாதாரத்தை இந்த நிலையிலிருந்து மீட்பதற்கு உங்களிடம் என்ன திட்டம் இருக்கிறது என்று கேட்ட போதெல்லாம், இந்த இடதுசாரிகளின் பதில் மழுப்பலாகவேதான் இருந்திருக்கிறது.
“எங்களிடம் தாருங்கள், நடத்திக் காட்டுகிறோம்” என்ற இடதுசாரிகளின் பதிலுக்கும், “எங்களிடம் தாருங்கள், நடத்திக்காட்டுகிறோம்” என்று ராஜபக்ஷர்கள் சொல்வதற்கும் இடையில் எந்த வித்தியாசமுமில்லை. ஏனெனில், எப்படி நடத்திக்காட்டுவோம் என்று இருவரும் சொல்வதில்லை.
ஆகவே, நாடு பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கு, சர்வதேச பொருளாதார நிபுணத்துவ அமைப்புகளின் ஆதரவோடு ஒரு பொருளாதார மீட்சித் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்க முயலும் வேளையில், அதைவிடச் சிறந்த திட்டமொன்றை முன்வைத்தால் கூட பரவாயில்லை; ஆனால், எந்தத் திட்டமுமில்லாது, எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
இந்த எதிர்ப்புகள் எல்லாம், இலங்கையின் பொருளாதார மீட்சியை மிக மோசமாகப் பாதிக்கும். இந்த இடதுசாரிகள் யாருக்காக தாம் குரல்கொடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ, அந்த அப்பாவி மக்களின் வாழ்க்கையைத்தான் மேலும் பாதிப்படைபடையச் செய்கின்றார்கள்.
ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் இடையூறு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், நீண்டகால செழுமைக்கு வழிவகுக்கும் தீர்வுகளைச் செயற்படுத்துவதிலும் கவனம் செலுத்தி, முயல வேண்டும்.
இடதுசாரி பொருளாதார சிந்தனையின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று, பொருளாதார சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் தலையீட்டின் சக்தியின் மீதான நம்பிக்கையாகும். இது பெரும்பாலும் செல்வந்தர்களிடமிருந்து ஏழைகளுக்கு செல்வத்தை மறுபகிர்வு செய்ய, வரிக் கொள்கையைப் பயன்படுத்துகிறது.
செல்வந்தர்கள் மீது வரிவிதிப்பதை பொருளாதாரத்துக்கான ‘சர்வரோக நிவாரணி’யாக இடதுசாரிகள் முன்னிறுத்துகிறார்கள். அதீத வரிவிதிப்பு பொருளாதார வளத்துக்கு வழிவகுக்கும் என்ற கருத்து தவறானது; மற்றும், பொருளாதாரத்தின் சிக்கலான உண்மைகளை புறக்கணிக்கிறது.
அரசாங்க சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு நிதியளிக்க வரிகள் அவசியம் என்றாலும், அதிகப்படியான வரிவிதிப்பு, தனிநபர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
முதலாவதாக, அதிக வரிகள் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டை ஊக்கம்கெடச்செய்வதன் மூலம், எதிர்மறையாகப் பாதிக்கும். தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் அதிக வரி விதிக்கப்படும்போது, அவர்கள் புதிய யோசனைகளில் முதலீடு செய்வது குறையும். புதிய முதலீடுகளைப் பெருமளவுக்குத் தவிர்ப்பார்கள். இது பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும். பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும்.
மேலும், அதிக வரிகள், வணிகங்கள் வளர்ச்சியடைவதை கடினமாக்கும். இது பொருளாதார செயற்பாடு மற்றும் வேலை உருவாக்கம் குறைவதற்கு வழிவகுக்கும். இதனால் வேலையின்மைப் பிரச்சினை தலைதூக்கும்.
மேலும், அதிக வரிகள் பாதாள பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தனிநபர்கள் மற்றும் வணிகங்கள், நியாயமற்ற முறையில் வரி விதிக்கப்படுவதாக உணரும்போது, வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் தங்கள் வருமானம் முழுவதையும் வௌிக்காட்டாது விடுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை நாடலாம். இது அரசாங்கத்துக்கு வரி வருவாய் இழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் வரி முறையின் ஒட்டுமொத்த செயற்றிறனைக் குறைக்கும்.
அத்தோடு, அதிக வரிகள் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தேர்வு என்பவற்றை எதிர்மறையாகப் பாதிப்பதாக அமையும். அதிக வரி விதிக்கப்படும்போது தனிநபர்கள், தங்கள் சொந்தப் பணத்தின் மீது குறைவான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதோடு, அதை எவ்வாறு செலவழிப்பது மற்றும் சேமிப்பது மற்றும் முதலிடுவது என்பது குறித்து தனிப்பட்ட முடிவுகளை எடுக்க முடியாத சூழல் ஏற்படும். இது தனிநபர் நல்வாழ்வு குறைவதற்கும் ஒட்டுமொத்த பொருளாதார செழுமை குறைவதற்கும் வழிவகுக்கும்.
மேலும், வரிப்பணத்தின் மூலம் எல்லாவற்றையும் அரசாங்கமே வழங்கும் என்ற நிலை உருவாவதானது, அரசாங்கத்தில் தங்கியிருக்கும் மக்கள் கூட்டமொன்றை உருவாக்கும். மானியத்திலும் உதவியிலும் தங்கிய மக்களைக் கொண்டிருப்பது ஒரு பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமானது அல்ல. இன்று இலங்கை இந்தப் பொருளாதார பிறழ்வைச் சந்தித்து நிற்பதற்கு இந்த மானியத்திலும் உதவியிலும் தங்கிய மக்களைக் கொண்ட பொருளாதார கலாசாரம்தான் காரணம்! இங்கு அரச உத்தியோகம் என்பது, இந்த மானியம் மற்றும் உதவிகளுக்குள் அடங்கும்.
சுருங்கக் கூறின், பொருளாதார வளத்தை அடைவதற்கு அதிகப்படியான வரிவிதிப்பு ஒரு சாத்தியமான தீர்வாகாது. மாறாக, பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை, பாதாள பொருளாதாரத்தில் அதிகரிப்பு,
தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தேர்வு குறைவதற்கு வழிவகுக்கும். செழிப்பை அடைவதற்கு அதிக வரிகளை நம்புவதை விட, தொழில்முனைவு, முதலீடு மற்றும் தனிநபர் சுதந்திரத்தை மேம்படுத்துவதில் பயனுள்ள பொருளாதாரக் கொள்கைகள் கவனம் செலுத்த வேண்டும்.
ஆகவே, இந்த இடதுசாரிக் கூட்டத்தின் சுயநல அரசியல் ‘அறகலய’ நாடகங்களைத் தவிர்த்துவிட்டு, நாட்டை பொருளாதார மீட்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு ஒவ்வோர் இலங்கையரும் உழைக்க வேண்டிய காலகட்டம் இது என்பதை உணர்வதற்கான காலம் இது!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
24 Nov 2024
24 Nov 2024