2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

தேர்தல்கள் இடைநிறுத்த வாய்ப்பு

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம்

நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 339 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்,  8,325 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதில் 4,903 வட்டாரங்களிலிருந்தும் மக்களினால் நேரடியாக 4,995 உறுப்பினர்களும், விகிதாசார அடிப்படையில், 3,330 உறுப்பினர்களும். தெரிவு செய்யப்படவுள்ளனர். இதன்படி, 60 சதவீதமான உறுப்பினர்கள் வட்டார அடிப்படையிலும் 40 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்த  உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தலுக்காக மார்ச் 17 முதல் 20 வரை நண்பகல் 12 மணிவரை நாடளாவிய ரீதியில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதற்கமைய அரசியல் கட்சிகளின் 2,260 வேட்புமனுக்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 2900 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவற்றில் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது. எந்த முறையும் இல்லாதவாறு இம்முறை அதிலும் குறிப்பாகத் தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியையும்  சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகளின் 2,260 வேட்பு மனுக்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 2,900 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசிய  கட்சிகளின், சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்டுள்ள போதிலும், தேசிய மக்கள் சக்தியின் ஒரு வேட்புமனு கூட எங்குமே நிராகரிக்கப்படவில்லை.

இதில் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்டுள்ளதை பார்ப்போம்.

யாழ். மாவட்டத்தில்

யாழ். தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 148 கட்சிகளும் 27 சுயேச்சைக் குழுக்களும்  கட்டுப்பணத்தை செலுத்தியிருந்ததோடு, அதில் 136 கட்சிகளும் 23 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. அவற்றில், 136 கட்சிகள் மற்றும் 10 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 22 கட்சிகள், 10 சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

யாழ். மாநகர சபைக்கான வேட்பு மனுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்களும், ஞானப்பிரகாசம் சுலக்சன், நரேந்திரன் கௌசல்யா (அர்ச்சுனா எம்.பி. அணி) ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின்

வேட்புமனுக்களும் வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்புமனுவில் இராமச்சந்திரன் சுரேன், யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்களும் சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி  வேட்புமனுவும், மகாலிங்கம் சதீஸ், பெரியான் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

அதேபோன்று, காரைநகர், ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகியவற்றின் பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பு மனுவும் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனுவும், துரைராஜா சுஜிந்தன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுவும்  வலிகாமம், வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவில், சவரிமுத்து ஸ்டாலின் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுவும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவில்,  இலங்கை கம்னியூஸ்ட் கட்சியின் வேட்பு மனுவும் . வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவில், தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களும்  நிராகரிக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களும் வடமராட்சி தென்மேற்கு  பிரதேச சபைக்கான வேட்பு மனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பு மனுக்களும், தவம் தவனிலாவின் தாசன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுவும் பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணியின்  வேட்பு மனுக்களும் அல்பிரட் ரெஜி ராஜேஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்புமனுவில், வைத்தியலிங்கம் ஜெகதாஸ்  தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும்  குணரட்ணம் குகானந்தன்  தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும் நல்லூர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ,   வேட்புமனுக்களும் திலீப் தீபாரஞ்சன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும்  

கிளிநொச்சி மாவட்டத்தில்

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு   கட்சிகள் மற்றும் இரண்டு சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபைக்கு பத்து  கட்சிகளும் மூன்று சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்  தாக்கல் செய்தநிலையில் 3  கட்சிகளின் வேட்பு மனுக்களும் இரண்டு சுயேச்சைக் குழுக்களின்  வேட்பு மனுவும்  நிராகரிக்கப்பட்டுள்ளது.  

முல்லைத்தீவு மாவட்டத்தில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக கட்சிகள் .சுயேட்சைக் குழுக்கள் என 38 அணிகள் வேட்பு மனு தாக்கல் செய்தன. இதில் 2  கட்சிகளதும் 2 சுயேச்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு  10  கட்சிகளும் 2 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு  7  கட்சிகளும் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. துணுக்காய் பிரதேச சபைக்கு 6 கட்சிகளும் 2 சுயேச்சைக் குழுக்களும்  மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு  6 கட்சிகளும் 2 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில்  புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 2 சுயேச்சைக் குழுக்களினதும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய பெரமுன, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி  ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில்

மன்னார் மாவட்டத்தில் 38 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட  நிலையில், அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர சபையில்  9 கட்சிகளினதும், ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யப்பட்டன. முசலி பிரதேச சபைக்கு 9 கட்சிகள் ,ஒரு சுயேச்சைக் குழு வேட்பு மனுத் தாக்கல்  செய்தன. நானாட்டான் பிரதேச சபைக்கு 7 கட்சியினதும் ஒரு சுயேச்சைக் குழு உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றது. மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 9 கட்சியினதும் ஒரு சுயேச்சைக் குழு உள்ளடங்களாக 10 வேட்பு மனுக்கள் கிடைத்தன .முசலி பிரதேச சபைக்கு கிடைத்த 10 வேட்பு மனுக்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டத.

மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு கிடைத்த 10 வேட்பு மனுக்களில்  இலங்கை தமிழரசு கட்சி,  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி, சர்வஜனம் அதிகாரம் ஆகிய 4 கட்சிகளினதும், ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. 

மன்னார் நகர சபைக்கு கிடைத்த 10 வேட்பு மனுக்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி,  சுயேச்சைக் குழு ஆகியவற்றின்  2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில்

வவுனியா  நகரசபைக்கு 10  கட்சிகளும் 2 சுயேச்சை குழுக்களும் 
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன. இதில், மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பு மனுவும்  ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர் ஒருவரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர். 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 

12  கட்சிகளும் 4 சுயேச்சை குழுக்களும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தன. 
அவற்றில் ஜனநாயக தேசிய கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி, ஒரு சுயேச்சை குழுவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வெண்கல செட்டிகுளம் பிரதேச சபைக்கு 10 கட்சிகளும் 2 சுயேச்சை குழுக்கள் வேட்பு மனுத்  தாக்கல் செய்த  ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும் 2 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்  தாக்கல் செய்த  நிலையில்,  2 சுயேச்சைக் குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 7 கட்சிகளும் 2 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த நிலையில்,  ஏற்றுக் கொள்ளப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில்

திருகோணமலை மாவட்டத்தில் 13உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக 126  கட்சிகளும், 12சுயேச்சைக் குழுக்களும்   வேட்பு மனுக்கள்  தாக்கல் செய்தன . இதில் 23 கட்சிகளினதும்,  3சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில், 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 118 வேட்பு மனுக்கள்  தாக்குதல் செய்யப்பட்டன. இதில் 17 மனுக்கள் வேட்பு மனுக்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில்

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 
20 கட்சிகளும், 24 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வாறாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பல வேட்புமனுக்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளதால் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள்  நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், வழக்குகள் விசாரணைகளுக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதனால் சில நகரசபைகள், பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் இடைநிறுத்தப்படக்கூடிய 
வாய்ப்புகளும் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X