Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Janu / 2024 செப்டெம்பர் 18 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் (கடந்த 22 ஆம் திகதி காலஞ்சென்ற டொக்டர் ஐ.எம். இல்யாசைத் தவிர) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களில் பெரும்பாலானோர் இது வரை ஒரு பிரசார கூட்டமேனும் நடத்தவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
தெற்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சர்வஜன கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர ஆகியோரும் வடக்கில் தமிழ் பொது வேட்பாளர் பி.அரியநேத்திரனும் மட்டுமே பிரசார கூட்டங்களை நடத்துவதாக தெரிகிறது. மேலும் சில வேட்பாளர்கள் தாமும் களத்தில் இருப்பதைக் காட்டுவதற்காக ஏதாவது செய்கிறார்கள்.
இதேவேளை இவ்வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள். ஒருபோதும் இல்லாதவாறு இம் முறை இந்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார பிரச்சினையே குறிப்பாக பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது எவ்வாறு என்பதே முன்னுரிமை பெற்றுள்ளது. தற்போதைய் பொருளாதார நெருக்கடியே அதற்கான காரணமாகும்.
இந்த விடயத்தில் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால் தேர்தல் விஞ்ஞாபனங்கள் என்று முன்வைக்கப்பட்டுள்ள வாக்குறுதி பட்டியல்களை எவ்வாறு நம்பவுது என்பதேயாகும். ஏனெனில் பல தசாப்தங்களாக ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை அவர்கள் பதவிக்கு வந்து நிறைவேற்றவில்லை. அல்லது அவர்கள் ஒருசில வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அவர்களது வாக்குறுதிகளின் பொதுவான நோக்கமான வளமான வாழ்க்கை என்பதற்கு எதிராகவே அவர்கள் பதவிக்கு வந்து செயற்பட்டுள்ளனர்.
1970 ஆண்டுக்கு பின்னரான 45 ஆண்டு கால வரலாற்றை எடுத்துக் கொண்டால் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 1960 களில் நாட்டில் பெரும்பான்மையான ஏழைகளுக்கு வாரமொரு முறை ஒரு நபருக்கு இரண்டு கொத்து (சுமார் ஒரு கிலோ) வீதம் அரிசி மானிய விலைக்கு வழங்கப்பட்டு வந்தது. 1965 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கம் அதில் ஒரு கொத்து அரிசியை மட்டும் இலவசமாக வழங்கி மற்றைய ஒரு கொத்து மானிய அரிசியை இரத்துச் செய்தது. இது பெரும்பாலான மக்களை வெகுவாக பாதித்தது.
1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினதும் அதன் தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியினதும் தலைவியான சிறிமா பண்டாரநாயக்க 'சந்திர மண்டலத்திலிருந்தேனும்' கொண்டு வந்து முன்னர் போல் இரண்டு கொத்து அரிசியை மானிய விலையில் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார். இது இலங்கையின் தெர்தல் வரவாற்றில் முக்கிய வாக்குறுதியொன்றாக இன்னமும் பேசப்படுகிறது.
ஐக்கிய முன்னணி அத்தேர்தலில் வாரலாற்றில் முதன்முறையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெற்று பதவிக்கு வந்த போதிலும் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. சிறிமா பண்டாரநாயக்கவின் அந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் வiலாறு காணாத உனவுப் பஞ்சமும் ஏற்பட்டது.
எனவே 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்த வாக்குறுதி மீறலை கடுமையாக விமர்சித்த ஐக்கிய தேசிய கட்சி தாம் பதவிக்கு வந்தால் வாரத்துக்கு ஒரு நபருக்கு எட்டு இறாத்தல் (அக்காலத்தில் இலங்கையில் மெற்றிக் அளவீட்டு முறை அமுலில் இருக்கவில்லை) வீதம் தானியம் மானிய விலையில் வழங்குவோம் என்று வாக்குறுதியளித்தது.
ஐதேக அத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, ஐதேக பொதுத் தேர்தலை நடத்தர்து தொடரந்து 17 வருடங்களாக மோசமான கொடுங்கொள் அட்சியொன்றை நடத்தியது. எனவே வயிற்றுப் பசியைப் பார்க்கிலும் ஜனநாயக உரமைகள் முன்னிலை பெற்றது. அதன் விளைவாக 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலசுக உள்ளிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி நிறைவேற்று ஜனாதிபதி முறைறை ஒழிப்பதை தமது முதன்மை வாக்குறுதியாக முன்வைத்தது.
62 வீத வாக்குகளைப் பெற்று பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவி சந்திரிகா குமாரதுங்க அத்தேர்தலில் ஜனாதிபதியானார். ஜனாதிபதித் தேர்தலொன்றில் அந்தளவு மக்கள் ஆதரவு பெற்றவர் சந்திரிகா மட்டுமே. எனினும் அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் அதே வாக்குறுதியை வழங்கினார். ஆயினும் அதனை நிறைவேற்றவும் இல்லை அதற்கான நாடாளுமன்ற பெரும்பான்மை அவரிடம் இருக்கவும் இல்லை.
அதனை அடுத்து 2005 மற்றும் 2010 ஆம் ஜனாதிபதரித் தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்ஷவும் இதே வாக்குறுதியை வழங்கினார். 2010 ஆம் ஆண்டு அதற்காக அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தும் அவர் அதனை நிறைவேற்றாது தமது அதிகாரங்களை மேலும் அதிகரித்துக்கொள்ளும் வகையில் அந்த பெரும்பான்மை பலத்தை பாவித்தார்.
இவ்வாறே 2015 ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக மைத்திரிபால சிறிசேனவும், வளமான நாட்டை (சௌபாக்கியயே தெக்ம) உருவாக்குவதாக 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்குறுதியளித்தனர். இவ்வாறு தொடர்ந்து பல தலைவர்கள் வாக்றுதிகளை வழங்கி இறுதியில் 2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. இந்த வரலாற்றை மறந்து தேர்தல் விஞ்ஞாபனங்களை நம்புவதா என்ற கேள்வி மக்கள் முன் உள்ளது.
இன்றைய ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான கடசிகளில் ஐதேகவின் வரலாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் வரலாறும் ஒன்றாகும். ஏனெனில் 2020 ஆண்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தி ஐதேகவிலிருந்து பிரிந்து சென்றது. அந்தப் பிளவும் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் காரணமாக ஏற்படவில்லை. அது கட்சித் தலைமை பதவிக்காக ரனிலுக்கும் சஜித்துக்கும்; இடையே ஏற்பட்ட பலப் போரின் விளைவாகும். எனவே ஐதேகவின் கடந்த காலத்துக்கான பொறுப்பிலிருந்து தற்போதைய ஐதேகவுக்கோ ஐசமவுக்கோ தப்பிவிட முடியாது.
அக்கட்சி இனப் பிரச்சினையைப் பற்றி இன்று எதைக் கூறினாலும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கக் கூடிய நிலையில் இருந்த அப் பிரச்சினையை பாரிய யுத்தமாக மாற்ற ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான ஐதேக அரசாங்கத்தின் கொடிய அடக்குமுறையே காரணமாகியது. சஜித்தின் தந்தையான ரணசிங்க பிரேமதாசவும் ரணில் விக்ரமசிங்கவும் அவ்வரசாங்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தனர்.
அவ்வரசாங்கம் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால். 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்திருக்கலாம். 1983 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி புலிகள் 13 இராணுவத்தினரை கொன்ற போது அவர்களில் உடல்களை அவரவரது கிராமங்களுக்கு அனுப்பாது அவற்றை கொழும்புக்கு கொண்டு வந்தமை பிரச்சினையை ஊதிப்பெருக்கி பெரும்பான்மை மக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிட்டதற்குச் சமமாகும். அதன் விளைவை நாடு பின்னர் அனுபவித்தது. இந்தப் போரின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எங்கும் அறிக்கையிடப்படவில்லை. சில அறிக்கைகளின் படி இவ்வெண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகும்.
அதேபோல் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்த மக்கள் விடுதலை முன்னணியை எவ்வித ஆதாரமுமின்றி கருப்பு ஜூலை கலவரத்தோடு தொடர்புபடுத்தி தடை செய்து அதனை மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளியதும் ஐதேகவேயாகும். பின்னர் அக்கிளர்ச்சியை அடக்குவதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000க்கும் அதிகமாகும் என கூறப்படுகிறது.
1989 ஆம் ஆண்டு ரனசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றன் பின்னர் நாட்டில் பல பகுதிகளில் வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடந்த காட்சி அக்காலத்தில் பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்தது. பட்டலந்த, எலியகந்த போன்ற சித்திர வதை முகாம்களை பற்றி எத்தனையோ கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சியின் போது சுதந்திர வர்த்தக வலயங்கள், பாரிய நீர் தேக்கங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அதிகரித்து வந்த கடன் சுமைக்கு அது எவ்வகையிலும் பரிகாரம் ஆகவில்லை. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் ஐதேக ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐதேக ஆட்சி அமைத்தது. சஜித்தும் அரசாங்கங்களில் அமைச்சராக இருந்தார். இன்று போலவே வாக்குறுதிகளை வழங்கி அவ்வாறு பதவிக்கு வந்தாலும் அபிவிருத்தி என்று எதுவுமே நடைபெறவில்லை. அக்காலத்திலும் அதிகரித்து வந்த கடன்களே 2022 ஆம் ஆண்டு நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியது.
பொதுஜன முன்னணியின் வரலாற்றைப் பற்றி இந்hநட்டு சிறுபான்மை மக்களுக்கு புதிதாக எதையும் கூறத் தேவையில்லை. மக்கள் விடுதலை முன்னணி சந்திரிக்காவின் காலத்தில் 14 மாதங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்று முன்மாதிரியாக நடந்து காட்டியுள்ளது. வன்முறை அரசியலை கைவிட்டு சுமார் 35 ஆண்டுகளாக ஜனநாயக அரசியலிலும் முன்மாதிரியாக இருந்து காட்டியுள்ளது. தமது பழைய பிழையான நிலைப்பாடுகளையும் படிப்படியாக கைவிட்டு வந்துள்ளது. ஆயினும் அக்கட்சி பூரண அதிகாரத்துடன் இது வரை ஆட்சியில் இருந்ததில்லை. அவ்வாறான நிலையில் நிலைமை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago